வாழ்க்கையில் நிலவவேண்டிய சமரசம் மயானத்தில் நிலவுகிறது!



பகவத் கீதை - 57

ஒருவன் தன் செயல்களில் பற்றற்று ஈடுபடுவானேயானால் அவனுடைய வாழ்க்கையே யக்ஞமாகிவிடுகிறது. இப்படி அற்ற பற்றால், அவனுடைய ‘நான்’ என்ற சுயம் காணாமல் போய்விடுகிறது. அப்படிப் போய்விடும்போது ‘என்னுடைய’ என்ற உரிமையும் அடிபட்டுவிடுகிறது. ‘நான்’, ‘என்னுடைய’ என்ற தற்குறிகள் மறையும்போது பரந்தாம அனுபவம் கிட்டுகிறது. மோகங்கள் ஒழிந்த நிர்மலமான நீலவான மோனநிலையை எட்டமுடிகிறது. அதுவே பேரானந்த பூரணத்துவத்துக்கும் காரணமாகிறது என்கிறார் கிருஷ்ணர்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், எளிதான ஓர் உதாரணம் சொல்கிறார். பலாப்பழத்திலிருந்து சுளைகளைப் பிரித்து எடுக்கும்போது நம் உள்ளங்கைகளில் எண்ணெயைத் தடவிக்கொள்கிறோம். இப்படிச் செய்வதால், பழத்தின் பிசின் கைகளில் ஒட்டிக்கொள்ளாது, சுளைகளும் எளிதாகப் பிரியும். இந்த எண்ணெய் போன்றதுதான் பரமாத்மா பற்றிய எண்ணம். இது நமக்குப் பாதுகாப்புக் கவசம் - பிசின் ஒட்டாமல் பலாச்சுளைகளைப் பிரித்தெடுக்க உதவும் எண்ணையைப்போல. 

ப்ரஹ்மார்பணம் ப்ரஹ்ம ஹவிர்
ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா (4:24)

‘‘எல்லாமே பிரம்மம்தான். ஒரு யாகம் நடத்தப்படுகிறது என்றால், அந்த யாகத்தில் சமர்ப்பிக்கப்படுபவை எல்லாம் பிரம்மம்தான். யாகத்தில் தோன்றும் அக்னி பிரம்மம், அந்த யாகத்தை இயற்றுபவனும் பிரம்மம். யாகத்தின் பலனான அவிஸை ஏற்பதும் பிரம்மம்!’’ தன்னிலிருந்து விலகி நிற்கும் எதுவுமே பிரம்மம்தான். ‘தானி’லிருந்து விடுபடும் எதுவுமே பிரம்மம்தான். ‘இந்த யாகத்தை நான் இயற்றுகிறேன். இந்த ஹோமத்தில் தீ தோன்றுகிறது. அதற்கு நெய் முதலான பொருட்கள் உணவாக இடப்படுகின்றன. யாக நிறைவில் அக்னி மூலமாக ஒரு தேவதை அதன் பலனைப் பெறுகிறது. 

- இது பொதுவான விளக்கம். ஆனால் இயற்றுபவன், வெளிப்படுவது, இடப்படுவது, பலன் பெறுவது எல்லாமே பிரம்மம்தான் என்ற நிலையை அடைபவனே ஞானி. நம்மிலிருந்து ‘நானை’ விலக்குவது எப்படி? ‘தன்னைப் போலவே பிறரையும் நினை’ என்பதிலிருந்து தொடங்கலாம். எது ஒன்று கிடைத்தாலும், நமக்கென்று அது வரும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம், உணர்வுகளை வெளிப்படுத்துகிறோம்? அதேபோல அடுத்தவருக்கு ஒன்று கிடைத்தால் அப்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம், உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறோம்?

வித்தியாசம் இருக்கிறது. நாம் சம்பாதித்ததெல்லாம் நம் உழைப்பின் பலன் என்று சொல்லிக்கொள்ளும் நாம், அடுத்த வீட்டுக்காரன் அனுபவிக்கும் வசதியையெல்லாம் ‘தவறான வழியில் சம்பாதித்ததாக இருக்கும்’ என்று சொல்கிறோம். அவன் அனுபவிக்கும் வசதிகளை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதேசமயம், நாம் அனுபவிப்பதை அவனாலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று யோசிப்பதும் இல்லை. நம்மைப் போலவே அடுத்தவரையும் நினைப்பது என்பதை இதிலிருந்து ஆரம்பித்தாலே போதுமானது.

தான் சார்ந்திருப்பவற்றிலிருந்து தன்னைப் பிரித்து இனம் காணாமல், தானும், தான் சார்ந்திருக்கும் அனைத்துமே பிரம்மம்தான் என்ற உணர்வு ஏற்பட்டால் அங்கே சமத்துவம் நிலவும். சரிசமம் உருவாகும். இந்த சமரசத்தை நாம் வாழ்நாளில் நாம் காணமுடியாமல் போவது வேதனைதான். நாம் இறந்தபின், இயற்கை அதனை மயானத்தில் அறிவூட்டுகிறது, ஆனால், அதைப் புரிந்துகொள்ள ‘நான்’ இருப்பதில்லை! உணவு உண்பதாகிய கர்மத்தை ஒரு ஞானி இயற்றுகிறான் என்றால், அவன் பசியையும் பிரம்மமாகப் பார்க்கிறான். தனக்கு உணவு அளிப்பவரையும் பிரம்மமாகப் பார்க்கிறான்.

அவர் அளிக்கும் உணவும் அவனைப் பொறுத்தவரை பிரம்மமே. அதை உண்பதும் பிரம்மமே. பசி அடங்குவதாகிய உணர்வும் பிரம்மமே. அதனாலேயே அவனை பசி என்ற உணர்வு பாதிப்பதில்லை. உணவு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, உணவு உண்பதால் புத்துணர்வு பெறுவதோ, இல்லாவிட்டால் களைத்துவிடுவதோ அவனுக்கு ஏற்படாது. அவனுக்கு எல்லாமும் பிரம்மமே. செயலாற்றிக்கொண்டிருப்பதுதான் அவனுடைய பணி. எந்தவகை செயலையும் அவன் பிரம்மமாகவே பாவிப்பதால் அதன் விளைவுகளை அவன் எதிர்பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த விளைவுகள் எல்லாமும் பிரம்மமே! எல்லாவற்றையும், எல்லாவற்றிலும் பிரம்மத்தையே காணுமாறு கிருஷ்ணன் அறிவுறுத்துகிறார்.

தைவமேவாபரே யக்ஞம் யோகின பர்யுபாஸதே
ப்ரஹ்மாக்னாவபரே யக்ஞம் யக்ஞேனைவோ பஜுஹ்வதி (4:25)

‘‘யோகிகள் தேவதைகளை திருப்திபடுத்துவதற்காக யக்ஞம் (யாகம்) இயற்றுகிறார்கள். ஆனால், ஞானிகளோ பிரம்மமாகிய அக்னியில் யக்ஞத்தின் மூலமாக யக்ஞத்தையே ஹோமமாகச் செய்கிறார்கள்.’’ ஹோமம் வளர்த்தலை ஒரு கர்மாவாக இயற்றுகிறான் ஞானி. இப்படி ஹோமம் வளர்த்தலால் எந்தவித பயனையும் அவன் எதிர்பார்ப்பதில்லை. மழை வேண்டி, தீவினைகள் அழியவேண்டி, நல்லன பெருக வேண்டி அல்லது கோயில் கும்பாபிஷேகம் முதலான சிறப்பு நிகழ்ச்சிகள் நன்கு நடந்தேற வேண்டி… இப்படி எத்தனையோ காரணங்களுக்காக யாகம் நிகழ்த்தப்பட்டாலும், ஒரு ஞானி இயற்றுவது எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல்தான்.

ஹோமம் இயற்றவேண்டியது அவனுடைய கடமை. அதாவது ஒரு பிரம்மமாய், பிரம்மத்தை இயற்றுகிறான் அவன்! ஹோமத்தீ என்ற பிரம்மத்தில் அவன் ஆஹுதிப் பொருட்கள் என்ற பிரம்மத்தை இடுகிறான். ஹோம நிறைவில் அவன் தன் ஆன்மாவையே தீக்கு அர்ப்பணிக்கிறான். அந்தத் தீயிலிருந்து எழுந்துவந்து அவிர்பாகம் கொடுக்கும் தேவதையையும் அவன் பிரம்மமாகவே கருதுகிறான். ஆழ்ந்து சிந்தித்தோமானால், ஹோமம் அல்லது யாகத்தில் இடப்படும் பொருட்கள் எல்லாமே சுயத்தை தியாகம் செய்யக்கூடியதாகவே மறைமுகமாகக் குறிக்கின்றன. ஏனென்றால் அக்னியின் தன்மை அத்தகையது.

தன்னில் இடப்படும் எந்தப் பொருளையும் பஸ்மமாக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. தங்கத்தையே இட்டாலும், அதையும் உருக்கி அதனுள் இருக்கக்கூடிய அழுக்கையும் அது பொசுக்கி விடுகிறது. ஒரு ஞானி அக்னியை பிரம்மமாகக் கருதுவதன் அடிப்படைக் காரணமே அந்த சக்தி எங்கெங்கும் நிறைந்திருக்கிறது என்பதுதான். ஏனென்றால் பஞ்சபூதங்களில் பிற நான்கும் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளில் எச்சம், மிச்சம் என்று ஏதாவது இருக்கும். ஆனால், அக்னியின் பாதிப்பு நிரந்தர இல்லாமைக்குதான் வழிவகுக்கும். இந்தவகையில் அக்னியின் சக்தி அளப்பரியது. அதனால்தான் இந்த அக்னியை மூலமாக வைத்து யாகங்கள் இயற்றப்படுகின்றன.

அக்னியில் இடப்படும் தானியங்கள், புடவை போன்றவையெல்லாம் வெறும் பொருட்கள் அல்ல. அவை அதுவரை நம்மிடம் இருந்த, நமக்குரியது என்று நாம் நினைத்துக்கொண்டிருந்த பொருட்கள். அவற்றை நாம் அக்னியிலிட்டு தியாகம் செய்கிறோம். அவை நமக்கு வேண்டாம் என்று ஒதுக்கிவிடுகிறோம். அதாவது, இன்னொரு கோணத்தில் நம்முடைய அகங்காரம், பொறாமை, கோபம், அசூயை, காமம், அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாசொல் என்ற பல தீய குணங்களை அத்தீயில் இட்டுப் பொசுக்குகிறோம். பொருட்களை இந்த நம் துர்க்குணங்களாக பாவித்து அக்னிக்கு அர்ப்பணிக்கிறோம்.

இதில் இன்னொரு வேடிக்கையையும் நாம் பார்க்கலாம். அக்னியில் இடப்படும் பொருட்கள் எல்லாம் கரைந்து சாம்பலாகிவிட, நெய் மட்டும் அந்த அக்னி ஜ்வாலையை வளர்க்கிறது. நெய்யின் இந்த செய்கை சொல்வது என்ன? தீயவை அழியவேண்டுமா, நல்லவை வளரவேண்டும். அந்த நல்லவை, தீயவற்றை அழிக்கும் வஸ்துவுக்குத் துணைபோகின்றன. இவ்வாறு நெய் வளர்க்கும் தீ நாக்குகள் மேலே மேலே முயற்சித்து எழும்பி, தன்னில் இடப்படும் பொருட்களையெல்லாம் பேராவலுடன் பொசுக்குகிறது. நெய்யை நல்லனவற்றிற்கு ஒப்பிடுவதில் ஒரு காரணம் இருக்கிறது. நெய்யை நம்மால் நேரடியாகப் பெற்றுவிட முடியாது.

முதலில் பால், அது தயிராகிறது. அந்தத் தயிர் கடையப்படுகிறது. வெண்ணெய் திரள்கிறது, வெண்ணெய் உருக்கப்படுகிறது - நெய் கிடைக்கிறது. அதாவது நல்லது என்பது உடனே கிட்டிவிடுவதில்லை; அது பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் கிட்டுகிறது. அளவும் குறைவு. ஆமாம், பாலின் அளவையும், அது நெய்யாக மாறிய பின் இதன் அளவையும் ஒப்பிட்டால் நெய் வெகு குறைவாக இருக்கும். நல்லது என்பது, இப்படி சொற்பமாக, மிகுந்த முயற்சிகளுக்குப் பிறகு கிடைக்கும் நெய் போன்றதுதான். இதுபோன்ற ஹோமத்தில் கலந்துகொள்பவர்கள் ஓங்கி வளரும் அக்னி ஜ்வாலையைக் காணும்போது அவர்கள் மனம் தானாக சுத்தமடைவதை உணரமுடியும்.

ஒவ்வொரு பொருளாக அக்னியில் விழும்போது, அவையெல்லாம் நம் தீய குணங்கள் என்ற மானசீக உணர்வு கொண்டோமானால் நம் மனம் எளிதில் சுத்தமடைந்துவிடுகிறது. இறையருளின் தன்மையே அதுதான். ஒருமுறை சுவாமி விவேகானந்தரிடம், ‘‘இறைவனிடம் பிரார்த்தனை செய்வதால் என்ன லாபம்?’’ என்று ஒருவர் கேட்டார். ‘‘என்னைப் பொறுத்தவரை லாபம் இல்லை, நஷ்டம்தான்,’’ என்றார் சுவாமி. கேட்டவர் திடுக்கிட்டார். ‘‘நஷ்டமா, எந்தவகையில்?’’

‘‘நான் தினமும் பிரார்த்தனையை மேற்கொள்வதால், என்னைவிட்டு கோபம், வெறுப்பு முதலான தீய குணங்கள் எல்லாம் விலகிவிடுகின்றன. இப்படி, என்னிடமிருந்தவை என்னை விட்டு நீங்குவதால் அது எனக்கு நஷ்டம்தானே?’’ என்று சிரித்தபடி பதிலளித்தார் சுவாமி. பகவான் கிருஷ்ணனும் இதைத்தான் அறிவுறுத்துகிறார். ‘உன் வாழ்க்கையே ஒரு யக்ஞம்தான். அதை ஒருநாளும் தவறாமல் நீ இயற்றுவாயானால் உன் வாழ்க்கையே அதில் இடப்படும் ஆஹுதியாகும். அப்புறம் என்ன, நீ புடம்போட்ட தங்கமாகிவிடுவாய் - அதாவது, சுயம் விலகிவிட்ட பரிசுத்த ஆன்மாவாவாய்,’ என்கிறார்.

(தொடரும்)

பிரபுசங்கர்