கோடானுகோடி நன்றி!



தலையங்கம் சிறப்பு. சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லாததனாலே வெறுப்பை நம் தகப்பனார் சம்பாதித்தனர். ஆனாலும் அவர் செய்தது தவறல்ல. முறையாக வெளிப்படுத்தத் தெரியாத தன்மை. நாம் வெளிப்படையாக இருப்போம்.
- திலக் ஸ்ரீதரன், தொரப்பாடி-2.

‘அருள்ஒளி  பொழியும் அபிராமி அந்தாதி’ என்ற தலைப்பில் சக்தி தத்துவம் புதிய தொடர்ஆரம்பமே அசத்தலாக, நுணுக்கமான  இலக்கண இலக்கிய குறிப்புகளுடன் அபிராமிபட்டரின் எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. டாக்டர் ராஜசேகர் சிவாச்சாரியாருக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்.
- பாபுகிருஷ்ணராஜ், கோவை.

‘இஷ்டங்களைப் பூர்த்தி செய்யும் அஷ்டலட்சுமிகள்’ என்ற தலைப்பில் தொகுத்தளிக்கப்பட்டிருந்த அஷ்டலட்சுமிகள் ஒவ்வொருவரின் வழிபாட்டுப் பலன்கள் குறித்த தகவல்களை வரலட்சுமி விரதம் சமயத்தில் படிக்கக் கொடுத்தத் தங்களுக்குக் கோடானுகோடி நன்றிகள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘திவ்ய அருள் வழங்குவான் துவாரகாதீசன்’ கட்டுரை மனதிற்கு மகிழ்வைத் தந்தது, துவாரகைக்கு நேரில் சென்ற அனுபவம் கிட்டியது. ஆடிக்காற்றிலும் மென்மையான தென்றலென, ஆன்மிகம் அருளையும் மனதிற்கு இதமும் தந்தது.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

அட்டைப்படத்தில் யசோதையின் அன்புப் பிடியில் மழலை கிருஷ்ணனைக் கண்டதும் ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை’ என வாய் பாடியது. அருமையான புராண கால துவாரகையை தூரிகையில் கண்டு மகிழ்ந்தோம். வரலட்சுமி நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் எட்டு லட்சுமிகளை தரிசிக்க வைத்தது இரட்டிப்பு மகிழ்ச்சி நல்கிவிட்டீர்கள். பெருங்குளம் ஜோஸ்யருக்கு, பெருங்குணம் - இருபத்தேழு நட்சத்திரக்காரர்களையும் நல்வழிப்படுத்திட சொல்லிய ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் அனைத்துமே இன்னும் ஒன்றரை வருடங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை.
- சிம்மவாஹினி,வியாசர்பாடி.

திவ்ய அருள் வழங்கிடும் துவாரகாதீசனாம் பகவான் கிருஷ்ணன் உருவாக்கிய ‘துவாரகை’க்கு எங்களை அழைத்துச்சென்று அந்த அற்புத திருத்தலத்தை தரிசிக்க வைத்த கட்டுரை, கோகுலாஷ்டமி நன்னாளில் குதூகலத்தை அளித்தது. மகாவிஷ்ணுவின் அவதாரமான லட்சுமி நரசிம்மர், சிவலிங்கத் திருஉருவில் காட்சி தரும் தெலங்கானா மாநில அபூர்வத் திருக்கோயிலின் மகத்துவங்களை விவரித்த கட்டுரையும் வண்ணப்படங்களும் மறக்க முடியாத இறை அனுபவமாகும்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், - ப.த.தங்கவேலு, பண்ருட்டி - 607106.

‘இஷ்டங்களை பூர்த்தி செய்யும் அஷ்டலட்சுமிகள்’ கட்டுரையில் அஷ்டலட்சுமிகள் தோன்றிய விதம், அவர்கள் வடிவம், அவர்களை வழிபடும் பாடல் மற்றும் வழிபடுவதால் ஏற்படும் பலன்களைக் கூறியதோடு அஷ்டலட்சுமிகளின் படங்களையும் வெளியிட்டிருந்தது வரலட்சுமி விரத நாளன்று வாசகர்கள் அனைவரும் அஷ்டலட்சுமிகளையும் வழிபட்டு பயன்பெற செய்ததாக அமைந்தது. மிக்க நன்றி.
- K.சிவகுமார், சீர்காழி, - முனைவர் ராம. கண்ணன், திருநெல்வேலி.