ஆதிசங்கரர் வகுத்த ஆறுமத ஸ்லோகங்கள்



அபூர்வ ஸ்லோகம்

காலடியில் அவதரித்த சிவஸ்வரூபம், பால்ய வயதிலேயே துறவறம் பூண்ட பரப்பிரம்மம், மிகக் குறுகிய ஆயுட்காலத்திலேயே பாரதமெங்கும் பாதம் பதித்துப் பரவிய தெய்வம், மகான் ஆதிசங்கரர். தான் திக்விஜயம் செய்த தலங்களின் தன்மைகள் அனைத்தையும் பரிபூரணமாக உணர்ந்த இந்த தெய்வத் திருவுரு, இந்து மதக் கோட்பாடுகளை ஆறு அங்கங்களாகப் பிரித்து இனிய ஸ்லோகங்களாக வழங்கி பாரதத்தை உய்வடைய வைத்திருக்கிறது. ஷண்மதம் எனும் அந்த ஒருங்கிணைந்த வழிபாட்டு முறை பாரெங்கும் பரவி, இன்றளவும் நிலவி வருகிறது. சைவம், வைணவம், சாக்தம், கணாபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய அந்த ஆறு மதங்களுக்கான ஸ்லோகங்களை சுருக்கமாக வழங்குகிறோம். அந்த மகான் அவதரித்த இனிய நாளில் அவர் பாதம் பணிந்து அந்த ஸ்லோகங்களைப் பயில்வோம், பலன் பெறுவோம்.

I. உமாமஹேச்வர ஸ்தோத்ரம் (சைவம்)

1. நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்

இளம் வயதினராய் ஒருவரோடு ஒருவர் இணைந்து சிவனும், சிவையுமாய், ரிஷபக்கொடியோனாயும், மலையரசன்மகளாயும், காட்சி தரும்
சங்கர-பார்வதீ தேவியாருக்கு நமஸ்காரம்.

2 .நம:சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்
யாம்
நமஸ்க்ருதா பீஷ்டவரப்ரதாப்யாம்
நாராயணேநார்சித பாதுகாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம
சிவனும் சிவையுமாய் இனிதாகக் காட்சிதரும் தம்மை தரிசித்து நமஸ்கரித்த பக்தர்களின் விருப்பப்படி வரமளித்து, நாராயணன் அர்ச்சிக்கும் பவித்ரமான காலடிகளைக் கொண்டு காட்சிதரும் ஸ்ரீசங்கர பார்வதியருக்கு நமஸ்காரம்.

3. நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்
யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்
ரிஷ்ப வாகனத்தில் உலா வருபவர்களும், பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோரால் பூஜிக்கப்பட்டவர்களும், விபூதி, சந்தனம் பூசி மணம் திகழுபவர்களுமான ஸ்ரீசங்கர பார்வதியருக்கு நமஸ்காரம்.

4. நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்
உலகத்துக்கே தலைவர்களாகவும், வெற்றியே வடிவமானவர்களாகவும், இந்திரன் முதலானோரால் போற்றப்பட்டவர்களுமான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

5. நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்
யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

சம்சாரம் என்ற நோய்க்கு அருமருந்தானவர்களாகவும், பஞ்சாக்ஷரக் கூண்டில் விளையாடும் கிளிகளானவர்களாகவும், இந்த உலகை சிருஷ்டித்தும், காத்தும், ஒடுக்கியும் அருள்புரிகின்றவர்களாகவும் திகழ்கின்ற சிவ- பார்வதியருக்கு நமஸ்காரம்.

6. நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

மிக அழகிய தோற்றமுடைய சிவனும், சிவையும் தம் இதயத் தாமரைகள் மூலம் ஒருங்கிணைந்துள்ளனர். அவர்கள் அனைத்துலகுக்கும் நன்மை செய்வதில் தமக்குத்தாமே நிகரானவர்கள். அவர்களுக்கு நமஸ்காரம்.

7. நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கங்கால கல்யாணவபுர்தராப்யாம்
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்
கலிதோஷம் நீங்கச் செய்வபராயும், எலும்புகளால் ஆன அணிகலன்கள் மிளிரக் காட்சிதருபவரும், மங்கல சரீரம் கொண்டவரும், கைலாஸத்தில் வாசம் செய்யும் தேவதைகளுமான ஸ்ரீசங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

8. நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்
அமங்கலங்களைப் போக்குபவரும், உலகமனைத்திற்கும் மேம்பட்டவரும், தடையில்லாதவரும், தியானத்தில் ஆழ்ந்தவர்களுமான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

9. நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

பௌர்ணமி சந்திரன் போன்ற பிரகாசமான முகங்களுடனும், சூர்ய, சந்திர, அக்னியாகிய கண்களுடனும், தேரில் ஏறி திவ்ய உலா வரும் சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

10. நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்
ஜடாமுடியணிந்து, மூப்போ, அழிவோ இல்லாதவரும், விஷ்ணு, பிரம்ம தேவர்களால் வழிபடப்படுபவருமான சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

11. நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்
மூன்று கண்கள் உடையவரும், வில்வத்தள, மல்லிகை மாலைகள் தரித்தவரும், அழகு, அமைதி இவற்றின் நாயகர்களாகவும் திகழ்கின்ற சங்கர-பார்வதியருக்கு நமஸ்காரம்.

II கோவிந்தாஷ்டகம் (வைணவம்)

1. ஸத்யம் ஜ்ஞான மநந்தம் நித்ய மநாகாசம் பரமாகாசம்
கோஷ்ட ப்ராங்கண ரிங்கணலேல மநாயாஸம் பரமாயாஸம்
மாயாகல் பிதநாநாகாரம் புவனாகாரம்
க்ஷ்மாமாநாதமநாதம் ப்ரமணத கோவிந்தம் பரமானந்தம்

பூதேவி, லக்ஷ்மி தேவியாருக்கு நாதனான கோவிந்தனை வணங்குங்கள். அவர் ஸத்ய-ஞான-அனந்த ஸ்வரூபி, பூர்ணமானவர், மாட்டுத்தொழுவத்தில் தவழ ஆசைப்பட்டவர், களைப்பே இல்லாதவர், மாயையாகப் பலவடிவங்கள் கொண்டவர், உலகே உருவானவர் அவர்.

2. ம்ருத்ஸ்நா மத்ஸீஹேதி யசோதா தாடன சைசவ ஸந்த்ராஸம்
வ்யாதித வக்த்ரா லோகித லோகா லோக சதுர்தசலோகாலிம்
லோகத்ரயபுரமூல ஸ்தம்பம் லோகா லோக மநாலோகம்
லோகேசம் பரமேசம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

குழந்தையாய் இருந்தபோது, மண்ணைத் தின்றுவிட்டாயே, என்று யசோதை அவரை அடித்து, அதட்டினாளே! உடனே வாயை திறந்தபொழுது பதினான்கு உலகங்களையும் கண்டு அந்த யசோதையே களித்தாளே! இப்படி மூன்று உலகங்களின் ஆதார ஸ்தம்பம்போல் அமைந்தவரான, அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

3. த்ரைவிஷ்டபரிபுரக்னம்  பாரக்னம்பவரோகக்னம்
கைவல்யம் நவநீதாஹாரமனாஹாரம் புவனாஹாரம்
வைமல்யஸ்புட சேதோவிருததி விசேஷாபாஸ மனாபாஸம்
சைவம் கேவலசாந்தம் ப்ரணாமத கோவிந்தம் பரமானந்தம்

மூவுலகையும் பகைக்கும் அசுரரையழித்தவரும், பூபாரத்தையும், ஸம்ஸார நோயையும் அகற்றி கைவல்யம் தருபவரும், உணவேதும் வேண்டாதவரெனினும், உலகுக்கே உணவானவரும், நவநீதம் என்ற வெண்ணெயை உணவாகக் கொண்டவரும், தெளிவாய் இல்லாதவரின் மனதிலும் தெளிந்திருப்பவருமான கிருஷ்ண பரமாத்மாவை வணங்குங்கள்.

4. கோபாலம் பூலீலா விக்ரஹகோபாலம் குலகோபாலம்
கோபீகேலந கோவர்த்தன த்ருதிலீலா லாலிதகோபாலம்
கோபிர்ந்கத்த கோவிந்த ஸ்புட நாமாநம் பஹநாமானம்
கோதீகோசரதூரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்

அவர் கோபாலன் எனப்படுகிறார். பூதேவியோடு விளையாடும் ஆணழகர், குலபர்வதமானவரும்கூட, கோபியரோடு விளையாடுதல், கோவர்தன மலையை தூக்கி நிறுத்தல் போன்ற விளையாட்டுகளால் யாதவரை மகிழ்வித்தவர், கோவிந்தா, கோவிந்தா எனப் பசுக்களே அழைத்து மகிழும் தூயவர். பல பெயருமுள்ளவர், பசுக்களின் புத்திக்குக்கூட எட்டும் அளவில் உள்ளவர். அத்தகைய பரமானந்த கோவிந்தனை வணங்குங்கள்.

5. கோபீமண்டல கோஷ்டீபேதம் பேதாவஸ்தமபேதாபம்
சச்வத்கோகுர நிர்தூத-உத்கத தூலி தூஸரஸெளபாக்யம்
ச்ரத்தா பக்திக்ரு ஹீதாநந்தம சிந்த்யம் சிந்தித ஸத்பாவம்
சிந்தாமணி மஹிமானம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
கோபிகைகளுக்குள் விளையாட்டாகக் கலகம் செய்பவர். வெவ்வேறு நிலைகளிலிருந்தும் வித்யாசம் பாராட்டாதவர். பசுக்கள் குளம்பு கிளப்பிய தூசு படிந்தும், அழகுடன் திகழ்பவர். சிரத்தையான பக்திக்கு மகிழ்பவர், எப்போதும் பக்தர்கள் நலத்தையே எண்ணுபவர், சிந்தாமணியையொத்த பெருமை வாய்ந்தவர், அப்பெருமான். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

6. ஸ்நான வ்யாகுல யோஷித்வஸ்த்ர முபாதர யாகமுபாரூடம்
வ்யாதித்ஸந்தீரத திக்வஸ்த்ரா தாது முபாகர் ஷந்தம் தா:
நிர்தூத த்வய சோக விமோஹம் புத்தம் புத்தே ரந்தஸ்தம்
ஸத்தாமாத்ர சரீரம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
நீராடிக்கொண்டிருக்கும் கோபிகைகளின் துணிகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது ஏறியவர், அவற்றைப் பெற விரும்பி, துணியில்லாத உடம்புடன் கரையேற தவிக்கும் அந்த கோபியரை இழுத்த வண்ணம் விளையாடுகிறார். அவருக்கு சோகமோ, மோகமோ இல்லை, ஞானமே உருவானவர், புத்தியிலுரைபவர் எங்கும் உள்ளார் என்று மட்டும் உணரத்தக்கவர். அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

7. காந்தம் காரண காரணமாதிமநாதிம் காலகனாபாஸம்
காலந்தீ கத காலிய சிரஸி ஸுந்ருத்யந்தம் முஹரத்யந்தம்
காலம் கால கலாதீதம் கலிதாசேஷம் கலிதாதோஷக்னம்
காலத்ரய கதிஹேதும் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
காரணங்களுக்கெல்லாம் மூல காரணமானவர், முதலானவர். ஆனால் முதல் இல்லாதவர்; கருநீல முகில் போன்ற அழகிய திருமேனி படைத்தவர், யமுனை நதியில் காளிங்கன்மேல் களிநடனம் புரிந்தவர், எல்லா காலமுமானவர், ஆனால் காலத்துளிகளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாம் அறிந்தவர், கலியின் கொட்டத்தை முடக்கியவர். முக்காலங்களிலும் செயல்படும் அத்தகைய கோவிந்தனை வணங்குங்கள்.

8. பிருந்தாவனபுவி ப்ருந்தாரக - கண - பிருந்தா ராதிக வந்த்யாயாம்
குந்தாபாமலமந்தஸ்மேர ஸுதானந்தம் ஸுமஹானந்தம்
வந்த்யாக்ஷே மஹாமுனி மானஸ வந்த்யானந்த பதத்வந்த்வம்
நந்த்யாக்ஷே குணாப்திம் ப்ரணமத கோவிந்தம் பரமானந்தம்
தேவர்கள், சித்தர்கள் முதலியோரால் போற்றிப் புகழப்பட்ட பிருந்தாவனத்தில் குந்த புஷ்பமென தூய புன்சிரிப்புடன் பேரானந்தம் கொண்டு, அனைத்து முனிவர்கள் மனதிலும் நின்று நிலைபெற்ற திருவடிகளையுடைய, குணக்குன்றான கோவிந்தனை வணங்குங்கள்.

9. கோவிந்தாஷ்டகமேத ததீதே கோவிந்தார்பித சேதா யோ
கோவிந்தாச்யுத மாதவ விஷ்ணோ கோகுல நாயக க்ருஷ்ணேதி
கோவிந்தாங்க்ரிஸ ரோஜ த்யான ஸுதாஜலதௌத ஸமஸ்தாகோ
கோவிந்தம் பரமானந்தாம்ருத மந்த : ஸ்தம் ஸ தமப்யேதி
கோவிந்த, அச்யுத, மாதவ, விஷ்ணோ, கோகுலநாயக, கிருஷ்ணன் ஆகிய கோவிந்தன்பால் மனம் வைத்து இந்த கோவிந்தாஷ்டகத்தை படிப்பவர், கோவிந்தன் திருவடித் தாமரையை தியானம் செய்பவர் அனைவரும், அனைத்துப் பாபங்களும் நீங்கப் பெற்று அந்தாராத்மாவான பரமானந்த வடிவினனான கோவிந்தனை அடைவர்.

III ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் (சாக்தம்)

1. ப்ராத:ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம்
ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டலாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம்

காலைவேளையில் ஸ்ரீலலிதாதேவியின் முகமாகிய தாமரையை நினைக்கிறேன். அது கோவைப்பழத்தையொத்த உதடுகளையும், பெரிய முத்துகளாலான மூக்குத்தியையும், மாணிக்க குண்டலங்களையும், புன்முறுவலையும், கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியையும் உடையதாக பொலிகின்றது.

2. ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்
ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம்
மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்
புண்ட்ரேஷசாபகுஸுமேஷஸ்ருணீர்ததாநாம்
காலையில், ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை வணங்குகிறேன். அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களைக் கொண்டிருக்கிறது. மாணிக்கம் பதித்த தங்க வளையல்களும், தோள்வளையும் கொண்டு விளங்குகின்றாள் அம்பிகை. கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் பாசாங்குசங்களையும் ஏந்தியிருக்கிறாள்.

3. ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம்
பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்
பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்
பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம்
பக்தர்களுக்கு இஷ்டத்தை
எப்பொழுதும் நல்குவதும் சம்ஸாரக்கடலைக் கடப்பதற்கான நல்வழியாக அமைவதும், பிரம்மதேவன் முதலான தேவர்கள் வழிபடத் தக்கதும், தாமரை அங்குசம், கொடி, சுதர்சனம் முதலிய இலச்சினைகளைக் கொண்டதுமான ஸ்ரீலலிதாம்பிகையின் திருவடித்தாமரையை காலையில் வணங்குகின்றேன்.

4. ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம்
உபநிஷத்துகளில் தெரிந்து தெளிய வேண்டிய மஹிமை கொண்டவளும், மாசற்ற கருணை பூண்டவளும், உலகத்தை படைக்கவும், காக்கவும், பிறகு லயமடையச் செய்பவளும், வேதங்களுக்கும், வாக்குகளுக்கும், மனதிற்கும் அப்பாற்பட்டவளுமான பரசிவையான லலிதாம்பிகையை காலையில் வணங்குகிறேன்.

5. ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
சாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி
வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி
ஹே லலிதாம்பிகே. உனது புண்யமான பெயரை காலையில் சொல்கிறேன். காமேச்வரி என்றும், கமலா என்றும், மஹேச்வரீ என்றும், ஸ்ரீசாம்பவீ என்றும், உலகத்தின் உயரியதான வாக்தேவதை என்றும், த்ரிபுராம்பிகை என்றும் பலவாறாக உனைப் போற்றித் துதிக்கிறேன்.

6. ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:
ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர்
வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்த்திம்

ஸ்ரீலலிதாம்பிகையின் ஸ்தோத்திரமான இவ்வைந்து ஸ்லோகங்கள் வளமிக்க வாழ்வை கொடுப்பவை. மிக எளிதானவையுங்கூட - காலையில் படிப்பவருக்கு உடனடியாக மகிழ்ச்சியுடன் கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவற்றை அம்பிகை அருள்கிறாள்.

 IV கணேச பஞ்சரத்னம் (கணாபத்யம்)

1. முதாகராத்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்
கலாதராவதம்ஸகம் விலாஸிலோகரக்ஷகம்
அநாயகைகநாயகம் விநாசிதேபதைத்யகம்
நதாசுபாசுநாசகம் நமாமி தம் விநாயகம்.

மன மகிழ்வோடு, கையில் மோதகம் ஏந்தி, எப்போழுதும் மோக்ஷம் நல்குபவரான விநாயகரை வணங்குகிறேன். அவர் சந்திரப்பிறை அணிந்தவர். அமைதி கொண்டோரைக் காப்பவர். துணையற்றவருக்கு துணையானவர். கஜமுகாசுரனைக் கொன்று, தம்மை வணங்கியவரை குறை தீர்த்துக் காப்பவர்.

2. நதேதராதிபீகரம் நவோதிதார்கபாஸ்வரம்
நமத்ஸுராரிநிர்ஜரம் நதாதிகாபதுத்தரம்
ஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்
மஹேச்வரம் ஸமாச்ரயே பராத்பரம் நிரந்தரம்

தன் பக்தர்கள் அனைவரின் பகைவர்களுக்கும் விநாயகர் பயங்கரமானவர். உதித்தெழும் சூரியன் போல் விளங்குகின்றார் அவர். தேவர்களும், அசுரர்களும் அவரை வணங்க, வணங்கியவரின் தீயதைப் போக்கி, தேவர்களுக்கும், நவநிதிகளுக்கும், கஜாமுகாஸுரனுக்கும், கணங்களுக்கும் தலைமை தாங்கி பரம்பொருளாய் நிற்கும் அவரை எக்கணமும் சரணமடைகிறேன்.

3. ஸமஸ்தலோகதங்கரம் நிரஸ்ததைத்யகுஞ்சரம்
தரேதரோதரம் வரம் வரேபவக்த்ரமக்ஷரம்
க்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்
மநஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்

கஜமுகாஸுரனை அழித்து அகில உலகுக்கும் நன்மையை அருளியவர் விநாயகர். அவர் பருத்த தொந்தியும், ஒளிவீசும் யானை முகமும் கொண்டவர். கருணை புரிபவர். பொறுமையானவர். மகிழ்ச்சி மற்றும் புகழ் சேர்ப்பவர். வணங்கியவருக்கு நல்ல மனதைத் தந்து விளங்கும் அவரை வணங்குகின்றேன்.

4. அகிஞ்சநார்திமார்ஜநம் சிரந்தநோக்த்திபாஜநம்
புராரிபூர்வநந்தநம் ஸுராரிகர்வசர்வணம்
ப்ரபஞ்சநாசபீஷனம் தநஞ்ஜாதிபூஷணம்
கபோலதாநவாரணம் பஜே புராணவாரணம்
ஏழைகளின் துன்பத்தைத் துடைப்பவர். உபநிஷதங்கள் போற்றி வணங்கத் திகழ்பவர். பரமசிவனின் மூத்தமகனாய் அசுரர்களின் கர்வத்தை அடக்கியவர். அத்தகைய மதஜலம் பெருகும் பழம்பெரும் வாரணமுகத்தவனை வணங்குகிறேன்.

5. நிதாந்த காந்ததந்த காந்தி மந்தகாந்தகாத்மஜம்
அசிந்த்யரூபமந்த ஹீநமந்தராயக்ருந்தநம்
ஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்தமேவ யோகிநாம்
தமேகதந்தமேவ தம் விசிந்தயாமி ஸந்ததம்
மிக அழகான தந்தங்களைக் கொண்டவர். யமனை அடக்கிய பரமசிவனின் புதல்வர். எண்ணுதற்கரிய உருவம் கொண்டவர். முடிவில்லாதவர். இடையூறுகளைத் தகர்ப்பவர். யோகிகளின் மனதில் குடிகொண்டவரான அந்த ஏகதந்தரை எப்பொழுதும் தியானம் செய்கிறேன்.

6. மஹாகணேசபஞ்சரந்தமாதரேண யோந்வஹம்
ப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதி ஸ்மரந் கணேச்வரம்
அரோகதாமதோஷதாம் ஸுஸாஹிதீம் ஸுபுத்ரதாம்
ஸமாஹிதாயுரஷ்டபூதிமப்யுபைதி ஸோசிராத்
இந்த கணேச பஞ்சரத்னத்தை தினமும் காலையில் ஸ்ரீகணபதியை மனதில் தியானித்துக் கொண்டு பாராயணம் செய்கிறவர்கள் நோயின்றி குறையேதுமின்றி, மேன்மையான கல்விகளையும் நன்மக்களையும், அஷ்ட ஐச்வர்யமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.

V ஸுப்ரமணிய கராவலம்பம் (கௌமாரம்)

1. ஹே ஸ்வாமிநாத கருணாகர தீனபந்தோ
ஸ்ரீபார்வதி சமூக பங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீசாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
தந்தைக்கே உபதேசம் செய்ததால்,  சுவாமிநாதன் எனும் பெயர் பெற்ற முருகா, உம்மை வணங்குகிறேன். கருணையே வடிவானவரே, எளியவரைக் காப்பவரே, திருவே உருவான அம்பிகையின் தாமரை மலரனைய திருவடிகளின் கீழ் அமர்ந்திருப்பவரே, திருமால், திருமகள் உள்ளிட்ட அனைத்து தேவர்களாலும் போற்றப்படும் உமது திருவடிகளை நமஸ்கரிக்கிறேன். வள்ளி மணவாளனே, உமது திருக்கரத்தினால் என்னை கைதூக்கி காப்பாற்றி அருள்வீர்களாக.

2. தேவாதி தேவனுதே தேவகணாதிநாத
தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா
தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை நமஸ்கரிக்கிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.

3. நித்யான்ன தான நிரதாகில ரோகஹாரிம்
தஸ்மாத் ப்ரதான் பரிபூரித பக்தகாம
சத்யாகம ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மீதும் பேரன்பு கொண்டவரே, நமஸ்காரம். அவர்கள் அனைவரும் வயிறார உண்டிட உணவினை அபிரிமிதமாய் அளிப்பவரே, பிறவிப் பிணி எனும் நோய் நீக்கும் மருத்துவராக அருள்பாலிப்பவரே, பக்தர்களின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றுவதையே கொள்கையாகக் கொண்டவரே, ஸ்ருதி, ஆகமங்கள், ஓம் எனும் பிரணவம் போன்றவற்றின் மொத்த உருவமாகத் திகழ்பவரே, வள்ளியம்மை நாயகனே, என்னைக் கைவிடாது காப்பீர்களாக.

4. க்ரௌஞ்சாமரேந்த்ர மத கண்டன சக்தி சூல
பாசாதி சஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டலீச த்ருத துண்ட சிகீந்த்ரவாஹ
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
தேவர்களின் தலைவனான தேவேந்திரனையே வென்று, அந்த கர்வத்துடனேயே, யாவரையும் எதிர்க்கும் மமதையுடன் திரிந்த க்ரௌஞ்சம் எனும் மலையின் செருக்கை, தங்களது சக்தி வாய்ந்த வேலாயுதத்தால் தகர்த்து தூள் தூளாக்கியவரே, பாசம் முதலான அநேகவித ஆயுதங்களைத் தாங்கி உலகைக் காக்க சூரியனை போல் பிரகாசமாக உலா வருபவரே, வள்ளி மணாளரே, நமஸ்காரம். என்னை தங்கள் திருக்கரங்களால் கைதூக்கிக் காத்தருளுங்கள்.

5. தேவாதி தேவ ரத மண்டல மத்யவேத்ய

தேவேந்த்ர பீடநகரம் த்ருத சாப ஹஸ்தம்
சூரம் நிஹத்ய சுரகோடி ப்ரிர்த்யாமனா
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.

தேவர்களுக்கெல்லாம் தேவரே! தேவர்களின் நடுவே தேரில் அமர்ந்து ஒளிர்பவரே, தேவேந்திர நகரத்தைப் பகைவர்கள் அணுகாதபடி வில், வேலால் காத்து பிரகாசமாய் ஜொலிப்பவரே. கோடிக்கணக்கான அசுரர்களை வதைத்து, அதனால் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே, வள்ளி நாயகரே நமஸ்காரம். தங்கள் அபயக் கரங்களால் என்னை கைதூக்கிக் காப்பீராக.

6. ஹாராதி ரத்ன மணியுக்தா க்ரீடஹாரா
கேயூர குண்டல லஸத்க்வசாபிராம
ஹே வீர தாரக ஜயா மரப்ருந்த வந்த்ய
வல்லீச நாத மம தேஹி கராவலம்பம்.
நவரத்னங்களால் ஆன பொற்கிரீடம் அணிந்து ஒளிமயமாய் தோற்றமளிப்பவரே, கேயூரம், குண்டலங்கள் ஆகிய அற்புத அணிகலன்களை அணிந்து அவற்றுக்குப் பெருமை சேர்த்தவரே, வீரர்களுள் தலைசிறந்தவரே, தாராகாசுரன் முதலான அசுரர்களை எளிதாக வதைத்து உலகைக் காத்தவரே, வள்ளியை மணம் புரிந்த வள்ளலே, நமஸ்காரம். தங்கள் அபய கரத்தால் என்னையும் காத்து எனக்கு வளமான வாழ்வளிப்பீராக.

7. பஞ்சாக்ஷராதி மனுமந்திரித கங்கா தோய
பஞ்சாம்ருதை: ப்ரமுதி தேந்த்ரமுகை முனீந்த்ரை:
பட்டாபிஷிக்த: ஹரியுக்த: பராசநாத:
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
‘ஓம் நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்திற்கு உரித்தான நாயகனின் திருமகனே, கங்கையில் தோன்றியதால் காங்கேயன் என வணங்கப்படுபவரே, பஞ்சாமிர்தத்தை ஏற்பதில் பேரானந்தம் கொள்பவரே, தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்களாலும் முனிவர்களாலும் முடி சூடப்பட்டு கொண்டாடப்பட்டவரே, திருமாலுக்குப் பிரியமான அவரது மருமகனே, பராசர முனிவரின் பக்திக்கும் போற்றுதலுக்கும் உரியவரே, வள்ளி நாயகனே நமஸ்காரம். தங்கள் திருக்கரங்களால் என்னைக் காப்பீராக.

8. ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத த்ருஷ்டசிதம்
சிக்த்வாதுமா மவ கலாதர காந்தகாந்த்யா
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்
கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த பாலனே, உந்தன் பரிபூரண அருள் கிடைப்பது என்பது கருணைக் கடலில் மூழ்கிக் குளிப்பது போன்ற மகிமை பொருந்தியது அல்லவா! என்னிடமுள்ள காமம், க்ரோதம், கோபம் முதலான நோய்களை தங்கள் அருள் எனும் மருந்தால் நீங்கச் செய்து என்னை உய்விப்பீர்களாக. பிறையணிந்த பரமசிவன், பார்வதியின் பேரன்பிற்குப் பாத்திரமானவனே, வள்ளி மணாளனே, என்னைக் கைவிடாது காத்து அருள்வீராக.

9. சுப்ரமண்ய கராவலம்பம் புண்யம் யபடேதித்வீ ஜோத்தமா:
தே சர்வே முக்திம் மாயாந்தி சுப்ரமண்ய ப்ரசாதத:
சுப்ரமண்ய கராவலம்பம் இதம் ப்ராதருத்தாய: படேத்
கோடி ஜன்ம கிருதம்பாபம் தத்க்ஷணா தேவ ஞஸ்யதிகா
இந்த சுப்ரமண்ய கராவலம்பத்தை நித்தமும் அதிகாலையில் ஜபிக்கின்றவர்களுடைய கோடி ஜன்ம பாவங்களும் தொலையும். அனைத்தும் சுகமாகும் என்பது நிச்சயம். மிகுந்த புண்ணியத்தை அளிப்பதும் அபூர்வமானதுமான இந்த துதியை யார் மனமொன்றிப் படிக்கிறார்களோ, அவர்களுக்கு குமரன் அருள் கிட்டி துன்பங்கள் தொலைந்து இறுதியில் பேரின்பமான முக்தியும் கிட்டும்.

VI ஸ்ரீ சூர்யாஷ்டகம் (சௌரம்)

1. ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே
ஆதிதேவனே வணங்குகிறேன். ஒளி பொருந்தியவனே எமக்கு அருள்வாய். பகலை உண்டாக்கும் நாயகா, ஒளியைத் தருபவனே உமக்கு என் வணக்கம்.

2. ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கச்யபாத்மஜம்
ச்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
வானவில்லின் வண்ணம் போன்ற ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் பயணிப்பவரே, வெப்பம் நிறைந்தவரே, ரிஷி கச்யபரின் குமாரரே, வெண்தாமரை மலரை கரத்தில் தாங்கியவரே, சூரிய தேவனே உம்மை வணங்குகிறேன்.

3. லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
சிவப்பு நிறத் தேரில் உலா வருபவரே, அனைத்து உலகங்களுக்கும் தந்தையே, எம் பாவத்தை அழித்து பாவனமாக்குபவரே, சூரிய தேவனே, உம்மை வணங்குகிறேன்.

4. த்ரைகுண்யம் ச மஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்
மஹாபாப ஹரம் தேவம் தம்
ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம் என மூன்று குணங்களை உடையவரே, பலம் பொருந்திய மஹாசூரரே, ப்ரம்மா, விஷ்ணு, ஈசன் இம்மூவரின் அம்சமும் பொருந்தியவரே, எம் பாவத்தை அழித்து பாவனமாக்குபவரே, சூரியதேவனே உம்மை வணங்குகிறேன்.

5. ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் ச வாயும் ஆகாசம் ஏவ ச
ப்ரபும் ச ஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
மேன்மேலும் பிரகாசிக்கும் தேஜஸாகிய ஒளி கொண்டவரே, வாயு, ஆகாயம் முதலான பஞ்சபூதங்களின் தொகுதியானவரே, உலகு அனைத்துக்கும் பிரபுவாகத் திகழ்பவரே, சூரியதேவனே உம்மை வணங்குகிறேன்.

6. பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல விபூஷிதம்
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
பந்தூக மரத்தின் பூவைப் போன்ற நிறத்தவரே, மாலை, குண்டலங்கள் அணிந்து அலங்காரம் ஒளிரத் திகழ்பவரே, ஒரே சக்கரம் உள்ள தேரை இயக்குபவரே, சூரியதேவனே உம்மை வணங்குகிறேன்.

7. தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ: ப்ரதீபனம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
உலக படைப்பு இயக்கத்துக்குக் காரணமாகத் திகழ்பவரே, தம் ஒளியால் உலகை இயக்கி உயிர்க்கு ஞானம் அளிப்பவரே, எம் பாவம் அறுத்து பாவனமாக்குபவரே, சூரியதேவனே உம்மை வணங்குகிறேன்.

8. தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்
உலகின் நாதனே, ஞானமாகிய அறிவையும், விஞ்ஞானமாகிய அறிவின் அனுபவத்தையும், மோக்ஷமாகிய மறுவீட்டையும் அளிக்கும் தேவனே, எம் பாவத்தை விலக்கிப் பெருமகிழ்ச்சி கொள்ளவைப்பவரே, ஹே சூரியதேவனே, உம்மை

- வணங்குகிறேன்.
தொகுப்பு: ந.பரணிகுமார்