பிரசாதங்கள்(வெயில் காலத்துக்கு ஏற்ற ஸ்பெஷல் பிரசாதங்கள்!)

வாட்டர் மெலன் டிலைட்

என்னென்ன தேவை?


தர்பூசணித் துண்டுகள் அல்லது கிர்ணிப் பழத்துண்டுகள் - 1 கப், கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப், அலங்கரிக்க பழத்துண்டுகள் - சிறிது.

எப்படிச் செய்வது?

தர்பூசணி பழத்தின் தோல், விதைகளை நீக்கி கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்து, விரும்பிய மோல்டில் ஊற்றி ஃப்ரீசரில் 3 அல்லது 4 மணி நேரம் செட் ஆகும் வரை வைக்கவும். பின் மோல்டில் இருந்து எடுத்து பழத்துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.

கேழ்வரகு சேமியா பகளாபாத்


என்னென்ன தேவை?


கேழ்வரகு சேமியா - 100 கிராம், தயிர் - 1 கப், பால் - 1/2 கப், பச்சைமிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, இஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன், பச்சை திராட்சை - 10, மாதுளை முத்துக்கள் - தேவைக்கு, பொடியாக நறுக்கிய பிஞ்சு வெள்ளரி - 1/4 கப்.

தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


கேழ்வரகு சேமியாவை கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் எண்ணெய், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் கொதிக்க விட்டு உடனே நீரை வடித்து, சிறிது எண்ணெய் சேர்த்து பிசறி வைக்கவும். இது உதிர் உதிராக இருக்கும். ஒரு நான்ஸ்டிக் தவாவில் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், பெருங்காயத்தூள், இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கி வடித்த சேமியாவை பரவலாக தூவி, மூடி போட்டு 1 நிமிடம் வேகவிட்டு உடனே இறக்கவும். சேமியா ஆறியதும் தயிர், உப்பு, பால் ஊற்றி சேமியாவில் கலக்கவும். பின் அதன்மேல் கொத்தமல்லித்தழை, வெள்ளரி, பச்சை திராட்சை, மாதுளை முத்துக்கள் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

கேரட் - ஆரஞ்சு ஸ்மூத்


என்னென்ன தேவை?

பெரிய ஆரஞ்சு பழம் - 2, கேரட் - 2, பொடித்த பனங்கற்கண்டு - 2-3 டேபிள் ஸ்பூன், அலங்கரிக்க ஆரஞ்சு பழத்துண்டுகள் - சிறிது, உப்பு - 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். ஆரஞ்சு பழத்தை தோல், விதை, நார் நீக்கி பொடித்துக் கொள்ளவும். சிறிது தண்ணீரில் பனங்கற்கண்டு, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் ஆரஞ்சு, கேரட், கரைத்த பனங்கற்கண்டு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வடிகட்டி, 2 பெரிய கப் தண்ணீர் ஊற்றி கலந்து குளிரவைத்து மேலே பழத்துண்டுகள் தூவி அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு: பனங்கற்கண்டுக்கு பதில் நாட்டுச்சர்க்கரையும் சேர்க்கலாம். எல்லா பழத்திலும் ஸ்மூத் செய்யலாம்.

கிர்ணி பழ குல்ஃபி


என்னென்ன தேவை?

சிறிய கிர்ணி பழம் - 1, முழு கிரீமுடைய பால் - 1 லிட்டர், சர்க்கரை - 1/2 கப், சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன், நறுக்கிய பிஸ்தா, பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன், கிர்ணி பழ விதைகள் - சிறிது.

எப்படிச் செய்வது?


அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மிதமான தீயில் வைத்து சுண்டக் காய்ச்சி, பாதியாக வந்ததும் சர்க்கரை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கி ஆறவிடவும். கிர்ணி பழத்தை தோல், விதை நீக்கி ஒரு சிறு துண்டை அலங்கரிக்க பொடியாக நறுக்கி வைத்து கொண்டு, மீதியுள்ள பழத்தை மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து கூழாக காய்ச்சி கொள்ளவும் அல்லது பால் காய்ச்சி கொதித்து இறக்கும் முன்பு பாலுடன் சேர்த்து காய்ச்சவும். காய்ச்சிய பாலுடன் சோள மாவு கூழ், கிர்ணி விழுது, ஏலக்காய்த்தூள், பாதாம், பிஸ்தா, கிர்ணி விதை கலந்து குல்ஃபி அச்சு அல்லது கண்ணாடி டிரேயில் ஊற்றி 6 முதல் 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைத்து எடுத்து பழத்துண்டுகளால் அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: சர்க்கரைக்கு பதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்க்கலாம். மாம்பழம், சப்போட்டா, கிவி, பைனாப்பிள், ஆரஞ்சு பழத்திலும் செய்யலாம்.

ஃப்ரெஷ் புதினா சிரப்

என்னென்ன தேவை?


புதினா - 3 கட்டு (1 கிலோ), சர்க்கரை - 1  கிலோ, எலுமிச்சை - 25 பழங்கள், உப்பு - 1/2 டீஸ்பூன், கோலி சோடா அல்லது டிரிங்கிங் சோடா - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். சர்க்கரையில் 2 கப் தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு கைவிடாமல் காய்ச்சி தேன் போல் கெட்டியாக வந்ததும் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து இறக்கவும். புதினா இலைகளை கழுவி தண்ணீர் இல்லாமல்  துடைத்து உப்பு 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன், சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து நைசாக அரைத்து வடிகட்டி, எலுமிச்சைச்சாறில் கலக்கவும். அப்பொழுது புதினாவின் நிறம் மாறாமல் இருக்கும். பிறகு சர்க்கரை பாகை சேர்த்து கலந்து, சுத்தமான ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். ஃப்ரெஷ் புதினா லெமனெட் ரெடி. 1 மாதம் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிட்ஜில் 3 மாதம் வைக்கலாம். பரிமாறும் முறை: உயரமான ஒரு கண்ணாடி டம்ளரில் சிறிது ஐஸ் கட்டி, அதன் மீது 3 டேபிள்ஸ்பூன் புதினா சிரப் ஊற்றி, 1 பாட்டில் சோடாவை சேர்த்து எலுமிச்சைப்பழத்தை வெட்டி போட்டு, புதினா இலையால் அலங்கரித்து உடனே பரிமாறவும்.

மிக்ஸ்டு ஃப்ரூட் மெல்பா


என்னென்ன தேவை?


சதுரமாக நறுக்கிய விருப்பமான பழத்துண்டுகள் - 1 பெரிய கப், கலர் ஜெல்லி - 1 பாக்கெட், சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன், 2 கலர் ஐஸ்கிரீம் - தேவைக்கு, அலங்கரிக்க டிரைஃப்ரூட்ஸ், நட்ஸ் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் 200 மி.லி. தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து ஜெல்லியை போட்டு கொதிக்க விடவும். அது கரைந்ததும் சர்க்கரை சேர்த்து, அதுவும் கரைந்ததும் இறக்கி ஆறவிட்டு ஒரு அலுமினியம் டிரேயில் கொட்டி ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும். அல்வா போல் கெட்டியாக இருக்கும். பரிமாறும் முறை: உயரமான ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு குழிக்கரண்டி ஐஸ்கிரீம் போட்டு, அதன் மீது பழத்துண்டுகள், அதன் மீது ஜெல்லி துண்டுகளை போட்டு, மீண்டும் மற்றொரு கலர் ஐஸ்கிரீம், பழங்கள், ஜெல்லி என்று வரிசையாக போட்டு நட்ஸ், ட்ரைஃப்ரூட்டால் அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.