‘ரெண்டுபேருக்கும் ஏழாம் பொருத்தம்’ என்கிறார்களே, அப்படி என்றால் என்ன?



தெளிவு பெறுஓம்

- மணிகண்டன், நெல்லிக்குப்பம்.

‘அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்....’ என்று எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியைப் பார்த்துச் சொல்வது வழக்கம். உண்மையில் ஏழாம் பொருத்தம் நன்றாய் இருந்தால் மிகவும் அன்யோன்யமாய் இருப்பார்கள். பின் எப்படி இந்த சொற்றொடர் வழக்கில் வந்தது? ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஏழாம் இடம் என்பது ஒரு ஆணுக்கு அவனது மனைவியையும், பெண்ணுக்கு அவளது கணவனையும் குறிக்கும்.

ஏழாம் இடம் என்பது வாழ்க்கைத் துணைவரை மட்டுமல்லாது நண்பர்கள், பழகும் தன்மை, வெளிவட்டாரத் தொடர்பு என பல்வகைப்பட்ட அம்சங்களைக் குறிக்கும். லக்னம் என்பது ஜாதகரின் குணாதிசயத்தையும், ஏழாம் இடம் என்பது அவனது தொடர்பாளர்களின் குணங்களையும் குறிக்கும். லக்னம் 0 டிகிரி என்றால் ஏழாம் இடம், அதன் நேரெதிர் துருவமான 180வது டிகிரி ஆகும். ஒரு காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் ஒன்றோடொன்று ஈர்ப்பு கொள்வது இயற்பியல் விதி. ஜோதிட ரீதியாக சற்று விளக்கமாகவே பார்ப்போம்.

மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். அதன் ஏழாவதான துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். செவ்வாய் வீரமுடைய, ஆண்மைத்தன்மை உடைய கிரஹம். சுக்கிரனோ அழகு நிறைந்த, பெண்மைத்தன்மை நிறைந்திருக்கும் கிரஹம். இவர்கள் இருவரும் அடிப்படையில் நேரெதிரான குணங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு உள்ளவர்கள். இதே கருத்து சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷபத்திற்கும் அதன் ஏழாமிடமான விருச்சிகத்திற்கும் பொருந்தும்.

அதே போல் மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன். அவற்றின் ஏழாம் ராசிகளான தனுசு, மீனத்திற்கு அதிபதி குரு. இயற்கையில் குரு நீதி, நேர்மை, நியாயம் என்று நேரான வழியில் பயணிப்பவர். எதற்காகவும் தன் கொள்கையைத் தளர்த்திக் கொள்ளாதவர். புதன் இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவர். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் எதற்கெடுத்தாலும் கௌரவம் பார்ப்பார்கள்.

கௌரவத்திற்குக் குறைவான செயலை ஒருபோதும் செய்யமாட்டார்கள். அதேநேரத்தில் அதற்கு ஏழாமிடமான கும்ப ராசிக்கு அதிபதி சனி. சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள் கௌரவம் பார்க்காமல் காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பார்கள். சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் அமைதி, அடக்கம், சுறுசுறுப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

கடகத்திற்கு ஏழு ஆகிய மகரத்திற்கு அதிபதி சனி என்பதால் சோம்பல், அழுக்காய் இருத்தல் என நேரெதிர் குணங்களை நிரம்பப் பெற்றவர்கள். திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்க்கும்போது ஏழாவதாக வருகின்ற ராசி அதிபதி பொருத்தம் என்பதும் இந்த அடிப்படையில் வகுக்கப்பட்டதே ஆகும். ராசி அதிபதி பொருத்தம் நன்றாக இருந்தால் ரஜ்ஜு உட்பட வேறெந்த பொருத்தமும் பார்க்க தேவையில்லை என்பது முக்கியமான ஜோதிட விதி.

ராசிகளும் அவற்றின் ஏழாம் ராசிகளும் பின்வருமாறு:-
மேஷம் - துலாம் (செவ்வாய்-சுக்கிரன்);
ரிஷபம்-விருச்சிகம் (சுக்கிரன்-செவ்வாய்); மிதுனம் - தனுசு  (புதன் - குரு); கடகம் - மகரம் (சந்திரன் - சனி); சிம்மம் - கும்பம் (சூரியன் - சனி); கன்னி - மீனம் (புதன் - குரு).

மேற்கண்டவாறு ராசிகளைக் கொண்ட தம்பதிகள் தங்களுக்குள் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்குள் அன்யோன்யம் அதிகமாக இருக்கும். பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும் பிறரைவிட அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ‘அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்!’ என்பதை இனி ஆதர்ஷ தம்பதியரைப் பார்த்தும் சொல்லலாம் அல்லவா!

* ‘கேட்ட மூட்ட செவ்வாய்’ என்ற சொல்வழக்கின் பொருள் என்ன?
- ஸ்ரீவித்யா, காஞ்சிபுரம்.

கேட்டை நட்சத்திரமும், செவ்வாய்க்கிழமையும் ஒன்றாக இணைந்து வருகின்ற நாள் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தில் செய்யப்படுகின்ற விசேஷ பூஜைகளும், பரிகாரங்களும் உடனடியாக பலன் தரக்கூடியவை. இதனை நமக்கு உணர்த்தும் வண்ணம் ‘கேட்டை முட்டும் செவ்வாய்க்கிழமை’ என்ற பொருளில் வந்த சொற்றொடர், ‘கேட்ட மூட்ட செவ்வாய்’ என்று மருவி இருக்கிறது.

* ‘புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் போய்விடுமா?
- திருமலைவாசன், விழுப்புரம்.

அறிவிற்குத் தெரிந்தே செய்கின்ற பாவங்கள் நிச்சயமாகப் போகாது. அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாவங்கள் மனதை உறுத்துகின்ற காலத்தில், மனம் திருந்திய நிலையில் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் தொலையும். எவனொருவன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அந்தத் தவறுக்காக மனதளவில் வருந்துகின்றானோ, அவனுக்கு மட்டுமே புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம் போகும். தனது அடிப்படைக் குணத்தினை மாற்றிக் கொள்ளாமல், தொடர்ந்து பாவச்செயலில் ஈடுபடும் ஒருவன் புண்ணிய நதியில் நீராடுவதால் மட்டும் அவனது பாவம் நிச்சயம் போகாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

* ‘கரிநாள் என்றால் என்ன? எதன் அடிப்படையில் இந்த நாட்களை குறிப்பிடுகிறார்கள்?
- ராம்மோகன், அம்பத்தூர்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது ‘சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்’ என்பதே. அதாவது அன்றைய தேதியில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை.

இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை. தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களை துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக ஒவ்வொரு வருடமும் தை மாதம் 1, 2, 3, 11, 17 ஆகிய நாட்கள் கரிநாட்கள். இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும்பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாகத் தூண்டப்படுகின்றன.

இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆகுதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்றன அதிகம் உண்டாகும். இது போன்ற காரணங்களால் கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். இது வானவியல் ரீதியாக, அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிடவியல் ரீதியாக அப்படியே கடைபிடித்து வரும் விஷயங்களுக்குள் அடங்காது. மாதந்தோறும் வருகின்ற கரிநாட்களின் விவரம்: சித்திரை -  6, 15; வைகாசி - 7, 16, 17; ஆனி - 1, 6; ஆடி - 2, 10, 20; ஆவணி - 2, 9, 28; புரட்டாசி - 16, 29; ஐப்பசி - 6, 20; கார்த்திகை - 1, 10, 17; மார்கழி - 6, 9, 11; தை - 1, 2, 3, 11, 17; மாசி - 15, 16, 17; பங்குனி - 6, 15, 19.

* ‘பஞ்சகவ்யத்தில் ஒரு சில புரோஹிதர்கள் தேன் கலந்து தருகிறார்களே, இது சரியா?
- முரளிதரன், புதுச்சேரி.

தவறு. பஞ்சகவ்யம் என்பது பசு நமக்கு தருகின்ற பொருட்களை மட்டும் உள்ளடக்கியது. பால், தயிர், நெய், கோமயம், சாணம் ஆகிய ஐந்தின் கலவையே பஞ்சகவ்யம் ஆகும். வலைதளங்களில் வெல்லம், தேன் உள்ளிட்ட ஒன்பது பொருட்களின் கலவை பஞ்சகவ்யம் என்று குறிப்பிட்டிருப்பர். இதுவும் தவறான கருத்து. ஒன்பது பொருட்களின் கலவைக்கு பஞ்சகவ்யம் என்று பெயர் சூட்டியிருப்பார்களா நம் முன்னோர்கள்? ‘பஞ்ச’ என்ற வார்த்தைக்கு ஐந்து என்றுதானே பொருள்? ‘கவா’ என்ற வார்த்தை பசுமாட்டைக் குறிக்கும்.

பசுமாடு நமக்கு தருகின்ற பால், அந்த பாலில் இருந்து கிடைக்கும் தயிர், வெண்ணெய், நெய், பசுவின் கழிவு பொருட்களான மூத்திரம் (கோமயம்), சாணம் ஆகிய ஐந்து பொருட்களை உள்ளடக்கியதே பஞ்சகவ்யம். பால் 40 விழுக்காடு, தயிர் 35 விழுக்காடு, நெய் 15 விழுக்காடு, கோமயம் 7 விழுக்காடு, சாணம் 3 விழுக்காடு கொண்ட கலவையே பஞ்சகவ்யம்.

இந்த பஞ்சகவ்யத்தைதான் நம் வீட்டில் நடக்கின்ற ஜனனம், மரணம், பெண் ருதுவாதல் முதலான விசேஷங்களில் புரோஹிதர்கள் தருவார்கள். இந்த பஞ்சகவ்யத்தினை அருந்துவதால் நமது வயிறு சுத்தமடைகிறது, வயிறு சுத்தமாக இருந்தால் உடல் ஆரோக்கியம் வலுப்பெறும் என்பதால் இந்த பஞ்சகவ்யத்தை வீட்டு விசேஷங்களில் பிரசாதமாக உட்கொள்வதை வழக்கத்தில் கொண்டனர். இதில் தேன், வெல்லம் போன்றவற்றை கலப்பது தவறு. பஞ்சகவ்யம் என்று சாஸ்திரம் குறிப்பிடுவதில் தேன், வெல்லம் முதலான பொருட்கள் இடம்பெறவில்லை.

* ‘பெற்ற பிள்ளைகளுக்குக் காலத்தே திருமணம் செய்ய முயற்சித்தும், உரிய நேரத்தில் நடைபெறாது தாமதமாவதால் மனம் வருந்திக் கொண்டிருக்கும் ஏராளமான பெற்றோருக்கு தங்களது அறிவுரை என்ன?
- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.

பரிகாரச் சடங்குகளைச் செய்வதால் திருமணத்தடை நீங்கிவிடுமா என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னால் தற்கால வாழ்வியல் சூழலை ஆராய்வோம். இன்றைய சூழலில் திருமணத்திற்குத் தயாராக உள்ள ஆண் மற்றும் பெண் ஆகியோரின் விகிதாச்சாரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டோமேயானால் பெண்களை விட ஆண்களே அதிக எண்ணிக்கையில் திருமணத்திற்காக காத்திருக்கின்றனர்.

அன்றாட நாளிதழில் வெளிவருகின்ற மணமகன்-மணமகள் தேவை விளம்பரங்களே இதற்கு சாட்சி. அதிலும் மணமகன் தேவை விளம்பரங்களை விட, மணமகள் தேவை விளம்பரங்களே அதிகம்! குறிப்பிட்ட சமூகத்தில் உள்ளவர்கள் உட்பிரிவுகள் எதையும் கணக்கில் கொள்ளாமல் பெண் கிடைத்தால்போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். வரதட்சணை கொடுமை என்பது இந்த நூற்றாண்டில் பெரிதும் குறைந்திருக்கிறது. இது ஒரு நல்ல மாற்றம்தான் என்றாலும், பெண் கிடைத்தபாடில்லை.

இன்றைய யதார்த்த உலகில், ஒரு ஆண் வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்துகொள்கிறானா? இல்லை. வாழ்க்கையில் செட்டில் ஆன பின்பு திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமே இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உழல்கிறது. செட்டில் ஆவதை கார், ஃப்ளாட் வாங்கவேண்டும் என்பதைக் கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள்.

இவற்றைப் பூர்த்தி செய்துகொண்டு திருமணத்துக்குத் தயாராகும்போது வயது முப்பதைத் தாண்டிவிடுகிறது. இதன் பிறகு பெண்பார்க்கத் துவங்கும்போது மாப்பிள்ளைக்கு முப்பது வயது ஆகிவிட்டதே என பெண்வீட்டார் யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இவ்வாறே 30லிருந்து 38வயது வரை திருமணத்திற்குக் காத்திருக்கும் வயோதிக இளைஞர்கள் ஏராளம் பேர். முதிர்கன்னிகள் ஏங்கிக் காத்திருந்த காலம்போய் முதிர்கண்ணன்கள் ஏங்குகின்ற காலம் இது. இவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தாலாவது மணமகள் கிடைக்கமாட்டாளா என்ற எண்ணத்திற்கு ஆளாகிறார்கள்.

பெண்களின் நிலை வேறு மாதிரியாக உள்ளது. இன்றைய உலகில் பெண்பிள்ளைகளும் நன்கு சம்பாதிக்கிறார்கள். தன் சம்பாத்யத்தை விட, மாப்பிள்ளை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதிகம் சம்பாதிக்கின்ற பெண், தன்னைவிட குறைந்த சம்பளத்தில் உள்ள மணமகனை திருமணம் செய்து கொள்வதால் ஈகோ உருவாகும் என்று தவறாக எண்ணுகிறார்கள்.

ஆணுக்கு பெண் சமம் என்று வாதிடுபவர்கள்கூட இந்த விஷயத்தில் பெண்ணை விட ஆண் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் கருதுகிறார்கள். இதனால் அதிகமாக சம்பாதிக்கக் கூடிய பெண்ணிற்கும் திருமணம் தடைபடுகிறது. ஆணோ, பெண்ணோ குடும்பம் நடத்துவதற்குத் தேவையான சம்பாத்யம் இருந்தால் போதும், திருமணத்தை நடத்திவிடலாம் என்று யாரும் யோசிப்பது இல்லை.
 
இதுபோன்ற சமுதாயக் காரணங்கள் இன்றி ஜோதிட ரீதியாக ஜாதகத்தில் கோளாறு உள்ளவர்களைப் பற்றியும் பார்ப்போம். ஆண்மகனின் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீட்டினில் சனி, ராகு, கேது போன்ற தீய கிரஹங்கள் அமர்வதால் திருமணம் தடைபடக்கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இவ்வகை கிரஹ நிலையால் திருமணம் தாமதமாகலாமே தவிர, முற்றிலுமாகத் தடைபட்டுவிடாது.

எந்த கிரஹம் ஏழாம் இடத்தின் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறதோ அந்த கிரஹத்திற்கு உரிய குணாதிசயங்களைக் கொண்ட பெண் மனைவியாக அமைவாள் என்பதே அதற்குரிய பலனே தவிர, திருமணம் நடைபெறாது என்பதல்ல. உதாரணமாக ராகு இருந்தால் எதிர்வாதம் செய்யக்கூடியவளாகவும், கேது இருந்தால் ஆன்மிக ஈடுபாடு உடையவளாகவும், சனி இருந்தால் மந்தத்தன்மை கொண்டவளாகவும், செவ்வாய் இருந்தால் சுறுசுறுப்பு மிக்கவளாகவும், சூரியன் இருந்தால் கௌரவம் பார்ப்பவளாகவும் மணமகள் அமைவாள். அதனை விடுத்து திருமணம் நடைபெறாது என்று சொல்வது தவறு.

ஏழாம் இடத்தில் கிரஹங்களே இல்லையென்றால் திருமணம் நடைபெறாதா? அந்த நிலையிலும் நிச்சயமாகத் திருமணம் நடைபெறும். ஏழாம் இடத்திற்கு அதிபதியான கிரஹம் யார், அந்த கிரஹத்தின் அமர்வு நிலை என்ன என்பதைக் கொண்டு வாழ்க்கைத் துணை அமைவதைப் பற்றி அறிந்துகொள்ளலாம். ஜாதகத்தில் சந்நியாச யோகம் உள்ளவர்களைத் தவிர மீதமுள்ள அனைவருக்கும் நிச்சயமாகத் திருமண யோகம் உண்டு. இவ்வகை சந்நியாச யோகம் உள்ள ஜாதகம்கூட, எங்கோ லட்சத்தில் ஒன்றுதான் இருக்கும். சந்நியாச யோகம் உள்ளோருக்கு திருமணத்தின்மீது ஈடுபாடே தோன்றாது என்பதே உண்மை.

ஒவ்வொரு மனிதருக்கும் திருமணம் தடைபடுவதற்கு மேலேகண்ட சமுதாய நடைமுறைகள்தான் காரணமாக இருக்க முடியுமே தவிர, ஜாதக தோஷத்தால் அல்ல. களத்ர தோஷம் என்பதாக ஜாதகத்தில் குறிப்பிடப்படுவது அவரவருக்கு அமையும் வாழ்க்கைத்துணையின் குணத்தினைக் குறிப்பதே அன்றி, திருமணத்தடையைக் குறிப்பது அல்ல. ஒரு சிலருக்கு சனியின் தாக்கத்தினால் தாமதமாகத் திருமணம் கைகூடலாம். 30 வயது என்பதே ஜோதிட நூல்கள் இயற்றப்பட்ட காலத்தைப் பொறுத்தவரை தாமதம்தான்.

தாமத திருமண யோகத்தை உடைய ஜாதகர்க்கு 30வயது ஆகும்போதே பரிகாரம் தன்னால் நிகழ்ந்து தடை விலகிவிடுகிறது. வயதாகியும் திருமணம் ஆகாமல் தவிப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை விரதமிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வீதம் 9 சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து வஸ்திரம் மற்றும் வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களுடன் தாம்பூலம் அளித்து நமஸ்கரிக்க வேண்டும்.

இப்படிச் செய்தால், ஆணானாலும், பெண்ணானாலும், தடைவிலகி உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது சாஸ்திர அறிஞர்களின் கூற்று. தெய்வீக நம்பிக்கைகளால் மட்டுமே பரிகாரம் செய்யப்பட வேண்டும். அர்த்தமற்ற மூடநம்பிக்கைகளால் செய்யப்படுகின்ற பரிகாரங்கள் எதுவும் நமது விருப்பத்தை நிறைவேற்றி வைக்காது.

மூவெட்டில் செய்யாத திருமணம் பலன் தராது அதாவது 24 வயதிற்குள் திருமணம் செய்வதே நல்லது என்று சொல்லி வைத்தார்கள் பெரியோர்கள். சரியான வயதில் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு மணமக்கள் இருவருக்கும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மனப்பொருத்தம் உள்ளதா என்பதை மட்டும் கருத்தில் கொண்டால் திருமணத்தடை காணும் பிள்ளைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிடும்.

* ‘பெருமாளுக்கு சனிக்கிழமை உகந்த நாள் போல் சிவபெருமானுக்கு உகந்த நாள் எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள் ஆகும். திங்கள் என்று அழைக்கப்படும் சந்திரனை தனது தலையில் சூடி பிறைசூடனாக காட்சி அளிப்பவர் சிவபெருமான். சோமாஸ்கந்தர் என்பது சிவபெருமான் தனது குடும்பத்துடன் காட்சியளிக்கும் திருவுருவத்தின் பெயர். சோமன் என்ற வார்த்தை சந்திரனைக் குறிக்கும். பிரதோஷ நாட்களில் கூட சனிக்கிழமையில் வரும் சனிபிரதோஷத்தைவிட, திங்கள் அன்று இணையும் சோமவார பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

பெருமாள் கோயிலுக்கு சனிக்கிழமையில் செல்வதை வழக்கத்தில் கொண்டிருப்பவர்கள், சிவாலயத்திற்கு திங்கட்கிழமை தவறாமல் சென்று வருவார்கள். திங்கட்கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள்ளாக சந்திர ஹோரை வேளையில் சிவாலயத்தின் வெளிபிராகாரத்தை 11 முறை வலம் வந்து வணங்கினால் கேட்கும் வரம் உடனடியாக கிடைக்கும் என்பார்கள் சாஸ்திரம் அறிந்த பெரியோர்கள்.

* ‘அக்டோபர் 16, 2017 ஆன்மிகம் இதழில், இறந்தவர் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒரு பக்ஷம் அதாவது 15 நாட்கள் கழித்து கோயிலுக்கு செல்லலாம் என்று தெரிவித்துள்ளீர்கள். அப்படிச் செல்லும்பொழுது அர்ச்சனை முதலியன செய்யலாமா? வீட்டில் வழக்கம் போல் தினசரி பூஜை செய்யலாமா?
- ஆர்.தயாநிதி, தர்மபுரி.

அந்திம கிரியைகளைச் செய்த கர்த்தா ஒருவரைத் தவிர, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் பங்காளிகள் யாவரும் ஒரு பக்ஷம் கழித்து அதாவது 15 நாட்கள் கழித்து கோயிலுக்குச் செல்லலாம், அர்ச்சனை செய்து கொள்ளலாம். குலதெய்வத்தை தரிசிக்கலாம். அதேநேரத்தில் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுதலை தலைதிவசம் ஆன பிறகே செய்ய வேண்டும். அந்திம கிரியைகளைச் செய்ய கர்த்தா உட்பட அனைவரும் 15 நாட்கள் கழித்து வீட்டுப் பூஜையறையில் தினசரி பூஜைகளைத் தொடரலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

* ‘எனது தந்தையார் சென்ற வருடம் புரட்டாசி மஹாளய பட்சம் பிரதமை திதியில் இறந்தார். அவருக்கு இவ்வருடம் மஹாளய பட்ச பிரதமை திதியில் சிராத்தம் செய்தேன். ஆனால் புரட்டாசி தேய்பிறை பிரதமை திதியில்தான் சிராத்தம் செய்ய வேண்டும் என்றும், இந்த வருடம் மஹாளய பட்சத்தில் பிரதமை திதி புரட்டாசியில் வரவில்லை என்றும் சிலர் குழப்புகிறார்கள். நான் செய்தது சரியா? விவரமாக தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
- எஸ்.ஜி.ராமராஜ், மயிலாடுதுறை.

சிராத்த திதிகளைப் பொறுத்தவரை சாந்திரமானம், சௌரமானம் என்ற இரு பிரிவுகள் உண்டு. சாந்திரமானம் என்பது சந்திர சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைப் பிரிப்பது. அதாவது, அமாவாசைக்கு மறுநாள் வருகின்ற பிரதமை திதியில் இருந்து மாதம் துவங்கும். இந்த மாதங்களை சைத்ரம், வைசாகம், ஜேஷ்டம், ஆஷாடம், சிராவணம், பாத்ரபதம், ஆஸ்வீஜம், கார்த்தீகம், மார்க்கசிரம், புஷ்யம், மாகம், பால்குணம் என்ற பெயர்களில் அழைப்பார்கள். சௌரமானம் என்பது சூரிய சுழற்சியில் அடிப்படையில் பிரிக்கப்படுவது. இவைதான் நாம் நடைமுறையில் கண்டு வரும் சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள்.

நீங்கள் எந்த முறையைக் கடைபிடிப்பவர் என்பதைப் பொறுத்து தகப்பனாரின் திதி மாறுபடும். நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனத்தவர் என்றால் சௌரமான முறை அதாவது, தமிழில் புரட்டாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமிக்கு அடுத்தநாளான தேய்பிறை பிரதமை திதியில் தகப்பனாரின் சிராத்தத்தை செய்ய வேண்டும்.

இது சிலசமயம் மஹாளய பட்சத்திலும் வரக்கூடும். அதே நேரத்தில் தமிழ், மலையாளம் தவிர தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட இதர இந்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர் என்றால் சாந்திரமான முறையில் அதாவது வருடந்தோறும் மஹாளய பட்சத்தில் வரும் பிரதமையில் சிராத்தத்தை செய்ய வேண்டும். இது சில சமயம் ஆவணி மாதத்திலும் வரக்கூடும்.

உங்கள் பரம்பரை எந்த முறையைப் பின்பற்றுபவர்கள் என்பதை குடும்பப் பெரியவர்களிடமும், வீட்டு சாஸ்திரிகளிடமும் தெரிந்து கொண்டு சிராத்தத்தைச் செய்யுங்கள். எப்படி இருந்தாலும் நீங்கள் இந்த வருடம் மஹாளய பட்ச பிரதமையில் செய்த சிராத்தம் நிச்சயமாக வீண்போகாது. சிரத்தையுடன் செய்கின்ற சிராத்தம் எந்த நாளில் செய்தாலும் அதனை கண்டிப்பாக முன்னோர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா