உள்ள(த்)தைச் சொல்கிறோம்



உங்கள் சேவை விலை மதிப்பற்றது

‘கருடனைக் கண்ட பிறகே கல்யாணம்’ தலைப்பில் ஆந்திர மாநிலம் கூலவாடா ரகுநாயக ஸ்வாமி ஆலயம் பற்றிய கட்டுரை சிறப்பாக அமைந்திருந்தது. இதுபோன்ற ஆலயம் உள்ள திக்கினைக் காட்டிய ஆன்மிக பலனின் ஆன்மிக சேவை மிக மதிப்பு வாய்ந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘நல்லன எல்லாம் தரும் நாராயண மந்திரம்’ கட்டுரையில் அன்னை கனகதுர்க்கா, சரஸ்வதிதேவி, லட்சுமி குபேரர், மகாலட்சுமியுடன் சத்ய நாராயணர், குபேர பீடம், ஸ்ரீவைகுண்டத்தில் ரங்கநாதர், திருப்பதி பெருமாளாக துர்க்கைக்கு அலங்காரம்,  குபேரன் மகாலட்சுமிக்கு அருளும் ஐஸ்வர்யேஸ்வரர் என அற்புதமான படங்களுடன் செய்திகளையும் வெளியிட்டது நாங்கள் வீட்டிலிருந்தபடியே அந்த முழுக் கோயிலையும் தரிசிக்க ஏதுவாக அமைந்தது. நன்றி.
- கே.சிவக்குமார், சீர்காழி.

ஆயிரம் சொல்லுங்கள். ஆன்மிகம் இதழின் அட்டைப்படத்தின் தெய்வீக அழகிற்கு ஈடு இணை இல்லை. விளம்பி வருட பஞ்சாங்கம் இலவசமாக வழங்கியமைக்கு நன்றி. பழனி முருகன் தோன்றியதிலிருந்து இன்று இருக்கும் வசதிகள்வரை தெளிவாக விளக்கிய ஆலய தரிசனம் கட்டுரை, முருக பக்தர்களுக்கு பயனுள்ள அரிய பொக்கிஷம்.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஊழ்வினை அகன்று, துன்பங்கள் நீங்கி, வாழ்வில் மகிழ்ச்சி அடைய பழனி முருகனை தரிசித்தால் போதும். தெரியாத பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
- கோ.தியாகராஜன், கீழ்வேளூர்.

விளம்பி வருட பஞ்சாங்கம் அட்டையில் ஏழு குதிரைகளை பூட்டிய தேரில் சூரியப்பெருமானார் காட்சி தந்து பரவசப்படுத்தியது நவநாயகர்கள் பற்றிய விளக்கங்கள், மாதாந்திர குறிப்புக்கள், சுபமுகூர்த்த நாட்கள், கிரக பெயர்ச்சி விளக்கங்கள், நவக்கிரக துதிகள் எல்லாமுமே ‘கோபுரம்’ பூஜை பொருட்கள்போல் மணம் பரப்பின.  நாங்கள் எளிய முறையில் எதிர்பார்த்த வி(ரு)ளம்பிய பஞ்சாங்கம் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.

திருக்கண்டீஸ்சுரம் அகழி சூழ் ஆலயத்து அண்ணல் சாந்தநாயகி உடனுறை பசுபதிநாதர் திருக்கோயிலின் சிறப்புகளை மனம் நெகிழ அறிந்தோம். ஆன்மிகம் பலன் அழகாகத் தந்தது. காமதேனு வழிபட்ட தலம், ஷீர (பால்) புஷ்கரணி இருப்பது என்று பல தகவல்களைத் தெரிந்துகொண்டோம்.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

குறளின் குரல் கட்டுரையில், ‘இரு மலர்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாதவிப் பொன் மயிலாள்’ என்ற பாடல், கவிஞர் வாலி எழுதியது. இப்பாடலைக் கேட்ட கவிஞர் கண்ணதாசன், ‘எல்லோரும் இந்தப் பாடல் நான் எழுதியது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னிடம் பேசவும் செய்கிறார்கள். ஆனால் அது நீங்கள் எழுதியது என்று அவர்களிடம் விளக்கம் சொல்லி வருகிறேன். மிகச் சிறந்த பாடல், பாராட்டுகள்’ என்று பரந்த மனப்பான்மையுடன் வாலியைப் பாராட்டினார் என்ற சம்பவத்தையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
-கோவிந்தம்மாள் துரை, சித்தன்னவாசல்.

‘விளக்கேந்தி வருக விளம்பி ஆண்டே!’ என்ற விஷ்ணுதாசனின் கவிதை, விளம்பி ஆண்டை வெகு சிறப்பாக வரவேற்றது. நலம் பல விளையும் என்ற என்ற நம்பிக்கை மனதில் தெம்பூட்டுகிறது.
- அயன்புரம் டி. சத்தியநாராயணன், சென்னை-72.