வேப்பிலை முதல் வேதாந்தம் வரை



வணக்கம் நலந்தானே!

சகலத்திலும் நீக்கமற அங்கிங்கெனாதபடி எங்கும் இறைச் சக்தியே வியாபித்திருக்கின்றது. அப்படிப்பட்ட இறைச் சக்தியை ஞானியர் தங்களின் அனுபூதி நிலையில் தங்களுக்குள் உணர்ந்தபடி இருக்கின்றனர். அவர்கள், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சம் அனைத்துமே சக்தி மயம்தான். பிரம்ம மயம்தான். எனவே, நீங்கள் பார்க்கும் பொருட்கள், உங்களால் அனுபவிக்கப்படும் பொருட்கள், மனிதர்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பேருந்து, வானூர்தி என்று சகலமுமே பிரம்மம்தான். அந்த பிரமாண்டமான இறைச் சக்தியின் வெளிப்பாடுதான். எனவே, பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் நீங்கள் பிரம்ம மயமாக பார்த்து வழிபடுங்கள் என்கிறார்கள்.

ஞானியர், இப்படி உயர்ந்த பாவனா பக்தியை கொடுத்துள்ள விஷயமே நவராத்திரி கொலுவாக வைத்து பத்து நாட்களிலும்  வணங்குகின்றோம். பெரும் தத்துவத்தை, ஞானியரின் பேரனுபவத்தை, அழகான, சிருங்காரமான விழாவாக பக்தியும், தத்துவமும், வேதாந்தமுமாகக் குழைத்து நம் ரிஷிகள் அருளியிருக்கின்றனர். அதனாலேயே, சனாதன தர்மம் என்றழைக்கப்படுகின்ற இந்த இந்து மதம் வேப்பிலை முதல் வேதாந்தம் வரை தன்னிடத்தே பெரும் பட்டியலை கொண்டுள்ளது. மக்களின் மனதின் நிலைகளைக் கொண்டு உபாசனா தெய்வங்களை வடிவமைத்து வைத்திருக்கின்றன. கொத்து வேப்பிலையில் இங்கு அம்மனின் சக்தியை நிறுத்துவதை கிராமங்களில் சர்வ சகஜமாகப் பார்க்கலாம்.

கிராமத்தில் சிறு தெய்வ வழிபாட்டிலுள்ள பேச்சாயி என்பவளையே பேச்சுக்குரிய தெய்வமாக வணங்கி வருகின்றனர். இவளே பெருந்தெய்வமாக வடிவெடுக்கும்போது பல்வேறு சம்பிரதாயங்களை உள்ளடக்கிய சரஸ்வதியாக இருக்கின்றாள். காத்யாயன மகரிஷிக்குப் பிறந்த மகளான காத்யாயனி தேவியையே கிராமங்களில் காத்தாயி என்று வணங்கி வருகின்றனர். சக்தி வழிபாட்டிலுள்ள மகாபட்டாரிகா என்று குறிப்பிடப்படும் தெய்வமே கிராம தெய்வங்களில் பிடாரி என்றழைக்கப்படுகின்றாள். இன்னும் ஒரு படி மேலே போய் பிடாரி என்பவளை பீட ஹாரிணி என்கிறார்கள்.

அதாவது நாம் அமர்ந்திருக்கும் இடமான ,பீடமான இடத்திலுள்ள தற்போதைய பிரச்னைகளை உடனே நீக்குபவளாக சொல்லி வணங்குகின்றனர். சிறு தெய்வங்களோ பெருந் தெய்வங்களோ அருள்வதில் எவ்வித வேறுபாட்டையும் காட்டுவதில்லை. நிலம், வாழும் சூழல், சமூகம்  சார்ந்து வெவ்வேறு பெயர்களை கொண்டு சக்தியானவள் தம் விளையாட்டை நிகழ்த்துகின்றாள். அந்த எங்கும் நிறைந்த சக்தியையே நாம் எல்லா பொருட்களினுள்ளும் பார்த்து வணங்குவதே நவராத்திரியின் மையமென உணர்வோம்.