தூண்டிய சுடரில் பிரகாசிக்கும் ஒளி!



பகவான் சத்ய சாயிபாபா அவதார நந்நாள்: 23, நவம்பர்

‘‘உருவாக்குவதெல்லாம் இறைவன்தான்; அவன் உருவாக்கி வைத்திருந்ததை நாம் வெறுமே கண்டுபிடிக்கத்தான் செய்கிறோம், அவ்வளவே.’’ - தன் மகிமைகளையும், சித்து அற்புதங்களையும் பற்றி பக்தர்கள் பரவசத்துடன் பேசும்போது, தன்னிலை விளக்கமாக இப்படிச் சொன்னவர், புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாயிபாபா. ‘‘புராண காலங்களில் அரக்கர்களைக் கொல்லப் பன்னெடுங்காலம் தவமியற்றி, சக்தி பெற்று சில இறையன்பர்கள் தீயவர்களை அழித்திருக்கிறார்கள். இந்தக் கலிகாலத்திலும் அது சாத்தியமே. ஆனால், அந்தத் தவம் பொதுநலத்துக்காக அல்லாமல், தனிமனித பிரச்னைக்கான தீர்வு வேண்டி மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. அதில் தவறில்லைதான்.

ஆனால், கூட்டுப் பிரார்த்தனை செய்து, கூட்டாக இறை துதி பாடிப் பொதுநலத்துக்காக நாம் ‘தவம்’ இயற்றும்போது, அதில் கிடைக்கும் நிம்மதியை அனுபவித்தால்தான் உணரமுடியும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார். அவர் துவக்கி வைத்த கூட்டு பஜன் நிகழ்ச்சிகளில், இன்றும், கண்களில் நீர் மல்க, பல பக்தர்கள், பொது நன்மைக்காக நெகிழ்வது கண்கூடு. சத்யசாய் அறக்கட்டளை, உலகளாவிய ஒரு தொண்டு நிறுவனம். உலக நாடுகளில் சுமார் 4 கோடி பக்தர்கள் அவருடைய முக்கியக் கொள்கையான அன்பை உலகெங்கும் பரப்பி வருகிறார்கள். அவற்றில் 114 நாடுகளில், மொத்தம் 1200 சாய் மையங்கள் இயங்குகின்றன. 103 நாடுகளில் சத்யசாய் கல்வி நிலையங்கள்
செயல்படுகின்றன.

சத்யசாய்பாபா அறக்கட்டளை மிகச் சிறப்பாக பொதுத் தொண்டு ஆற்றி வருகிறது என்றால், அதற்குப் பொதுநல நோக்கு கொண்ட பல பக்தர்கள்தான் காரணம். உதாரணமாக, மைக் தகரெட் என்ற அமெரிக்கத் தொழிலதிபர், 1990ஆம் ஆண்டு, 200 கோடி ரூபாயை, புட்டபர்த்தியிலுள்ள சத்ய சாய் மைய மருத்துவமனைக்கு வழங்கியிருக்கிறார். மிக நவீன வசதிகளுடன், எல்லாவகை நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் இந்த இலவச மருத்துவமனை, 1954ம் ஆண்டிலேயே பகவான் சாயிபாபாவால் கட்டப்பட்டது. பெங்களூரிலும் இதே அமைப்பு கொண்ட மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனையை அமைத்திருக்கிறார், பாபா.

அடுத்து, புட்டபர்த்தியில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. புட்டபர்த்தி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தம் விளையாட்டுத் திறமைகளை இந்த மைதானத்தில் நிரூபித்து விருதுகள் பெறுகிறார்கள். இந்த அரங்கம் ஜி.வி. ஷெட்டி என்ற வெளிநாடு வாழ் இந்தியர் வழங்கிய 25 கோடி ரூபாய் நன்கொடையில் உருவானது. இன்னொன்று, மீலாய் துரி என்ற இந்தோனேஷிய அன்பர் ஒருவர் அளித்த நன்கொடையால் புட்டபர்த்தி இசைப் பள்ளி உருவானது. நன்கொடை தொகை: 50 கோடி ரூபாய்.பகவான் சத்ய சாயிபாபா உருவாக்கிய இந்த அறக்கட்டளை ஆந்திர மாநிலம் அனந்தபூரில் பெண்களுக்கான கல்லூரியையும், பெங்களூரில் ஆடவருக்கான கல்லூரியையும் துவக்கி பல ஏழைக் குடும்பங்களின் படிப்புச் சுடரைத் தூண்டிவிட்டு ஆனந்த ஒளிபரவச் செய்திருக்கிறது.

1950ம் ஆண்டிலேயே புட்டபர்த்தியில் சத்ய சாயிபாபா பல்கலைக்கழகத்தைத் துவக்கினார் அவர். மத்திய பிரதேசசேம், உத்திரகண்ட் மாநிலம், ஒரிசா என்று இந்தியாவின் பல மாநிலங்களிலும் இவரது கருணைச் சேவை நிழல் விரித்திருக்கிறது. பிற தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளின் உதவியுடன் இந்த சேவையை அளிக்க சத்ய சாய் அறக்கட்டளை தயக்கம் காட்டியதேயில்லை. வறட்சி மிகுந்த அனந்தபூர் மாவட்டத்தில் 750 கிராம மக்களுக்கு, 1997 முதல், இதன் முயற்சியால் இன்றுவரை குடிநீர் பிரச்னை இல்லாதிருக்கிறது.

சென்னை மக்களின் தாகம் தணிப்பதற்காக ஆந்திர கிருஷ்ணா நதிநீரை சென்னை நோக்கிப் பாயவிடும் கால்வாய் திட்டத்தை 200 கோடி ரூபாய் செலவில் அந்த அறக்கட்டளை மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறது. ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், அர்ஜுனரணதுங்கே (ஸ்ரீலங்கா), வேணு சீனிவாசன் போன்ற தொழிலதிபர்கள், அஞ்சலிதேவி, பி. சுசீலா போன்ற திரையுலகப் பிரமுகர்கள், எம்.எஸ். சுப்புலட்சுமி முதல் ஓ.எஸ். அருண், சுதா ரகுநாதன் முதலான பாடகர்கள், பிற எல்லாத் துறை விற்பன்னர்கள் அனைவரின் உளம் நிறைந்த குருவாகவும் விளங்கியவர்
சத்ய சாயிபாபா.

‘அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்; பிறர் மனங்களிலும் வளர்க்க முயற்சி செய்யுங்கள்’ என்பதுதான் பகவான் சத்ய சாயிபாபாவின் பிரதான போதனையாக இருந்தது. பாசம் வளர்த்து ஒரு குடும்ப வட்டத்துக்குள் மட்டும் உழலாமல், அன்பை வளர்த்து உலக அளவில் உயர்ந்து நில்லுங்கள் என்பது அந்த போதனையின் உட்பொருள். தினமும் அதிகாலையில் ‘நகர சங்கீர்த்தனம்’ என்று ஒவ்வொரு சமிதியைச் சேர்ந்தவர்களும் தம் பகுதியில் ஊர்வலம் சென்றபடியே பாபா துதிகளைப் பாடிச் செல்வது, மாலை வேளைகளில் அந்தந்த சமிதி வளாகத்திலேயே பஜனை நிகழ்த்துவது.

தம் பகுதி மட்டுமல்லாமல், பிற எந்த இடத்திற்கும் மனமுவந்து சென்று, அம்மக்களின் இடர் களைவது என்று அவர் சில நெறிமுறைகளை வகுத்துத் தந்திருக்கிறார். அந்த சமிதிகளில் மட்டுமல்லாமல், சாயிபாபாவின் இருப்பிடமான பிரசாந்தி நிலையத்திலும் சேவார்த்திகள் கொஞ்சம்கூட சிடுசிடுப்பைக் காட்டாமல், மிகவும் அமைதியாக, ‘அந்தப் பக்கம் போங்க சாயிராம், தயவு செய்து வரிசையில் நில்லுங்க சாயிராம்...’ என்று மிகவும் அன்பாகச் சொல்லி, அந்தப் பகுதிகளில் ஒழுங்கையும், சுத்தத்தையும் இன்றளவும் நிலைநாட்டும்
கண்ணியம், அவர் வளர்த்தது.

அவர் நேரடியாகப் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில், ஒரு வரைமுறைக்கு உட்பட்டு அமர்ந்திருக்கும் பக்தர்களிடையே மெல்ல நடந்து வந்து ஒவ்வொருவரையும் தம் கருணைக் கண்களால் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது வழக்கம். இதை அவருடைய பக்தர்கள், ‘கடவுள், பக்தனை நோக்கி வருகிறார்’ என்று வர்ணிப்பார்கள். பல பக்தர்கள், ‘‘நான் அவரை நேரில் தரிசித்ததேயில்லை. படங்களில் பார்த்தும், தரிசித்தவர்கள் வர்ணித்ததைக் கேட்டும்தான் இருக்கிறேன். அதனாலோ என்னவோ அவர் இப்போது நம்மிடையே இல்லை என்ற உணர்வே எனக்கு ஏற்படவில்லை. அவர் இருக்கிறார்; என் உள்ளத்தில் நிரந்தரமாக எப்போதும்போல இருக்கிறார்.

என் வீட்டினுள் வளைய வருகிறார். என்னுடனும் என் குடும்பத்தாருடனும் பேசுகிறார். ஆசீர்வதிக்கிறார். அறிவுரை கூறுகிறார், கைப்பிடித்து வழி நடத்திச் செல்கிறார்’’ என்று குறிப்பிடுவது அனுபவபூர்வமான உண்மை. எனக்கென்று தனியே விருப்பம் ஏது? ராமன் லட்சுமணனோடும், சீதையோடும் வனவாசம் வருகிறான். மிகவும் ரம்யமான இடம் ஒன்றைத் தேடி அங்கே பர்ணசாலை அமைக்க விரும்பினான். ‘‘பர்ணசாலை கட்டுமானத்துக்குத் தேவையான பொருட்களை சேகரித்துக்கொண்டு, உனக்கு விருப்பமான இடத்தில் கட்டு’’ என்று தம்பியிடம் சொன்னார் ராமன். பொருட்கள் சேகரிக்கப்போன லக்ஷ்மணனை வெகுநேரமாகக்  காணவில்லை. தேடிக்கொண்டு போனாள் சீதை. ஓர் இடத்தில் லட்சுமணன் கண்ணீர் பெருக்கியபடி அமர்ந்திருந்தான்.

பதறிய சீதாதேவி அவனுடைய அழுகைக்குக் காரணம் என்ன என்று வினவினாள். ‘‘என் விருப்பப்படி இடம் பார்த்து பர்ணசாலையைக் கட்டு என்று அண்ணா சொல்லிவிட்டாரே! எனக்கென்று தனியே விருப்பம் ஏதாவது உண்டா தாயே? அவருடைய விருப்பம்தானே என் விருப்பமெல்லாம்? என்னை இப்படிப் பிரித்துப் பேசிவிட்டாரே!’’ என்று கலங்கினானாம் லட்சுமணன். சகோதரன் மீது கொண்ட உன்னதமான பக்திக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு ஏது? நான் இருக்கிறேன், பார்த்துக்கொள்கிறேன்! கிருஷ்ண பரமாத்மா சயனத்திருக்கிறார். அர்ஜுனன் வருகிறான். துரியோதனனும் அடுத்து வருகிறான். கிருஷ்ணனின் பாதமருகே நின்றிருந்த அர்ஜுனன், ‘‘கண்ணா, போர் நிச்சயமாகிவிட்டது. எங்களை நீதான் காப்பாற்ற வேண்டும்,’’ என்று மனம் உருகிக் கேட்கிறான்.

கிருஷ்ணன் அவனுக்கு சொல்லுமுன், துரியோதனனும் தங்களுக்கு கிருஷ்ணனின் உதவி வேண்டும் என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணன், ‘‘தருகிறேனே, என் மிகப் பெரிய சேனையெல்லாம் உனக்குதான்’’ என்று அருளுகிறார். துரியோதனன் பெரிதும் மகிழ்கிறான். அவன் விடைபெற்றுச் சென்ற பிறகு, அர்ஜுனன் பகவானிடம், ‘‘ஸ்வாமி, என் கேள்விக்குப் பதில் தரவில்லையே?’’ என்று ஏக்கமாகக் கேட்கிறான். பகவான் சொல்கிறார்:  ‘‘அர்ஜுனா, உனக்குத்தான் நானே இருக்கிறேனே! நான்தான் எஞ்சின். உன்னைப் போன்ற கம்பார்ட்மென்ட்களையெல்லாம் நான் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறேன்!’’

இருதயத்தில் இருத்தி பூஜிப்போம்! துரியோதனன் சபையில் திரௌபதி அவமானத்துக்குள்ளாகிறாள். துச்சாதனன் துகில் உரியும்போது பகவான் கண்ணனை உதவிக்காக அழைக்கிறாள். ‘‘துவாரகா நாதா பிருந்தாவன சஞ்சாரி’’ என்றெல்லாம் கதறுகிறாள். ஆனால் கண்ணன் வரவேயில்லை. அடுத்து அவள், ‘ஹிருதய வாஸி’ என்று அழைத்த அந்தக் கணத்திலேயே உதவிக்கு வந்துவிடுகிறான். ஒபகவான் கண்ணன், நம் இதயத்தில் இருப்பதையே பெரிதும் விரும்புகிறான் என்பது இதிலிருந்து தெரிகிறது. அவன் எங்கோ, கோயிலில் இருப்பதாகக் கருதி பூஜிக்காமல், இதயத்தில் இருத்திப் பூஜிக்க வேண்டும்.

- சுபஹேமா