இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்புதிய தொடர்

‘அருணதள பாதபத்மம் அதுநிதமுமே துதிக்க
அரியதமிழ் தான் அளித்த மயில்வீரா!’
- என்று அருமையாகப் பாடி மகிழ்கிறார் அருணகிரிநாதர்.
பத்தாம் திருமுறையான ‘திருமந்திரம்’ அருளிய திருமூலர்,
‘என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே’
- என்று உரைக்கின்றார்.

தெய்வீக மொழியாகவே  நம் செந்தமிழ் சிறக்கின்றது. என்று பிறந்தவள் என்றுணராத இயல்பை உடைய சீரிளமை செந்தமிழ் அன்னைக்குத்தான் எத்தனை அணிமணிகளையும், ஆரங்களையும் நம் புலவர் பெருமக்கள் சூட்டியுள்ளனர் என்று அறியும்போது ஆச்சரியம் மேலிடுகின்றது. அனைத்து இலக்கியங்களிலும் ஆன்மிகமே மேலோங்கியும், அடிநாதமாகவும் அமைகின்றது. அதனால்தான் பைந்தமிழ் ‘பக்திமொழி’யாகவே பளிச்சிடுகின்றது. சங்கத்தமிழின் கடவுள் வணக்கமாகவே நக்கீரரின் திருமுருகாற்றுப்படை காட்சி அளிக்கின்றது.

வணிகத் தொடர்பில் ஆங்கிலம், காதல் இலக்கியங்களில் இத்தாலி, சட்ட நுணுக்கத்தில் லத்தீன்,  தூதில் பிரெஞ்சு மொழி என்று வகைப்படுத்தும்போது தமிழை ‘ஆன்மிக மொழி’ என்றே அறிவிக்கின்றனர் அறிஞர் பெருமக்கள். ‘தெய்வப்புலவர்’ என்றே திருக்குறள் தந்த திருவள்ளுவரையும் ‘பெரிய புராணம்’ பாடிய சேக்கிழாரையும் பெயர் சூட்டி அழைப்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்கின்றோம்.‘தழற்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ்’ என்று கவியரசர் கம்பர் பாடுகின்றார். மகாகவி பாரதியாரும் ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்’ என்று நம் அன்னைத்தமிழை கம்பன் வழியிலேயே வழிமொழிந்து வாழ்த்துகின்றார்.

பக்தி மொழியான நம் பைந்தமிழின் சோலையில்தான் எத்தனை எத்தனை மலர்கள்! அத்தனை மலர்களிலும் அமர்ந்து அவற்றில் அடங்கியுள்ள தேன் துளிகளை ஆரப் பருகுவதற்கு நமக்கு ஆயுள் போதாது! தித்திக்கும் தேன்துளிகள் சிலவற்றையாவது சுவைப்போம், வாருங்கள்….

முதற்பாடல் முத்திரைப் பாடல்


முதற்கடவுவாள விநாயகர் விளங்குகின்றார்! அதனால்தான் அவரை ‘முன்னவனே!
யானை முகத்தவனே!’ என்று அழைக்கின்றது நம் அன்னைத் தமிழ்!
கடிதமா? பிள்ளையார் சுழி!காவியமா? தொடக்கத்திலேயே விநாயகர் துதி!
கல்யாணமா? மஞ்சள் பிள்ளையார்!கட்டிடமா? கணபதி ஹோமம்!

- என எப்பணிக்கும் முதலில் முகம் காட்டுகின்றார் பிள்ளையார்! ஆகச் சிறந்தவராக விளங்கும் அப்படிப்பட்ட பிள்ளையார் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்? நம் ஆணவத்தையும், அகங்காரத்தையும், அறவே அகற்றி விட்டுத்தான் ஆண்டவன் சந்நிதானத்திற்கு உள்ளேயே நாம் நுழைய வேண்டும்.ஆலய வழிபாட்டிற்குச் செல்பவர்கள் வெளியிலேயே காலில் அணிந்திருப்பதை கழற்றி வைத்து விட்டுச் செல்வதுபோல் தலையில் அணிந்திருக்கும் ஆணவத்தையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்கிறார் இக்கால புதுக்கவிதை பாடும் புலவர் ஒருவர்.

‘அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே!’ என்று கம்பரும், ‘பரிபூரணனுக்கே அடிமை செய்துவாழ்வோம்’ என்று பாரதியாரும் பாடுவதை உணர்ந்து பணிவன்புடன் நாமெல்லாம் பக்தி செலுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.தேவாரம் இதை நமக்கு எப்படித் தெரிவிக்கின்றது தெரியுமா? பன்னிரு திருமுறையின் முதற்பாடலாக, மூவர் தேவாரத்தின் முகப்புப் பாடலாக முகம் காட்டுகிறது இந்த விநாயகர் துதி.

பிடி யதன் உருஉமை கொளமிகு கரியது
வடி கொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கண பதிவர அருளினர் மிகு கொடை
வடி வினர் பயில் வலி வலமுறை இறையே.

திருஞானசம்பந்தர் பரம்பொருளின் பாத கமலங்களில் சமர்ப்பித்த இந்த தெய்வீகக் கவிமலரின் வண்ணம், வடிவம், வாசனை, அடங்கியுள்ள தேன் இவற்றையெல்லாம் ஆராயாது நாம் சற்று கூர்ந்து பார்த்தாலே இப்பாடல் சொல்லும் பொருள் என்ன என்று புரிந்துகொண்டுவிடலாம். இப்பாட்டில் அடங்கியுள்ள எழுத்துகள் அனைத்துமே குறில் எழுத்துக்கள்! வா, போ, பூ, நீ என்று நீண்டு ஒலிப்பவை நெடில் எழுத்துகள் என்பதை நாம் அறிவோம்.மேற்கண்ட மூவர் தேவாரத்தின் முதற்பாடலான ‘பிடியதன் உருஉமை’ என்ற பாடலில் நீண்டு ஒலிக்கும் எழுத்துகள் அறவே இல்லாமல் குறில் எழுத்துகளே ஒன்று கூடியிருக்கும் ‘குறிப்பு’ ஒன்று போதாதா?

பிள்ளையார் சந்நதியில் நாமெல்லாம் பிள்ளைகளாக அடங்கி ஒடுங்கி பணிவன்புடன் பக்தி செய்ய வேண்டும் என்பதை எடுத்த எடுப்பிலேயே கவிதை நயம் துலங்க காட்டி விடுகிறாரே ஞானசம்பந்தர்! ‘ஆண்டவன் எனக்கொரு முதலாளி, அவனுக்கு நான்ஒரு தொழிலாளி’ என்ற வகையில் நெடிலாகத் தோற்றமளிக்கும் நம் கர்வத்தை அறவே களைந்துவிட்டு ‘பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு’ வரும் அந்த புண்ணிய மூர்த்தியின்
பொற்பாத கமலங்களை பணிவோம்!
‘மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்’
என்று நமக்கெல்லாம் வாழ்த்து
தெரிவிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’
- என்கிறார் ஒளவை மூதாட்டி!

கல்விக்கு இருகண்களாக விளங்குகின்றன எண்ணும், எழுத்தும். அந்த எண்ணையும், எழுத்தையும் கற்றுக்கொள்ளாமல் ஒருவன் இருந்தால் அவனிடம் இருப்பவை கண்கள் அல்ல. புண்கள் என்று புகல்கின்றார் வள்ளுவப் பெருந்தகை:

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

அழிவு இல்லாத அற்புதமான செல்வம் கல்விதானே! அந்த ‘கேடில் விழுச்செல்வ’மாகிய அறிவைத்தரும் மூர்த்தி ஆனைமுகன்தான்.

‘கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்’, ‘அறிவு அருளும் யானைமுக வோனே’
- என்று திருப்புகழ் பாடுகின்றது.

 அதனால்தான் ஒளவைப்பாட்டி விநாயகக் கடவுளிடம் இப்படி வேண்டுகோள் வைக்கின்றாள்:

‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -
கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீ எனக்குச்சங்கத் தமிழ் மூன்றும் தா!

ஒளவைப்பாட்டியின் வேண்டுகோளிலே ‘அறிவொளி’ வீசுகின்றது. என்ன தெரியுமா? பெரியவர்களிடம் கேட்பதுபோல கேட்காமல் குழந்தையிடம் அதற்குரிய பாணியிலேயே நாம் கேட்டால்தான் காரியம் நடக்கும். அப்பாவிடமிருந்து குழந்தை ஒன்று விளையாட்டுத்தனமாக மூன்று  நூறு ரூபாய் நோட்டுக்களை எடுத்து வைத்துக்கொண்டு தரமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.அப்பா எத்தனையோமுறை கெஞ்சி கேட்டாலும் குழந்தை தருவதாக இல்லை. அங்கு வந்த அம்மா குழந்தையின் கையில் இருந்த மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களை எளிதாக திரும்பப் பெற்று விட்டாள்.  

எப்படி?
அம்மா தன் கையில் நான்கு ஒரு ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு குழந்தையிடம் கொஞ்சிய வண்ணம் கூறினாள்: ‘இதோ பார்! நான் நான்கு நோட்டுக்கள் உனக்குத் தருகின்றேன். உன் கையில் இருப்பது மூன்று நோட்டுக்கள்தானே! என்னிடம் அதைத் தந்துவிடு!’’
 கள்ளம் கபடமற்ற குழந்தை, ரூபாயின் மதிப்பை அறியாது உடனே நான்கு தாள்களைப் பெற்றுக்கொண்டு மூன்று தாள்களை தாயிடமே திருப்பித்தந்து விட்டது.

ஒளவை கையாள்வதும் அதே உத்தியைத்தான்! பால், தேன், பாகு, பருப்பு என்ற எளிதான நான்கைத் தந்து இயல், இசை, நாடகம் என்ற அரிதான முத்தமிழை பிள்ளையாரிடமிருந்து பெற்றாள்! கல்விக்கு அதிபதியாக விளங்கும் கணபதி தன் அழகான தந்தத்தை ஒடித்து மாமேரு மலையிலே வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதினார்.

‘பாரதத்தை மேருவெளி வெளிதிகழ்
கோடொடித்து நாளில் வரை வரைஇபவர்
பால்நிறக் கணேசர்’
- என்று பாடுகிறது அருணகிரியின் திருப்புகழ்.

அழகான தந்தம் போனாலும் பரவாயில்லை, அறிவான கிரந்தம் அகிலத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினார் கணபதி. பிள்ளையாரே பிள்ளையார் சுழி போட்டு எழுதியதுதான் மகாபாரதம்! திருப்பரங்கிரி புராணம் என்னும் நூல், வித்யா கணபதியை எண் அலங்காரத்திலேயே ஒன்று, இரண்டு, மூன்று என எட்டுவரை வரும்படி பாடல் அமைத்து எண் எழுத்து அருளும் இறைவனான விநாயகனை அற்புதமாகத் துதிக்கிறது. தேன் ஒழுகும் அந்த தெய்வீகக் கவிமலர் இதோ:

வஞ்சத்தில் ஒன்றானைத்
   துதிக்கை மிகத் திரண்டானை
வணங்கார் உள்ளே
   அஞ்சரண மூன்றானை
மறைசொலும் நால்வாயானை
   அத்தன் ஆகித்
துஞ்சவுணர்க்கு அஞ்சானை
   சென்னியணி ஆறானை
துகள் ஏழானைச்
   செஞ்சொல் மறைக்கு
எட்டானை
பரங்கிரிவாழ் கற்பகத்தைச்
   சிந்தை செய்வாம்!

வரிசையாக எண்கள் வருமாறும், ஆனை, ஆனை என்று அழகு மிளிர விநாயகரைத் துதிக்கும் வண்ணமும் அமைந்த இந்த நற்றமிழ்க் கவிதையின் நயம்தான் என்னே! (தொடர்ந்து இனிக்கும்)    

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்