தீராத வினைகள் தீர்த்தருளும் திருவருள்!



பொன்னேரி

முதலாம் ராசேந்திர சோழன், கி.பி. 1014 முதல் 1044 வரைதான் ஆட்சி புரிந்தான். இவன் இளவரசனாக இருந்த பொழுதும், இவன் மகன் இளவரசனாக இருந்த காலத்திலும், இவன் ஈடுபட்ட 13 ஆண்டு போர் காலத்தில் 9 லட்ச வீரர்களுடன், 1000 கப்பல்களுடன் இந்தியாவையும், கடல் கடந்தும் போராடி தனது சாம்ராஜ்ய எல்லையை எவரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விரிவாக்கினான். கங்கை, கடாரம், ஈழம் கொண்டும் பாண்டிய, சேரர் முடிகளைக் கொண்டும், பூர்வ தேசங்களையும் ஆண்ட தமிழ் மன்னன் ஆனான். தனது இந்த மாபெரும் வெற்றிகள் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையோடு தென்னகத்தில் பல ஊர்களுக்கு கடாரம் கொண்டன், கங்கைகொண்டன், ஈழம் கொண்டான், முடி கொண்டான் என்றெல்லாம் பெயரிட்டான்.

அது மட்டுமின்றி, தான் புதிதாக உருவாக்கிய, தஞ்சாவூர் மாவட்ட கங்கை கொண்ட சோழபுரத்தையும், தொண்டை மண்டலத்து திருத்தலங்கள் நிறைந்த திருவள்ளூர் மாவட்ட கும்பமுனி மங்கலம் என்னும் நகரினையும் தூய்மைப்படுத்த எண்ணியவன், தனது பெரும்படை ஒன்றினை, கங்கை நீரைக் கொண்டுவர வேண்டி, வட நாடுகளை நோக்கி படை எடுக்க அனுப்பி வைத்தான். சக்கரக்கோட்டம், வேங்கி நாடு, பீகார், வங்கம் ஆண்ட சிற்றரசர்களை வென்ற பின்பு, பேரரசன் ஆன மகிபாலனையும் வென்ற இந்த படை, வடதேசத்து மண்ணையும், பொக்கிஷங்களையும் கைப்பற்றியதுடன், வடதேசத்து மன்னவர்கள், மக்கள், சிவாச்சாரியார்களையும் சிறைபிடித்து வந்தது.

வடதேசத்து மன்னர்கள் தலையில் கங்கை நீர் அடங்கிய குடங்களை சுமந்துவர வைத்து, அவர்கள் கங்கை ஆற்றினைக் கடப்பதற்கு உதவியாக, ஆற்றினுள் வரிசையாக, யானைகளை நிற்க வைத்து பாலம் அமைக்க ஏற்பாடு செய்தவன் இவன். சோழ நாட்டில், தான் உருவாக்கிய புத்தம் புது நகருக்கு கங்கைகொண்ட சோழபுரி எனப் பெயரிட்டான். கடல் போன்ற ஏரி ஒன்றினை எடுப்பித்து சோழ கங்கம், பொன்னேரி என்ற பெயர்களும் வைத்தான். அதில் கங்கை நீரை ஊற்றி, நீருக்குள் வெற்றித் தூணினை நாட்டினான். இதுபோலவே தொண்டை நாட்டிலும், கும்பமுனி மங்கலத்திலும் செய்து முடித்தான். ஏரியின் பெயரால் பொன்னேரி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகின்றது.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அருள்மிகு பெரியநாயகி உடனமர் அருள்மிகு பெருவுடையார் கோயிலை புதிதாக எழுப்பித்தான். பொன்னேரியில் அருள்மிகு ஆனந்தவல்லி உடனமர் அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயத்தை புதுப்பித்தான். சென்னையிலிருந்து தெற்கே 35 கி.மீ. தூரத்தில், பொன்னேரியில், ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் கண்கவர் இயற்கை சூழலில் இத்திருக்கோயில் மின்னி மிளிர்கின்றது. மிகப் பெரிய கோயில். கோயிலுக்கு ஈசான திக்கில், என்றுமே வற்றாத பொன்னேரி, கடல்போல காட்சி அளிக்கின்றது. பங்குனி, தை திங்களில், குளத்தைச் சுற்றி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகின்றது.

குளத்தை ஒட்டியே இளைப்பாறும் மண்டபம் 16 தூண்களுடன் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்த திருக்கோயில். ராஜகோபுரத்திற்குள் சென்றால் வெளிப்பிராகாரம் கண்முன்னே விரிகின்றது. வேலைப்பாடு மிக்க கொடிமரம், பலிபீடம், சின்னஞ்சிறு நந்தி மண்டபம் என கோயில் அமைப்பு உள்ளது. வசந்த மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என கோயிலின் அமைப்பு தொடர்கிறது. வசந்த மண்டபத்தின் தூண்கள், கோயிலின் தல வரலாற்றினையும், தெய்வீக வரலாறுகளையும், அரைப்புடைப்புச் சிற்பங்களாகத் தாங்குவதோடு, மண்டபத்தையும் தாங்குகின்றன.

தெய்வத் திருமேனிகள், தீராத நோய்களை இத்திருத்தலத்தில் தீர்த்தருள வேண்டி இறைவனை நோக்கி தவமிருக்கும் அகத்தியர், முதலாம் ராசராச மற்றும் முதலாம் ராசேந்திர சோழச் சக்கரவர்த்திளின் பிரதிமங்கள், திருப்பணிகள் செய்துள்ள ஒரு விஜயநகரப் பேரரசனின் பிரதிமம் முதலியன இம்மண்டப தூண்களில் இடம் பெற்றுள்ளன. ‘கும்ப முனி மங்கலம்’ எனவும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. தென்னகத்தில், கும்ப முனியான அகத்தியர் 108 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து, அந்தந்த தலத்தில், மானுடம் உய்வுற வேண்டி சிறப்பு வழிபாடுகளையும் இயற்றியிருக்கிறார். அவ்வாறு அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108வது சிவலிங்கம், அருள்மிகு நூற்றெட்டீஸ்வரர் என்னும் திருநாமத்துடன் கும்பமுனி மங்கலத்திற்கு அருகே உள்ள சின்ன காவனம் என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தில் எழுந்தருளியுள்ளது.

அப்படிப் பார்க்கையில் பொன்னேரி தலம் அகத்தியர் வழிபட்ட 107வது தலமாக இருக்கலாம். கருவறை, கஜபிருஷ்ட அமைப்பில் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது. கருவறையின் திருச்சுற்றில் சில இடங்களில் ஏர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இது விவசாயம் செழிக்கவேண்டி, சோழன் இறைவனிடம் விண்ணப்பித்து வரம் கேட்டதற்கான அடையாளங்களே ஆகும். சோழமண்டலம் விவசாயத்திற்குப் பெயர் போனது. எனவே சோழ மன்னர்கள் மரபு வழியாக காடு வீழ்த்தி நாடாக்கி, குளம் வெட்டி, விவசாயம் செழிக்க வழிவகுத்தனர். கருவறையின் தெற்குப்புற கோஷ்ட தெய்வமான அருள்மிகு தட்சிணாமூர்த்தியின் வலதுபுறத்தில், கும்பத்திலிருந்து அகத்தியர் வெளிவரும் புடைப்புச் சிற்பம், தலவரலாற்றுக்குத் தொடர்புடையதாக உள்ளது.

அருள்மிகு ஆனந்தவல்லி, இறைவனின் வலப்புறத்தில் சந்நதி கொண்டருளுவதால், திருமணக் கோலத்தில் இறைவன், இறைவி திருக்காட்சி இங்கு அளிக்கின்றனர். திருமண வேண்டுதல்களை சமர்ப்பிக்கத்தக்க தலமாக அமைகின்றது. தீராத நோய்கள், தீராத வினைகள் தீர்த்தருளும், திருவருள் தருபவராக அருள்மிகு அகத்தீஸ்வரர், திருக்கோயில் கொண்டருளுகின்றார். முன் மண்டபத்தில் கூடி அமர்ந்து தீராத பிரச்னைகளை இறைவன் திருமுன் பேசி, நல்ல முடிவினை தீர்ப்பாக இறைவன் அருளால் பெறுவது, தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ளது. சாட்சி நாதராகவும், சட்ட நாதராகவும் இறைவனே அமையும்பொழுது தீர்ப்பில் குறை வருமா என்ன?

தமிழகத்தில் எங்குமே காணவியலாத நிகழ்வொன்று இங்கு நடைபெறுகின்றது. அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு சற்று தொலைவில், திருஆயர்பாடி என அழைக்கப்படும் கரி கிருஷ்ணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சித்திரை திருவிழா, சித்திரை நட்சத்திரத்தில் தொடங்கப் பெறும். 5ம் நாள் கேட்டை நட்சத்திர நாளன்று, இரு பெரும் தெய்வங்களும், தங்களது பரிவாரத் தெய்வங்களுடன் தேரில் எழுந்தருளி இரு கோயிலுக்கும் பொதுவான ஹரிஹரன் பஜாருக்கு ஊர்வலமாக வந்து ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து, மாலை மாற்றிக்கொண்டு பரஸ்பரம் சீர்வரிசை தந்து கொள்வார்கள். இந்த நிகழ்ச்சியை, இந்த இடத்தில் இதேபோல கோலாகலமாக பரத்வாஜ மகரிஷி கண்டு களிப்புற்ற பேற்றினை இக்காலத்திலும், எக்காலத்திலும் கண்டு பக்தர்கள் பேறு பெறச் செய்யும் இந்த நிகழ்வு, இத்தலத்திற்கு உரிய தனித்துவமிக்க சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

திருக்கோயில் காலை 7 முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும். கோயிலை மிக சுத்தமாக வைத்திருக்கும் கோயில் நிர்வாகம் கோயில் குளத்தினையும் முறையாகப் பராமரித்தால் நலமாயிருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. பகீரதன், ஆகாய கங்கையை தன் தவ வலிமையால் பூமிக்குக் கொண்டு வந்ததுபோல முதலாம் ராசேந்திர பெருவேந்தன் தன் படைவலிமையால் கங்கையை தமிழகத்திற்குக் கொண்டு வந்ததை ‘வெற்றி, வெற்றி!’ எனக் கொண்டாடி மகிழ்வதாகவே இக்கோயில் மணியோசை ஒலிக்கிறது.

- இறைவி