பண்டை வினை அறுப்பார் பசுபதீசுவரர்



- பந்தநல்லூர்

கோயில் நகரமாம் கும்பகோணத்தைச் சுற்றிலும் எண்ணற்ற கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் புராணச் சிறப்பு வாய்ந்தவை பல. திருப்பந்தனை நல்லூர் எனும் பந்தநல்லூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயில், அத்தகைய பல சிறப்புகள் கொண்ட பெருமைமிகு தலமாகும். கயிலாயத்தில் பார்வதிக்கு பந்து விளையாடும் ஆசை ஏற்பட்டது. மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சிவன் நான்கு வேதங்களையும் பந்துகளாக்கிப் பார்வதியிடம் கொடுத்தார்.

பொழுது சாயும் நேரம் வந்ததும்கூட விளையாட்டை விடவில்லை தேவி. அன்னையின் விளையாட்டு ஆர்வத்தைக் குறைக்க விரும்பாத பகலவன் பொழுது சாய்ந்தும், தான் சாயாமல் இருந்தான். மாலை மயங்கவேண்டும், இருள் சூழவேண்டும். ஆனால், அவை நடைபெறாததால் முனிவர்களால் தங்களுடைய மாலைக் கடன்களை நிறைவேற்ற இயலவில்லை.

இதனால் அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். அதைகேட்டு பார்வதியை நோக்கி வந்தார் சிவன். ஆனால், அவர் வந்ததைக்கூட கவனிக்காமல் பந்து விளையாடிய பார்வதியைப் பார்த்து கோபத்துடன், ‘பசுவாகப் போவாய்’ என்று சபித்தார் ஈசன். உடனே தன் தவறுணர்ந்து, தன்னைத் தடுத்தாட்கொள்ளுமாறு வேண்டினாள் தேவி. சிவன், அவள் விளையாடிய ஒரு பந்தை பூலோகத்தில் எறிய, அப்பந்தானது சரக்கொன்றை நிறைந்த வனத்தில் சென்று வீழ்ந்தது.

‘அக்கொன்றை மரத்தின் கீழ் இருக்கும் எம்மை உமது பாலைச் சொரிந்து வழிப்பட்டால் சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று அருளினார் அம்பிகை பசு வடிவம் பெற்றாள். அவளுடன் விஷ்ணுவும் இடையராக வடிவம் கொண்டு பந்து அணைந்த தலத்திற்கு வந்தனர். பசுவை பகற்பொழுதில் மேயவிட்டு மாலையில் கண்வ மகரிஷி ஆஸ்ரமத்தில் தங்கவைத்து அதன் பாலைக் கொடுத்து வந்தார், இடையர்.

ஒருநாள் மேய்ச்சல் சென்ற பசு சரக்கொன்றை வனத்தின் கீழேயுள்ள புற்றில் லிங்கம் இருப்பதை அறிந்து அதன்மேல் பால் முழுவதையும் சொரிந்தது. ஆகவே அன்று ஆஸ்ரமத்திற்குப் பால் அளிக்கமுடியாமல் போய்விட்டது. இப்படியாகப் பல நாட்கள் நடக்கவே, என்ன நடக்கிறது என்று அறிய பசுவின் பின்னால் இடையரான மஹாவிஷ்ணு சென்றார்.

புற்றின்மீது பசு பாலைச் சொரிவதைக் கண்டதும் அப்பசுவை அடிக்க கோலை ஓங்கினார். உடனே, அப்பசு துள்ளிக் குதித்து புற்றில் கால் வைக்க, பசுவாகிய அன்னை சாப விமோசனம் பெற்றாள். (இன்றும் மூலவராகிய சிவலிங்கம்மீது பசுவின் குளம்பு பட்ட சுவடு இருப்பதைக் காணலாம்.) சாப நிவர்த்திபெற்ற அன்னை, தன்னை திருமணம் செய்ய வேண்டி சிவனிடம் முறையிட்டாள்.

சிவன், ‘வடக்கு நோக்கி தவமிருந்து என்னை வந்தடைவாய்’ என்றார். அவ்வாறே சிவனை அடைந்து திருமணம் செய்து கொண்டாள் பார்வதி. சிவன் மூலஸ்தானத்தில் கல்யாணசுந்தரராக அருள்பாலிக்கிறார். பந்து வந்து அணைந்த காரணத்தினால் இத்தலத்திற்குப் பந்தணைநல்லூர் எனும் பெயர் உண்டாயிற்று.    
                                                                                             
ஒருசமயம் காம்பீலி என்ற மன்னன், தன் மகனுக்குக் கண்பார்வை அருளவேண்டி இத்தலத்திற்கு வந்து வழிபட்டான். இத்தல இறைவன் அருளால் இழந்த பார்வையை மீண்டும் பெற்றான். இதனால் மன்னன் தன் மகனுக்குப் பசுபதி எனும் பெயர் சூட்டி, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு சொல்கிறது. இன்றும் திருக்கோயில் முன்பு உள்ள திருக்குளம் காம்போச மன்னன் துறை என்று வழங்கப்படுகிறது.             
                                                                    
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இத்தலம் கும்பகோணத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆன்மாக்களின் பண்டை வினைகளை அறுப்பவர் பசுபதீஸ்வரர் என்று நாவுக்கரசர் தமது தேவாரத்துள் திறம்படச் சொல்லியுள்ளார். ராஜகோபுரம் வழியே கோயிலுக்குள்ளே சென்றால் முதலில் அம்பாள் காம்பன தோளியம்மை வீற்றிருக்கிறாள்.

அடுத்து உற்சவ மூர்த்தி கல்யாணசுந்தரேஸ்வரும், மூலவருமாக அருகருகே அருள்பாலிக்கின்றனர். உட்பிராகாரம், வெளிப்பிராகாரம் என கம்பீரத் தோற்றத்துடன் கூடிய பெரிய திருக்கோயிலாகத் திகழ்கின்றது. மார்கழி மாதம் திருவாதிரைப் பெருவிழா விமர்சையாக நடைபெறுகிறது. அன்றைய தினம் நடராஜர் அபிஷேகம் நடைபெற்று சுவாமி புறப்பாடு செய்யப்படுகிறது.          
                                                                                                            

- எஸ்.ஜெயசெல்வன்