இலையால் அர்ச்சித்து இனிய நலம் பெறுவோம்!



மிகவும் எளிமையான முறையில் நாம் வழிபாட்டை மேற்கொண்டாலும் அதனை அப்படியே ஏற்று நமக்கு நலம் அருளும் நாயகன், விநாயகன். அலட்சியமாக ஒதுக்கப்படும் அறுகம்புல்லானாலும் சரி, கேட்பாரற்றுக் கிடக்கும் எருக்கம்பூவானாலும் சரி, நம் அன்பையும், பக்தியையும்தான் ஆனைமுகன் பார்க்கிறானே தவிர, ஆடம்பரத்தை விரும்புவதில்லை.

அந்தவகையில் சில இலைகளும் விநாயகரின் வழிபாட்டுக்கு உகந்ததாக நாம் பயன்படுத்தி வருகிறோம். அந்த இலை அர்ச்சனைகளையும் அவற்றால் விளையும் பலன்களையும் பார்க்கலாம். குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று இந்த இலைகளால் வேழமுகத்தோனை அர்ச்சனை செய்தல் மிகவும் சிறப்பானது.

* வில்வம் - விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
* அறுகம்புல் - அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். (குறைந்தபட்சம்21 அறுகம்புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது விசேஷம்.)
* முல்லை இலை: அறம் வளரும்.
* கரிசலாங்கண்ணி இலை - இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
* இலந்தை இலை -  கல்வியில் மேன்மை அடையலாம்.
* ஊமத்தை இலை - அறிவில் தெளிவு, பெருந்தன்மை கைவரப்பெறும்.
* வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிட்டும்.
* நாயுருவி - முகப்பொலிவும், அழகும் கூடும்.
* கண்டங்கத்திரி இலை - வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
* ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
* அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி பெறலாம்.
* எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்பு கிட்டும்.
* மருதம் இலை - மகப்பேறு கிட்டும்.
* மருக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கும்.
* விஷ்ணுகிரந்தி இலை -  நுண்ணறிவு கைவரப்பெறும்.
* மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
* தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோதைரியம் பெறலாம்.
* அரசம் இலை - உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
* தாழம் இலை - செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
* அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
* தவனம் இலை - நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்.

இந்தமுறை இலை வழிபாட்டினை விளக்கும் பாடல் இதோ:

மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி  
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி  
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி  
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி  
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே  
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்  
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடு பத்திரமே.       

- ராணி கிருஷ்ணமூர்த்தி