விநாயகர் தகவல்கள்



பாக்கு பிரசாதம்

கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு அருகில் உள்ள திருத்தலம் ‘ஹம்பி’. இங்கு அமைந்துள்ள விநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி அன்று பிரத்யேகமாக செந்தூரத்தால் விநாயகர் செய்து, கோயிலில் அருள்பரியும் விநாயகர் முன்வைத்து, பூஜிப்பார்கள். பூஜைகள் முடிந்ததும் பக்தர்களுக்குப் பாக்கு பிரசாதம் அளிப்பார்கள். விநாயக சதுர்த்திக்குப்பின், மூன்று நாட்கள் கழித்து அந்த செந்தூர விநாயகரை அருகில் உள்ள நீர் நிலையில் கரைத்து விடுவது வழக்கம்.

கான்க்ரீட் கணபதி

பெங்களூரு-புனே நெடுஞ்சாலையில் தோப்சாம்பூர் எனும் கிராமத்தில் அனைவரும் வியக்கும்வகையில் மிக உயரமான விநாயகர் சிலை உள்ளது. ‘சீன்மாயா கணதீஷ்’ என்று அழைக்கப்படும் இந்த விநாயகரின் உயரம் 100 அடி, அகலம் 60 அடி, கான்க்ரீட்டினால் ஆன இச்சிலையை நிர்மாணிக்க 80 லட்ச ரூபாய் செலவானதாகச் சொல்லப்படுகிறது. 10,000 சிமென்ட் மூட்டைகளும் 70 டன் இரும்புக்கம்பிகளும் பயன்பட்டிருக்கின்றன.

இளஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சிதரும் இந்தப் பிள்ளையாரை நான்கு கி.மீ. தூரத்திலிருந்தும்கூட தரிசிக்கலாம். ஐந்து தலைநாகம் குடை பிடிக்க, மிக அற்புதமாகக் காட்சி தரும் இந்த விநாயகருக்கு மேற்கூரை கிடையாது. உலகிலேயே மிகப்பெரிய ‘மெகா விநாயகர்’ என்று போற்றப்படுகிறார் இவர்.

திருவையாறு விநாயகர்

திருவையாறு ஐயாரப்பர் கோயிலில், லிங்கத்தின் ஆவுடைமீது அமர்ந்து அருளும் ஆவுடைப் பிள்ளையாரைத் தரிசிக்கலாம். மேலும், இக்கோயிலில் ஓலமிட்ட விநாயகரும் அருள்பாலிக்கிறார். நள்ளிரவில் ஓலமிட்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதை ஊர் மக்களுக்கு உணர்த்திக் காப்பாற்றியதால் இவரை ஓலமிட்ட விநாயகர் என்று போற்றுவர்.

அகத்தியர் வழிபடும் விநாயகர்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் தெற்கு-மேற்கு ரத வீதிகள் சந்திப்பில் கன்னி மூலையில் அமைந்துள்ளது ‘சாந்தி விநாயகர்’ கோயில். இங்கு அருள்புரியும் விநாயகரை அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக கூறுகிறார்கள். மேலும் இங்கு நடைபெறும் மாலைவேளை பூஜையின்போது அகத்தியர், மனித ரூபமாக வந்து வழிபடுவதாக ஐதீகம். அதனால் இங்கு இந்த சாயரட்சை பூஜையின்போது பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

- டி.ஆர்.பரிமளரங்கன்