‘‘துரியோதனன், அரசன் என்று சொல்லிக்கொள்ளும் யோக்யதை இல்லாதவன்!’’



மகாபாரதம் 84

‘‘உன் வாழ்க்கையில் நீ யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறாய் உத்தரகுமாரா?’’ அர்ஜுனன் இதுகாறும் அடைக்கலம் கொடுத்த அந்த குடும்பத்தின் இளவலைப் பார்த்து அன்போடு கேட்டான். ‘‘அர்ஜுனன். அர்ஜுனனைத்தான் நான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவன்தான் என் கனவுப் புருஷன். அந்த வீரத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் தந்தையும் அதிகம் சொல்லியிருக்கிறார். என் வீட்டில் அடிக்கடி அர்ஜுனனைப் பற்றி பேசுவோம். அவருக்கு நேர்ந்த துன்பங்கள் கண்டு நாங்கள் வருத்தப்பட்டிருக்கிறோம். உண்ணாமல் இருந்திருக்கிறோம்.’’

அர்ஜுனன் மெல்லியதாய் சிரித்தான். ‘‘நீ பார்க்க நினைக்கின்ற அர்ஜுனன் நானே.’’ என்று சொல்லி நிறுத்தினான். உத்தரகுமாரன் சட்டென்று தரையில் அமர்ந்தான். கொஞ்சம் அலங்கோலமாக பின் கைஊன்றி எப்படி அமர்வது என்றுத் தெரியாது ஒரு வியப்பில் சரிந்த வண்ணம் இருந்தான். ‘‘நீங்களா? அர்ஜுனனா?’’ ‘‘ஆமாம். நான்தான் அர்ஜுனன். உத்தரகுமாரா, நானே பார்த்தனான அர்ஜுனன். பத்து பட்டத்தோடு என் பெயர் அனைத்தையும் கேள்: அர்ஜுனன், பால்குணன், ஜிஷ்ணு, க்ரீடி, ஸ்வேத வாஹனன், பிபத்சு, கிருஷ்ணன், சவ்யஸாசி, தனஞ்செயன்…..’’‘‘உன்னை விஜயன் என்றும் அழைப்பார்கள் அல்லவா. விஜயன் என்ற பெயர் எப்படி உண்டாயிற்று? ஸ்வேத வாஹனன் என்றால் என்ன அர்த்தம்? க்ரீடி என்ற பெயர் உங்களுக்கு ஏன் வந்தது? சவ்யஸாசி என்ற பெயர் எதனால் பிரசித்தி அடைந்தது? பால்குணன், ஜிஷ்ணு, கிருஷ்ணன், பிபத்சு, தனஞ்செயன் என்னும் பெயர்கள் உண்டாக காரணம் என்ன?’’

‘‘நான் எல்லா தேசங்களையும் வென்று அதில் உள்ள தனங்களை எடுத்துக் கொள்வதால் எனக்கு தனஞ்செயன் என்ற பெயர் வந்தது. போர்வெறி பிடித்த வீரர்களை நான் வெல்லாமல் திரும்பியதில்லை. அதனாலேயே என்னை விஜயன் என்று மக்கள் அழைக்கிறார்கள். என்னுடைய தேரில் உள்ள குதிரைகள் வெண்மையானவை. வெள்ளை குதிரைகள் எனக்கு ராசியானவை. எனவே ஸ்வேத வாஹனன் என்ற பெயர் வந்தது. ஸ்வேதம் என்றால் வெள்ளை என்று அர்த்தம். இமயத்தின் சிகரத்தில் பால்குண நட்சத்திரத்தின் பிற்பகுதியில் பகல்நேரம் நான் பிறந்ததால் எனக்கு பால்குணன் என்று பெயர். தேவராஜனிடமிருந்து நான் ஒளிமிகுந்த ஒரு கீரிடத்தை வாங்கி அணிந்து கொண்டேன். அதனால் என்னை க்ரீடி என்று அழைக்கிறார்கள். யுத்தத்தின்போது அருவெறுக்கத்தக்க செயல்களைச் செய்வதில்லை. தருமத்திற்கு கட்டுப்பட்டே செய்கிறேன். தவறாக செய்யாததாலேயே பிபத்சு என்ற பெயர் பிரகாசித்தது. வலது கையில் வில் பிடித்து இடது கையால் அம்பை இழுத்து விட முடியும்.

அதேபோல இடது கையில் வில் பிடித்து வலது கையால் அம்பு விட முடியும். இதனால் என்னை சவ்யஸாசி என்று மக்கள் அழைக்கிறார்கள். அர்ஜுனன் என்ற சொல்லுக்கு வண்ணம் அல்லது ஒளி. ஒளி சமத்தன்மை. தவளம். இதற்கு வெண்மை என்று பெயர். தூய்மை என்றும் வைத்துக் கொள்ளலாம். ஒளி எல்லா இடத்திலும் சமமாக பரவுகிறது. அதைப்போல நான் மனிதரிடத்தே சமபாவம் கொண்டிருக்கிறேன். ஒரு ஒளியைப் போல இயங்குகின்றேன். இதனால் என்னை அர்ஜுனன் என்றும் அழைக்கிறார்கள்.’’

‘‘உனக்கு கிருஷ்ணன் என்ற பெயரும் உண்டா?’’ ‘‘உண்டு. என்னுடைய நிறம் ஷாம கௌரம். ஒருமாதிரி கருப்பு கலந்த பழுப்பு. நான் மிக அழகனாக இருப்பதால் மற்றவர்களோடு ஒப்பிடும்போது சற்று கருப்பாக இருப்பதால் எனக்கு கிருஷ்ணன் என்ற பெயர் என் தந்தையால் கொடுக்கப்பட்டது. பாண்டு என்னை கிருஷ்ணா என்றுதான் அழைப்பார்.’’ உத்தரகுமாரன் மெல்ல எழுந்தான். கை கூப்பினான். சாஷ்டாங்கமாக அர்ஜுனன் காலில் விழுந்து எழுந்தான்.

‘‘குந்தியின் மைந்தா, அர்ஜுனா, உன்னுடைய தரிசனம் எனக்கு கிடைத்தது, என்னுடைய முன்னோர் செய்த தவம். நான் செய்த புண்ணியம். தனஞ்செயா, மகாபாகோ மகாரதே, சிவந்த கண்களை உடைய, கருத்த புஜங்களை உடைய உங்களை பார்க்கும்போது நான் வெட்கமடைகிறேன். என்னை அறியாமல் நான் உங்களிடம் அதட்டலாகவும், அநாகரீகமாகவும் பேசியதை தயவுசெய்து மன்னித்து விடுங்கள். நீங்கள் செய்த அற்புதமான காரியங்களை நான் கேட்டிருக்கிறேன். உங்களுக்கு நிகராக எவரும் இல்லை என்று என்பது எனக்குத் தெரியும். நீங்கள் ஜெயிக்க முடியாதவர் என்பதை நான் அறிவேன். உங்களுடைய பாதுகாப்பு விராடதேசத்திற்கு கிடைத்திருக்கிறது என்பது நாங்கள் செய்த பாக்கியம். முன்பு கனவாக இருந்த அன்பு இப்பொழுது நனவாகி விட்டது. நான் நெஞ்சில் சுமந்த உங்களை, இதோ என் கைகளில் என் தோள்களில் சுமக்கப் போகிறேன். ஒருமுறை உங்களை தழுவிக் கொள்ளும் பாக்கியத்தை கொடுங்கள்’’ என்று சொல்லி நிமிர்ந்து நின்று இரண்டு கைகளை விரித்து உயரமும் அகலமும் அழகனுமாய் நின்ற அர்ஜுனனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டான்.

‘‘எங்கள் தேசத்தின் மிக மோசமான ஒரு நேரத்தில் நீங்கள் துணைக்கு வந்திருக்கிறீர்கள். எங்களோடே வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு தகுந்த மரியாதை கொடுக்க நாங்கள் தவறிவிட்டோம். பணி செய்யும் ஆளாக நினைத்து விட்டோம். அர்ஜுனரே என் குடும்பமும், நானும், என் தந்தையும் என்ன தவறு செய்திருந்தாலும் தயவுசெய்து இரக்கத்தோடு எங்களை மன்னித்து விடுங்கள்.

‘‘உத்தரகுமாரா, என்னை அர்ஜுனன் என்பதை தெரிந்து கொண்டாய். உன் தகப்பனாரோடு அவருக்கு அருகே இருந்து சூதாடுகின்ற அந்தணர் கங்கன் என்பவர் தருமபுத்திரர். உங்கள் அரண்மனையில் தலைமை சமையல்காரன் பல்லவன் பீமன். அதே போல் நகுலன் குதிரை லாயத்திலும், சகாதேவன் பசுக்களோடும் இருக்கிறான். திரௌபதி சைலேந்தரிணியாய் மாலினி என்ற பெயரில் உங்கள் அரண்மனையில் வசிக்கிறாள். இந்த அஞ்ஞாத வாசம் செய்ய நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் உங்களுடையது. இங்கு பத்திரமாக இருந்தோம். உங்களால் எந்தவித தீங்கும் எங்களுக்கு ஏற்படவில்லை. இதை நன்றியோடு சொல்லிக் கொள்கிறேன்” என்றான்.

அர்ஜுனன் உத்தரனை அழைத்துப்போய் தருமருக்கு அறிமுகம் செய்வித்து, எப்பொழுது, எப்படி தோன்றுவது என்று ஆலோசனை செய்தான். உத்தரகுமாரன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். வெள்ளை ஆடைகளை அணிந்து அரசருக்குரிய சின்னங்களை தரித்து தங்கள் ஆயுதங்களுடன் பஞ்சபாண்டவர்கள் அரசவைக்கு வந்தார்கள். ஒரு குண்டத்தில் ஐந்து தீ நாக்குகளைப் போல அரண்மனையில் தனியாக உத்தரனால் அமைக்கப்பட்டிருந்த அரியாசனங்களில் அமர்ந்தார்கள். சபை கூடியது.
அவர்களை வியப்போடு பார்த்தது. விராட மன்னன் வந்தான். கங்கன் அரியணையில் உட்கார்ந்ததைப் பார்த்து, நீ எனக்கு சூதாடுகின்ற பிராமணன். ஒரு அரியணையில் அரசரைப் போல அமர்ந்திருக்கிறாயே. யார் நீ. என்ன கோலம் இது?’’ என்று வேகமாகப் பேசினான். ‘‘விராட மன்னா நினைவிருக்கிறதா. உற்றுப் பாருங்கள். நான் பிருகன்னளை இல்லை அர்ஜுனன். இதோ உங்கள் முன் நிற்கிறாரே கங்கன் என்று, அவர் யுதிஷ்டர். பஞ்சபாண்டவர்களில் மூத்தவர். உங்கள் சமையல் அறையில் அமர்ந்து உங்களுக்கு சமைத்து கொடுத்தானே, போரில் உங்களுக்கு நெருக்கமாக நின்று உங்கள் உயிரை காப்பாற்றினானே அந்த பல்லவன், பீமன், என் மூத்த சகோதரன்.

பிறகு நான். இதோ உங்கள் தொழுவத்தில் குதிரை லாயத்தில் வேலை செய்த நகுலனும், பசு தொழுவத்தில் இருந்த சகாதேவனும், நாங்கள் ஐவரும் பஞ்ச பாண்டவர்கள். இங்கு சைலேந்தரிணியாக வேலை செய்த மாலினி, திரௌபதி. எங்கள் பத்தினி. நாங்கள் அறுவரும் உங்கள் தேசத்தில் அருமையாக வசித்து வந்தோம். நீங்கள் எங்களை நன்கு கவனித்துக் கொண்டீர்கள். உங்கள் அதிகாரிகளும், மக்களும் மிகுந்த பிரியமாக இருந்தார்கள். எங்களை கௌரவமாக நடத்தினார்கள். விராட மன்னரே, இதற்கு நன்றி சொல்கிறோம்.’’ என்று அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கை கூப்பினார்கள்.

விராட மன்னன் மிரண்டான். ‘‘உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். மிக அற்புதமான மகாரதிகள் என்று பலரும் புகழ கேட்டிருக்கிறேன். நீங்கள் அறுவரும் என் அரண்மனையில் வந்து தங்கியிருந்தீர்கள் என்பது நான் செய்த பாக்கியம். இந்த இடத்தில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் அல்லது ஒருநாளில் ஒரு செயலில் உங்களை இழிவுபடுத்தியிருந்தால் தயவுசெய்து அது அறியாமல் செய்த பிழை என்று நினைத்து மன்னிக்க வேண்டும்.’’ என்று கை கூப்பினான்.

‘‘என்னுடைய அரண்மனை, என் செல்வம், என் சேனை, என் அதிகாரிகள், என் மக்கள் அத்தனைபேரும் உங்கள் வசம். உங்கள் சொத்து. இது உங்கள் தேசம். நீங்கள் இங்கு எத்தனை காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். போதாது என்று எனக்குத் தோன்றுகிறது. உங்களோடு இன்னும் நெருங்கிய நிலைக்கு நான் வரவேண்டும் என்றுத் தோன்றுகிறது. எந்த ஒரு க்ஷணத்திலும் நீங்கள் என்னை கோபித்துக் கொள்ளக்கூடாது என்ற பயத்தோடு நான் இதை கேட்கிறேன், என் மகள் உத்தரையை அர்ஜுனனுக்கு மனைவியாகத் தருகிறேன். தயவுசெய்து என்னோடு நீங்கள் திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டும்.’’ என்று கேட்டான்.

தருமபுத்திரர் திரும்பி பார்த்தனை பார்த்தார். ‘‘இல்லை. உத்தரை சிறிய பெண். அவளை என் மகன் அபிமன்யுவிற்கு மனைவியாக ஏற்கிறேன். என் மருமகளாக வரிக்கிறேன். அபிமன்யுவிற்கு உத்தரை மிகவும் ஏற்றவள்.’’ என்று அர்ஜுனன் சொல்ல தருமபுத்திரர் சரி என்று சொன்னார். ‘‘ஏன் என் மகளை ஏற்க மறுக்கிறீர்கள் என்று விராட மன்னன் பயந்து கேட்க, அவளிடம் நான் ஒரு குருவைப் போல பழகியிருக்கிறேன். குருவும் தந்தையும் ஒன்று. ஒரு தந்தை பாவத்தில் தான் நான் அவளுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தேன். அதுவும் தவிர, இந்த ஒரு வருடம் விரதமாக நாங்கள் இருந்தோம். அப்படித்தான் சபதம் எடுத்துக் கொண்டு உங்கள் தேசத்திற்குள் வந்தோம். எனவே, நான் ஒரு வருடம் முழுவதும் மிக நெருக்கமாக உத்தரையிடம் இருந்ததாக அதனால் இந்த திருமண பந்தம் ஏற்பட்டதாக ஊரோ, என் உறவுகளோ நினைத்து விடக்கூடாது. நான் குருவாக இருந்தேன் என்பதாலும், நான் உத்தரை மீது எந்த விருப்பமும் இல்லாது பிரம்மச்சரியத்தில் இருந்ததாலும் அவளை என்னுடைய
மருமகளாக ஏற்கிறேன். இதற்கு நீங்கள் சம்மதிக்க வேண்டும்.’’

‘‘சரி. மாப்பிள்ளையாக இல்லாது போனால் என்ன, சம்பந்தியாக அர்ஜுனன் இருக்கிறார். அப்படி அர்ஜுனன் எனக்கு சம்பந்தியாக வந்து விட்டால் வேறு என்ன கஷ்டங்கள் எனக்கு வரும். வேறு எவர் என்னை எதிர்க்கக்கூடும். உங்கள் அன்பு எனக்கு கிடைத்தது போதும்’’ என்று உத்தரையை கொண்டு வந்து பஞ்ச பாண்டவர்கள் முன்பு நிறுத்தினான். உத்தரை ஓடிப் போய் திரௌபதியை தழுவிக் கொண்டாள்.

திருமண ஏற்பாடுகள் செய்யத் துவங்கினார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்கு செய்தி போயிற்று. ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தங்கள் குடும்ப சகிதம் விராடதேசத்திற்கு பல்லாயிரக்கணக்கான யானைகள், குதிரைகளோடு வந்தார்கள். உத்தரைக்கு கொடுக்க வேண்டிய, பஞ்ச பாண்டவர்கள் மூலம் தரவேண்டிய சீர் அனைத்தையும் ஸ்ரீகிருஷ்ணரே கொண்டு வந்திருந்தார். அதுவும் தவிர அபிமன்யு அவர் வம்சத்து பெண்ணின் பிள்ளை அல்லவா. அந்த உரிமையோடும் சீர் செனத்தி எடுத்து வந்திருந்தார். பலராமர் முன்பும், ஸ்ரீகிருஷ்ணர் முன்பும், தருமபுத்திரர் முன்பும் மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது. உத்தரையை அபிமன்யு மனைவியாக வரித்தான். அந்தணர்கள் வேதம் ஓதி அக்னி வளர்க்க, அக்னியை வலம்வந்து அக்னி சாட்சியாக உத்தரை கரம் பற்றினான். விராட மன்னனின் நண்பர்களான பல மன்னர்கள் வந்திருந்தார்கள். ஸ்ரீகிருஷ்ணருடைய யாதவப் படை வந்திருந்தது. விராட பரத சம்பந்தம் ஏற்பட்டது. எல்லா வேதனைகளும் மறந்து அந்த திருமண வைபவத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஆனந்தமாக கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து அற்புதமான விருந்துகள் நடைபெற்றன. வந்திருந்த எல்லா மன்னர்களும் உண்டு களித்து பேசி சிரித்து எந்தக் கவலையும் இல்லாமல் தங்கள் பொழுதுகளை கழித்தார்கள். அங்கு விசாலமான அரண்மனையும், தோட்டமும், வந்திருந்த மன்னர்களுக்கும், அவர்கள் குடிபடைகளுக்கும் நிறைவான தங்கும் இடத்தை கொடுத்தன. விராட தேசத்து மக்கள் போட்டி போட்டுக் கொண்டு விருந்தினரை உபசரித்தார்கள். அவர்கள் வீட்டு திருமணம் பற்றி மன்னர்கள் வெகுநாள் பேச வேண்டும் என்ற நினைப்பில் மிக அக்கறையோடு நடந்து கொண்டார்கள்.

விருந்து முடிந்ததும் பெரிய சபையிலே அரசர்கள் ஒன்று கூடினார்கள். அந்த சபை ஜன்னல்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்டிருந்தன. வினோதமான கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. மண்டபத்தின் உள்ளே காற்று புகுந்து அனைவரையும் தாலாட்டியது. அதைத் தவிர மயில் தோகையால் விசிற சேடிப் பெண்களும், ஏவலுக்கு பணியாட்களும் இருந்தார்கள். விருந்தினர்கள் சபைக்கு வர அவரவர் ஆசனத்திற்கு அருகே நின்றிருக்க விராட மன்னனும், துருபதனும் வந்த பிறகு அவர்கள் அவர்களுக்குண்டான ஆசனத்தில் அமர்ந்த பிறகு ஸ்ரீகிருஷ்ணரும், பலதேவரும், மற்றோரும் தங்கள் ஆசனத்தில் அமர்ந்தார்கள். வயது முதிர்ந்த அந்த இரண்டு பேரும் அமர வேண்டும் என்று காத்திருந்து அவர்களுக்கு மரியாதை செய்து பிறகு அமர்ந்தார்கள். எல்லாம் வல்லவராய் ஸ்ரீகிருஷ்ணர் இருந்தாலும் இந்த நியதிகளுக்கு அவர் கட்டுப்பட்டே இருந்தார்.

அந்த சபையினுடைய அர்த்தம் மன்னர்கள் பலருக்கு தெரிந்திருந்தது. இது வெறுமே கூடியிருக்கும் சபை அல்ல. ஒரு விவகாரத்தை தெளிவு பண்ணவேண்டிய சபை என்பதை மன்னர்கள் அறிந்திருந்தார்கள். அந்த அரசர்கள் யாரும் கேட்காமல் தங்களுடைய அபிப்ராயத்தை சொல்லவர, மற்றவர் எதிர்த்துவர கொஞ்சநேரம் வாதப்பிரதிவாதங்கள் அந்த சபையில் நடந்தன. ஸ்ரீகிருஷ்ணர் அமைதியாக பேசுகிறவரை கவனித்துக் கொண்டிருந்தார். மன்னர்கள் பேச்சை நிறுத்தி ஸ்ரீகிருஷ்ணர் பேசட்டும் என்பது போல காத்திருந்தார்கள். தன் பேச்சை இவர்கள் கேட்பார்கள், அடங்கி விட்டார்கள் என்று தெரிந்து ஸ்ரீகிருஷ்ணர் எழுந்து நின்று தன்னுடைய சிம்மக் குரலில் பேச்சை துவக்கினார்.

 ‘‘பாண்டவர்களுடைய கஷ்டங்கள் என்ன என்று இங்குள்ள அனைவரும் அறிவீர்கள். அவர்களுக்குண்டான தேசத்தை அவர்கள் இழந்திருக்கிறார்கள். அவர்கள் தேசத்தை யாரும் போரிட்டு ஜெயிக்கவில்லை. வலிவுகாட்டி வாங்கவில்லை. மாறாக வஞ்சனையான முறையில் சூதாடி தருமபுத்திரரை சபைக்கு இழுத்துவந்து ஒரு அரசன் சூதாடச் சொன்னால் ஆட வேண்டுமல்லவா என்ற விதிகளுக்குட்பட்டு சகுனியை முன்வைத்து துரியோதனன் ஆடினான். இது இன்று நேற்று நடந்த விஷயம் அல்ல.

ஆரம்பகாலத்திலிருந்தே துரியோதனனுக்கு பாண்டவர்களுடைய சினேகம் பிடிக்கவில்லை. அவர்களுடைய வீரம் பிடிக்கவில்லை. தருமபுத்திரரின் தர்மம் பிடிக்கவில்லை. அவர்களுடைய ராஜ்யம் தன்னுடைய ராஜ்யம் என்பதாகவே அவனுக்கு ஒரு பேராசை இருந்தது. தந்தை வழியிலே இது சமபாகமாக பிரிக்கப்பட்டது என்பதை துரியோதனன் ஏற்க மறுத்ததினுடைய விளைவு இது. இது பேராசை. மிகப்பெரிய அயோக்கியத்தனம். இறந்துபோன பாண்டு மகாராஜாவிற்கு செய்த துரோகம். அவர் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டிய அந்த அரியாசனத்தை தான் பறித்துக்கொள்ள வேண்டுமென்று துரியோதனன் ஆசைப்பட்டான். அதன் விளைவே சூதாட்டம்.

தருமபுத்திரரும் சூதாட இறங்க, அவர் ஒவ்வொன்றாக இழந்தார். ஆனால், தருமபுத்திரருடைய அச்சாணி தர்மம். அவர் அதை மீறியதேயில்லை. அதற்காக நான் அவரை தலைவணங்குகின்றேன். சூதினுடைய விதி என்ன. பன்னிரண்டு வருட வனவாசம். பதிமூன்றாவது வருடம் அஞ்ஞாத வாசம். இவை இரண்டையும் இவர்கள் சிறப்பாக நடத்தி முடித்தார்கள். அந்த பதிமூன்றாம் வருடம் அவர்கள் பட்ட கஷ்ட நஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அவர்கள் பட்ட அவமானம் சாதாரணமானதல்ல. வேறு எந்த அரசனாக இருந்தாலும் கொதித்திருப்பான்.

ஆனால், தர்மத்தின்மீது பற்று வைத்து, தான் அரசனாக இருந்தபோதும், தன் மனைவிக்கு எந்த துன்பம் நேர்ந்த போதும், தன்னுடைய சகோதரர்களுக்கு என்ன கஷ்டங்கள் நேர்ந்தபோதும் அந்த அஞ்ஞாத வாசத்தை தாங்கள் பொறுத்துக் கொண்டு வெற்றிகரமாக முடித்தார்கள். அந்த சகோதரர்களுக்கும், திரௌபதிக்கும் நான் மறுபடியும் தலைவணங்குகின்றேன். சூதாட்டத்திற்கு அழைத்தாய் ஜெயித்தாய் விதிமுறை சொன்னாய் அதை நடத்தி முடித்து விட்ட தருமர், இப்பொழுது மறுபடியும் வந்து நிற்கிறார். அவர் ராஜ்யத்தை அவரிடம் தர வேண்டும்.

ஆனால், துரியோதனன் தருவானா என்பதுதான் மிகப்பெரிய கேள்விக்குறி. பாண்டவர்களை வாழ விடமாட்டேன் என்று சொல்கின்ற அவனா இதை கொடுக்கப் போகிறான். இல்லை. எனவே, அவனிடம் பக்குவமாகப் பேசி, அமைதியாகப் பேசி அவனுக்கு புரியவில்லை என்றாலும் திருதராஷ்டிரனுக்கு புரியவைத்து அதன் மூலம் துரியோதனனை அடக்கி வைப்பதுதான் சாமர்த்தியமே தவிர, வேறு எதுவும் சரி வராது.

ஆகவே, அதற்கேற்ப ஒரு தூதுவனை இங்கிருந்து அனுப்பி அதை நிறைவேற்ற வேண்டும். ஒருவேளை போர்தான் முடிவு என்றால், இதுவரை பட்ட கஷ்டங்கள் அத்தனையும் மனதிற்குள்ளே தேக்கி வைத்துள்ள பஞ்சபாண்டவர்கள் கௌரவர்களை கொன்று அழிப்பார்கள். அவர்கள் மரணம் நிச்சயம். துரியோதனனுக்கு கேடுகாலம் இருந்தால் போருக்கு அழைக்கட்டும். அவன் போர் விரும்பட்டும். தருமபுத்திரர் அமைதியாக இருக்கிறார். இப்போதும் ஆவேசப்படாது இருக்கிறார். என் பங்கை கேட்டு வாங்கித் தாருங்கள் என்றுதான் சொல்கிறார். கேட்டு வாங்கித் தருவது நம் கடமை. அவருக்கு உதவி செய்வது

நம் கடமை.’’ ஸ்ரீகிருஷ்ணர் பேசிய பிறகு பலதேவர் எழுந்தார். அவர் பேச்சை சபை இன்னும் கூர்மையாகக் கேட்டது. ‘‘ஸ்ரீகிருஷ்ணர் அவர் மனோதர்மப்படி பேசினார். அவருக்கு பாண்டவர்கள் மீது அலாதியான பிரேமை. ஆனால், நமக்கு இரண்டு பேரும் முக்கியமானவர்கள். நமக்கு உறவினர்கள். யார் சரி, யார் தவறு என்று விசாரிக்கப் போனால் அதில் பலவித பிரச்னைகள் எழும். துரியோதனனை தீயவன் என்று நினைத்தே பேசுவது நமக்கு அழகல்ல.

அதர்மமாக துரியோதனாதிகள் ஜெயித்தார்கள் என்று எவரும் சொன்னால் அது ஆட்சேபணைக்குறியது. சூதாட அழைத்தும் விரைவிலே ஓடிப்போய் சூதாட ஆசைப்பட்டு நின்றது தருமபுத்திரர். சூதாடுகின்ற சபலம் அவருக்கு இருக்கிறதென்று உலகத்திற்கு தெரியும். எங்களில் யாரை தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர் சூதாட என்ற மிகப்பெரிய ஒரு விஷயத்தை துரியோதனன் முன் வைத்தான். கர்ணனையோ, துரியோதனனையோ, துச்சாதனனையோ தேர்ந்தெடுக்காமல் அவன் சகுனியை தேர்ந்தெடுத்தான். சகுனி நிபுணன். இவர் கற்றுக்குட்டி. ஒரு பொழுதும் அந்தத் தவறை அவர் செய்திருக்கக்கூடாது. அந்த தவறுக்கு ஏற்பட்ட பலன்தான் இவர்களுடைய வனவாசமும், அஞ்ஞாதவாசமும். அவன் கள்ளத்தனமாக ஜெயிக்கவேயில்லை. அவர் கையில் உள்ள பகடைகள் பேசின. இவருக்கு பேசவில்லை. எனவே சகுனி தவறு, சகுனியின் மீது குறை இருக்கிறது, குற்றம் இருக்கிறது என்று
சொல்வது தவறான பேச்சு.’’

சபை சலசலத்தது. ஸ்ரீகிருஷ்ணர் எதிரிலேயே கிருஷ்ணரை மறித்தும், பாண்டவர்களுக்கு சற்று எதிராகவும் பலதேவர் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களுக்குள் வாதிப்பிரதிவாதங்கள் செய்து கொண்டார்கள். ‘‘ஒன்று சொல்ல விரும்புகின்றேன். நம்முடைய பேச்சுகளெல்லாம் யுத்தத்தை நோக்கி நகர்வதாக இருக்கக்கூடாது. சமாதானத்தை விரும்புவதாக இருக்க வேண்டும். இதைத்தான் தருமபுத்திரரும் விரும்புகிறார் என்பது என் எண்ணம். கௌரவர்களுடைய ராஜ்ஜியத்தில் சரிபாதியை எனக்கு வாங்கிக் கொடுங்கள். அவர்கள் விருப்பப்படி நான் வனவாசமும், அஞ்ஞாதவாசமும் முடித்து விட்டேன் என்ற நிலையில்தான் அவர் இருக்கிறாரே தவிர, போர் போர் என்று தருமபுத்திரரோ, பீமனோ, அர்ஜுனனோ முரசு அறிவிக்கவில்லை. அவர்கள் மௌனமாக இருக்கும்போது நாம் போருக்கு எத்தனப்படுவது அவ்வளவு சாதுர்யமான விஷயம் அல்ல.’’மறுபடியும் சபை சலசலத்தது.

(தொடரும்)