ஜோதியாய் ஒளிர்கிறது எதிர்காலம்!



கார்த்திகை பிறந்தது
நீர்நிலைகள் நிறைந்தது
மக்கள் மனம் மகிழ்ந்தது
தீபங்கள் ஒளிர்ந்தது
பக்தி, விரதங்கள் உகந்தது!
கார்த்திகை முழுவதும்
நீர்நிலையில் பெருமாள் வாசம்
செய்வதாக ஐதீகம்!
புண்ணிய நீராடி அவன் திருவருள்
நாடி பாடுவோம் புகழ் கீதம்!
பம்பையில் மூழ்கி நீராடு
பாவம் அகன்றிடும் வேரோடு
தங்கவீட்டில் தங்கி உள்ள

தயாளன் ஹரிஹரசுதன்
மலையேற பாதபலம் தந்திடுவான்!
இருமுடி சுமக்க தேகபலம் தந்திடுவான்!
சரணகோஷம் கேட்குதய்யா!
கண்ணீர் பெருகுதய்யா!
மேனி சிலிர்க்குதய்யா!
உண்மை உள்ளம் உருகுதய்யா!
காடு மணக்குதய்யா! நாடு வாழ்த்துதய்யா!
ஐயன் பேர் பாடி மலையேற
கொடிய விலங்கும் ஒதுங்குதய்யா!
கார்த்திகை செல்வனை
கைதொழுது அழைத்திடுவோம்!
ஆறு முகம் காட்டி சத்தியம் காக்கின்றான்!
வேறு வாசல் நாட மனமில்லை-ஆதலினால்
ஈறாறு கரத்தில் பொருள் அள்ளி வழங்கிவிடு!
உள்ளத்தில் உயிரேற்றி என் வாழ்வு வென்றுவிடு!
கோரிக்கை தவறென்றால் நீயே எனை கொன்றுவிடு!
முருகா... உனை தேடி சரணடைந்தேன்
நம்பிக்கை நாயகன் நீ!
தோள் தொட்டு தழுவிகொண்டால்
தொண்டு செய்வேன் நானும் இனி!
ஆயிரம் ஆசை உண்டு மனதினிலே
அத்தனையும் அருவுருவ
நாதனிடம் சொல்லிவைப்போம்!
பொறுமையுடன் பக்தியை
சேர்த்து வைப்போம்!
அனைவருக்கும் எதிர்காலம்
ஒன்று இருக்கிறது -அது
அண்ணாமலை தீபமாய்
அண்ணாந்து தெரிகிறது!
உயர்ந்து பிரகாசமாய் ஒளிரும்
ஜோதிவடிவை வணங்கிடுவோம்!
உள்ளத்தின் உயரத்தை பக்தியால்
அளந்திடுவோம்!

- விஷ்ணுதாசன்