சகல சித்தியளிக்கும் சதயநாராயண பூஜை விரதம்!



பெளர்ணமி அன்று சத்யநாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது. பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது. ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதம்!

இந்த சத்யநாராயண விரதத்தின் மகிமை என்ன? அதை ஒரு கதை மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். உல்காமுகன் என்று ஒரு மன்னன் இருந்தான். ஒருநாள் அவனுடைய அரண்மனைக்கு ஒரு வணிகன் வந்தான். அங்கே மன்னனும் அவனுடைய மனைவியும் ஏதோ பூஜை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். பூஜை முடியும்வரை காத்திருந்த அவன், பிறகு மன்னரிடம் அவர்கள் மேற்கொண்ட பூஜையின் முக்கியத்துவம் என்ன என்று கேட்டான்.

நாட்டில் சத்யமும் நீதியும் நிலைத்திருப்பதற்காகத்தான் இந்த விரத பூஜையைத் தானும் தன் மனைவியும் மேற்கொண்டிருப்பதாக மன்னன் பதிலளித்தான். அந்த வணிகனுக்கும் தனக்குக் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருந்தது. அதை மன்னரிடம் சொன்னான். அவன் தனக்குக் குழந்தை பாக்கியம் அருளவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்ளுமாறும், அவ்வாறு அந்தப் பேற்றினைப் பெறக்கூடிய அவன், சத்யநாராயண விரதம் இருந்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்குமாறும் மன்னன் சொன்னார்.

அதை அப்படியே ஏற்றுக்கொண்ட வணிகன் தன் ஊர் திரும்பினான். தனக்குக் குழந்தை பிறக்க வேண்டிக்கொண்டான்.  கடவுளும் அவனுடைய ஏக்கத்தைப் போக்குவதற்காக உரிய காலத்தில் அவன் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகும் பேற்றினை அருளினார். ஆனால், குழந்தை பிறந்த சந்தோஷத்தில் அவன் விழா, கொண்டாட்டம் என்று நாளைக் கடத்தினானே தவிர, மன்னர் அறிவுறுத்தியதுபோல சத்யநாராயண பூஜை செய்து கடவுளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டான்.

மன்னரின் அறிவுரையைக் கணவன் சொல்லிக் கேட்டிருந்த மனைவி அவனுக்கு அந்த விரதத்தைப் பற்றி நினைவுபடுத்தத்தான் செய்தாள். ஆனால், அவன்தான் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தான். ஆனாலும் அவள் தொடர்ந்து அவனை நச்சரித்துக்கொண்டே இருந்தாள். நன்றி தெரிவிக்காவிட்டால் கடவுளுக்கு நஷ்டமா என்ன என்றெல்லாம் அவன் யோசிக்க ஆரம்பித்துவிட்டிருந்தான்.

ஆனால், மனைவியின் தொடர்ந்த வற்புறுத்தலை மேலும் வளர்க்காமல் இருக்கவும், மனைவியை சமாதானப்படுத்தவும் ‘நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் ஆகட்டும், அப்புறமா சத்யநாராயண பூஜையை வெச்சுக்கலாம்’ என்று அவளிடம் தெரிவித்தான். அவன் சொன்னதுபோல அவர்களுடைய பெண்ணுக்குத் திருமணமும் ஆயிற்று. ஆனால் அதற்குப் பிறகும் அவன் அந்த விரதத்தை மேற்கொள்ளாமல் தள்ளிப்போட்டுக்கொண்டே போனான்.

அவன் மனைவியும் அவனிடம் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்விட்டாள். ஒருசமயம் தன் மருமகனையும் அழைத்துக்கொண்டு வியாபார விஷயமாகப் பிரயாணம் புறப்பட்டுப் போனான் வணிகன். ஆனால், போன ஊரில் அவர்கள் இருவர் மீதும், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த ஊர் மக்கள் திருட்டுக் குற்றம் சாட்டினார்கள். அரசாங்கக் காவலர்களும் அவர்களைக் கைது செய்து மன்னர் முன்னால் நிறுத்தினார்கள்.

வணிகன் தன் மருமகனுடன் இங்கே இப்படி குற்றவாளியாகப் பழி சுமத்தப்பட்டு சிறைப்பட்ட சமயத்தில், அவனுடைய சொந்த ஊரில் அவன் வீட்டில் இருந்த பொருட்களெல்லாம் திருடு போய்விட்டன. அடுத்த வேளை சாப்பாட்டுக்குகூட வசதி இல்லாமல் அவனுடைய மனைவியும் மகளும் தவிக்க ஆரம்பித்தார்கள்.

பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம்... அப்போது அந்த மனைவிக்கு அத்தனை நாள்வரை மனசுக்குள்ளேயே தேங்கியிருந்த, அதுவரை கணவன் தன்னுடன் சேர்ந்து அனுஷ்டிக்காமல்விட்ட சத்யநாராயண பூஜை நினைவுக்கு வந்தது. வீடு வீடாகப் போய் பிச்சை எடுத்த தாயும் மகளும், ஒரு வீட்டில் சத்யநாராயண பூஜை நடத்தப்படுவதைப் பார்த்தார்கள். அதைப் பார்த்தாவது மனநிறைவடையலாம் என்று முடியும்வரை காத்திருந்தார்கள்.

பூஜை முடிந்ததும் அவர்கள் எதிர்பார்த்தபடியே கொஞ்சம் பிரசாதம் கொடுக்கப்பட்டது. அதை சாப்பிட்டதும், தானும் அந்த பூஜையை மேற்கொள்ளவேண்டும் என்று மனைவி தீர்மானித்தாள். கணவன் பக்கத்தில் இல்லாவிட்டாலும் தான் தனியாகவாவது அந்த பூஜையை நிறைவேற்ற முடிவுசெய்தாள். அந்த வீட்டில் தான் பார்த்ததை மனதில் வைத்துகொண்டு மிகவும் எளிமையாக சத்யநாராயண பூஜையைச் செய்து விரதத்தையும் முடித்தாள்.

அதேசமயம், வெளியூரில் கைதான அவளுடைய கணவனும் மருமகனும் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் தான் அப்படி அவர்களைத் தவறாகக் கருதியதாலும், நடத்தியதாலும் மான நஷ்ட ஈடாக, நிறைய பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான் அந்த ஊர் மன்னன். அந்த வெகுமதிகளை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த வணிகன் நடந்ததையெல்லாம் தன் மனைவி, மகளிடம் சொன்னான்.

இவர்களும் தாங்கள் செய்த எளிமையான சத்யநாராயண விரதம், பூஜையைப் பற்றிச் சொன்னார்கள். அதைக்கேட்ட பிறகுதான் அந்த பூஜா விரதத்தை மேற்கொள்ளாமல் அலட்சியப்படுத்தியதற்குத் தனக்கு தண்டனை கிடைத்ததையும், மனைவி தன் சார்பாக அந்த விரதத்தை மேற்கொண்டதால் அந்த தண்டனையிலிருந்து விடுதலையோடு கூடவே வெகுமதியும் கிடைத்ததையும் அவன் புரிந்துகொண்டான். அந்தக் குடும்பத்தில் அப்புறம் வருத்தமோ வேதனையோ தலைகாட்டவே இல்லை.

இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது?
பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம். அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம். இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

பௌர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம். திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம். பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம் அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள். 

இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக்கொள்ளலாம் அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம். அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள். மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.  இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம். நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம். உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக்கொள்ளுங்கள். அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள். சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள். சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள். கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள். அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள். பிறகு விநாயகரை மனதாற வணங்கிவிட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக்கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள். அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம். பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிடவேண்டும். நியாயமானதும், பிறருக்கு தீங்கு விளைவிக்காததுமான நம்முடைய  கோரிக்கை எதுவானாலும் சத்யநாராயணர் நடத்திவைப்பார் என்று சத்தியமாக நம்புங்கள், வாழ்க்கை மகிழ்ச்சிக் கடலாகும்.

கீழ்க்காணும் துதியையும் சத்யநாராயண விரதம் மேற்கொள்ளும் நாளில் உச்சரித்து வந்தால் செல்வ வளம் சூழும்; பிறர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

‘அர்கௌகாபம் கிரீடாந்வித மகரலஸத்
குண்டலம் தீப்திராஜத்
கேயூரம் கௌஸ்துபாபாஸ பலருசிரஹாரம்
ஸபீதாம்பரம் ச
நாநாரத்நாம்ஸு பிந்நாபரண ஸதயுஜம்
ஸ்ரீதராஸ்லிஷ்டபார்ஸ்வம்
வந்தே தோ: ஸக்த சக்ராம்புருஹ தரகதம்
விஸ்வவந்த்யம் முகுந்தம்.’

பொதுப்பொருள்: எங்கும் வியாபித்திருக்கும் நாராயணனே, நமஸ்காரம். மகர, குண்டலங்களோடு பீதாம்பரதாரியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பெருமாளே, நமஸ்காரம். சங்கு, சக்ரம், கதை, தாமரை ஆகியவற்றைக் கையில் ஏந்தி, நீலமேக ஸ்யாமளராக காட்சியளித்து, பக்தர்களைக் காக்கும் சத்யநாராயணப் பெருமாளே, அஷ்டாக்ஷர மந்திர வடிவினரே நமஸ்காரம்.

விரதம் அனுஷ்டித்த பின், முடிந்தால் ஆந்திர பிரதேசம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள அன்னாவரம் கோயிலுக்குச் சென்று பகவான் சத்யதேவரையும், தாயார் சத்யதேவியையும் வழிபடுங்கள். இயலாதோர் பக்கத்து விஷ்ணு கோயிலுக்குச் சென்று பெருமாளையும்
தாயாரையும் வழிபடலாம்.