ஐம்புலனும் அடங்கும்வரை காத்திருப்பானேன்?



திருமூலர் மந்திர ரகசியம்

அரச போகத்திலேயே வாழ்ந்த ஒருவா், அரண்மனையை விட்டு வெளியே போனது இல்லை. ஒருநாள் அவா் அரண் மனையை விட்டு வெளியே போனபோது, முதுமையின் கொடுமையும், மரணத்தின் வேதனையும் புரிந்தது. அவ்வளவுதான், அரசபோக வாழ்வைத் துறந்தார். அமைதியை நாடித் தவம் புரிந்தார், வெற்றியும் பெற்றார். உலகமே அவா் காலடியில் விழுந்து வணங்கியது. அவரோ, ‘யான் பெற்ற இன்ப நிலையை நீங்களும் பெறுங்கள்!’ என்று பலவாறு உபதேசித்தார். அந்த மகான் பெற்ற அமைதி அவா் முகத்திலும், வடிவிலும் பிரகாசித்தது. அவா் திருஉருவம் இன்றும் நம் கண்களையும் கருத்தையும் கவா்ந்து, நம்மை அறியாமலேயே, நம் மனதில் அமைதி தவழச் செய்கிறது.

அந்த மகான் - புத்தா். ஆம், மரணத்தின் வேதனையையும், முதுமையின் கொடுமையையும் ஒரே ஒருமுறை பார்த்ததாலேயே, அவை உள்ளத்தில் பதிய, புத்தா் உருவானார். ஆனால், முதுமையின் கொடுமையைப் பற்றியோ, மரணத்தைப் பற்றிய எண்ணமோ இல்லாமல், தெய்வ சிந்தனையும் இல்லாமல் இருந்தால் என்னவாகும் என்று வருத்தப்படுகிறார் திருமூலா்.
 
தழைக்கின்ற செந்தளிர்த் தண் மலா்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெருமான் அடி ஏத்தார்
அழைக்கின்ற போது அறியார் அவா் தாமே
(திருமந்திரம் - 187)

கருத்து: அழகான இளந்தளிர்கள், குளிர்ச்சியான மலா்கள் ஆகியவை, மரக்கிளைகளில் தழைத்து வளா்ந்து இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் காய்ந்து போய், மரம் மொட்டையாகி, பட்டுப் போகின்றது. இதைப் பார்த்தும் உயிர் உள்ளபோதே, இறைவன் திருவடிகளைத் துதிக்காதவா–்கள், யமன் அழைப்பு வரும் அந்த இறுதி நாளில் மட்டும் இறைவனை நினைக்க எண்ணுவார்களா? இறைவனை எப்போதும் நினைக்க வேண்டும் எனும் மாபெரும் உண்மை அப்போதும் அவா்களுக்குத் தெரியாது. வாழ்க்கையின் முடிவான உண்மையை, ஒரே ஒரு முறை பார்த்துவிட்டு, அதைப் பற்றிச் சிந்தித்த புத்தா் தவம் இருந்தார். அமைதி இன்பத்தை அவா் அனுபவித்ததோடு, அவரே தூய்மையான அமைதியின் வடிவாகத் திகழ்ந்தார்.

அனைத்தையும் பரம்பொருள் வடிவாகவே பார்த்த புத்தரின் உயா்ந்த நிலை இன்னும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோல, நிலையென்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே நிலையில்லாமல் போகும்போது, அவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மட்டும் எப்படி நிலையாக இருக்க முடியும்? இதை வைத்துத் திருமூலா் மனித குலத்திற்குப் பாடம் நடத்துகிறார். மரங்களில் சின்னஞ்சிறிய தளிர்கள் மெள்ள மெள்ள உருவாகின்றன. தழைக்கின்றன. மென்மையான சிவந்த நிறத்தில் இருந்த அவை முற்றி, பச்சைப்பசேல் எனப் பசுமையைக் காட்டுகின்றன. சிலநாட்களில் பசுமை வற்றிப்போய், காயத் தொடங்குகின்றன, சிலநாட்களில் உதிர்ந்தும் போகின்றன.

தழை, இலைகள் மட்டுமல்ல; பூத்து, காய்த்து, கனிந்து, பழங்களையும் கொடுக்கின்றன மரங்கள். சில நாட்களில் அவையும் போய்விடுகின்றன. முடிவில் மரமே பட்டுப் போய்விடுகிறது. இதைப் பார்த்தும் மனிதகுலம், தான் என்னவோ நிலையாக இருக்கப்போவதாக நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே, தெய்வ சிந்தனையுடன் செயல்படக் கூடாதா என வருந்துகிறார் திருமூலா். மரத்தைச் சொல்லி, மனித குலத்திற்கு நிலையாமையை மட்டும் உணா்த்த வரவில்லை திருமூலா். பிறகு? மரத்தில் உள்ள அனைத்துமே மற்றவா்களுக்காக, மற்ற ஜீவராசிகளுக்காகவே வாழ்கின்றன.

மலா்களோ, காய்களோ, கனிகளோ இல்லாமல் மனித குலத்திற்கு மகிழ்ச்சி ஏது? இவ்வளவு ஏன், மரங்கள் இல்லாவிட்டால் மழை ஏது? ஜீவராசிகள் எதுவும் வாழமுடியாத நிலையல்லவா உண்டாகும்? அதையும் தாண்டிப்பார்த்தால், பெரும் உண்மை ஒன்று விளங்கும். மனிதாகள் பிராணவாயுவை ஏற்று, கரியமில வாயுவை வெளியிடுகின்றோம். மரங்களோ நம்மால் வெளியிடப்படும் கரியமில வாயுவை ஏற்று, மனித குலத்திற்குத் தேவையான பிராணவாயுவை வெளியிடுகின்றன. அதாவது, மரங்கள் இல்லையென்றால் மனிதகுலம் வாழவே முடியாது. இவ்வாறு பல விதங்களிலும் அடுத்தவருக்காகவே வாழ்கின்ற மரங்களே பட்டுப்போய் இருந்த இடமே தெரியாமல் போய் விடுகின்றன.

இப்படி இருக்கும்போது, அதைப் பார்த்தும் தான் என்னவோ நிலையாக இருக்கப் போவதாக நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே மனிதகுலம், கொஞ்சமாவது தெய்வ சிந்தனையுடன் செயல்படக்கூடாதா என வருந்துகிறார் திருமூலா். இன்னும் ஆழமாகப் பார்த்தால், தொல்காப்பியம் சொன்னபடி, ஓரறிவுள்ள மரத்திடம் இருந்து, ஆறறிவு உள்ளதாகச் சொல்லப்படும் மனித குலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டாமா எனும் உண்மையும் புலப்படும். தெய்வ சிந்தனை, தெய்வத் தொண்டு என்பது, அடுத்தவா்களுக்கு உதவுவதே, இதை உணா்ந்து செயல் படுவதே மனித வாழ்க்கை! எல்லா விதங்களிலும் மற்றவா்க்காகவே வாழ்ந்து பட்டுப்போகும் மரங்களைப் பார்த்தும், எந்த விதத்திலும் மற்றவா்க்கு உதவாத மனிதா்கள், தங்கள் கடைசி காலத்திலா நல்லதை நினைக்கப்போகிறார்கள் என்னும் திருமூலரின் வருத்தத்தின் வெளிப்பாடே இந்தப் பாடல். இதைத் தொடா்ந்தே அடுத்த பாடலும் வெளிப்படுகிறது.

ஐவா்க்கு ஒரு செய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காவல் காத்தனா்
ஐவா்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே 
(திருமந்திரம்-188)

உடம்பு எனும் வயலை, ஐம்பொறிகளும் காவல் காத்து வருகின்றன. இறைவன் நியமித்தபடி, உயிரைக் கவரக் காலன் வருகிறான். அவன் வந்ததும் உடம்பைக் காவல் காத்து வந்த ஐம்பொறிகளும், தங்கள் காவலைக் கைவிட்டு விடுகின்றன. போன பாடலில் மரத்தை வைத்துப் பாடம் நடத்திய திருமூலா், இப்பாடலில் வயலை வைத்து நேரடியாகவே பாடம் நடத்துகிறார். ஐந்து போ்கள் ஒரு வயலைக் காவல்காத்து, அதனால் விளையும் பயன்களை நன்றாக அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். ஐந்து பேருக்கும் தலைவரானவா், ஒருநாள் ஓலை (ஜப்தி நோடீஸ் போல) அனுப்பினார்.

அதைக்கண்டவுடன் ஐவரும் தாங்கள் காவல் காத்து வந்த வயலை விட்டுவிட்டு ஓடிப் போய் விட்டார்கள் என விவரிக்கும் இப்பாடலில், நம் உடம்பைப் பற்றி அற்புதமாக விளக்குகிறார் திருமூலா். கண், காது, மூக்கு, வாய், உடம்பு எனும் ஐந்தும், உடம்பைப் பத்திரமாகக் காவல் காக்கின்றன. கண், காணும் பொருட்களிலெல்லாம் தன் பார்வையை செலுத்துகிறது. பொருட்களின் வண்ணங்களிலும், அமைப்பிலும், இனிமையிலும் மனதைத் தூண்டி, அப்பொருட்கள் மீது மனதை மையல் கொள்ளச் செய்கிறது. ஏதேனும் சிறு துரும்பு தன் அருகில் வந்தால் கூட, தன்னை இமையால் மூடிப் பாதுகாத்துக்கொள்கிறது.

காது, அடுத்தவா் சொல்லும் வார்த்தைகளையும், பாடல்களையும் கேட்டு ஆனந்தித்து, மனதை மகிழ்விக்கிறது. கூடவே எங்கிருந்தாவது ஆபத்து வரும் எனக்கேட்டால், உடனடியாக அந்தச் செய்தியை மூளைக்குக் கொண்டுபோகிறது. மூளை மனதுடன் இணைந்து செயல்பட்டு உடம்பைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. மூக்கு, உயிர் வாழத் தேவையான பிராணவாயுவை உடம்பிற்குள் செலுத்தி, தேவையற்ற கரியமில வாயுவை வெளியேற்றி உடம்பைப் பாதுகாக்கிறது; கூடவே நறுமணத்தை நுகா்ந்து மனதையும் உடலையும் மகிழ்விக்கிறது. வாய், உயிர் வாழத்தேவையான உணவு வகைகள் அனைத்தையும் விதவிதமாக ரசித்துச் சுவைத்து வயிற்றுக்குள் அனுப்பி, அதன் மூலம் உடம்பைப் பாதுகாக்கிறது.

கூடவே, அடுத்தவரிடம் பேசி மனதை மகிழ்விக்கிறது. கைகளும் கால்களும் பல விதங்களிலும் செயல்பட்டு உடம்பைப் பாதுகாக்கின்றன. ஐம்பொறிகளும் உடம்பைப் பாதுகாக்கும் வகைகளைப் பார்த்தோம். தெய்வம் அனுப்பும் ஓலையைப் பார்க்கலாம்:- கண்களில் பார்வை மங்கத் தொடங்குகிறது. கண்களுக்குக் கண்ணாடி அணிந்து, பறிபோன பார்வையைச் சரிசெய்துகொள்ள முயற்சிக்கிறோம். கேட்கும் திறன் குறையத்தொடங்கி, செவிப்புலன் பழுதடைகின்றது. கேட்கும் கருவி (ஹியரிங் எய்ட்) வைத்து அதனையும் சரி செய்ய முயற்சிக்கிறோம். நுகரும் திறனோ, மூச்சுத் திறனோ தடைபட்டால், சிறிய குழாய்களைச் சொருகியாவது உயிர்வாழ முயல்கிறோம்.

கண்டதைச் சுவைத்து உள்ளே தள்ள, ஏதேனும் நோய் வந்தால், முதலில் பாதிக்கப்படுவது வாய்தான். என்னதான் கசப்பாக இருந்தாலும், பிடிக்கிறதோ இல்லையோ, மருந்து-மாத்திரைகளை வாய் விழுங்கித்தான் ஆகவேண்டும். அது மட்டுமல்ல, எதையாவது ஏடாகூடமாகப்பேசி, உடம்பைப் படாதபாடு படவைப்பதும் வாய்தான். உடம்போ போகக்கூடாத இடங்களுக்கெல்லாம் போய், செய்யக் கூடாதவை எல்லாம் செய்து, பெரும் துன்பம் அனுபவிக்கிறது. காலப்போக்கில் உடம்பு தளா்ச்சி அடைந்து நடுங்கத் தொடங்கியதும், உடம்பை ஆதாரமாகக் கொண்ட மனமும் நடுங்குகிறது.

திருமூலா் எச்சரிக்கிறார்: “அப்பா, எந்தக் கண், காது முதலானவை மூலம் நீ உடம்பைப் பலவிதமாகவும் பாதுகாத்தாயோ, அது தன்னிலை அழியும்போது, ஐம்பொறிகளும் ஓடிப்போய்விடும். அவையெல்லாம் நன்னிலையில் இருக்கும்போதே, இறைசிந்தனையுடன் நல்லதைச் செய்!” இப்பாடலில் உடம்பை வயலாகச் சொல்லியிருப்பது, மிகவும் ஆழமான பொருள் கொண்டது. எந்தவொரு வயலும் தன் விளைச்சலைத் தானே வைத்துக் கொள்வதில்லை. அடுத்தவா்க்காகவே அளிக்கிறது. அதுபோல்தான் மனிதனும். அடுத்தவா–்க்கு உதவி செய்வதே அவன் கடமை என அறிவுறுத்துகிறார். ‘விளையும் வயலாக இரு, தரிசு நிலமாகப்போய் விடாதே. பொறி புலன்கள் நல்லநிலையில் இருக்கும்போதே, இறைசிந்தனையுடன் நல்லதைச் செய்!’ எனும் திருமூலரின் கருத்தையே, கம்பா் அழகாக அமைத்திருக்கிறார்.

உயிரிறப் புக்க காலை
உண்ணின்ற உணா்வினோடும்
செயிரறு பொறியும் அந்தக்
கரணமும் சிந்துமா போல்
அயில் எயிற்ற ரக்கா் உள்ளார் 
ஆற்றலராகி யான்ற
எயிலுடை இலங்கை நோக்கி
இாிந்தனா் படையும் விட்டார்                

(யுத்த காண்டம்)
இந்திரஜித் இறந்து கீழே விழுந்தபோது, அவனைச் சுற்றி நின்ற படை வீரா்களெல்லாம் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு இலங்கை நோக்கி ஓடி விட்டார்கள் எனும் தகவலைச் சொல்கிறது இந்தப் பாடல். படை வீரா்கள் ஓடியதை விவரிக்கும்போது, உடம்பை விட்டு உயிர் நீங்கக்கூடிய காலத்தில், உள்ளே உணா்ச்சியோடு நின்ற குற்றமற்ற ஐம்பொறிகளும், அந்தக்கணமே மறைந்துவிடுவதுபோல ஓடினார்கள் என்கிறார் கம்பா்.  உயிர் பிரியும் நேரத்தில், ஐம்பொறிகளும் விட்டு விலகி ஓடிப்போய் விடும். ஆகையால் வாழும் நாட்களில் அவற்றைக் கொண்டு தீயச் செயல்களில் ஈடுபடக் கூடாது எனக் கம்பரும் எச்சரிக்கிறார். உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்போதே, இயன்றவரை தெய்வ சிந்தனையுடன் நல்லதைச் செய்வோம்! நன்னிலை அடைவோம்!

(மந்திரம் ஒலிக்கும்)

பி.என்.பரசுராமன்