தன் அருளை உணர செய்கிறது தெய்வம்திருமூலர் மந்திர ரகசியம்

பயணம் செய்வதற்காக ரயில் வண்டியில் ஏறி அமர்ந்துவிட்டோம்; மனைவி, குழந்தைகள் உடன் வருகிறார்கள். வண்டி புறப்பட்டுவிட்டது. நாம் இறங்க வேண்டிய இடம் நன்றாகத் தெரியும். அதுவரை, வண்டிக்குள் டீ, காபி, விளையாட்டுப் பொருட்கள் எனப் பலவும் விற்றுக் கொண்டு செல்பவர்களும் அவ்வப்போது வருவார்கள். எது வரும், எது வராது என்பது நமக்குத் தெரியாது.

வருபவற்றிலும் நமக்கோ, மனைவிக்கோ, குழந்தைகளுக்கோ தேவையானதை மட்டும்தான் வாங்குவோம். நமக்குத் தேவையில்லாவிட்டால் கூட, குழந்தைகள் கேட்டால் தவிர்க்க முடியாது, வாங்கிக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இப்படியே நாம் இறங்கவேண்டிய ஊர் வரும்வரை, பல நிகழ்வுகள். இவற்றில் எதுவுமே, நாம் திட்டம் போட்டுச் செய்யக் கூடியது அல்ல. திடீரென்று ஏதேனும் பிரச்னை என்று ரயில்வண்டி பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள்!

அந்தப் பகுதியில் பேருந்து முதலான பயண வசதிகள் எதுவுமே கிடைக்கவில்லை.அந்த நேரத்தில், ஒருவர் வந்து, ‘‘வாங்க! கார்ல நான் மட்டும் தான் தனியாப் போறேன்,’’ என்று சொல்லி, சகல சௌகர்யங்களுடன் நம் பயணத்தை நிறைவு செய்தால் எப்படி இருக்கும்! இது ஏதோ சாதாரணப் பயணக் கதையல்ல. சற்று நேரப் பயணத்திற்கே இப்படி என்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு?

திருமூலர் சொல்வதைக் கேட்கலாம் வாருங்கள்!


முன்னை அறிவு அறியாத அம்மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரன் ஆக்கித் தற்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே
(திருமந்திரம் - 1609)

கருத்து: முன்வினைப் பயன்களில், பந்த பாசங்களில் கட்டுண்டு கிடக்கின்ற அறியாமையை உணரும் அறிவில்லாத மூடரைப் போல் இருந்த எனக்கு, ஞானகுருவாக வந்து, பின்னர் (பின்னை) என்னை ஆட்கொண்டு, என் அறியாமையைப் போக்கி அருளினான், தன்னை உணரச் செய்து மெய்யறிவு புகட்டிச் சிவமாக என்னைச் செய்வித்த தற்பரனாகிய சிவபரம் பொருள். அவரே, தம் அருள்திறத்தை என்னை உணரச் செய்து என்னுள்ளே இருந்தனர்.அற்புதமான பாடல் இது. நாம் செய்யும் தவறுகளை எல்லாம், மகான்கள் தம்மேல் சுமத்திக் கொள்வார்கள். அதன்படி, இப்பாடலில் திருமூலர் சொல்லியிருப்பதை அனுபவிக்கலாம்.

தொடக்கத்தில் நாம் பார்த்த போக்குவரத்துப் பயணம், நம் விருப்பம்போல அமையாவிட்டாலும், பயணத்தைத் துவங்கிய நாம் அதன் விதிகளுக்கு உட்பட்டுதான் ஆகவேண்டும். அதுபோல, வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கிவிட்ட நாம், விரும்புகிறோமோ, இல்லையோ, முன்வினைப் பயன்கள் ஆட்டி வைக்கிறபடி, ஆடித்தான் ஆக வேண்டும், வேறு வழியே இல்லை. முன் வினையாவது, பயனாவது! அதையெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது என்றால், முன்வினை பற்றியோ, அதன் பலனைப் பற்றியோ எதுவும் தெரியாவிட்டாலும், வினைப்பயன் நம்மைத் தாக்காமல் விடாது.

விரும்பியோ, செய்தாக வேண்டிய கட்டாயத்தின் பேரிலோ, ஏதாவது ஒருவகை வினை(செயலை)யைச் செய்துதான் ஆக வேண்டும்.யாராக இருந்தாலும், அந்த வினைப்பயனில் இருந்து தப்ப முடியாது. இதை மேலும் எளிமையாக உணர ஓர் உதாரணம்: நம் கைபேசி (செல்போன்) எண்ணை, நாம்தான் பலரிடமும் கொடுக்கிறோம், அதன் மூலம் அழைப்புகள் மட்டுமா வருகின்றன? அதை வாங்கு, இதை வாங்கு என, எத்தனை
விளம்பரங்கள்!

இன்னும் பலவிதங்களில், கைபேசியில் பயன்பாடுகள் அளவில்லாமல் இருக்கின்றன. அவையெல்லாம், கைபேசிக் கட்டணமாக (Bill) எதிரொலிக்கும். கைபேசியைப் பலவிதங்களிலும் பயன்படுத்திவிட்டு, அதன் விளைவுகளைப் பற்றியெல்லாம் தெரியாது என்று சொல்லித் தப்ப முடியுமா? அதுபோல, வினைப் பயன்களைப் பற்றித் தெரியாது என்று சொல்லி, அவற்றிலிருந்து தப்ப முடியாது. அந்த வினைப் பயன்கள் எல்லாம், உறவுகள் மூலமும், அவற்றால் விளைந்த பந்த-பாசங்கள் மூலமும் உண்டானவை.

‘‘அது எதையுமே உணராமல், அறிவு அழிந்த மூடர்களைப் போலக் கட்டுண்டு கிடந்தேன்’’ என்கிறார் திருமூலர்.இதுதான் உத்தமர்களின் வழியும், வாக்கும்! வினைப் பயன்களின் விளைவை அறியாமல், அறியாமையில் ஆழ்ந்து கிடக்கும் நம் குறையை, தன் குறையாக வெளியிடுகிறார் திருமூலர். அதுதான் மகான்களின் வாக்கு; அவர்கள் நமக்குக் காட்டும் வழி. இவ்வாறு சொன்ன திருமூலர், அதிலிருந்து வெளியே வரும் வழியையும் கூறுகிறார். அதையும், தாம் வந்த வழியாகவே கூறுகிறார்.

தொடக்கத்தில், கார்க்காரர் ஒருவர் வந்து நம்மை ஏற்றிக் கொண்டு, பயணம் தொடரச் செய்து குறை தீர்த்ததாகப் பார்த்தோம் அல்லவா? அதுபோல, தெய்வம், ஞான குருவாக வந்து, ஆட்கொண்டார், அறியாமையைப் போக்கி அருளினார், தன்னை உணரச் செய்தார் என்பது எத்தகையது என்றால், எதுவுமே தெரியாத இருட்டு அறையில் விளக்கைப் போட்டவுடன், அனைத்தும் தெரிகின்றனவே, அதுபோல. அதனதன் நன்மை, தீமைகள் புரிகின்றன.
தெய்வம், குருநாதராக அறியாமையை நீக்கியதும், உண்மை நிலை புரிகிறது. நன்மை தீமைகளை உணர்கிறோம்.

குரு அருள் இன்றேல் திருவருள் இல்லை என்பதை விளக்கும் பாடலின் பிற்பகுதி இது. வழி தெரியாதவர்க்கு வழிகாட்டி, கூடவே இருந்து உதவி செய்வதை ஒத்தது. தெய்வமே குருநாதராக வந்து, அறியாமையை நீக்கியபின், மெள்ள மெள்ள தெய்வத்தைப் பற்றிய உண்மை புரிகிறது. ‘‘சரி! வந்த வேலை முடிந்து விட்டது. இனி நாம் போகலாம்’’ எனத் தெய்வம் (குரு) அத்துடன் போய் விடுவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் உண்மையை உணரச் செய்கிறது.

ஓரளவு நாம் நன்கு பக்குவப்பட்ட பின்பும், குரு வடிவான தெய்வம், நம்மை விடுவதில்லை; தன் அருளை உணரும்படிச் செய்து, நம் உள்ளத்திலேயே இருக்கிறது.  ஒரு உதாரணம் பார்க்கலாம். சுந்தரரின் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய சிவபெருமான், அவரை ஆட்கொண்டு அவருக்குத் தன்னை உணரச் செய்தார். அதன் பிறகு, தன்னை உணர்ந்த சுந்தரர் வாயிலாகப் பாடல் பெற்று, சுந்தரரின் குறைகளை எல்லாம் தீர்த்து வைத்தார். முடிவில், தான் ஏறும் ஐராவதத்தின் (யானை) மீது சுந்தரரை ஏற்றி, அழைத்து வரச்செய்து, தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.ஆகவே, தெய்வம் ஒருநாளும் கைவிடாது; அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப, குருவாக வந்து குறைகளைத் தீர்க்கும்; கூடவே இருந்து அருளும் என்பதை விளக்கும் பாடல் இது.

குருவாக வந்து குறைகளைத் தீர்த்த  சிவபெருமானை, இவ்வாறு சுட்டிக் காட்டிய திருமூலர் அடுத்த பாடலில் சிவபெருமானையே சுட்டிக்காட்டி உணர்த்த முற்படுகிறார்.

அறவன் பிறப்பிலி     யாரும் இலாதான்
உறைவது காட்டகம்     உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி அறுத்திடும்     பித்தன் கண்டீரே
(திருமந்திரம் - 1616)

கருத்து: சிவபெருமான், அறமே வடிவானவர், பிறப்பு இல்லாதவர், உறவுமுறை, துணை என யாருமே தேவை இல்லாதவர். அவர் இருக்கும் இடமோ சுடுகாடு, உணவோ பிச்சை எடுத்துக் கிடைப்பது. துறவியாகவும், துறந்தவர் தொழும் தெய்வமாகவும் இருக்கும் இத்தெய்வமே, பிறவித் துயரம் போகவும் அருள்வார். இவ்வாறு அடியார்க்கு அருளுவதையே தன் கடனாகக் கொண்ட ‘பித்தன்’ இவர் என்பதை உணருங்கள்!

பாடலின் தொடக்கமே அற்புதம்! சிவபெருமான் அறத்தின் வடிவாகவே இருக்கிறாராம். ஏற்கனவே ஒரு பாடலில்,

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
- என்று கூறியிருக்கும் திருமூலர்,

இப்பாடலில் சிவபெருமானை ‘அறத்தின் வடிவானவர்’ எனக் கூறியிருப்பதை, ஊன்றி உணர வேண்டும். காரணம்? எங்கு எதைக் கேட்க
வேண்டும் என்பதை, நம்மையே யூகித்து உணர வைக்கிறார். பணம் எடுக்கும் இடத்தில் (A.T.M) போய், அரிசி, பருப்பு கேட்போமா? பாஸ்போர்ட் அலுவலகத்தில், ‘‘பஞ்சாங்கம் கொடு!’’ என்போமா? அதுபோல, அறத்தின் வழியாக, அன்பின் வழியாக இருக்கும் ஆண்டவனிடம் அறத்தையும், அன்பையும் கேட்க வேண்டுமே தவிர, மற்றவற்றைக் கேட்கலாமா? அறமும் அன்பும் வந்தால் - இருந்தால், மற்றவையெல்லாம் தாமாகவே
வந்துவிடுமே!

பாடலின் தொடக்கத்தில் இதைச் சொன்ன திருமூலர், அடுத்து ‘பிறப்பிலி’ என்கிறார். அபூர்வமான சொற்பிரயோகம் இது. மற்ற தெய்வங்களெல்லாம் ஏதாவது ஒரு விதத்தில் அவதாரம் எடுத்ததாக வரலாறு உண்டு. ஆனால் சிவபெருமான், பிறந்ததாக வரலாறே கிடையாது. அதனால்தான் ‘பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்’ என, சிவபெருமான் கோயிலைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

அடுத்ததாக, சுடுகாட்டை இறைவன் உறையும் இடமாகக் குறிக்கிறது பாடல். ஒருவர்க்குப் பிடித்த இடம், அடுத்தவர்க்குப் பிடிக்காமல் போகலாம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அனைவரும் ஒருநாள் போய்ச் சேரவேண்டிய இடம் - சுடுகாடு. இதைச் சற்று நகைச்சுவையாகவும் குறிப்பிடுவது உண்டு. மூதறிஞர் ராஜாஜி பொறுப்பில் இருந்தபோது நடந்த சம்பவம்: ‘‘சுடுகாட்டிற்குச் சுவர் இல்லை. கட்டித் தர வேண்டும்,’’ எனக் கேட்டார் ஒருவர்.

அதற்கு ராஜாஜி, ‘‘கவலைப்பட வேண்டாம். அங்கு இருப்பவர்கள் யாரும் வெளியே வரப் போவதில்லை. வெளியே உள்ள யாரும் சுடுகாட்டிற்குப் போக விரும்ப மாட்டார்கள்’’ என்றார். ஆகவே யாரும் போக விரும்பாத இடம், ஆனால் போய்த்தான் ஆக வேண்டிய இடம் - சுடுகாடு.‘ஆலயத்திற்கு வராவிட்டாலும் இங்கு வந்து தானே ஆக வேண்டும். அருள் புரியாமல் விடமாட்டேன்’ என்று தெய்வம் அங்கும் வந்து நிற்கிறதாம்.

இறைவன் பிச்சை எடுப்பதை அடுத்துக் குறிக்கிறது பாடல். அதாவது, நம்மிடம் உள்ள தீய குணங்களைத் தன்னிடம் பிச்சையாக இடச் சொல்கிறது, சிவபெருமானின் இக்கோலம். சரி! இவ்வாறெல்லாம் செய்வதால் அவருக்கு என்ன லாபம்? பயன்? எதுவும் கிடையாது. எதன் மேலும் விருப்பம் இன்றி, அனைத்தையும் துறந்து, நமக்கு அருள்புரிவதற்காகவே உள்ளது தெய்வம்.

நாம் என்னதான் செய்தாலும், பைத்தியம் பிடித்தவர் திருப்பித் திருப்பி செய்ததையே செய்து கொண்டிருப்பதைப் போல, நாம் எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும், எப்படியாவது நம்மைத் திருத்திக் கரையேற்றிவிட வேண்டும் என்று செயல்படும் தெய்வத்தை, ‘பித்தன்’ எனக் கூறிப் பாடல் நிறைவு பெறுகிறது.

பித்தம் தெளிய அப்பித்தனை
வணங்குவோம்! சித்தம் தெளியும்!
சீர் வளரும்!
(மந்திரம் ஒலிக்கும்)