தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்!



* பகவத் கீதை 66

அக்ஞஸ்சாச்ரத்ததானஸ்ச ஸம்சயாத்மா
                               விநச்யதி
நாயம் லோகோஸ்தி ந பரோ ந ஸுகம்
                ஸம்சயாத்மன (4:40)

‘‘அர்ஜுனா, பகவத் விஷயத்தை அறிந்துகொள்ளாதவன், அவ்வாறு அறிந்துகொள்வதில் ஆர்வமற்று இருப்பவன், எதிலும் சந்தேகத்துடனேயே வாழ்பவன் வீழ்ச்சியடைகிறான், அழிகிறான். இவற்றுள் சந்தேகத்துடன் வாழ்பவனுக்கு இப்போதைய உலகிலும் எந்த நலனும் கிட்டாது, பரலோகத்திலும் நன்மை உண்டாகாது. இம்மை, மறுமை இரண்டுமே அவனுக்கு விலக்காகிவிடுகின்றன.’’

எதையுமே அறிந்துகொள்ளும் பக்குவமும் ஆற்றலும் பெற்றவன் மனிதன். அந்தப் பக்குவத்தை, அறிவை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு பகவத் விஷயத்தை அறிந்துகொள்ளவேண்டியது அவனுடைய கடமையாகவே ஆகிறது. ஆனால், அப்படி அறிந்துகொள்ள ஆர்வமில்லாமல் அவன் இருப்பானானால் அந்த அறிவையும், பக்குவத்தையும் அவன் பெற்றிருப்பதில் என்னதான் அர்த்தமிருக்கிறது?

சரி, அவன் அறிவிலியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அவனிடம் சந்தேகமும் இருக்குமானால் அதைவிடக் கொடுமை எதுவுமில்லை. சந்தேகம் ஒருவனை முழு அழிவிற்கே இட்டுச் செல்கிறது. எதிலும், யாரிடத்திலும், எதற்கும் சந்தேகம் கொள்பவன் தனித்து விடப்படுகிறான். அந்த சந்தேகத்தின் அடிப்படை அவனுடைய சொந்த நலம்தான். சூழ்நிலைகளும், சூழ்ந்திருப்பவர்களும், தனக்கு எதிராகவே இயங்குகின்றன(ர்) என்ற சந்தேகம், தனக்கு பெரு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற ‘நம்பிக்கை’யின் விளைவுதான்!

காட்டுவழியில் சென்றுகொண்டிருந்தான் ஒருவன். பக்கத்து கிராமத்துக்குப் போகவேண்டும் அவன். இருட்டு, விலங்கு, கள்ளர் பயம் நீங்கிக் காட்டுப்பாதையில் பயணிக்க வேண்டியிருந்ததால், பகவான் நாமத்தை உச்சரித்தபடியே செல்லுமாறு அவனுடைய தாயார் அவனுக்கு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி காட்டினுள் நுழைந்த அவன், அதன் அடர்த்தியால், மாலைப் பொழுதே இரவாகி விட்ட முரணை கவனித்து உடனே அச்சம் கொண்டான். ஆனாலும் தாயார் சொன்ன அறிவுரைப்படி கடவுள் நாமத்தை உச்சரித்துக்கொண்டே சென்றான். இவ்வாறு உச்சரித்ததில் பக்தியைவிட தன்னை எந்த ஆபத்தும் சூழ்ந்துவிடக்கூடாதே என்ற சுயநல எச்சரிக்கை உணர்வுதான் மிகுந்திருந்தது.

ஆனால், அவனே அதிசயிக்கும்வகையில், மாலை கவிந்து இருள் சூழ்ந்தபோது, வானிலிருந்து நிலவின் தாரகைகள் அந்த அடர்ந்த காட்டினுள்ளும் ஊடாடி அவனுக்கு சற்றே வெளிச்சமான பாதையைக் காட்டியது. கொஞ்சம் உற்சாகமானான். சிறிது தூரம் நடந்ததும், விலங்குகள் சில கர்ஜிக்கும் ஓசை கேட்டது. மறுபடியும் பயந்தான். அப்போது, ‘கவலைப்படாதே, அந்த விலங்குகள் உன்னை ஒன்றும் செய்யாது, தைரியமாக முன்னேறிப் போ,’ என்று யாரோ சொல்வதுபோலக் கேட்டது அவனுக்கு.

சுற்றுமுற்றும் பார்த்த அவன் அந்தக் குரல் யாருக்குரியதாக இருக்கும் என்று சிந்தித்தான். புரியவில்லை. ஒருவேளை தாயார் சொன்னபடி கடவுள் நாமத்தை உச்சரித்துக்கொண்டே வந்ததால், கடவுளே பேசுவதுபோல பிரமை தனக்குத் தோன்றியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான் அவன். இன்னும் சிறிது தூரம் சென்றபோது சற்றுத் தொலைவில் நாலைந்து வழிப்பறிக் கொள்ளையர் அமர்ந்திருந்ததைப் பார்த்தான்.
தன்னை அவர்கள் தாக்கக்கூடும் என்று பயந்தான். ஆனால் கூடவே ஒரு குரல், ‘பயப்படாதே. அவர்கள் உன்னை ஒன்றும் செய்யமாட்டார்கள்,’ என்று கூறியது. வாலிபனுக்கு மறுபடியும் ஆச்சரியம். தயங்கியபடியே அவர்களை அவன் கடந்து சென்றபோது அவர்கள் மது அருந்தி மயங்கிக் கிடந்ததை கவனித்தான். இந்த ஆபத்திலிருந்தும் தப்பித்தாயிற்று. இன்னும் உற்சாகமானான். அந்த உற்சாகத்தில் சற்று விரைவாகவே நடந்த அவன், ஒரு பள்ளத்தை கவனிக்காமல் கால் இடறி உள்ளே விழுந்தான். அது ஏதோ அதல பாதாளம் என்று கருதிய அவன், தப்பித்துக்கொள்ள கைகளை நீட்ட, ஒரு மரத்தின் வலுவான வேர் கைக்குப் பட்டது. பளிச்சென்று அதைப் பற்றிக்கொண்ட அவன், காலடியில் ஆதாரமில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தான். இப்போதும் ஒரு குரல் கேட்டது: ‘அஞ்சாதே, அந்த வேரிலிருந்து கைகளை விடு. பாதுகாப்பாக குதிப்பாய்’.

ஆனால் இம்முறை அவன் அந்தக் குரலுக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை - சந்தேகம். குரல் சொன்னபடி கையை விட்டுவிட்டால், கீழே எத்தனை அடி ஆழத்தில் போய் விழுவோமோ, உருத்தெரியாமல் சிதைந்து போய்விடுவோமோ என்று சந்தேகப்பட்டான். ஆகவே வேரை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, ஏதேனும் மனித உதவி வரும்வரை அப்படியே தொங்கிக்கொண்டிருப்பது என்று முடிவு செய்தான். ‘யாரேனும் உதவிக்கு வாருங்களேன்…’ என்று முழு பலத்துடன் கத்தவும் செய்தான். நேரம்தான் கடந்ததே தவிர எந்த உதவியும் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் களைத்தான். தொய்ந்தான். ஆனாலும் வேரைப் பற்றியபடியே தொங்கிக்கொண்டிருந்தான்.

பொழுது விடிந்தது. இன்னமும் அவன் தொங்கிக்கொண்டே இருந்தான். ஆனால் பயத்தாலும், களைப்பாலும் அவன் உயிர் அவனைவிட்டுப் பிரிந்திருந்தது. அவனுடைய காலடியில் மூன்றே அடி இடைவெளியில் பூமி அவனைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தது! இவ்வாறு அவநம்பிக்கை, சந்தேகம், அதனால் தவறான முடிவு என்று வாழ்க்கையையே நரகமாக்கிக்கொண்டிருப்பவர்கள் பலர். தங்களுக்குள் பேசிக்கொண்டு போகும் இருவரைப் பார்க்கும் மூன்றாமவர், அவர்கள் தன்னைப் பற்றிதான் பேசிக்கொள்கிறார்கள் என்று சந்தேகக் கற்பனை செய்துகொள்கிறார். அவர்கள் பேசிக்கொள்வது தன்னைப் பற்றிய அவதூறு என்றும் அந்த கற்பனை அடுத்து விரிகிறது. இப்படி ஆரம்பிக்கும் சந்தேகம், அந்த இருவரையும் தாண்டி அனைவர் மீதும் படர்கிறது. அது நட்பு, குடும்பம், பிற உறவுகள், சமுதாயம் என்று உலகளாவி வியாபிக்கிறது.

‘தன்னைத்தானே நம்பாதது சந்தேகம்….’ என்று தஞ்சை எஸ். ராமையாதாஸ் ‘தெய்வப் பிறவி’ என்ற திரைப்படத்துக்காக எழுதிய பாடல் இதைத்தான் விவரிக்கிறது.  இத்தகையவர்கள் இம்மைக்கு, அதாவது இப்போது பிறப்பெடுத்திருக்கும் வாழ்க்கைக்கு தகுதியுடையவர்கள் அல்லர். ஏனென்றால், யார் என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் அவையெல்லாம் தனக்கு விரோதமானவை, தனக்குக் கேடு செய்பவை என்றே அவர்கள் கருதுகிறார்கள். இப்படி உலகோரை நம்பாதவர்கள் எப்படி இந்த உலகத்துக்கு உரியவர் ஆவார்? இதில் வேடிக்கை என்னவென்றால், பிற யாரையும் நம்பாத ஒருவர், தன்னைப் பிறர் நம்பவேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான்? தினை விதைக்கப் பனையா முளைக்கும்?

(தொடரும்)