ஆசை அலைகளால் அலைக்கழியும் வாழ்க்கைத் தோணிகள்!



மன இருள் அகற்றும் ஞானஒளி - 15

‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ - பகவான் புத்தர் எத்தனை முறை திரும்பத் திரும்ப சொன்னாலும் நம் புத்தியில் உரைக்க மாட்டேன் என்கிறது. காரணம் அலைபாயும் மனது. சிற்றின்பத்திற்காக பேரின்பத்தை இழந்து விட்டு, கொள்ளி மேல் இடப்பட்ட எறும்பு துடிதுடிப்பதைப் போல் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறோம். மன்னர் முதல் சாமான்யன் வரை இதுதான் நிதர்சனமாக இருக்கிறது.

அரசனுடனேயே இருந்து கொண்டு தவறான வழிகளில் கரன்சியை குவித்தால், கடைசியில் கம்பி எண்ணுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை காலம் நமக்கு நன்கு உணர்த்தி இருக்கிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பதெல்லாம் சும்மா போகிற போக்கில் சொல்லப்பட்டதல்ல. மாறாக வாழ்க்கையில் எப்படி பயணிக்க வேண்டும். எப்படி போக வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிற கைவிளக்கு. இந்த கைவிளக்குதான் நம் வாழ்க்கைக்கு மெய் விளக்காக இருக்கிறது.

நமது முன்னோர்கள் சொன்ன ஒவ்வொன்றும் அட்சரலட்சம் பெறும் அபூர்வ விஷயங்கள். அதன்படி சுமாராக நடந்தாலே சுகமாக பயணப்படலாம். தத்துவங்களைக் கேட்பதற்கு சுகமாக இருக்கிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில், அதனை ஏற்று பின்பற்ற முடியவில்லை. காரணம் மனக்கடலில் ஆசை அலைகள் ஏராளம்.

அந்தக் கொந்தளிப்பில் எப்படி அமைதியாகப் பயணம் செய்ய முடியும்? உழைத்து சம்பாதித்து நாலு பேருக்கு தர்மம் செய்து கொண்டு நாமும் சந்தோஷமாக இருக்க முடியாதா என்ன? இருக்கலாம் ஆனால் நாம்தான் இப்பேரண்டத்தில் உள்ள எல்லாவற்றையும் ஒரேநாளில் அடைந்துவிட துடிக்கிறோமே? நாம் படும் துன்பத்திற்கு மூலகாரணம் நம் மனம் மட்டுமில்லை.

நாம் சகவாசம் வைத்துக் கொள்ளும் நட்பு வட்டமும் முக்கிய காரணம். இல்லாவிட்டால் சொல்வார்களா, ‘உன் நண்பனைப் பற்றிச் சொல். நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்’, என்று? நம்முடைய சகவாசம் சுகவாசமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க்கையில் பெரும் பணம் சம்பாதித்தாலும், அதற்கும் மேலான ஊராரின் பழி பாவத்திற்கு ஆளாக நேரிடும்.

இதெல்லாம் வெறும் தத்துவங்கள் இல்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கிற யதார்த்தமான உண்மைகள். தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி போல மனப்பக்குவத்திற்கு நமக்கு நல்ல வழிகாட்டிகளாக இருப்பவர்கள் யார்? வாழ்ந்து காட்டி வழியும் காட்டிய எத்தனை பரிசுத்தமான மனிதர்கள் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார்கள்!

உதாரணத்திற்கு பெரும் கோடீஸ்வரனாக வாழ்ந்து அதில் ஒன்றும் சுகம் இல்லை என்று தெரிந்து கொண்டு கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இன்றைக்கும் வாழ்வாங்கு வாழ்ந்து வருகிற திருவெண்காடர் என்கிற பட்டினத்து அடிகள் நம்மைப் போன்ற சாமான்ய மனிதர்களின் மனநிலையை தன்னுடைய இந்தப் பாடலில் படம்பிடித்துக் காட்டுகிறார்:

அன்ன விசாரம் அதுவே விசாரம்
அது ஒழிந்தால்
சொன்ன விசாரம் தொலையா விசாரம்
நம் தோகையரைப்
பன்ன விசாரம் பலகால் விசாரம் இப்பாவி
நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா
கச்சி ஏம்பனே!

இதன் பொருள்: ‘‘அடியேனுக்கு சோற்றுக் கவலையே பெருங்கவலை. இதுவே எந்நாளும் நீங்காத கவலை. இது நீங்கினாலோ அடுத்தது பொன் பொருள் தேட வேண்டும் என்னும் தீராத கவலை. இதுவும் நிறைவேறி விட்டால் அடுத்தபடியாக பெண்ணாசை. புளிய மரத்தை உலுக்குவது போல் எல்லோரையும் ஆட்டிப் படைக்கிற பெண் பித்து. இப்படி இந்த மனத்திற்குள் ஆசைகள் ஒவ்வொன்றாக முளைத்துக் கொண்டே இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? காஞ்சிபுரத்தில் கோயில்கொண்டு அருள்பாலிக்கும் ஏகாம்பரேஸ்வரா, நீயே சொல்.’’

இந்தப் பட்டினத்து அடிகளின் பாடலில் ஓர் தெளிவான அறிவியல் உண்மை புதைந்து கிடக்கிறது. நாம் மனம் எதிலும் திருப்தி அடைவதில்லை. ஒன்றைத் தேடுகிறோம். அதற்காக அலைகிறோம். அது கிடைத்து விட்டால் அடுத்ததற்குத் தாவுகிறோம். குரங்கு மரக்கிளைகளில் தாவுவதை விட அதிவேகமாக நம் மனம் தாவுகிறது. அடுத்தது அடுத்தது என்று மனம் அலை பாய்கிறது.

முடிவில் எதுவுமே நிலைக்காமல் ஊராரின் பார்வையில் பாழடைந்த பங்களாவாக அவப்பெயருக்கு ஆளாக சந்தி சிரிக்க வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இங்கேதான் போதும் என்ற மருந்தே பொன் செய்யும் மருந்து என்கிற மகா வாக்கியம் நம் மனப் புண்ணுக்கு மா மருந்தாக அமைகிறது. சேராத இடம்தனிலே சேர வேண்டாம் - எவ்வளவு பெரிய மூதுரை! தகுதியற்றவற்றை நாம் தேர்ந்தெடுப்பதினால் தான் நமக்கு எல்லாப் பிரச்னைகளும் வருகின்றன. நாம் யார், நம் பண்பாடு, கலாசாரம் என்ன என்பதை ஒருகணம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

திருவள்ளுவரின் அற்புதமான ஒரு குறள் இது:
பேதமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கண் செயல்.

இதன் பொருள்: ஒருவனுடைய அறியாமைகளில் மிகப் பெரிய அறியாமை என்பது, தனக்கு சரியில்லாதவற்றில் மனதை ஈடுபடுத்தி அதன் மூலம் தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டு தன்னையும் தன் மான மரியாதையையும் இழப்பதுதான். கூடா நட்பு கேடு தரும் என்பது வெறும் பழமொழி அல்ல. அதில்தான் வாழ்வின் பொருளே இருக்கிறது. பொருளுக்காக அலைந்து, திரிந்து கோடிகளை குவித்தால் வாழ்க்கை இருண்டு போய் முடிவில் துன்பமும் துயரமும்தான் நம்மை நிழலாகப் பின் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பசுமாட்டை கட்ட வேண்டிய இடத்தில் பசு மாட்டைத்தான் கட்ட வேண்டும். அங்கே வேறு ஒன்றை கட்டினால் பசுவின் புனிதம் பாழாகி விடும். மனித வாழ்வின் மேன்மைக்கும் இது சாலப் பொருந்தும். பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணன் அற்புதமாக பல நிலைகளை சொல்லுகிறார்.

கொசுக்கள் இருக்கும் ஊரில் கொசு வலை போட்டுக் கொண்டு தூங்குவது போல் வாழ்க்கையை நடத்த வேண்டும். யாத்திரைக்கும் சமூக வாழ்க்கைக்கும் வேண்டிய காரியங்களை செய்து கொண்டிருந்தாலும்கூட எந்தவிதமான கர்ம பந்தத்திலும் சிக்கிக் கொள்ளாதே! கொசுக்கடிக்கு வலை போட்டுக் கொள்வது போல் வாழப் பழகு!

இது வேண்டும் அது வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக செய்யப்படும் வேண்டுதல்களும் ஹோமங்களும் பயனற்றவை என்கிறார் கண்ண பரமாத்மா. உன்னுடைய உரிமையின் எல்லை, காரியம் செய்வதோடு நிற்கட்டும். காரியத்தின் முடிவையும், பயனையும் எதிர்பார்ப்பது உன் உரிமையல்ல! பயனில் ஆசையை வளர்த்து எதையும் செய்யாதே! எதிர்பார்த்து ஒரு காரியத்தை செய்வது வீண். அதில் எந்தவிதப் பயனும் இல்லை என்கிறது கீதை!

ஆனால் நாம் அப்படியா வாழ்கிறோம்? உடனடித் தேவைக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கிறோம். வாழ்க்கை என்பது தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும். மாறாக குழம்பிய குட்டையாக இருக்கக் கூடாது. இறைவன் திருவடிகளில் சரணடைவதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்?

ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்