காகிநெல்லி கண்டெடுத்த கனகதாசர்



ஓர் ஏழைப் பெண்மணி தனக்கு பிட்சையாக அளித்த நெல்லிக்கனியை ஏற்று, அதனால் அகமகிழ்ந்த ஸ்ரீஆதி சங்கரர், மஹாலக்ஷ்மியைக் குறித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதும், உடனடியாக அந்த ஏழையின் இல்லத்தில் தங்க நெல்லிக்கனிகள் கனகதாரையாகப் பொழிந்த வரலாறு நாம் அறிந்ததே. இதேபோன்ற ஒரு புராணத் தகவல் தெலங்கானா மாவட்டத்திலும் நிகழ்ந்துள்ளது.

காகம் ஒன்று தினந்தோறும் ஒரு நெல்லிமரத்திலிருந்து ஒரேஒரு நெல்லிக்கனியை மட்டும் கொத்திவந்து, அருகில் இருந்த ஒரு புற்றுக்குள் போட்டு வந்ததைக் கவனித்தார் விவசாயி ஒருவர். இதுபற்றி மற்றவர்களிடம் அவர் கூற, இச்செய்தி அரசனுக்கும் எட்டியது. உடனடியாக அரசன் அங்கு வந்து அந்தப் புற்றை அகற்றிப் பார்க்க, அங்கு காகம் போட்டிருந்த நெல்லிக்கனிகள் அனைத்தும் தங்க நெல்லிக்கனிகளாக மாறியிருந்தன.

அதுமட்டுமல்லாமல் இந்த தங்க நெல்லிக்கனிகளுக்கிடையே நரசிம்மர் சுயம்புத் திருமேனியாகக் காட்சியளித்தார். இதைக்கண்டு, மன்னன் பக்தி பரவசப்பட்டு, அந்தத் திருமேனியை வெளியே எடுத்து, ஓர் ஆலயம் எழுப்பி, வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்தார். இந்தச் சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமமான காகிநெல்லியில் நிகழ்ந்திருக்கிறது.

காகம் புற்றில் இட்ட நெல்லிக்கனிகள் தங்கக்கனிகளாக மாறி, மண்ணில் புதைந்திருந்த ஸ்ரீநரசிம்மரையும் வெளிப்படுத்திய தலமாதலால் இதற்கு காகிநெல்லி என்றே பெயர் ஏற்பட்டுவிட்டது. தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் காகி என்ற சொல் காக்கையைக் குறிக்கும். மேலும் இந்தச் சிறிய கிராமம் கன்னட மொழி சாஹித்ய கர்த்தாவான கனகதாசர் வாழ்க்கையோடும் நெருங்கிய தொடர்பு கொண்டது.

காகிநெல்லி கிராமத்தின் அருகில் உள்ள பாடா என்ற கிராமத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் போற்றித் துதித்த ஹரிதாச இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த கனகதாசர் அவதரித்தார். பிறகு அவர் இந்தக் காகிநெல்லியில் குடியேறி தன்னுடைய அனைத்து கீர்த்தனைகளையும் இயற்றியதாலும் இந்தக் கிராமம் அவரால் மிகப்பெருமை அடைந்தது. கனகதாசர் தன்னுடைய சாஹித்யங்களில் பிரதானமாக இத்தலத்து இறைவனான ஸ்ரீஆதிகேசவப் பெருமாளைக் குறிப்பிட்டிருக்கிறார்.

கன்னட பக்தி இலக்கியத்தில், த்வைத சம்பிரதாயத்தை ஸ்தாபித்த ஸ்ரீமத்வாச்சார்யார் (1238-1317) வழியில் வந்த ஸ்ரீவியாசராயர், ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள் ஹரிதாசர்கள் எனப்பட்டனர். ஸ்ரீகிருஷ்ணரையே முழுமுதற் கடவுளாகக் கொண்ட இந்த ஹரிதாசர்களின் ஹரிதாச இயக்கம் ஒரு முக்கிய பக்தி இயக்கமாக வளர்ந்தது. இந்த இயக்கத்தில் ஹரிதாசர்,  ஸ்ரீபுரந்தரதாசர், ஸ்ரீகனகதாசர் போன்றவர்கள் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.

தியாகய்யர், சியாமா சாஸ்த்ரி, முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளாகப்  போற்றப்படுவது போன்று கன்னட மொழியில் சாஹித்யங்கள் இயற்றிய ஸ்ரீபாதராயர் என்ற ஸ்ரீலட்சுமிநாராயண தீர்த்தர் (1404-1502), ஸ்ரீபுரந்தரதாசர் (1484-1564) மற்றும் ஸ்ரீகனகதாசர் (1509-1609) ஆகிய மூவரும் ஹரிதாசர்களில் மும்மூர்த்திகளாகப் போற்றப்படுகின்றனர்.

கனகதாசர் வீரகௌடா-பச்சம்மா தம்பதிக்கு 1489ம் ஆண்டு அவதரித்தார். திருவேங்கடவனின் அருளால் கனகதாசர் பிறந்ததால் திருமலையப்பன் என்றும், திம்மப்பா என்றும் அழைக்கப்பட்டார். கனகதாசரின் தந்தை விஜயநகர ஆட்சியில் ஒரு தண்டநாயகனாக (படைத் தளபதி) விளங்கியவர். தந்தையின் மறைவிற்குப் பின்னர் கனகதாசர் சிறந்த தளபதியாக விளங்கி ஏராளமான பொருள் ஈட்டினார். அவருக்கு ஒருமுறை தங்கப் புதையல் கிடைத்ததால் மக்கள் அவரை கனகதாசர் என்று அழைக்கத் தொடங்கினராம்.

ஒரு போரில் காயம்பட்டு, வேதனையுற்ற கனகதாசர் தன் பதவியைத் துறந்து, ஸ்ரீவியாசராஜரைச் சந்தித்து அவருடைய சீடரானார். ஒருநாள் ஸ்ரீஆதிகேசவப் பெருமானுக்கான ஆராதனையை முடித்துவிட்டு, பெருமாள் திருவடியிலேயே கனகதாசர் தன் தலைவைத்து தூங்கிவிட்டார். கண்விழித்துப் பார்த்தபோது, அங்கு இரண்டு காஷாய வஸ்திரங்கள் காணப்பட்டன.

அதைப் பார்த்துவிட்டு திரும்பவும் அவர் தூங்க முயற்சிக்க, ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், அவரிடம் ‘நீ சன்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு என்னைப் பாடி கடைசியில் என்னை வந்து அடைவாய்,’ என்று அருளினார். அவரும் அந்தக் கட்டளையை ஏற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று இறைவனின் கல்யாண குணங்களைப் பாடி மகிழ்ந்தார். கனகதாசர் கிருஷ்ணர்மீது ஏராளமான சாஹித்யங்களை எழுதுவதிலும், பக்தி செலுத்து வதிலும் தன் நாட்களை செலவிட்டார். அதுமட்டுமல்லாமல், திருப்பதி, உடுப்பி, மேல்கோட்டை போன்ற பல தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்.

இந்த காலகட்டத்தில் அவருடைய இனத்தைக் காரணம்காட்டி உடுப்பி ஆலயத்துக்குள் அவரை அனுமதிக்க மறுத்தார்கள். அதற்காகக் கவலைப்படாத கனகதாசர், கோயிலுக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்துகொண்டு, தினந்தோறும் மானசீகமாக கிருஷ்ணரை ஆராதித்து  வந்தார். அவருடைய பக்தியில் நெகிழ்ந்த கிருஷ்ணர் கனகதாசர் இருக்கும் திக்கு நோக்கித் திரும்பி நின்றுகொண்டார்.

ஆலய மதில்கள் இடிந்து விழ, கருவறையில் கிழக்கு நோக்கி இருந்த மூல மூர்த்தி மேற்கு நோக்கித் திரும்பிய அதிசயம் அது! மதிலில் ஏற்பட்டிருந்த விரிசல் வழியாக கனகதாசருக்கு பகவான் காட்சிதர, கனகதாசரின் பெருமையை அறிந்த பக்தர்கள் அந்த மதிலில் ஒரு தனிச் ஜன்னலை அமைத்தனர். அது இன்றும் ‘கனகன கிண்டி’ என்று அழைக்கப்படுகிறது. உடுப்பி ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் இந்த சிறிய ஜன்னல் வழியாகவும் கிருஷ்ணரை தரிசனம் செய்வது இன்றும் ஒரு மரபாக உள்ளது. 

திருமலைத் திருத்தலத்தில் திருவேங்கடவனின் அருளால் ஒருநாள் இரவில் கதவுகள் தாமாகத் திறக்க, கனகதாசர் உள்ளே சென்று பதங்கள் பாட, திருவேங்கடவன் அவற்றிற்கு அதிகாலைவரை நடனம் ஆடியதாகவும் கூறப்படுவதுண்டு. இலக்கியம், தத்துவம் ஆகியவற்றை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றிருந்த கனகதாசர் தன் சிறுவயதிலேயே நரசிம்ம ஸ்தோத்திரம், ராமத்யான மந்திரம், மோஹன தரங்கிணி போன்ற பல படைப்புகளை இயற்றியுள்ளார்.

தன் அபிமான தெய்வமான ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை, பாடாவிலிருந்து காகிநெல்லிக்கு எடுத்துவந்து, ஸ்ரீநரசிம்மர் ஆலய வளாகத்தில் தனிக் கோயில் அமைத்து அதில் வைத்து வழிபட்டார். பின்னர் காகிநெல்லியிலேயே சமாதி அடைந்தார். ‘கனகதாசரா கட்டிகே’ என்ற பெயரில் இங்கு கனகதாசரின் சமாதி ஆலயம் உள்ளது.

கீர்த்தனைகளை இயற்றிய சான்றோர் தங்கள் கீர்த்தனைகளில் தங்கள் பெயரையோ, தாங்கள்  வழிபடும் தெய்வத்தின் பெயரையோ தன் பிரத்தியேக முத்திரையாக (கன்னடத்தில் இதை  அங்கிதா என்கின்றனர்) அமைப்பது வழக்கம். தன்னை ஆட்கொண்டு பக்தி மார்க்கத்தில் திருப்பிய காகிநெல்லி ஸ்ரீஆதிகேசவப் பெருமாளின் பெயரையே கனகதாசர் தன் முத்திரையாக ஒவ்வொரு பாடலிலும் ‘காகிநெல்லிஆதிகேசவா’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆலய நுழைவாயிலில் ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம் காட்சிதர, கருவறையில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் நான்கு திருக்கரங்களுடன், சிவலிங்க ஆவுடை போன்ற அமைப்பின்மீது நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பின் வலக்கையில் சக்கரம், இடக்கையில் சங்கு என்று மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முன் வலக்கரத்தை அபயஹஸ்தமாகக் கொண்டு இடக்கரத்தில் கீழ் நோக்கிய கதையுடன் காட்சி தரும் பெருமாளின் வலப்புறம் கருடன் அமர்ந்து அஞ்சலித்த நிலையில் காணப்படுகிறார்.

இடப்புறம் ஒரு பெண் சாமரம் வீசுகிறாள். இவை அனைத்தும் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளன. வெளியே கருங்கல்லில் வடிக்கப்பட்ட ஸ்ரீகனகதாசரின் முழு உருவ சிலையையும் காணலாம். ஸ்ரீநரசிம்மர் சந்நதியில் நரசிம்மரும், அருகிலேயே  தாயாரும், முன்புறமாக உற்சவ மூர்த்திகளும் தரிசனம் அருள்கின்றனர். ஸ்ரீவியாசராயரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூன்று அனுமன் விக்கிரகங்களும் உள்ளன.

கர்நாடக மாநிலம், ஹவேரி மாவட்டம், காகிநெல்லி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயமும், ஸ்ரீகனகதாசர் பிருந்தாவனமும் ஏராளமான பக்தர்களையும், கர்நாடக சங்கீத வித்வான்களையும், வித்யார்த்திகளையும் அதிக எண்ணிக்கையில் ஈர்த்து வருகின்றன. மாவட்டத் தலைநகரான ஹவேரி ரயில் நிலையத்திலிருந்து 25 கி.மீ.

தொலைவில் காகிநெல்லி கிராமம் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச திருதியை அன்று வரும் கனகதாசர் ஜெயந்தி நாள் கர்நாடக மாநிலத்தில் அரசு விடுமுறை நாளாகும். 2016ம் ஆண்டு கனகதாசரின் 522வது ஜெயந்தி நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

- விஜயலட்சுமி சுப்பிரமணியம்