திருமணமாக ரோஜாப்பூ மாலை



குளத்தூர்

குளத்தூரை அரசாண்ட நமனத்தொண்டைமான் (கி.பி. 1685-1750) குளத்தூரில் வரதராஜப்பெருமாளுக்கு ஓர் அழகிய திருக்கோயிலை நிர்மாணித்தார். ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. சுற்றிலும் நெடி துயர்ந்த திருமதிற்சுவர்கள். முகப்பில் சிறிய ராஜ கோபுரம். உள்ளே நுழைந்ததும் விஸ்தாரமான பிராகாரம். எதிரே கொடிமரம், பலி பீடம். வலதுபுறம் ஏகாதசி மண்டபம் உள்ளது. இடதுபுறம் திரும்பி நடந்தால் தெற்கு நோக்கியபடி நுழைவாயில் நம்மை வரவேற்கிறது. உள்ளே நுழைந்ததும் கொலு மண்டபத்தைக் காணலாம். இதன் வடதிசையில் அனுமனுக்கும், ஆழ்வார்களுக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்திருக்கின்றன. கீழ்திசையில் கருடாழ்வாருக்கு ஒரு சந்நதி.

அடுத்து மகாமண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம். அர்த்த மண்டபத்தில் உற்சவர் விக்கிரகங்கள் கொலுவிருக்கின்றன. அடுத்துள்ள கருவறையில் வரதராஜபெருமான், ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் நின்ற திருக்கோலத்தில் கீழ்திசை நோக்கி சேவை சாதிக்கிறார். இங்குள்ள கல்யாண அனுமனுக்கு ரோஜா மாலை சூடி வேண்டிக் கொள்ளும் பெண்களுக்கு விரைந்து  திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள். இங்கு அனுமன் ஜெயந்தி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் இங்கு வெகு சிறப்பாகக் கொண்டப்படுகிறது.

அன்று முதல் 10 நாட்கள் ராப்பத்து உற்சவம் பலநூறு பக்தர்கள் தரிசிக்க, வெகு விமரிசையாக நடந்தேறுகிறது. அன்று பெருமாள் தேவி, பூதேவியுடன் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்கள் கண்குளிர தரிசனம் வழங்குவார். அதுமட்டுமல்லாமல் அதே மண்டபத்தில், அன்று, மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் பிற  ஹோமங்களும் நடைபெறும். வடக்கு திருமதிற்சுவரின் நடுவே ஒரு வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்போதும் இந்த வாசல் பூட்டியே இருக்கும். ஏகாதசி திருவிழா அன்று மட்டும் இந்த வாயில் சொர்க்கவாசலாக  திறக்கப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வாயில் வழியே வந்து அன்று பெருமானையும் தேவியர்களையும்
தரிசித்து மகிழ்வார்கள்.

சித்திரை முதல்நாள் இங்கு பஞ்சாங்கம் வாசிப்பது வழக்கமாக உள்ளது. அந்தத் தமிழ் ஆண்டின் பலாபலன்களை பக்தர்கள் சூழ அமர்ந்திருக்க, படிப்பார்கள். 21.06.2013 அன்று இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. ஆனி மாதம் இடம்பெற்ற இந்த கும்பாபிஷேக நாள், வருஷாபிஷேக தினமாக ஒவ்வொரு ஆனி மாதத்திலும் இங்கு கொண்டாடப்படுகிறது. அன்று பெருமாளுக்கும் தேவியர்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஆடி வெள்ளிக்கிழமையன்று இங்கு நடைபெறும் திருவிளக்கு பூஜையில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆவணி மாதம் ஜெயந்தி அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன் சுமார் 1000 பேருக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. புரட்டாசி நவராத்திரியின் போது 10 நாட்களும் தாயாருக்கு விதவிதமான அலங்காரங்கள் செய்கின்றனர். ஐப்பசி மாதம் தீபாவளி அன்று இறைவனுக்கு தோசை நைவேத்யம் செய்து அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவது எங்குமில்லா புதுமையாக உள்ளது. இந்த பிரசாதத்தை பெற நூற்றுக்கணக்கில் பக்தர்கள் வருவதும் வழக்கமாக உள்ளது. கார்த்திகை மாதம்  திருக்கார்த்திகை அன்று 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு ஆலயம் ஒளிமயமாக காட்சி தரும்.  ஆலயம் முன் சொக்கபனை தீபம் ஏற்றப்படுகிறது.

மார்கழி 30 நாட்களும் தனுர்பூஜையும் சிறப்பாக நடந்தேறுகிறது. தை பொங்கல் அன்று தேங்காய் பழங்கள், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், செங்கரும்பு முதலியன மூலவருக்கு படைக்கப்படுவதுடன் அன்று பெருமாளுக்கும் தேவியருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த ஆலயத்தில் தினசரி 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 7 முதல் 9 மணிவரை, மாலை 5 முதல் 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

வேண்டுவோர்க்கு வேண்டிய வரம் அருளும் இத்தல வரதராஜ பெருமானையும், ஸ்ரீதேவி, பூதேவியையும் தினமும் அநேக பக்தர்கள் தரிசித்து நலம் பெறுகிறார்கள்.  புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். குளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ.தொலைவு. திருச்சியிலிருந்து 31 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 22 கி.மீ.தொலைவிலும் உள்ளது.

- ஜெயவண்ணன்