மனதுக்கினியவர் மணக்குள விநாயகர்



-புதுச்சேரி

மஞ்சளிலே செய்தாலும் மண்ணிலே செய்தாலும் அருள்பவர் விநாயகப் பெருமான், ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும், அழகுடன் அமர்ந்திருப்பவர். கடற்கரை ஓரத்திலும் அவர் எழுந்தருளியுள்ளார். அது புதுச்சேரி கடற்கரை. அந்தப் பிள்ளையார் - மணக்குள விநாயகர். தற்போது இந்திய யூனியன் பிரதேசமாக உள்ள புதுவை, அந்நாளில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கடற்கரைப் பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகமாக வசித்து வந்தனர்.

இந்தப் பகுதியில் ஒவ்வொரு கட்டிடமும் வெள்ளை வெளேர் என்று பெயின்ட் அடிக்கப்பட்டு பொலிவுடன் திகழும். அதனால் இந்தப் பகுதி புதுவையின் வெள்ளை நகரம் என்றும், பிறர் வசித்த பிறபகுதிகள், கறுப்பு நகரம் என்றும் அழைக்கப்பட்டன. ஆனால், கடற்கரை அருகில் மணக்குள விநாயகர் கோயில் இருந்ததால், கறுப்பு நகர மக்கள், வெள்ளை நகரப் பகுதிக்கு வந்துதான் அவரை வணங்க வேண்டியிருந்தது; அவ்வாறே வணங்கி வழிபடவும் செய்தார்கள்.

இதனால் வெறுப்புற்ற பிரெஞ்சுக்காரர்கள் ஒரு திட்டம் தீட்டினார்கள். அந்த விநாயகரையே கோயிலிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அது. அதன்படி, மிக ரகசியமாக அவர்கள் இரவோடு இரவாக, கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் போட்டுவிட்டார்கள். ஆனால், அடுத்தநாள் கோயிலுக்கு வழக்கம்போல பக்தர்கள் வந்து போய்க் கொண்டுதான் இருந்தார்கள்!

ஆமாம், விநாயகர் விக்ரகம், கோயிலுக்குள் அதே இடத்தில் மீண்டும் தரிசனமளித்தது! திகைத்த பிரெஞ்சு அதிகாரிகள் மறுபடியும் அதே முயற்சியை மேற்கொண்டார்கள். சிலை கடலில் வீசி எறியப்பட்டது. மறுநாள் பிரெஞ்சுக்காரர்களைப் பொறுத்தவரை பொழுது விபரீதமாக விடிந்தது.

விநாயகர் கோயிலில் வழக்கமான பக்தர்கள் கூட்டம், அர்ச்சனை, ஆராதனை, வழிபாடு... அதிகாரிகள் அந்த அற்புதத்தைக் கண்டு உறைந்துதான் போனார்கள். விநாயகர் அதே இடத்தில் கொலுவிருந்து பக்தர்களுக்கு வழக்கமான தரிசனம் தந்துகொண்டிருந்தார். விநாயகரைத் தூக்கிப் போய் கடலுக்குள் வீசியெறிந்தது உண்மை. ஆனால், அந்தச் சிலை மீண்டு வந்தது எப்படி? அதிகாரிகள் மிரண்டார்கள்; மருண்டார்கள்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதே அடுத்தடுத்த நாட்களில் விநாயகர், நூற்றுக்கணக்கில் அதிகமாக பக்தர்களை ஈர்க்க ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமல்ல, உறுதியான, நிரந்தரமான ஆலயம் ஒன்றும் அங்கே அவருக்காக உருவானது. தங்கள் திட்டம் செயலிழந்தது கண்டு, பிரெஞ்சுக்காரர்கள் ஏமாற்றமடைந்தாலும், அந்த தெய்வீக சக்தியிடம் மீண்டும் தாம் விளையாடக்கூடாது என்று தெளிந்தார்கள். அதுமட்டுமல்ல, பிரெஞ்சுக்காரர்கள் சிலரே காலப்போக்கில் மணக்குள விநாயகரை வழிபடத் தொடங்கினார்கள்.

அவர்களுக்குள் இப்படி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்திய இந்த விநாயகர், இதனால் ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் பெயர் பெற்றார். புதுவையில் அனைத்து மதத்தினரும் இன்று வணங்கிவரும் மணக்குளவிநாயகர் கோயில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அப்போது அங்கு இருந்த திருக்குளத்தில் வற்றாத சுவையான நீர் நிரம்பியிருந்தது.

மணற்பாங்கான பகுதியாதலால் இது மணற்குளம் என்று அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மணக்குளம் என்றாகி இங்கு அருளும் பிள்ளையார், மணக்குள விநாயகர் என்றானார். இந்த ஆலயத்தின் விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இவர் மீது பாரதியாருக்கு தனி பிரியம் உண்டு; பாடல்கள் புனைந்துள்ளார்.

- சுபஹேமா