வரம்பு மீறிப் போனான் வரம் பெற்ற ராவணன்!



மகாபாரதம் - 68

காம்யவனத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்த பஞ்சபாண்டவர்கள் ஒன்று கூடினார்கள். தருமர் தனக்கு மனம் பாரமாக இருப்பதாகவும், உற்சாகமின்றி இருப்பதாகவும், எங்கோ, ஏதோ தவறு தோன்றுவதாகவும் சொன்னார். வலப்புறத்திலிருந்து இடப்புறம் நோக்கி ஒரு நரி ஊளையிட்டுக்கொண்டு போயிற்று. அது துர்சகுனம் என்று சொன்னார். காற்று சுழன்று அடித்து தூசு கிளம்பியது.

அதுவும் சரியில்லை என்று அவர்கள் கண்டு கொண்டார்கள். திரௌபதிக்கு ஏதோ கேடு வந்திருக்க வேண்டும். வாருங்கள் விரைவாகப் போகலாம் என்று தருமர் கட்டளையிட, பஞ்சபாண்டவர்கள் பர்ணசாலை நோக்கி தங்கள் குதிரைகளை மிகவேகமாகச் செலுத்தினார்கள். பர்ணசாலையை விட்டு திரௌபதியைக் கடத்திக் கொண்டுபோன குதிரைப்படையை நோக்கி தன்னுடைய அம்புகளை வேகமாகச் செலுத்தினான் அர்ஜுனன்.

குதிரைப்படையை சிதறடித்தான். வீரர்களின் தலைகள் உருண்டன. குதிரைகளுக்கு காயம் பட்டன. மீண்டும் எதிர்த்து வந்தவர்களை பீமன் அடித்து நொறுக்கினான். தருமர் தன் குதிரையில் ஏறி நின்றபடி இடையறாது பாணங்களை செலுத்திக்கொண்டிருந்தார். நகுல, சகாதேவர் கத்தியை எடுத்துக் கொண்டு அரசகுமாரர்களின் தேர்களை உடைத்தார்கள். குதிரைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். சக்கரத்தில் அடித்து வெளியே அனுப்பினார்கள்.

அர்ஜுனன் ஜெயத்ரதன் எங்கே என்று தேடினான். அவனுடைய தேரில் ஒடுங்கிக்கொண்டு திரௌபதி இருப்பதை பார்த்து விட்டு கோபமடைந்தான். அவன் தேரின் கொடியை அறுத்தான். மண்டபத்தை உடைத்தான். அர்ஜுனனின் வேகத்தைக் கண்டு பயந்துபோன ஜெயத்ரதன் தன்னுடைய தேரை வேகமாகச் செலுத்தினான். தேர் காட்டுப் பாதையில் குலுங்கிக் கொண்டு போயிற்று.

ஆனால், வெகுசமீபமாக அர்ஜுனன் அவனை ‘நில் நில்’ என்று கோபமாகச் சொல்லியபடி வந்துகொண்டிருந்தான். தொடர்ந்தால் அர்ஜுனன் கொன்று போடுவான் என்று ஜெயத்ரதனுக்குத் தெரிந்தது. தேரை ஒரு ஓரமாகச் செலுத்தி திரௌபதியை கீழே குதிக்கச் சொல்லி தேரை மறுபடியும் பாதைக்கு ஏற்றி அவன் விரட்டிக் கொண்டு ஓடினான்.

திரௌபதி நடந்து வருவதைக் கண்ட அர்ஜுனன் அவளுக்கு கைகொடுத்து தன் குதிரையில் ஏற்றிக் கொண்டான். குதிரையை திருப்பி தருமரிடம் வந்து, ‘‘நீங்கள் நகுல சகாதேவர் மூவரும் திரௌபதியை அழைத்துக் கொண்டு பர்ணசாலைக்குப் போங்கள். நாங்கள் ஜெயத்ரதனை கொல்லாமல் வரமாட்டோம் என்று சொல்லி விட்டு தருமரிடம் திரௌபதியை ஒப்படைத்தான். தருமர் தன் குதிரையில் திரௌபதியை ஏற்றிக் கொண்டார். குதிரைகள் திரும்பி பர்ணசாலை நோக்கிப் போயின.

பீமனும், அர்ஜுனனும் எல்லா அரசகுமாரர்களையும் அடித்து நசுக்கினார்கள். சிரம் கொய்தார்கள். நெஞ்சுக்குள் அம்பை ஊடுருவச் செய்தார்கள். வாயை தைத்தார்கள். கடுமையாக சித்ரவதை செய்யும் வண்ணம் ஊசி போன்ற பலநூறு அம்புகளை ஒருவனின் உடம்பில் செலுத்தினான் அர்ஜுனன். அவனுடைய வேகம்கண்டு அவர்கள் பயந்தார்கள். ஜெயத்ரதன் எப்படியாவது தப்பித்து ஓடவேண்டும் என்ற நினைப்பிலேயே தன் குதிரையை செலுத்திக் கொண்டிருக்க, அர்ஜுனன் மற்றவர்களை விட்டுவிட்டு ஜெயத்ரதனை பின்தொடர்ந்தான். தேரின் அச்சை நிறுத்தினான். அர்ஜுனனைப் பார்த்து அவன் கைதூக்கி அலற, அவனை அர்ஜுனன் ஏதும் செய்யாது இருந்தான்.

ஆனால், சகலரையும் அடித்து உதைத்த பீமன் அருகே வந்து ஜெயத்ரதனின் தலையை கொத்தாகப் பிடித்தான். ஓங்கி தலையில் அடித்தான். பாறையில் தேய்த்தான். பளீர் பளீர் என்று கன்னங்களில் அறைந்தான். கைகளை முறுக்கினான். காதில் கால் ஊன்றி அழுத்தினான். கனம் தாங்காமல் வலி தாங்காமல் ஜெயத்ரதன் விம்மி அழ, வேண்டாம் ‘இவனை விட்டு விடுங்கள். அதிகம் அழுகிறான். பெண் பிள்ளை போல கெஞ்சுகிறான்’ என்று அர்ஜுனன் சொன்னான். பீமன் அவன் தலைமுடியை பிடித்து நிறுத்தினான்.

‘‘உனக்கு உயிர் பிச்சை தருகிறேன். நான் சொல்வதைச் சொல். பல மன்னர்கள் இருக்கின்ற சபைபோல் பாவித்து, நான் பஞ்சபாண்டவர்களுக்கு அடிமை என்று உரக்கச் சொல்ல வேண்டும். எங்கே சொல் பார்க்கலாம்’’ என்று அதட்ட, அவன் எழுந்து நின்று தன்னைச் சரிசெய்து கொண்டு, உரத்த குரலில் ‘நான் பஞ்சபாண்டவர்களுக்கு அடிமை’ என்று கைகூப்பிச் சொன்னான். பீமன் திருப்தியானான். அவனை கயிற்றால் கட்டி அங்கிருந்த தேரில் தூக்கிப் போட்டான். அந்தத் தேரில் ஏறிக்கொண்டு தருமரை நோக்கி வேகமாக அர்ஜுனனோடு போனான். ஆடைகள் கிழிந்து தலைமுடி கலைந்து அழுத கண்களோடு இருக்கின்ற ஜெயத்ரதனைப் பார்த்து தருமர் பரிதாபப்பட்டார்.

‘‘உனக்கு எதற்கு இந்த வேலை? ஏன் மாற்றான் மனைவியை விரும்புகின்றாய்? அது தவறு என்று தெரிந்து நீ எப்படி காமவசப்பட்டாய்? பெண்கள் பலவீனர்கள் என்று தெரிந்தும் துன்புறுத்துவது எந்த ஆணுக்கு அழகு? அவன் எப்படி ஆண் மகனாவான். உன்னை நான் விடுதலை செய்ய முடியாது. உன்னால் துன்பமுற்ற என் மனைவி திரௌபதிதான் உன் தலையெழுத்தை தீர்மானிக்க வேண்டும். எனவே, அவள் முன்பு மண்டியிடு” என்று சொல்ல, ஜெயத்ரதன் திரௌபதியின் முன்பு மண்டியிட்டான். முகம் பொத்திக் கொண்டு அழுதான்.

‘‘இவன் தலையை சிரைத்து ஐந்து குடுமிகள் வைத்து பஞ்ச பாண்டவர்களுக்கு அடிமை என்று சொல்ல வைத்து விட்டீர்கள். இவனுக்கு இந்த அவமானம் போதும். இது அவன் ஆயுசுக்கும் மறக்காது. எனவே, இவனை விட்டுவிடலாம்,’’ என்று திரௌபதி தெளிவாகச் சொன்னாள். அவர்கள் எல்லோரும் மௌனமாக இருக்க, ஜெயத்ரதன் மெல்ல எழுந்து பின்னடைந்து சகலரையும் வணங்கி, பர்ணசாலையிலிருந்து முதுகு காட்டாமலேயே பின்பக்கமாகவே நடந்து தடுமாறி தரையில் இறங்கி நடந்தபடியே தன் சிந்து தேசம் நோக்கிப் போனான்.

நடந்த மொத்தமும் யோசனை செய்தபோது ஜெயத்ரதனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் கங்கா துவாரத்திற்குப் போய் அங்கு நீரில் மூழ்கி எழுந்து தன் மனதையும் தன்னையும் சுத்தப்படுத்திக் கொண்டு கடுமையான தவத்தில் ஆழ்ந்தான். வெகுகாலம் அசையாது சிவநாமாவையே சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தவத்திற்கு சிவன் மெச்சி அவன் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தேரிலேறி ஐந்து பஞ்ச பாண்டவர்களையும் அழிக்க வேண்டும் என்கிற வரம் கேட்டான். சிவன் சிரித்தார்.

‘‘இல்லை. பஞ்சபாண்டவர்களை உன்னால் அழிக்க முடியாது. உனக்கு யார் என்ன விவரம் என்று தெரியவில்லை. அந்த விஷ்ணுவே இந்த பூவுலகத்தை, பிரபஞ்சத்தை காப்பாற்றுகிறார். ஒரு சமயம் நீரில் மூழ்கியிருந்தபோது, எங்கும் நீராக நிரம்பி இருந்தபோது வராக அவதாரம் எடுத்து தன் கொம்புகளுக்கிடையில் உலகத்தை வைத்து நீரிலிருந்து மீட்டு அதை மண்ணாகவும், நீராகவும் மாற்றினார்.

சரியான பாதையில் சுழல விட்டார். அதேபோல இந்த பூமியை துன்புறுத்திக் கொண்டிருந்த ஹிரண்யகசிபுவை பல வரங்கள் வாங்கியவனை வாசற்படியின் நடுவில் போட்டு அந்தி வேளையில் அவன் வயிற்றைக் கிழித்து குடலை உறுவி அவனைக் கொன்று அவன் மகனுக்கு உயர் பதவி அளித்தார். வேறொரு க்ஷத்ரியனான மகாபலியை அவன் ஒரு உயரம் போவதற்கு உதவி செய்யக் கருதி பிராமணனாக வந்து உன் ஜபதபங்களையெல்லாம் விட நான் பெரியவன் என்று காட்டுவதற்காக மூன்று அடி நிலதானம் கேட்டு முதல் அடியை ஆகாயத்திலும், இரண்டாம் அடியை பூமியிலும், மூன்றாம் அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மகாபலி தன் தலையைக் காட்ட, அவன் தலையில் தன்காலை வைத்து அவனை பூமிக்குள் அழுத்தினார்.

அப்போது பலராமராக, கிருஷ்ணராக தோன்றியிருக்கிறார். அந்த கிருஷ்ணரே பஞ்சபாண்டவர்கள் பக்கம் இருக்கிறார். அர்ஜுனனுக்கு சினேகமாக இருக்கிறார். பாண்டவர்கள் மூலம் க்ஷத்ரிய உலகத்தை வரைமுறைப்படுத்த மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறார். எனவே, ஜெயத்ரதா, இதேபோல நூறு மடங்கு தவம் செய்தாலும் உன்னால் அர்ஜுனனையோ, பீமனையோ, தருமனையோ கொல்ல முடியாது. எனினும் உன் தவத்தை மெச்சி அர்ஜுனன் தவிர மற்ற நான்கு பேரை ஒரே ஒருநாள் யுத்தத்தில் தடுத்து நிறுத்துகின்ற வலிமையை உனக்குத் தருகிறேன். ஒருநாள் மட்டும் உன் கை மேலோங்கி நிற்கும். அர்ஜுனன் அப்பொழுதும் உன்னைவிட உயரமாகத்தான் இருப்பான்’’ என்று சொன்னார்.

சிவனாலும் கைவிடப்பட்ட நிலையை புரிந்துகொண்டு தன்னை நொந்துகொண்டு ஜெயத்ரதன் தன் தேசத்திற்குப் போனான். காம்யவனத்தில் இன்னும் சிறிது காலம் வாழ வேண்டுமே, நல்லபடி நாட்கள் நகர வேண்டுமே என்ற கவலையில் பஞ்சபாண்டவர்கள் திரௌபதியை பாதுகாத்து வாழ்ந்து வந்தார்கள். திரௌபதி கடத்தப்பட்ட செய்தி கேட்டு மார்க்கண்டேய முனிவர் பஞ்சபாண்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக, மீட்டு வந்த அவர்கள் வீரத்தை பாராட்டுவதற்காக காம்யவனத்திற்கு வந்து சேர்ந்தார்.

‘‘இப்படிப்பட்ட இம்சை பஞ்சபாண்டவர்களான எங்களுக்கு ஏன் நடக்கிறது? திரௌபதி சாதாரணமானவளா, அவள் ஒரு வேதிகையிலிருந்து பிறந்த கன்னிகையல்லவா? துருபதன் என்கிற வலிமைமிக்க அரசனுக்கு பிறந்தவள் அல்லவா? வலிமைமிக்க சகோதரனை உடையவள் அல்லவா? பஞ்சபாண்டவர்களாகிய எங்களுக்கு மனைவியாக வாய்த்தவள் அல்லவா? இத்தனை இருந்தும் இவளைப்போய் தொந்தரவு செய்கிறார்களே. எத்தனை பதறியிருப்பாள்.

எத்தனை அழுதிருப்பாள். எத்தனை கூக்குரலிட்டிருப்பாள். இத்தனை அவமானம் இவளுக்கு ஏன். எங்களைவிட கஷ்டப்பட்டவர்கள் இந்த உலகத்தில் யாராவது இருக்கிறார்களா. இத்தனை வலிவு இருந்தும் மோசமான ஜனங்களால் மறுபடி மறுபடி பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் உண்டா. எங்கள் கண்முன்தான் பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டாள்’’ என்று மறுகினார் யுதிஷ்டிரர்.

‘‘அவளைக் கவர்ந்துபோன சில மணித்துளிகளில் நீ அவளை மீட்டு கொண்டு வந்துவிட்டாய். யுதிஷ்ட்ரா, ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் மனைவியான சீதையை ராவணன் என்னும் அரக்கன் கள்ளத்தனமாக கவர்ந்துபோய் பல மாதங்கள் தன் நந்தவனத்தில் சிறை வைக்க, அவனை ஆஞ்சனேயர் துணையுடன், வானரப் படையுடன், கடலில் பாலம் கட்டி கடந்துபோய் இலங்கையில் இறங்கி, ராவணனை போருக்கு அழைத்து அவனை வெற்றி கொண்டு சீதையை மீட்டு வந்து, சீதையின் கற்பை அக்னி மூலம் மறுபடியும் பிரகடனப்படுத்தி அவளை அயோத்தி நகருக்கு அழைத்துவந்து பட்டாபிஷேகம் செய்து கொண்டார். சீதாதேவி அலறியபடி தேடிய தேடல், கணவனை காண முடியுமோ முடியாதோ என்று குமுறிக் குமுறி சீதாதேவி அழுத அழுகை, இந்த உலகத்தில் எவருக்கும் வரலாகாது. எனவே, உன் துக்கத்தை மட்டும் பெரிது என்று எண்ணி புலம்பாதே” என்று ஆறுதல்படுத்தினார்.

‘‘ ராமச்சந்திரமூர்த்தியின் கதை என்ன?” ‘‘இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த அஜன் என்ற அரசன் அயோத்தியை ஆண்டு வந்தான். அவனுக்கு தசரதன் என்ற ஒரு புதல்வன் இருந்தான். வெகுநாட்களாக தசரதனுக்கு மக்கட்பேறு இல்லாது போகவே மிகப்பெரிய யாகம் ஒன்று செய்து அந்த யாகத்தின் மூலம் தசரதருக்கு நான்கு குமாரர்கள் பிறந்தார்கள் - தசரதருடைய மூன்று மனைவிக்கு நான்கு குமாரர்களாக, கோசலைக்கு ராமரும், கைகேயிக்கு பரதனும், சுமித்ரைக்கு லட்சுமணனும், சத்ருக்னனும் மகன்களாக பிறந்தார்கள்.

இவர்களில் ராமரும், லட்சுமணனும் இணைபிரியாது இருக்க, பரதனும், சத்ருக்னனும் மிகுந்த பாசத்தோடு இருந்தார்கள். கூனியாய் பிறந்த மந்தரையின் துர்போதனையினால் கைகேயி தசரதரிடம் பரதனே அரசாள வேண்டும் என்றும், ஸ்ரீராமர் காட்டுக்குப் போகவேண்டும் என்றும் வரம் கேட்டாள். நன்கு வளர்ந்த அந்தக் குழந்தைகள் தனக்கு உதவியாக இருப்பார்கள் என்ற தசரதருடைய ஆசையில் மண் விழுந்தது.

தசரதர் மிகுந்த துக்கத்தோடு ஸ்ரீராமரை வனத்திற்கு அனுப்ப முடிவு செய்தார். ராமருக்குத் துணையாக லட்சுமணனும், ராமனோடு நிச்சயம் வருவேன் என்று பிடிவாதமாக சீதையும் சேர்ந்துகொள்ள, மூவரும் வனம் நோக்கிப் பயணப்பட்டார்கள். அந்த நேரம் பரதன், சத்ருக்னன் இருவரும் தங்களுடைய மாமன் வீட்டிற்கு போயிருந்தார்கள்.

தமையனார் வனம் போனதைப் கேள்விப்பட்ட பரதன், ராமரைப் பின் தொடர்ந்து வந்து தந்தை இறந்த செய்தியைச் சொல்லி, வந்து அரசாளுமாறு வேண்டிக் கொள்ள, தந்தை இருந்தபோது உண்டான கட்டளை இறந்தபோது இல்லை என்று ஆகுமா? எனவே, அவர் இட்ட கட்டளையை முடித்து விட்டு வருகிறேன். கவலை கொள்ளாதே என்று சொல்ல, ராமருடைய பாதுகையை வாங்கிக்கொண்டுபோய் தான் அரசாங்கம் செய்யாமல் அந்த பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து அதை ராமராஜ்யமாகவே பரதன் ஆண்டுவந்தான்.

தெற்குப் பக்கம் வனங்களை நோக்கி ராமரும், லட்சுமணரும் சீதையோடு சென்றனர். அரக்கர்களுடைய தொல்லை முனிவர்களையும், ரிஷிகளையும், அந்தணர்களையும் அதிகம் கொடுமைப்படுத்துகிறது என்பதை உணர்ந்து அவர்களை அழிப்பதற்காக இன்னும் தென்திசை நோக்கி நடக்கத் துவங்கினர். நதியைக் கடக்கும்போது உதவி செய்த படகோட்டி குகனை நட்பாக்கிக்கொண்டு அயோத்தியின் எல்லையில் அவரை காவல் இருக்கும்படி பணித்தார் ராமர்.

இப்பொழுது நான் ராவணனுடைய கதையைச் சொல்கிறேன், கேள். ராமர் வனவாசம் போகும்போது ராவணன் இலங்கைக்கு அரசனாகி விட்டான். ஆனால், இலங்கையினுடைய அரசன் வைஷ்ணவன் என்கிற குபேரன். அவன் பிரம்மாவின் மகனான புலஸ்தியருடைய மகன். தந்தையைக் காட்டிலும் தன் பிதாமகனான தாத்தாவை மிகவும் நேசித்த வைஷ்ரவன் அவன். அவருக்கு சிஸ்ருஷை செய்தான்.

அதனால் தந்தை கோபமடைந்தார். விஸ்ரவா என்ற இன்னொரு மகனை உற்பத்தி செய்தார். விஸ்ரவா, வைஷ்ரவன் மீது கோபமுள்ளவனாக இருந்தான். புஷ்போத்கடை, ராகை, மாலினி என்ற அந்த மூன்று கன்னிகைகளும் புலஸ்தியருக்கு உதவியாக இருந்து சந்தோஷமளித்தார்கள். அவர்களுடைய உபசரிப்பில் மனம் குளிர்ந்து அவர்கள் விரும்பியபடியே மக்கள் பேற்றை புலஸ்தியர் அளித்தார்.

புஷ்போத்கடைக்கு ராவணன், கும்பகர்ணன் என்ற இரண்டு மகன்களும், ராதாவிற்கு கரண், சூர்பணகை என்ற மகனும், மகளும், மாலினிக்கு விபீஷ்ணன் என்ற மகனும் பிறந்தார்கள். அதில் விபீஷ்ணன் அழகுள்ளவனாகவும், அமைதியுள்ளவனாகவும் இருந்தான். மற்றவர்கள் அரக்கர் குணத்தை அதிகம் வளர்த்துக்கொண்டார்கள். தங்களுடைய சகோதரனான குபேரனை பார்க்கப் போனார்கள்.

பிரம்மா குபேரனுக்கு இலங்கையை பரிசளித்து அதில் அற்புதமான கோட்டைகளையும், கொத்தளங்களையும் நிறுவி திரண்ட செல்வத்தைக் கொடுத்து, உலகம் முழுவதும் சுற்றும் வண்ணம் ஒரு புஷ்பக விமானத்தையும் கொடுத்து அவனுக்கு ராஜராஜன் என்ற பட்டத்தையும் கொடுத்து குபேரன் என்று அவனை அழைக்கும்படியாகவும் கட்டளையிட்டான்.

வைஷ்ரவன் என்கிற குபேரன் மிக அற்புதமாக இலங்கையை ஆண்டுவர, அவன் ஆட்சியைப் பார்த்து ராவணன் பொறாமைப்பட்டான். இமயமலைக்குச் சென்று கடும் தவம் செய்தான். மகாதேவனை இடையறாது ஸ்மரணை செய்து அவர் எதிரேவர வேண்டினான். மகாதேவன் தோன்றாதது குறித்து, தன்னுடைய சிரசை கிள்ளி அக்னியில் எரிந்து தன் தவத்தை உக்கரமாக்கினான். மகாதேவன் மனம் இறங்கி அவன் முன்பு தோன்றினார். உன்னால் சிதைக்கப்பட்ட உன் தலை மறுபடியும் உன்னிடம் வந்து சேரும்.

எவர் உன் தலையை சிதைத்தாலும் மறுபடியும் அந்தத் தலை முளைக்கும். உன் உடம்பில் எந்தக் குரூரமும் ஏற்படாது. நினைத்தபடி உருவம் தரிக்க முடியும். உன்னால் பகைவர்களை வெல்ல முடியும் என்று ஆசிர்வதித்தார். மகாதேவனே, கந்தர்வ, தேவ, அசுர, யட்ச, ராட்ஸச, சர்ப்ப, கின்னர, மற்ற பூதங்களால் எனக்கு தோல்வியே உண்டாகக்கூடாது என்று ராவணன் கைகூப்பி வேண்ட, அவ்விதமே உனக்கு எவரிடமும் தோல்வி உண்டாகாது. மனிதரைத் தவிர மற்ற எவரிடமும் நீ பயமில்லாமல் இருக்கலாம். மனிதரிடம் பயந்துதான் இருக்க வேண்டும் என்று சொல்ல, ராவணன் அலட்சியமாக அந்த வரத்தை ஏற்றுக் கொண்டான்.

கும்பகர்ணன் தாமஸ குணமுடையவன். நன்கு தூங்குகின்ற வரம் கேட்க, அவ்விதமே வரம் தரப்பட்டது. விபீஷணன் இமயத்திற்கு அருகிலிருந்து தவம் செய்தான். அப்போது அவனிடமும் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, மிகப் பெரிய ஆபத்து வந்தாலும் என் மனதில் பாவக்கருத்து தோன்றக் கூடாது. கற்றுக் கொள்ளாமலேயே பிரம்மாஸ்திர பிரயோகமும், தர்ம நெறிகளும் எனக்குள் வரவேண்டும் என்று வேண்டினான். அவனுக்கு அவ்விதம் ஆசிர்வாதம் தரப்பட்டது.

ராவணன் தன்னை இலங்கை மன்னனாக மாற்றிக் கொண்டான். மிகச்சிறந்த மன்னனாக வாழ்ந்தான். அவன் குடிமக்கள் எந்தக் குறையும் இல்லாமல் அங்கு வசித்தார்கள். அவனுடைய பராக்கிரமத்தால் நவகோள்களை தன்னுடைய படியாக்கினான். எப்பொழுதும் சந்திரஒளி வீசும்படியாகவும், தென்றல் காற்று சுழல்படியாகவும், அவ்வப்போது மழை பெய்யும்படியாகவும், அமைதியாக சூரியன் மிளிரும்படியாகவும், நட்சத்திரங்கள் அருகே வந்து பிரகாசிக்குமாறும் கட்டளையிட்டான். இயற்கையை தன் பக்கம் வளைத்தான். இது தவறு என்று சொன்னபோதும் அவன் கேட்கவில்லை.

இயல்பான இயற்கையே இல்லாதபோது வருணனும், சூரியனும், சந்திரனும் அடிமைப்பட்டு கிடந்தபோது அவன் சாதாரண ரிஷிகளையும், முனிவர்களையும், அந்தணர்களையும் துன்புறுத்தத் துவங்கினான். அதில் சந்தோஷம் கண்டான். தேவர்கள் ஒன்றுகூடி நாராயணனை வேண்டினார்கள். நாராயணன் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க ராமராகப் பிறந்தார். அவருடைய பஞ்சணை பாம்பானது லட்சுமணனாக அவதரித்தது.

ராவணனின் வதத்திற்கென்றே அவர் பிறந்திருப்பதால் அவரை தென்திசை நோக்கிச் செலுத்த துந்துபி என்ற கந்தர்வி ஸ்ரீமந் நாராயணன் ஆணைப்படி கூனி என்கிற வேலைக்காரியாக கோபமுடையவளாகப் பிறந்தாள். சரியான நேரத்தில் கைகேயியை உசுப்பி ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியை மனைவியோடும், தம்பியோடும் கானகத்திற்குப் போக ஏற்பாடு செய்தாள். தேவர்களின் பெரும்பகுதியினர் குரங்குகளாக தென்திசையில் ராம காரியத்திற்காக பிறந்தார்கள். அவர்கள் மிகுந்த பலமுடையதாக தங்கள் சாம்ராஜ்யத்தை கிஷ்கிந்தையில் நிறுவினார்கள்.

முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து தங்கினார்கள். அந்த இடத்தில் சூர்பணகை வந்து சீதையை பயமுறுத்தியதால் லட்சுமணன் சூர்பணகையின் மூக்கையும், மேலுதட்டையும் அறுத்து எறிந்து விட்டான். மிகுந்த கோரமான முகத்தோடு தன்னுடைய சகோதரர்களான கரண், விதூஷணர்களிடம் இதைச் சொல்ல, சூர்பணகைக்கு தீங்கிழைத்த ராமச்சந்திரமூர்த்தியை கொல்வதற்காக கரதூஷணர்கள் பெரிய அரக்கர் பட்டாளத்தோடு வந்தார்கள். சகலரும் ராமரால் கொல்லப்பட்டார்கள். சூர்பணகை தப்பி வான் வழியே பறந்து இலங்கையில் இறங்கினாள்.

ராவணன் அரசவையில் அலறி அவன் காலடியில் விழுந்தாள். மூக்கும், உதடும் அறுபட்டு ரத்தம் உறைந்த நிலையில் இருக்கின்ற சூர்பணகையைக் கண்டு ராவணன் கோபப்பட்டான். யார் இதைச் செய்தது என்றான். ராம, லட்சுமணரின் பெயரைச் சொல்லி, ராமரைக் கொன்றே ஆகவேண்டும் என்ற காரணத்தினால் சீதையினுடைய அழகையும், சீதை உனக்கே உரியவள் அவளை உனக்காகக் கொண்டு வரலாம் என்று போன நேரத்தில் இப்படி என்னை அங்கஹீனம் செய்து விட்டார்கள் என்று மாற்றிச் சொன்னாள்.

சீதையின் அழகை விவரித்தாள். உடனே புஷ்பக விமானம் ஏறி விதியின் வசத்தால் இழுபட்டவன்போல ராவணன் கோதாவரி கரைக்குப் போனான். அங்கு தன் மாமன் மாரீசன் இடத்திற்கு வந்து இறங்கினான். மாரீசன் புத்திசாலி. ஏற்கனவே ராமனால் அடிபட்டு இங்கு வந்து ஒளிந்து கொண்டிருப்பவன். அவனிடம் சூர்பணகை பற்றியும், கர, தூஷணர்கள் மரணம் பற்றியும் சொல்ல, நீ ராமனை பகைத்துக் கொள்ளாதே. அவர் வில் உறுதியானது.

அவர் சரங்கள் பிழை செய்யாதவை. அவரை எதிர்த்து ஒருவரும் இங்கு நிற்க முடியாது என்று சமாதானம் சொல்ல, வெட்டிச் சாய்த்து விடுவேன் என்று கோபத்தோடு ராவணன் எழுந்தான். இவன் கையால் சாவதை விட ஸ்ரீராமர் கையால் மரணமடையலாம் என்று மாரீசன் தன்னை அழகிய மானாக, பொன்னிற மேனி உடையவனாக மாற்றிக் கொண்டான்.

பர்ணசாலைக்கு அருகேபோய் சீதை பார்க்கும்படி முன்னும் பின்னும் அலைந்தான். சீதை அந்த மான் வேண்டும் என்று ஆசையோடு ராமனைக் கேட்டாள். இது அரக்கர்கள் வசிக்கும் காடு. இம்மாதிரியான மிருகங்களெல்லாம் அரக்கர்கள் எடுத்த வடிவங்களாக இருக்கும். இயற்கைக்கு விரோதமாக உடம்பெல்லாம் பொன்னிறமாக மான் இருப்பதில்லையே என்று ராமர் பதில் சொல்ல, நிச்சயம் அந்த மானோடு நான் விளையாட வேண்டும். இதுகூட எனக்குச் செய்யக் கூடாதா என்று ஆதங்கப்பட, வேறு வழியின்றி லட்சுமணனை காவலுக்கு வைத்துவிட்டு ராமர் மானைத் தொடர்ந்தார். மான் போக்குகாட்டி ஓடியது.

தழைகளை தின்பதற்காக அருகே வரும். வினாடி நேரத்தில் தொலைதூரம் ஓடிப் போய்விடும். அது அருகே வருகின்ற அழகும், தொலைதூரம் ஓடிப் போகின்ற வேகமும் பார்த்து ராமருக்கு சந்தேகம் வந்தது. திடீர் என்று மான் காணாமல் போயிற்று. மான் போன தடங்களே இல்லை. ஆனால், தொலைதூரத்தில் மான் நின்று கொண்டிருந்தது. எப்படி போயிருக்க முடியும். இரண்டு பக்கங்களும் அடர்த்தியான புதர்கள். இதுதான் பாதை. ஆனால், பாதையில் மானின் குளம்புகளே இல்லை.

புதர்கள் எதுவும் சேதமடையவில்லை. அப்படியானால் இது உண்மையான மான் அல்ல. அவர் மறுபடியும் அருகே போக, மான் அமைதியாக இருந்துவிட்டு அவர் நெருங்கியதும் மான் வேகமாக ஓடத் துவங்கியது. ராமர் வில்லை வளைத்து நாண் ஏற்றி மானைக் குறி பார்த்து எய்தார். மான் இப்பொழுது அந்த சரத்தை தாங்குவதற்காக தயாராய் நின்றது. உடம்பில் வாங்கிக் கொண்டது.

‘ஹே லட்சுமணா, ஹே சீதே’ என்று தீனமாக குரல் எழுப்பியது. மாரீசன் ராவணன் சொல்படி இந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு ராமருடைய அம்பை உள்வாங்கி மரணமடைந்தான். ராமர் இந்த வார்த்தை கேட்டு திடுக்கிட்டார். மான் உருக்குலைந்து ராட்சஸனாக மல்லாந்து கிடந்தது. அப்படியானால் இது அரக்கர்களுடைய சூழ்ச்சிதான். இவ்வளவு தூரம் தன்னை இழுத்து வந்ததற்கு ஏதோ ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும். என்ன அது? எதுவாக இருந்தாலும் லட்சுமணன் அங்கு இருக்கிறான் கவலை இல்லை என்று வேகமாக பர்ணசாலை நோக்கி நடந்தார்.

தெள்ளத் தெளிவாக சீதைக்கும், லட்சுமணனுக்கும் கேட்டது. லட்சுமணன் எழுந்து நின்று சப்தம் வந்த திசையையே உற்று நோக்கினான் சீதை திடுக்கிட்டாள். ‘உன் தமையனுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கிறது. அதனால்தான் இப்படி தீனமாக குரல் கொடுக்கிறார். தயவுசெய்து ஓடு. அவர் எங்கிருக்கிறார் என்று பார். அவருக்கு உதவி செய்,’ என்று உத்தரவிட்டாள். லட்சுமணன் நகர மறுத்தான். ‘இல்லை இது அண்ணனுடைய குரல் இல்லை.

மேலும், அண்ணன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இவ்வளவு தீனமாக குரல் எழுப்பவே மாட்டார். அண்ணனை ஜெயிப்பதற்கு இந்த உலகத்தில் யாரும் பிறக்கவில்லை. எனவே, அவரைப்பற்றி கவலைப்படாதீர்கள். இரண்டு நாழிகையில் வெகு நிச்சயம் அவர் இங்கு இருப்பார்,’ என்று ஆறுதல் சொன்னான். ஆனால், சீதை கேட்கவில்லை. இப்பொழுது போகிறாயா இல்லையா என்று கேட்டாள். லட்சுமணன் அந்த வார்த்தையை காதில் வாங்காதுபோல் இருந்தான். ‘மூடனே, உன்னுடைய கபட எண்ணம் புரிகிறது. அப்படிப்பட்ட எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது,’ என்று கடுமையாகப் பேசினாள்.

(தொடரும்)

பாலகுமாரன்