கடவுள் கொடுத்த பரிசு!



மகாபாரதம் - 74

மாதங்கள் கடந்தன. எந்தக் குறையும் இன்றி துர்வாசரை அவள் கண்ணின் மணியென பாதுகாத்து வந்தாள். துர்வாசர் அரசனிடம், ‘‘நான் நாளையோடு உன் அரண்மனையிலிருந்து விடை பெறுகிறேன். எந்தக் குறையும் இல்லை. உன் மகள் குந்தி ப்ருதா மிக அழகாக கவனித்துக் கொண்டாள். அவளுக்கு என் ஆசிகள். நீயும், உன் தேசமும் சுபீட்சமாக இருப்பீர்கள்’’ என்று பல்வேறு விதமாக ஆசிர்வதித்தார். அரசன் மனம் மகிழ்ந்தான். தன் மகளைப் பற்றி மனம் நெகிழ்ந்தான். விடைபெறும் நேரம் குந்தி நமஸ்கரிக்க, ‘‘குழந்தாய், அதர்வண வேதத்திலிருந்து சில தேவதைகளின் மந்திரங்களை நான் உனக்குச் சொல்லித் தருகிறேன்.

கேட்டுக் கொள். இவை உனக்கு மிகப் பெரிய பலத்தைத் தரும். இந்த மந்திரம் சொல்லி அழைக்க, அந்த தேவதைகள் உன் முன் தோன்றுவார்கள். உன்னை ஆசிர்வதிப்பார்கள். உன் மூலம் இந்த பரத கண்டத்திற்கு மிகப்பெரிய உயர்வு வரப்போகிறது. என்ன என்பதை காலம் சொல்லும். இதோ மந்திரங்களை கேட்டுக் கொள்’’ என்று பல்வேறு தேவதைகளின் மந்திரங்களைச் சொல்ல, அவள் மனதில் குறித்துக் கொண்டாள். விழுந்து வணங்கினாள். துர்வாசர் என்கிற அந்த முனிவர் விடைபெற்று அந்த ஊரிலிருந்து அகன்றார். தான் ஒரு செயலை மிக நன்றாக செய்து முடித்தோம் என்ற சந்தோஷத்தில் ப்ருதா அரண்மனையை வலம் வந்தாள்.

அயர்ந்து தூங்கினாள். ஒரு நாள் காலையில் விழிக்கும் போது கட்டிலிலிருந்து சூரியன் உதிப்பது தெரிந்தது. மிக அழகாக இருந்தது. அடடே சூரியன். இவர் ஒரு தேவதை அல்லவா. மிகுந்த அழகன் அல்லவா. இவர் மனிதருடைய தேஜஸ்க்கு காரணமல்லவா. தேஜஸ்க்கு காரணமான தேஜஸ்வி எப்படி இருப்பார் என்று எண்ணுகிறபோதே, பட்டாடைகளுடனும், அழகிய மணிமாலைகளுடனும், சிவந்த நிறத்தில் பெரிய கண்களோடு சூரியன் மனித ரூபத்தில் அவள் கண்ணுக்கு தென்பட்டார். அடே, இத்தனை அழகாக இருக்கிறாரே. இவரை அழைத்து பேசினால் என்ன என்ற எண்ணம் உண்டாயிற்று. அந்த அந்தணர் சொன்ன மந்திரம் சொன்னால் நெருங்கி வந்து பேசுவாரோ.

எனக்கு பிரசன்னம் ஆவாரோ. இப்பொழுது தொலைவில் அவர் இருப்பது தெரிகிறது. எனக்கு எதிரே வந்து நிற்க வேண்டுமென்றால், அந்த மந்திரத்தை சொல்லிப் பார்ப்போமா என்று சோதனையாக சூரியனுடைய மந்திரத்தைச் சொல்லி அவரை அழைக்க, சூரியன் எதிரே வந்து நின்றார். தொலைவில் சித்திரம் போல பார்த்த உருவம் எதிரே முழு வடிவாய் வாசனையோடும், வெப்பத்தோடும் இருப்பதைப் பார்த்து அவள் நடுங்கிப் போனாள். ‘‘தயவு செய்து திரும்பிப் போய் விடுங்கள். நான் ஒரு வேடிக்கைக்காக உங்களை அழைத்தேன். என்னுடைய மந்திரம் பலிக்குமா என்று பார்ப்பதற்காக உங்களை அழைத்தேன். அது பலித்து விட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து திரும்பி சென்று விடுங்கள். எனக்கு ஒரு காரியமும் இல்லை’’ என்று சொல்ல, ‘‘அது எப்படி, நீ அழைத்தாய் நான் வந்திருக்கிறேன். நீ அழைத்ததும் நான் இங்கு வந்திருப்பதும் எல்லா தேவர்களுக்கும் தெரியும். நான் வெறுமே திரும்பிப் போனால் அவர்கள் சிரிப்பார்கள். குந்தி உன்னுடைய உடலை எனக்கு சமர்ப்பணம் செய். உன்னுடைய கருவிற்குள் நான் புக விரும்புகின்றேன். என் மூலம் உனக்கு குழந்தை பிறக்கும். என்னோடு சம்போகத்தில் ஈடுபடு. மனமுவந்து ஈடுபடு. ஆதலால் இந்த பூவுலகில் மகாவீரன் ஒருவன் பிறப்பான்.’’

‘‘சூரியதேவா, தாய், தந்தையின் அனுமதி இல்லாமல் நான் இதை எப்படிச் செய்வேன். எனக்கும், என் குலத்திற்கும், என் தாய் தகப்பனுக்கும் மிகப் பெரிய அவமானம் அல்லவா. அறியாமல் செய்து விட்டேன். தயவு செய்து பிழை பொறுத்தறுருளுங்கள்.’’ ‘‘உன் கண்களுக்கு ஒளி தருகிறேன் குந்தி. நிமிர்ந்து பார். தேவர்கள் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள். என்னை இகழ்ச்சியாக பார்க்கிறார்கள். வரவழைத்து விட்டு திருப்பி அனுப்பினால் என்னிடம் ஏதோ குறை இருக்கிறது என்று சொல்வார்கள். அதனால் எனக்கு ஏற்படும் மனவருத்தம் உன் தேசத்தை பாதிக்கும். வெப்பம் இல்லாமலும், வெப்பம் அதிகமாகவும் உன் தேசத்தின் மீது என் கோபத்தை காட்டினால் மக்கள் வேதனைப்படுவார்கள். எல்லாவற்றையும் யோசித்து விட்டு உன் முடிவைச் சொல்.’’

குந்தி திகைத்தாள். தன்னால் தேசம் தவிக்கப்படும் என்பதால் சரி என்று ஒத்துக் கொண்டாள். ‘‘நான் இதை ரகசியமாகச் செய்வதால் என்னுடைய கன்னித்தன்மை நீங்காது இருக்க வேண்டும். அந்த உத்திரவாதத்தை கொடுங்கள்’’ என்று சொன்னாள். சூரியனை வரவேற்க தயாராக கட்டிலில் படுத்துக் கொண்டாள். சூரியன் அவள் நாபியைத் தொட்டான். அவள் உடம்பு சிலிர்த்தன. அவளுக்குள் கதிர்கள் ஊடுருவின. அவள் கருப்பை நிறைந்து கரு தோன்றியது. சூரியன் அவளை ஆசிர்வதித்தார். ‘‘மிகச் சிறந்த வீரன் ஒருவன் உன் மூலம் தோன்றுவான். அவன் மறைவில்லாத புகழ் பெறுவான்’’ என்று சொன்னார். மறைந்தார்.

குந்தி அரண்மனை விட்டு அகலாத மிக கவனமாக தன் கருவை வளர்த்தாள். கன்னித்தன்மை உள்ளது போலவே நடித்தாள். அவள் தந்திரசாலி. ஒரே ஒரு செவிலித்தாய்க்கு மட்டும் அவள் கருவுற்று இருப்பதை சொன்னாள். அந்த செவிலித்தாய் அவளை கவனமாக பார்த்துக் கொண்டாள். செவிலித்தாய் ரகசியமாக குழந்தை பிறப்புக்கு ஏற்பாடு செய்தாள். பிறந்த குழந்தையை எடுத்து குளிப்பாட்டி குந்தி தேவியையும் சுத்தம் செய்து, ஒரு கருங்காலி மரப்பெட்டியில் பட்டுப்புடவை விரித்து அதில் குழந்தையை வைத்து பெட்டிக்குள் நீர் புகாத வண்ணம் மெழுகால் தடவி அதைக் கொண்டு போய் அரண்மனைக்கு அருகே இருக்கின்ற ஹஸ்ல நதியில் விட்டாள். குழந்தை கவசத்தோடும், கர்ண குண்டலங்களோடும் இருந்தது. மிக அழகாக இருந்தது. 

கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்ற கவலை இருந்தாலும், பெற்ற குழந்தையை பிரிகிறோமே என்ற கவலை குந்திக்கு இருந்தது. அவள் அழுதாள். நீரில் விட மனமில்லாமல் இறுக்கப் பிடித்துக் கொண்டு குழந்தையையே பார்த்துக் கொண்டு இருந்தாள். ‘‘மகனே, உன் தந்தை சூரியன் அன்புமயமானவர். அவருடைய திவ்ய திருஷ்டியால் உன்னைப் பார்ப்பார். உன்னை யார் எடுத்து வளர்க்கப் போகிறாரோ அவர் பெரிய புண்யவதி. மிகச்சிறந்த வாழ்க்கை அவளுக்கு கிடைக்கப் போகிறது. சுருள் கேசமும், அழகிய நெற்றியும், நீண்ட கைகளும் உடைய உன்னை யார் வளர்க்கப் போகிறாளோ அவள் பாக்கியசாலி.

குழந்தாய் நீ தவழ்ந்தும், கால்படாது நடந்தும், ஓடியும், மண்ணில் உள்ள தூசில் புரண்டும், சிரிப்பும், ஆட்டமுமாய் இருக்கின்ற உன்னை எடுத்து வளர்க்கப் போகிறவள் மகா பாக்கியசாலி. இமயத்தின் காடுகளில் வசிக்கும் சிங்கத்தைப் போன்ற வாலிபனாய் நீ சுற்றி வருவதை பார்க்கிறவர்கள் பாக்கியசாலி. ஆனால் எங்கு பார்த்தாலும் உன்னை நான் புரிந்து கொள்வேன்’’ என்று புலம்பி ஹஸ்ல நதியில் பெட்டியை விட்டாள். அந்த ஹஸ்ல நதி வேறு பல ஆறுகளோடு சேர்ந்து நகர்ந்து கங்கையில் கலந்தது. அந்தப் பெட்டியும் கங்கையில் மிதந்தது.
திருதராஷ்டிரனின் நண்பன் அதிரதன் என்கிற தேரோட்டி கங்கைக்கரையில் வசித்து வந்தான்.

அவன் மனைவி ராதை மிக அழகி. அவளுக்கு குழந்தை இல்லை. ராதை கங்கைக்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது பெட்டி வருவதைப் பார்த்து பணியாளர்களை அழைத்து, அதை கரைக்கு இழுத்து வரச் சொன்னாள். பெட்டியை திறந்து பார்த்தாள். குழந்தை இருப்பதை பார்த்து அதிரதனுக்கு சொல்லி அனுப்பினாள். அதிரதன் வந்து இறங்கினான். ‘‘இது கடவுள் நமக்கு கொடுத்த பரிசு. இது இறைவன் கொடுத்த வரம். அரச களையோடு இருக்கின்ற இவன் நமது வீட்டில் சௌக்கியங்களோடு வளர்வான்’’ என்று குழந்தையை பெட்டியிலிருந்து எடுத்து ஆரத் தழுவிக் கொண்டான்.

தங்கமயமான கவச குண்டலங்களை தரித்த அந்த குழந்தையை கண்ட அவன் ஊர் அந்தணர்கள் அவனுக்கு வசுஷேனன் என்று பெயரிட்டார்கள். பெரியவர்களுடைய ஆசிர்வாதத்தால் அழகும் பராக்கிரமும், தந்தையினுடைய கீர்த்தியால் கூரிய புத்தியும், தேஜஸ்சும் கொண்ட வசுஷேனன் தேரோட்டியின் மகனாக வளர்ந்தான். அவனுக்கு வ்ருஷன் என்ற பெயரும் உண்டாயிற்று. அதிரதன் புதல்வனாக அங்க தேசத்தில் அவன் வளர்ந்து வாலிபனானான். குந்தி ஒற்றர்களை அனுப்பி தன் தெய்வீகப் புதல்வன் அதிரதன் மகன் பற்றி அறிந்து கொண்டாள். அதிரதன் தன் மகன் பெரியவனானதும் அவனை அஸ்தினாபுரத்திற்கு அனுப்பினான். அங்கே துரோணாச்சாரியாரின் சீடனானான். தனுர் வித்தை பயின்றான். அங்கே கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் நட்பு உண்டாயிற்று.

துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார், பரசுராமரிடமிருந்து பல்வேறு வகையான அஸ்திரங்களைக் கற்று மிகச்சிறந்த வில்லாளியாகத் திகழ்ந்தான். துரியோதனன் மீது உள்ள நன்றியின் பாற்பட்டு குந்தியின் புதல்வர்களான பாண்டவர்களுக்கு எதிராக இருந்தான். இவன் சூரியன் புதல்வன், போரில் வெல்ல முடியாதவன், கவச குண்டலங்களோடு பிறந்தவன் என்பதை அறிந்துதான் யுதிர்ஷ்டன் என்கிற தருமர் மிகக் கவலையோடு இருந்தார். இந்த யுத்தத்தில் எப்படி ஜெயிக்கப் போகிறோம் கர்ணன் இருக்கும் வரை அது நடக்குமா என்று கவலைப்பட்டார். அந்தக் கர்ணன் நடுப்பகல் நேரத்தில் நீரில் நின்று சூரியனை நோக்கி தியானம் செய்து கொண்டிருந்தபோது அவனிடம் தானம் வாங்குவதற்காக பல பிராமணர்கள் கரையில் இருந்தார்கள்.

அந்த பிராமண கூட்டத்தில் இந்திரனும் சேர்ந்து கொண்டான். மற்ற எல்லா பிராமணர்களுக்கும் அவர்கள் கேட்டது கொடுக்கும் போது இந்திரனும் அருகே வந்து, ‘பிட்சை இடு, பிட்சை இடு’ என்று கர்ணனைப் பார்த்து கேட்டான். உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று கர்ணன் அவரை வரவேற்றான். ‘‘அந்தணரே, உங்களுக்கு என்ன வேண்டும்? பசுக்கள் நிறைந்த கிராமமா, நகரத்தில் நல்ல மாட மாளிகையா அல்லது யாகம் செய்வதற்குண்டான பொருளுதவியா, எதுவாயினும் தருகிறேன். என்ன வேண்டும்?’’ ‘‘எனக்கு உன் கவசமும், குண்டலமும் வேண்டும்.’’ கர்ணன் மெல்ல சிரித்தான்.  ‘‘அப்படியானால் என் தெய்வம் சொன்னது போல நீங்கள் அந்தணர் அல்ல.

அந்தணர் வேடத்தில் வந்திருக்கின்ற இந்திரன். உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களுக்கு என் வணக்கம். நீங்கள் அந்தணராக வந்திருப்பதால், அந்தணருக்குத் தேவையான பசுக்களையும், ஹோமம் செய்வதற்குண்டான பொருட்களையும், சுகமாக வசிப்பதற்குண்டான மாட மாளிகைகளையும் தருகிறேன். ஆனால், கர்ண குண்டலங்களை கேட்காதீர்.’’‘‘எனக்கு அதுதான் வேண்டும்.’’ ‘‘என்னை பலவீனப்படுத்துவதில் உங்களுக்கென்ன அவ்வளவு ஆசை. இந்தக் கவசகுண்டலம் அமிர்தத்தால் ஆனவை. இவற்றை எடுத்துவிட்டால் நான் எதிரியால் தாக்கப்பட்டு இறந்து போவேன். பலவீனமாவேன். இது இருக்கும்வரை என்னை யாரும் கொல்ல முடியாது.

எந்த உயிரும் என்னை அழிக்க முடியாது. அதனால் இதைத் தருவது பற்றி யோசிக்கிறேன்.’’ ‘அதுதான் பிரச்னை. நீ பலவீனமடைய வேண்டுமென்பதுதான் என்னுடைய குறிக்கோள். உன்னைக் குறித்து பலர் பயந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பயத்தை நீக்க வேண்டியது என் கடமை.’’ ‘எனக்கும் பயம் இருக்கிறது. என்னைக் கொல்ல துடித்துக் கொண்டிருக்கிற அர்ஜுனனை நான் கொல்ல வேண்டும். அந்த அர்ஜுனனை வதம் செய்ய வேண்டும். ஒன்று செய்யுங்கள். உங்கள் சக்தி ஆயுதத்தை எனக்குக் கொடுங்கள். அதைக்கொண்டு நான் அர்ஜுனனை கொன்று போடுகிறேன். இந்த கவச குண்டலங்களை எடுத்துக் கொள்ளுங்கள். என் பலவீனம் முக்கியம் அல்ல.

அர்ஜுனன் அழிவு முக்கியம்.’’ ‘‘அர்ஜுனனை உன்னால் அழிக்க முடியாது. அர்ஜுனன் இந்த பிரபஞ்சத்திற்கு காரணகர்த்தாவாக இருந்த பரமாத்மாவால் காப்பாற்றப்படுகிறான். அவர் கிருஷ்ணர் என்ற உருவம் எடுத்து அவனை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த யுத்தத்தை திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். எனவே, உன்னுடைய எந்த ஆயுதமும் அவனை அழிக்காது. ஆயினும் நீ கேட்டது போல சக்தி ஆயுதத்தை தருகிறேன். கவச குண்டலங்களை உடனே எடு.’’விவாதம் முடிந்து போயிற்று. பேச்சு நின்று போயிற்று. சக்தி ஆயுதத்திற்காக அந்த அந்தணர் கையை நீட்டினார். அந்த அந்தணர் கையில் ஒரு அம்பு வந்தது. அந்த அம்பு கர்ணன் கைக்கு மாறியது. கர்ணன் இடுப்பு வாளை எடுத்து கவசத்தை அறுத்தான். காது குண்டலத்தை அறுத்தான். ரத்தம் பீறிட்டு அடித்தது.

 தேவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கந்தர்வர்களும், யட்சர்களும் வியந்து பார்த்தார்கள். மலர் மாரி பொழிந்தார்கள். சிரித்தபடி தன் நெஞ்சை அறுத்து தானம் செய்கின்ற கர்ணனைப் பார்த்து ‘கர்ணன் கர்ணன்’ என்றார்கள். கர்ணன் கவச குண்டலங்களை இந்திரனிடம் நீட்டினான். சக்தியாயுதத்தை பத்திரப்படுத்திக் கொண்டான். இந்திரன் கவச குண்டலங்களை எடுத்துக் கொண்டு மறைந்தார். கர்ணனின் கவச குண்டலங்கள் அவனிடமிருந்து பறிக்கப்பட்டது என்று தெரிந்த கௌரவர்கள் வாய்விட்டு அழுதார்கள். பஞ்சபாண்டவர்கள் குதூகலித்தார்கள். எது நடக்க வேண்டுமோ அது நடந்தது. எது நடக்க வேண்டுமோ அது நடக்கப் போகிறது.

எனவே, மிகப் பெரிய விளையாட்டில் தான் ஒரு பகடைக்காய் என்பதை கர்ணன் நன்கு அறிந்திருந்தான். திருப்தியான மனதுடன் வருத்தப்படுகின்ற துரியோதனாதிகளை தேற்றுவதற்குப் போனான். கையில் சக்தியாயுதம் இருக்கிறது. அர்ஜுனனைக் கொல்ல இது போதும். அர்ஜுனன் இறந்தால் பஞ்சபாண்டவர்கள் இறப்பார்கள். நமக்கு எதிரிகள் என்று எவருமே இருக்க மாட்டார்கள் என்று சொல்ல, துரியோதனன் ஒருவாறு சமாதானமடைந்தான். மிகச்சிறந்த ஒரு வீரன் தேவர்களின் தலையீட்டினால் பலவீனமடைந்தான்.எது கேட்டாலும் கொடுக்கிறவன் கர்ணன், வள்ளல் என்கிற புகழ் இன்றும் உலகத்தில் இருக்கிறது. தானம் தருவது என்றால் அது கர்ணன்தான் என்கிறப் பெயர் வேறு எந்த அரசனுக்கும் இந்தப் புவியில் இல்லை.

(தொடரும்)

பாலகுமாரன்