உண்மையான வாசகர் இதழ்!



‘முதியோர் என்ற வரம்! கட்டுரை அருமை. முதியோர் இல்லங்கள் பெருகிவரும் இந்த காலக்கட்டத்தில் இக்கட்டுரை வெளிவந்தது பாராட்டத்தக்கது. முதியோர், இல்லத்தில் இருக்கவேண்டும்; முதியோர்-இல்லத்தில் இருக்கக்கூடாது.” என்ற வாரியாரின் வாசகம் நினைவுகூறத்தக்கது. (இ-மெயில்)
-எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி, பர்கூர்.

ஆன்மிகத்தின் அரிச்சுவடியை தங்கள் புத்தகத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்து அதன்படி ஆன்மிகப் பணிகளை தொடர்வதில் முழுமையான திருப்தி கொள்கிறோம். அட்டைப்படம் முதல் தலையங்கத்தில் தொடங்கி பக்கத்திற்குப் பக்கம் படித்து ஆன்மிகப் பரவசமடைந்து மகிழ்கிறோம்.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

இருபத்தேழு நட்சத்திரக்காரர்களுக்கும், தனித் தனியாக வளமான பலன்கள் அளித்திடும் சிவபஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரத்தைப் பிரசுரித்து அதற்கு எளிமையான தமிழ் விளக்கமும் தந்த தங்கள் இதழுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை.
- முனைவர்.இராம. கண்ணன், திருநெல்வேலி.

சிவராத்திரி மகத்துவம் குறித்த விளக்கம் மிக மிக அருமை. விஷ்ணுதாசன் எழுதிய ‘அபிஷேகப் பிரியரை ஆராதிப்போம்’ கவிதை உள்ளத்தை ஈர்த்தது. ஆதியில் கேரளத்தின் மொழி, தமிழே என்ற கல்வெட்டுத் தகவல் பிரமிக்க வைத்தது. மொத்தத்தில் ஆன்மிகம் இதழ் அனைவரையும் ஆனந்தமயமான பாதைக்கு இட்டுச் செல்கிறது.
- இல.வள்ளிமயில், திருநகர்.

புதுவையில் பல வீடுகளில் அன்னையின் அருள்விழிகளின் ஸ்டிக்கர் மற்றும்  புகைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ‘எதுவும் ஜடமல்ல. எல்லாவற்றிலும் ஜீவன் உள்ளது’ என்ற மிகப்பெரிய ஆன்மிக கருத்து மிகவும் புதியது. தெளிவுபெறுஓம் பகுதியில் ஹரிபிரசாத் சர்மாவின் விளக்கங்கள் அற்புதம். திருப்பூர் கிருஷ்ணனின் குறளின் குரல் மிகவும் அருமை - தேசத் தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களை குறளின் விளக்க உரைக்கு உதாரணமாகக் காட்டி விளக்கியது வெகு சிறப்பு.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

ஆதிசங்கரர் அருளிய எல்லா நட்சத்திரக்காரர்களுக்கும் நன்மையளித்திடும் சிவ பஞ்சாட்சர நட்சத்திர மாலா ஸ்தோத்திரங்களை வெளியிட்டு 27 நட்சத்திரக்காரர்களுக்கும் பயன் தரும் வகையில் தாங்கள் ஆற்றிய ஆன்மிக சேவை அபாரம். திருவஞ்சிக்களம் திருத்தலத்தின் மகிமையை உணர்த்திய கட்டுரை தமிழ் மொழியின் தன்னிகரில்லா பெருமையை எண்ணி பெருமைப்பட வைத்தது.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

சிவராத்திரியில் எத்தனை வகைகள் என்ற விவரம் எனக்குப் புதியது. அதோடு சிவராத்திரி தத்துவம், பஞ்சமுகார்ச்சனை, சிவராத்திரி தலங்கள் என சிவமயமான கட்டுரைகளை வெளியிட்டு பரவசப்படுத்திவிட்டீர்கள். எல்லா முக்கிய நிகழ்வுகளின் போதும் அது சம்பந்தமாக வாசகர்கள் பயனடைய கட்டுரைகள் வெளியிடுவதின் மூலம் தங்கள் இதழ் உண்மையான வாசகர் இதழ் என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
- கே.சிவகுமார், சீர்காழி.

அந்தந்த சமயத்துக்கேற்ற விசேஷமான அட்டைப்படங்களை தங்கள் இதழில்தான் கண்டு பரவசப்பட முடிகிறது. தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் எதிர்பார்த்து பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை தான் மட்டுமே உண்டு பிறரை ரட்சிக்கும் ஈசனின் அட்டைப்படம் சிவராத்திரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சி(ல)வ விளையாடல்களை தேர்ந்தெடுத்து விளக்கியது மனதைக் கவர்ந்தது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

‘பக்தித் தமிழ்’ தொடரில் ‘ஒரு தலம், பன்னிரு நாமங்கள், பன்னிரு காரணங்கள்’ எனும் தலைப்பில் இடம் பெற்றிருந்த கட்டுரை மனதைக் கவர்ந்தது. பாராட்டுகள்.
- பிரமீளா குருமூர்த்தி, தென்காசி.

அருணகிரி நாதர் தரிசித்த முருகப்பெருமானின் திருத்தலங்களை சித்ரா மூர்த்தி அவர்களின் அருணகிரிஉலா தொடர் மூலம் நாங்களும்
தரிசித்து மகிழ்கிறோம். நன்றி.
- கந்தசாமி, திருவள்ளூர்.

அர்த்தமுள்ள இந்து மதம் தொடர் அருமையோ அருமை. திருமூலரின் திருமந்திரத்தில் மனப்பக்குவமே தெய்வ அருளை முழுமையாகப் பெறும் வழி என்பதை மிக அழகாக விளக்கியிருந்தார் பி.என்.பி. அவர்கள். வளர்க அவர் தொண்டு.
- ராதிகா சந்திரசேகர், சேலம்.