என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்..?



இன்று இந்த நிலவுலகம் முழுவதும் வள்ளுவரைக் கொண்டாடுகிறது.  ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்தின் பெருமையைத் திருவள்ளுவர் பல்வேறு இடங்களில் கொண்டாடி மகிழ்கிறார்.  

'மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்!’ (குறள்எண் 3)

கடவுள் வாழ்த்திலேயே நிலத்தில் நெடுநாட்கள் வாழ்வது எப்படி என்ற ரகசியத்தைத் தெரிவிக்கிறார் வள்ளுவர். இறைவனைத் துதிப்பவர்களுக்கு ஆயுள் கூடும் என்பது வள்ளுவரின் கண்டுபிடிப்பு.  உண்மைதானே? அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார் எனக் கடவுள் பொறுப்பில் விட்டுவிட்டவர்களுக்குக் கவலை கிடையாது.  எனவே ரத்த அழுத்தம் தோன்ற வாய்ப்பில்லை.  அப்போது ஆயுள் கூடத்தானே செய்யும்?

'நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.’ (குறள்எண் 28)

சான்றோர்களின் பெருமையை இந்நிலத்தில் அழியாமல் விளங்கும் அவர்களின் மந்திரச் சொற்களே காட்டிவிடும்.

'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.’ (குறள்எண் 68)

தம்மைவிடத் தம் குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பது உலகிற்கெல்லாம் மகிழ்ச்சி தரக்கூடியது.

'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை’ (குறள்எண் 151)

தன்னை அகழ்வாரையும் நிலம் தாங்குகிறதே? அதுபோல நம்மை இகழ்பவர்களையும் நாம் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார் வள்ளுவர். விளைநிலங்களைத் தோண்டி, வீட்டு மனைகள் கட்டக்கூடாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளலாம்!

'நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.’(குறள்எண் 234)

நிலவுலகில் புகழ் பெற்றவரைத்தான் வானுலகம் போற்றுமே தவிர தேவர்களைக்கூட வானகம் போற்றாது.

'வசையிலா வண்பயன் குன்றும் இசைஇலா
யாக்கை பொறுத்தல் நிலம்.’(குறள்எண் 239)

புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த பூமி தன் விளைச்சலில் குன்றிவிடும்.

'காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.’ (குறள்எண் 386)

எல்லோராலும் எளிதில் சந்திக்கக் கூடியவனாகவும் கடுஞ்சொல் பேசாதவனாகவும் மன்னன் இருப்பானேயானால் அவன் ஆட்சி செய்யும் நிலம் உயர்ந்து விளங்கும்.

'நிலத்தியல் பால் நீர்திரிந்தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.’ (குறள்எண் 452)

நீரானது நிலத்தின் இயல்பால் மாறுபடும். செம்மண்ணில் பெய்த மழைநீர் சிவப்பாக மாறுவது இயல்பு. அதுபோல மனிதர்கள் சேர்வார் சேர்க்கையினால் குணத்தில் மாறுபடுவார்கள்.   

'யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே!’  
(குறுந்தொகை 40)

- என்கிற செம்புலப்பெயல் நீரார் எழுதிய சங்கப்பாடல், காதலர்களின் மனங்கள் இணைவதைச் சொல்கிறது. செம்மண்ணில் பெய்த மழைநீர்போல அன்பு நெஞ்சங்கள் கலந்தன என்கிறது அது. நிலத்தியல் பால் நீர் திரிந்ததுபோல என வள்ளுவர் சொல்லும் உவமையே இங்கு காதலர்களின் நெஞ்சக் கலப்புக்கு உதாரணமாகியுள்ளது.

'சிறைநலனும் சீரும் இலரெனினும்மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.' (குறள்எண் 499)
அரண் என்கிற பாதுகாவலும் மற்ற சிறப்புக்களும் இல்லாதவரே என்றாலும் அவர்கள் வாழும் இடத்திற்குச் சென்று அவர்களைத் தாக்கி வெல்லுதல் அரிது.

'சினத்தைப் பொருள் என்று கொண்டவன்கேடு
நிலத்து அறைந்தான் கைபிழையாதற்று.’ (குறள்எண் 570)

நிலத்தை அறைந்தவன் கைவலியால் நோவது மாதிரி, சினத்தைக் கொண்டவனும் நொந்து போவான்.

'குன்று அன்னார் குன்றமதிப்பின் குடியொடு
நின்ற அன்னார் மாய்வர் நிலத்து.’(குறள்எண் 898)

மன்னவன் கொடுங்கோலனாக இருந்தால் அவன்  நிலத்தில் வாழும் மக்கள் மாய்ந்து போவர்.

'நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்.’(குறள்எண் 959)

நிலத்தின் இயல்பை அந்த நிலத்தில் முளைக்கும் விதையின் முளை தெரிவிக்கும். அதைப்போல குலத்தின் இயல்பை அதில் பிறந்தவர் உரைக்கும் சொல் தெரிவித்துவிடும்.

'சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை.’ (குறள்எண் 990)

நிலமகள் பொறுமையின் இருப்பிடம்தான். ஆனால் அவளும் சான்றோரின் குணத்தில் மாசு நேர்ந்தால் தாங்கமாட்டாள்.

'ஈட்டம் இவறி இசை வேண்டாஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.’ (குறள்எண் 1003)

கொடுத்துப் பெறும் புகழை விரும்பாமல் சேர்த்து வைப்பதையே விரும்புகிறவர்கள் இந்த நிலத்திற்குச் சுமைதான்.

'இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.’ (குறள்எண் 1040)

என்னிடத்தில் எப்பொருளும் இல்லையே என்று மனம் தளர்ந்து சோம்பி இருப்பவர்களைக் கண்டால் நிலமென்கிற நல்லாள் நகைப்பாளாம். காரணம் நிலம் இருக்கிறதே உழுது பயிரிட! விவசாயி திரைப்படத்தில் கவிஞர் மருதகாசி எழுதி கே.வி. மகாதேவன் இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜன் பாடிய பாடல் வரிகள்,  இந்தக் குறளின்  விளக்கமாகவே அமைந்துள்ளன.

'என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்?
ஒழுங்காய்ப் பாடுபடு வயக்காட்டில்!
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்!’

 புகழ்பெற்ற சுயமுன்னேற்றக் கவிஞரான தாராபாரதி, 'வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்' என்று சொல்வதும் இதேபோன்ற சிந்தனையைத்தான்.

'காணிற்கு வளைகவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழைகண் ஒவ்வேம் என்று.’ (குறள்எண் 1114)

குவளைமலர் தலைவியின் கண்ணைப் பார்த்தால் அதற்குத்தான் இணையாக இல்லையே என்ற துக்கத்தால் நாணிக் கவிழ்ந்து நிலத்தைப் பார்க்குமாம்.

'யான் நோக்கும்காலை நிலன்நோக்கும் நோக்    காக்கால்
தான் நோக்கி மெல்லநகும்.’ (குறள்எண் 1094)

  `நான் அவளைப் பார்க்கும்போது அவள் நிலத்தைப் பார்க்கிறாள். நான் அவளைப் பார்க்காவிட்டால் என்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கிறாள்!` என்கிறான் தலைவன்.  தலைவன் இப்படிச் சொல்வது முழுப்பொய்தான். காதலில் பொய்கள் இயல்பானவைதானே! தான் அவளைப் பார்க்காதபோது அவள் தன்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கிறாள் என்கிறானே,  அவன்தான் அவளைப் பார்க்கவில்லையே,  அப்புறம் அவள் அவனைப் பார்த்துச் சிரித்தது அவனுக்கு எப்படித் தெரியும்? பார்க்காத பாவனையில் இருந்தானே தவிர எப்போதும் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான் என்பதே உண்மை!
கவிஞர் மு. மேத்தா செருப்புக்களுடன் ஒரு பேட்டி என்றொரு கவிதை எழுதியுள்ளார். செருப்பிடம் ஏதேனும் இனிய நினைவு எனக்கேள்வி கேட்பார் நிருபர்.  அதற்குச் செருப்பு என்ன பதில் சொல்லும் தெரியுமா?

'தலைவன் வந்ததும்
நாணத்தால் கவிழும்
தலைவியின் தாமரைக் கண்கள்
தலைவன் முகத்தைப் பார்ப்பதற்கும் முன்னால்
எங்களைத்தான் பார்க்கின்றன!’

சீதை நிலமகள். ஜனகர் உழுத ஏர்முனையில் ஒரு பெட்டி தட்டுப்படவே பத்திரமாகப் பெட்டியை மேலே எடுத்து அதைத் திறந்து பார்த்தார் ஜனகர். உள்ளே ஒரு பெண் குழந்தை மண்ணில் தோன்றிய வெண்ணிலவுபோல் மலர்ச்சியுடன் படுத்திருந்தது.  கைநீட்டி வா என அழைத்தார். கலகலவெனச் சிரித்தவாறே அவரிடம் தாவியது அது. விவரமறிந்து அரண்மனையிலிருந்து வயல்வெளிக்கு ஓடோடி வந்தாள் ஜனகரின் மனைவி சுனயனாதேவி.  பேரழகுப் பெட்டகமாய் ஒரு பெட்டகத்திலிருந்து எடுக்கப்பட்ட பெண்குழந்தையை வாரி அணைத்துக் கட்டிக்கொண்டாள். அன்று
தொட்டு அவளுக்குச் சீதை எனப்பெயரிட்டு அவளை ஜனகரும் சுனயனாவும் வளர்த்த கோலாகலங்களைக் கண்டு மிதிலையே மூக்கில் விரல் வைத்து
அதிசயித்தது.

திருமால் கண்ணனாக அவதரித்தபோது யசோதை கண்ணனின் வளர்ப்புத் தாயானாள்.  லட்சுமி, சீதையாக அவதரித்தபோது சுனயனா அவளின் வளர்ப்புத் தாயானாள்.  லட்சுமிதேவியே சீதையாக மண்ணில் தோன்றியதால் சீதை அவதரித்த தினம் முதல், மாதம் மும்மாரி பொழிந்து மிதிலையில் செல்வம் கொழிக்கத் தொடங்கியது.

சீதை மண்ணில் எந்த இடத்தில் தோன்றினாளோ அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி, வழிபடத் தொடங்கினார்கள் மிதிலை மக்கள். சீதை உதித்த மண்ணை எடுத்து தெய்வப் பிரசாதமாய் நெற்றியில் இட்டுக்கொண்டார்கள். ஆனாலும் சுனயனா வளர்ப்புத் தாய்தான். பூமிதானே சீதையைப் பெற்ற தாய்! பூமிமாதா தன் மகள் சீதையைக் கண்ணும் கருத்துமாய்த் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்ற மணமகன் வாய்க்கவேண்டும் என்பதில் வளர்ப்புத்தாய் சுனயானாவுக்கு உள்ள அக்கறையை விடவும் கூடுதலான அக்கறை பூமித்தாய்க்கு இருந்தது.

அதனால்தான் தன் மகளுக்குப் பொருத்தமில்லாதவர் வில்லை வளைக்க எத்தனித்தபோது, அந்த வில்லை அவர்கள் பூமியிலிருந்து எடுக்கவே இயலாதபடி பூமித்தாய் இறுகப் பிடித்து வைத்திருந்தாள்! ராமன் வந்தான். ‘தோள்கண்டார் தோளேகண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள்கண்டார் தாளேகண்டார்’ என மக்கள் பார்த்து வியந்த பேரழகன் அவன். ராமனைப் பார்த்ததும் பூமித்தாயின் மனம் பூரித்தது. இவனே தன் மகளுக்கேற்ற மணாளன் என முடிவு செய்தாள்.

ராமன் வில்லைத் தூக்க முயன்றபோது வில்லைப் பிடித்திருந்த தன் இறுக்கமான பிடிப்பைத் தளர்த்தி இலகுவாக்கினாள். வில்லை சீதாதேவியின் தோள்களில் சூட்டப்போகும் பூமாலைபோல் எளிதாகத் தூக்கினான் ஸ்ரீராமன். எடுத்தது கண்டனர்,  இற்றது கேட்டார்! இப்படித் தன் மகளுக்கேற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்துத் தன் மகளின் திருமணத்திற்கு அருள்புரிந்தாள் பெற்றதாய்!

சீதைக்குத் திருமணமான பின்னரும் நிலம் தன் மகளான சீதையைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேதான்இருந்தது. இறுதியில் சீதைமேல் அபவாதம் எழுந்து அவள் காட்டுக்கு அனுப்பப்பட்டபோது, பூமித்தாய் அவள்முன் தோன்றினாள். `என்னுடன் வந்துவிடு மகளே, போதும் உனக்கிந்த வாழ்வு’  என அழைத்தாள். சீதை குழந்தை பெற்று அவர்களை வளர்க்கவேண்டிய பெண்ணுக்குரிய கடமை தனக்கு வாய்த்திருப்பதைச் சொல்லி அப்போதைக்கு பூமித்தாயின் அழைப்பை ஏற்க மறுத்தாள்.

லவ-குசரைப் பெற்றெடுத்து சிறுவர்களாக வளர்த்து ராமபிரானிடம் ஒப்படைத்த பின்னர், ஸ்ரீஅன்னையே இப்போது என்னை ஏற்றுக்கொள்!’ என மனமுருகி வேண்டினாள்.  பூமி பிளந்தது. தன்னிடத்தில் தன் மகள் சீதையை ஏற்றுக்கொண்டாள் பூமாதேவி. நிலத்தில் பிறந்த சீதை நிலத்திலேயே மறைந்து போனாள்.

உண்மையில் சீதை நிலத்தில் புதைந்து போகவில்லை. நிலத்தில் விதைக்கப்பட்டாள் அவள். சீதை தோன்றிய பாரத தேசத்தில் பல்லாயிரம் சீதைகள் தோன்றினார்கள். தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். கணவனாலேயே புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தாங்கள் ஆளானாலும் கணவனை விட்டுக்கொடுக்காமல் அவனைப் பற்றி அவதூறாக ஒரு வார்த்தையும் சொல்லாமல் வாழும் பெண்களை இந்திய தேசத்தில் அல்லாமல் வேறெங்கே காணமுடியும்? அதனால்தான் உலகப் பெண்மையின் மிகஉயர்ந்த பேரெல்லை சீதாதேவி எனக் கொண்டாடுகிறார் சுவாமி விவேகானந்தர்?

'நிலத்தில் சீதை பிறந்தாள் என்ற அளவில் சரி. ஆனால் ஏற்கெனவே அக்கினிப் பிரவேசம் செய்த அவளை மறுபடியும் கணவன் ராமன் கானகத்திற்கு அனுப்பினான் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை. ராமாயணத்தின் மற்ற காண்டக் கதைகள் எல்லாம் நடந்தவை. நிலத்தில் பிறந்த சீதை நிலத்திலேயே புதையுண்டு மறைந்தாள் என்னும் உத்தரகாண்டக் கதை நடந்த கதையாக இருக்க முடியாது, அது இந்தியப் பெண்கள் தங்கள் கண்ணீரால் எழுதிய கற்பனைக் கதை!’ என்கிறார் மூதறிஞர் ராஜாஜி. '

கம்ப ராமாயணம் ஸ்ரீராமபட்டாபிஷேகத்தோடு முடிந்துவிடுகிறது. அதில் உத்தரகாண்டம் கிடையாது. உத்தரகாண்டத்தை மட்டும் தனியே ஒட்டக்கூத்தர் எழுதியிருக்கிறார்.

'காணிநிலம் வேண்டும் பராசக்தி
காணிநிலம் வேண்டும்-  அங்கு
தூணில் அழகியதாய் நன்மாடங்கள்
துய்யநிறத்தினதாய்  - அந்தக்
காணிநிலத்திடையே ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்..’

என்று ஒரே ஒரு காணிநிலத்தை வரமாகப் பராசக்தியிடம் வேண்டிப் பாடுகிறார்பாரதியார். இன்று நிலவுலகம் முழுவதும் பாரதியாரை மகாகவியெனக் கொண்டாடுகிறது. ஆனால் அன்று ஒரு காணிநிலம்கூட அவருக்குச் சொந்தமாக இருக்கவில்லை. சென்னையிலும் புதுச்சேரியிலும் அவர் வசித்த வீடுகள், வாடகை வீடுகள்தான்.

சிவபெருமான் பஞ்சபூதங்களாகவும் உள்ளார் என்பது சைவர்கள் நம்பிக்கை. முழுப் பிரபஞ்சமும் அவரே. பஞ்சபூதங்களாக அவரே எங்கும் வியாபித்துள்ளதைப் புலப்படுத்தும் வகையில் ஐந்து திருத்தலங்களில் அவர் ஐந்து வேறுபட்ட நிலைகளில் அருட்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பிருத்வி லிங்கமாக நிலத்தின் உருவகமாக அமைந்துள்ளார்.  திருவானைக்காவில் நீரில் எழுந்தருளியுள்ளார். திருவண்ணாமலையிலோ அவர் நெருப்பு வடிவம். அதனால்தான் திருக்கார்த்திகை அன்று அங்கே தீமூட்டி அக்னி வழிபாடு செய்கிறார்கள். காளஹஸ்தியில் காற்றின் வடிவாக இருக்கும் அவரே சிதம்பரத்தில் ஆகாயமாக சிதம்பர ரகசியமாய் வெளிப்படாமல் வெளிப்படுகிறார்! சிதம்பரத்தில் திரைநீக்கி வெட்ட வெளிக்கல்லவா கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படுகிறது!

'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையாய்
கோனாகியான் எனதென்றவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே!'

- என்று சிவபெருமானின் ஐம்பூத நிலையை வியந்து போற்றுகிறார் மாணிக்கவாசகர். நிலம் என்ற சொல் பல இடங்களில் திருக்குறளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான்.  அதைவிடப் பெரிய உண்மை, திருக்குறள் நிலத்தின் ஒருபகுதிக்கான நீதிநூலாக அமையாமல் இந்தநிலவுலகம் முழுவதற்குமான நீதிநூலாக அமைந்திருப்பது!

இப்படி உலகின் எல்லாப் பகுதிகளில் வாழும் எல்லா மக்களுக்கும் சாதிமத வேறுபாடில்லாமல் பொருந்தக்கூடிய இன்னொரு நீதிநூல், எந்த மொழியிலும் வேறெதுவும் இல்லை!

 (குறள் உரைக்கும்)