வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்!



குறளின் குரல் - 55

ஊக்கம் இருந்தாலன்றி மனிதன் உயர இயலாது. ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியும் அவன் எந்த அளவு ஊக்கம் கொண்டிருக்கிறான் என்பதைப் பொறுத்தே அமைகிறது. இதை நன்குணர்ந்த வள்ளுவர் `ஊக்கமுடைமை’ என்றே ஒரு தனி அதிகாரத்தைப் படைக்கிறார். (அதிகாரம் 60) அலுப்பும் சோம்பலுமாய் வாழ்க்கை நடத்தும் இளைஞர்களைப் பார்த்து வள்ளுவர் எள்ளி நகையாடுகிறார். `ஊக்கம் கொண்டு செயலாற்றுங்கள், வாழ்வில் முன்னேறுங்கள்!’ என்று இளைஞர்களை நோக்கி அறைகூவுகிறார்.

இன்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமான சுய முன்னேற்ற நூல்கள் வெளிவருகின்றன. அவையெல்லாம் ஊக்கம் கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற கருத்தை முக்கியமானதாக மொழிகின்றன. அந்தக் கருத்தை முன்மொழிந்தவர் நம் வள்ளுவர். சுயமுன்னேற்ற எழுத்தாளர்கள் அனைவரும் அதே கருத்தை வெவ்வேறு விதங்களில் வழிமொழிகிறார்கள், அவ்வளவே. வள்ளுவம்தான் சுய முன்னேற்ற நூல்களின் மூல நூல். முன்னோடி நூல்.

`உடையர் எனப்படு தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.’

ஊக்கமுடையவர்களே உடையவர்கள் என்று சொல்லத் தக்கவர்கள். அந்த ஊக்கம் மட்டும் இல்லாமல் வேறு என்ன உடையவர்களாய் இருந்தாலும் பயனில்லை. அவர்களை உடையவர்கள் என்று சொல்ல இயலாது.

`உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.’

ஊக்கம் உடையவனாய் இருந்தால் அதுவே உடைமை எனப்படும். வெறும் பொருளுடைமையால் என்ன பயன்? அது நில்லாது விலகிச் செல்ல வாய்ப்பிருக்கிறது.

`ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.’

ஊக்கத்தை உறுதியாகக் கைக்கொண்டவர்கள் செல்வத்தை இழந்தால் இழந்துவிட்டோமே என மனம் தளர மாட்டார்கள்.

`வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.’

குளத்தில் உள்ள நீர்மலர்களின் தண்டு, நீர்மட்டம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு உயர்ந்து தோன்றும். அதுபோல் மக்கள்
தங்களின் ஊக்கத்திற்கேற்ப உயர்ந்து நிற்பர்.

`உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.’

எண்ணும் போதெல்லாம் உயர்வு பற்றியே எண்ண வேண்டும். அவ்வுயர்வினை எண்ணிப் பெற முடியாமல் போனாலும் அவ்விதம் எண்ணுவது இகழப்படாத தன்மையினை உடையது ஆகும்.

`சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றும் களிறு.’

அம்புகளால் புண்பட்டுக் கீழே விழுகிற நிலையிலும் யானை தன் பெருமையை நிலைநிறுத்தும். அதுபோல் தளர்ச்சி வந்தாலும் ஊக்கம் மிகுதியாக உடையவர்கள் தன்நிலையில் தளரமாட்டார்கள்.

`உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.’

ஊக்கமில்லாதவர்கள், உலகத்தில் ‘நான் கொடைத்தன்மை உடையவன்’ என்று தன்னைத் தானே மதித்துச் செருக்குற இயலாது.

`பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.’

யானை பெரிய உடலையும் கூர்மையான தந்தங்களையும் உடையது. புலியை விடவும் வலியது. ஆனாலும் புலி தாக்க வந்தால் அந்த யானை புலியைக் கண்டு அஞ்சும். இந்த அச்சத்திற்கான காரணம் யானைக்கு ஊக்கமில்லாததும் புலிக்கு ஊக்கம் இருப்பதும்தான்.

`உரமொருவற் குள்ள வெருக்கை அஃதில்லார்
மரம் மக்களாதலே வேறு.’

ஊக்கம் இருப்பவர்களே மனிதர்களாகக் கருதத் தக்கவர்கள். ஊக்கமே வலிமை. ஊக்கம் இல்லாதவர்கள் மனித வடிவம் பெற்றிருந்தாலும் மரம் போன்றவர்களே. `இளைஞர்கள் முன்னுக்கு வரவேண்டுமானால் அவர்களுக்கு ஊக்கம் தேவை, எனவே ஊக்கத்தோடு செயல்படுங்கள்!’ என்று முழங்கினார் உலகப் புகழ்பெற்ற ஓர் இந்துத் துறவி. அவர்தான் சுவாமி விவேகானந்தர்.

`எழுமின்! விழுமின்! குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்!’ என்பது ஊக்கத்தோடிருங்கள் என்ற போதனையின் இன்னொரு வடிவம் தானே?
அவர் போதித்ததோடு நின்றுவிடவில்லை. அந்த போதனையைத் தாமும் வாழ்வில் தொடர்ந்து பின்பற்றினார். முப்பத்தியொன்பது ஆண்டுகளே வாழ்ந்த அவர், ஒரு மனிதன் 300 ஆண்டுகள் வாழ்ந்தாலும் செய்துமுடிக்க முடியாத பணிகளைச் செய்து முடித்தார். காரணம் அவரது தளராத ஊக்கம் மட்டுமே.

பொருளாதாரப் பிரச்னைகள் அவருக்கும் வரத்தான் செய்தன. ராமகிருஷ்ண மடம் தொடங்கியவுடனேயே பெரிய அளவில வளர்ந்து விடவில்லை. மெல்ல மெல்லத்தான் அதற்குப் பொருளுதவிகள் வந்து சேர்ந்தன. தொடக்க காலத்தில் கடும் வறுமை. மடத்தில் அனைவருக்குமாக கெளரவமாக அணியும் வகையில் ஒரே ஒரு காவி ஆடை மட்டுமே இருந்ததால் இரு துறவிகள் சேர்ந்து வெளியே செல்ல இயலாத நிலைமை.

ஒருவர் வெளியே போய்த் திரும்பி வந்த பிறகு அந்த ஆடையை இன்னொருவர் வாங்கி அணிந்துகொண்டு வெளியே செல்வார். ஆனால் இந்த வறுமை நிலை விவேகானந்தரின் ஊக்கத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

`ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை.’

அசைவில்லாத, என்றும் தளராத ஊக்கம் எவனிடம் இருக்கிறதோ அவனைத் தேடி வழிகேட்டுக் கொண்டு செல்வம் தானே வந்துசேரும் என்கிறாரே வள்ளுவர்? அப்படித்தான், விவேகானந்தர் எங்கே எங்கே என்று விலாசம் விசாரித்துக்கொண்டு செல்வம் அவர் காலடியில் வந்து பணிந்தது. ஊக்கத்தோடு அவர் பேசிய சொற்பொழிவுகளைக் கேட்டவர்கள் அவரது கருத்துகளால் கவரப்பட்டு மயங்கினார்கள்.

கேத்திரி ராஜா உள்ளிட்ட எத்தனையோ பெரும் செல்வந்தர்கள் அவர் காலடியில் பணத்தைக் கொண்டு கொட்டத் தயாராக இருந்தார்கள். ஓர் ஊனம் இருந்தாலே முன்னேறுவது எத்தனை சிரமம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் ஹெலன் கெல்லருக்கு இருந்ததோ மூன்று ஊனங்கள். கண் தெரியாது. காது கேளாது. வாய் பேசாது.

என்றாலும் மூன்று ஊனங்களையும் வென்று மிகப் பெரும் சமூகசேவகராக அவர் உயர்ந்தாரே எப்படி? ஆன்னி சலிவன் என்ற அவரின் அற்புதமான ஆசிரியை மேற்கொண்ட விடாமுயற்சியும் ஹெலன்கெல்லரின் என்றும் வற்றாத ஊக்கமுமே அதற்குக் காரணங்கள். ஊக்கம் இருக்குமானால் ஐம்புலன்களில் என்ன பழுதிருந்தாலும் வாழ்க்கையை வென்றுவிடலாம். ஆனால் ஊக்கம் இல்லாதுபோனால் ஐம்புலன்களும் சரியாக இருந்தும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை.

அதனால்தான் அவ்வையார் தம் ஆத்திசூடி நூலில் `ஊக்கமது கைவிடேல்!’ என எழுதினார். வயதான காலத்திலும் தளராத ஊக்கமிருந்ததால்தான் மூவேந்தர்களையும் எதிர்த்துக் கொண்டு மலையமானின் மகனான தெய்வீகன் என்ற மன்னனுக்கு தந்தையை இழந்த பாரி மகளிரான அங்கவையையும் சங்கவையையும் மணம்புரிவித்தார்.

வயதான கழுதையை ஓட்டிக் கொண்டு வந்தான் ஒரு கிழவன். மாலை மங்கிய நேரம். அந்தக் கழுதை, வரும்வழியில் கைப்பிடிச் சுவர் இல்லாத ஒரு பாழுங்கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. கிழவன் யோசித்தான். கழுதையோ வயதானது. இனி பொதி சுமக்க உதவாது. அதைப் பராமரிக்கப் பெரும் செலவும் ஆகிறது. இப்போது இந்தக் கிணற்றிலேயே அதற்கு சமாதி கட்ட வேண்டியதுதான் என்று முடிவுசெய்தான்.

சப்தம்போட்டுச் சில கிராமவாசிகளை அழைத்தான். பற்பலர் ஓடிவந்தார்கள். கிழவன் சொன்னபடி அந்த இருளில் பாழுங்கிணற்றின் உள்ளே மண்ணைப் போட்டுக் கிணற்றை மூடத் தீர்மானித்தார்கள். உடனே மண்ணை அள்ளி அள்ளிக் கிணற்றினுள் வீசத் தொடங்கினார்கள். ஆனால் கிணற்றின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அந்த இருளில் யாருமே கவனிக்கவில்லை.

உள்ளே தவறி விழுந்த வயதான கழுதை சாதாரணக் கழுதை அல்ல. மிகுந்த ஊக்கமுடைய கழுதை. அது தன்மேல் மண் வந்து விழுந்த போதெல்லாம் அதை உதறி உதறிக் கீழேதள்ளி அந்த மண்ணின்மேல் ஏறி நின்று கொண்டது. இப்படியே மெல்ல மெல்ல மேலே வந்த கழுதை ஒரு சந்தர்ப்பத்தில் உயரம் வாகாக இருந்ததால் கிணற்றின் வெளியே தாவி ஒரே ஓட்டமாக ஓடித் தப்பிச் சென்றுவிட்டது!

அத்தனை பேரிடமிருந்தும் அந்த வயோதிகக் கழுதையைக் காப்பாற்றியது எது? அதன் ஊக்கம்தான் அல்லவா? இயற்கையாகவே நன்கு ஓடும் திறன் பெற்ற முயல், ஓட்டப் பந்தயத்தில் ஏன் தோற்றது? மெதுவாக நடக்கும் ஆமை முயலை வெல்ல முடிந்தது எப்படி? மெதுவாக நடந்தாலும் ஊக்கத்தோடு விடாமல் நடந்ததால் ஆமை வெற்றி இலக்கைத் தொட்டது.

நன்கு ஓடும் திறன் பெற்றிருந்தாலும், தொடர்ந்து ஓடும் ஊக்கமின்றி இடையில் அலுப்படைந்து உறங்கி விட்டதால் முயல் தோல்வியைத் தழுவியது. வாழ்க்கைப் பந்தயத்தில் வெற்றிபெற ஆற்றல் இருந்தால் மட்டும் போதாது, அந்த ஆற்றலைப் பயன்படுத்துகிற ஊக்கம் இருக்க வேண்டும். இந்த உண்மையையே இந்தக் கதை வலியுறுத்துகிறது.

அணில் ஓர் எளிய பிராணி. கட்டாயம் குரங்குகளோடு அது போட்டி போட முடியாது. பாறாங்கல்லையே கூடக் குரங்குகள் சுமக்கக் கூடும். சிறிதளவு மணல் துகள்களே அணிலுக்கு பாரம்தான். ஆனாலும் தன்னால் இயன்ற மணலை ஊக்கத்தோடு முதுகில் சுமந்து வானரங்களிடையே குதித்தோடி சேது பந்தனத்தின்போது மணலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டியது அது. பரமன் ராமன் அதன் செயலைப் பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்மேல் அதற்குள்ள அன்பையும் அதனுடைய தளராத ஊக்கத்தையும் கண்டு நெகிழ்ந்தான். அணிலைப் பாராட்ட விரும்பினான். அதை அருகில் அழைத்துத் தன் விரல்களால் அதன் முதுகை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தான். இன்றும் அந்த அணிலின் வழிவழி வந்த அணில்கள் ஊக்கத்தால் தாங்கள் பரந்தாமனிடமே பாராட்டுப் பத்திரம் பெற்றுவிட்டோம் என்று, அந்தப் பத்திரத்தின் மூன்று முக்கியமான வரிகளைத் தங்கள் முதுகில் பத்திரமாகத் தாங்கிச் செருக்குடன் துள்ளித் திரிகின்றன.

ஊக்கம் தந்த உயர்வல்லவா அது! இரண்டு தயிர்க் கிண்ணங்களில் தனித்தனியே விழுந்துவிட்டன இரண்டு தவளைகள். ஒரு தவளை `தண்ணீரிலும் தரையிலும் உயிர்வாழ்வோம். தயிரில் நம்மால் உயிர் வாழ இயலாதே?` எனச் செயலோய்ந்து நம்பிக்கை இழந்தது. அந்தத் தவளை சிறிது நேரத்தில் இறந்தே போயிற்று. ஊக்கமில்லாவிட்டால் இறக்க வேண்டியதுதான்.

இன்னொரு தவளை நெஞ்சில் நம்பிக்கையும் ஊக்கமும் உள்ள தவளை. `நம்மால் தண்ணீரிலும் தரையிலும் தான் உயிர்வாழ முடியும், தயிரில் உயிர்வாழ முடியாது என்பது மெய்தான். ஆனால் நாம் சும்மா இருக்கலாகாது, ஏதேனும் செய்ய வேண்டுமே?` என எண்ணியது அது. ஊக்கத்தோடு அங்குமிங்கும் அலைபாய்ந்தது. அதன் காரணமாக, தயிர் நன்கு கடையப்பட்டு தயிரின்மேல் வெண்ணெய் திரண்டது.

அந்த வெண்ணெயின் மீது ஏறி கிண்ணத்தை விட்டுத் தாவி வெளியே குதித்து அந்தத் தவளை தப்பிச் சென்றுவிட்டது. உயிர் போகும் தறுவாயிலும் ஊக்கத்தை மட்டும் விடாமலிருந்தால் எப்படியும் தப்பித்துவிட முடியும் என்பதற்கு இந்தத் தவளையே சாட்சி. கழுதையும் ஆமையும் அணிலும் தவளையும் ஊக்கத்தோடு செயல்படும்போது நம்மால் செயல்பட முடியாதா என்ன? கடந்த காலத்தை எண்ணிக் கவலைகொண்டு ஊக்கமின்றி நிகழ்காலத்தைத் தவறவிடுபவர்களைப் பற்றி மகாகவி பாரதி பாடுகிறார். அவர்களை மூடர்கள் என்கிறார்.

`சென்றதினி மீளாது மூடரே நீர்
சென்றதையே தினம்தினமும் சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில்
வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா!
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற எண்ணிக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!
தீமையெலாம் ஒழிந்துபோம் திரும்பி வாரா!’

நிகழ்காலத்தில் ஊக்கத்தோடு செயல்பட்டால் எதிர்காலத்தில் நிறையைச் சாதிக்கலாம். `வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்! ’ என்பது கவிஞர் தாராபாரதியின் புகழ்பெற்ற வைர வரிகள். வாழ்வில் நம்பிக்கையற்றுத் தற்கொலைக்கு முயலும் இளைஞர்கள் ஊக்கம்பெறச் சொல்லவேண்டிய மந்திர வாசகங்கள் இவை.

ஊனமுற்றவர்களே மாற்றுத் திறன்கொண்டு முன்னேறும்போது இரு கரங்களும் இருக்கிற இளைஞர்கள் முன்னேற என்ன தடை? ஊக்கமின்மை மட்டுமே தடை. அந்தத் தடையை மனதளவில் வென்று ஊக்கம் பெற்றுவிட்டால் பின்னர் நம் இளைஞர்கள் வாழ்வில் தொடக்கூடிய உயரங்களுக்கு எல்லையே இல்லை.  இளைஞர்களுக்கு வழிகாட்டக் காத்திருக்கிறது நம் பழந்தமிழ் நூலான வள்ளுவம். படித்து அதுசொல்லும் கருத்துகளைப் பின்பற்றிப் பயனடைய வேண்டியது இளைஞர்கள் பொறுப்பு.

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்