வரமளித்து வளம் காக்கும் வரலட்சுமி விரதம்



பெயர்தான் வரலட்சுமி விரதமே தவிர, வெறும் செல்வத்தை மட்டும் தரும் விரதம் இல்லை;  நல்ல உடல் நலம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம், குழந்தைப்பேறு என்று எல்லா நலன்களையும் வழங்கக்கூடியது. இந்த விரதத்தைக் கடைபிடிக்கச் சொல்லி முதன் முதலாக சொன்னவர் மகாலட்சுமியேதான்!

ஆமாம், மகாலட்சுமி சாருமதி என்ற பெண்ணின் கனவில் வந்து இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது என்று சொல்லிக்கொடுத்தாள் என்று ஒரு கதை உண்டு. அந்த சாருமதி, வட இந்தியாவில், மகத நாட்டில் ஒரு கிராமத்தில் வாழ்ந்தவள். கணவனை தெய்வமாக மதித்து, தன் மாமனார், மாமியாருக்கு எல்லாப் பணிவிடைகளும் செய்து, கற்பு நெறி தவறாமல், பய பக்தியோடு வாழ்க்கையை மேற்கொண்டவள்.

அவளுடைய இந்தப் பண்புகளைப் பார்த்து சந்தோஷப்பட்ட மகாலட்சுமி, அவள் மேலும் எல்லா சௌபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக அவளுடைய கனவில் தோன்றி வரலட்சுமி விரதத்தைப் பற்றியும் அதைக் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் விவரமாகச் சொன்னதாக அந்தக் கதை விவரிக்கிறது.

அந்த விரதத்தைக் கடைபித்து தான் பயனடைந்ததோடு, அதை அவள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தாள். அதிலிருந்துதான் அனைவருமே வரலட்சுமி விரதத்தைக்  கடைபிடிக்க ஆரம்பித்தார்கள். இந்த விரதத்தைப் பெண்கள்தான் அனுசரிக்கவேண்டும் என்பதல்ல, ஆண்களும் மேற்கொள்ளலாம்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் மற்றும் விக்கிரமாதித்ய மகாராஜா கூட இந்த விரதத்தை அனுசரித்திருக்கிறார்கள். ஆடி மாத பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த விரதத்தை மேற்கொள்வது வழக்கம். சில வருடங்களில் ஆவணி மாதத்திலும் இந்த விரதநாள் வரும்.

விரதம் எப்படி மேற்கொள்வது?
முதல் நாளே வீட்டை நன்கு பெருக்கி, ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டு வரவேற்பு அறையில் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தபடி தரையில் ஒரு கோலம் போட்டுக்கொள்ளுங்கள். அந்தக் கோலத்துக்கு மேல் சுத்தமான ஒரு பலகையை வையுங்கள். இந்த பலகை மேலும் ஒரு கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

சுத்தமான ஒரு சொம்பின் மேல் மஞ்சள் தடவி வைத்துக்கொள்ளுங்கள். அதனுள் அரிசியையும், துவரம் பருப்பையும் கலந்து, கால் பாக அளவுக்குப் போட்டுக்கொள்ளுங்கள். கூடவே, கருகமணி, வளையல், சிறிய சீப்பு, சின்னக் கண்ணாடி, எலுமிச்சம் பழம், குங்குமம், வெற்றிலை-பாக்கு நிறைந்த குங்குமச்சிமிழ், இரண்டு அல்லது மூன்று சில்லறை காசுகள், இயன்றவர்கள் வெள்ளி அல்லது தங்கக் காசுகளையும் போட்டுக்கொள்ளலாம்.

வழக்கமாக இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் அவரவர் சம்பிரதாயப்படி பொருட்களும், அவற்றின் எண்ணிக்கையும் இருக்கலாம். (சிலபேர் விரத தினத்தன்று, அதாவது அடுத்த நாள், கலசம் வைப்பார்கள்.) கலசத்தில் மாவிலைக் கொத்தைச் சொருகி வையுங்கள். ஒரு தேங்காய்க்கு மஞ்சள் பூசி, அதை மாவிலைக் கொத்துக்கு நடுவிலே வையுங்கள். தேங்காய்க்கு குங்குமம் இடுங்கள். ஒரு மஞ்சள் சரடு எடுத்து அதில் ஒரு மஞ்சள் கிழங்கை முடிந்து, அதை கலசச் சொம்பின் கழுத்திலே கட்டுங்கள்.

இப்படி கலசத்தைத் தயார் செய்துகொண்ட பிறகு, சிறிய அம்மன் முகத்தை தேங்காய் குடுமிப் பகுதியில் பதித்து வையுங்கள். இந்த அம்மனுக்குக் கருகமணி மாலை சாத்துங்கள். இரண்டு பக்கமும் தெரிகிற மாதிரி காதோலையையும் சொருகி வையுங்கள். (அம்மன் முகம், கருகமணி மாலை, காதோலை எல்லாவற்றையும் முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.) கலசத்துக்கு வெண்ணிற வஸ்திரத்தை சாத்துங்கள்.

முடிந்தால் வெண்பட்டும் சாத்தலாம். ரவிக்கை துண்டை சாத்துவது சிலருடைய வழக்கமாக இருக்கும். அப்படியென்றால், அது மஞ்சள் அல்லது அரக்கு நிறத்தில் இருப்பது உசிதமானது. கூடவே பூமாலையும் சாத்தலாம். தாழம்பூ வைத்தும் அலங்கரிக்கலாம். இந்த கலசத்தில்தான் மகாலட்சுமி எழுந்தருளுவதாக ஐதீகம். அதனால் சுவரை ஒட்டி, யார் கால் தூசும் படாதபடி வைக்கவேண்டும்.

இவற்றையெல்லாம் செய்து முடித்த பிறகு, கலசத்துக்கு முன்னால் விளக்கேற்றி வையுங்கள். கலசத்துக்குக் கற்பூரம் காட்டுங்கள். வெண்பொங்கல் தயாரித்து நைவேத்யம் செய்யுங்கள். இப்படி முதல்நாள் இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்து விட்டு, அடுத்தநாள் விரதம் மேற்கொள்ளத் தயாராகிவிடுங்கள். அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு குங்குமம் இட்டுக்கொண்டு பூஜையறைக்குச் செல்லுங்கள்.

சாமி படத்துக்கு முன்னால் ஒரு சிறு மண்டப அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதற்கென்று தனியாகத் தச்சரை அழைத்து பிரத்யேகமாகச் செய்யவேண்டும் என்றில்லை. பூஜைப் பொருட்கள் விற்கும் கடைகள் சிலவற்றில் இதுபோன்ற மண்டபம் விலைக்குக் கிடைக்கும். சிலர் வீட்டில் சின்னதாக முக்காலி இருக்கலாம்.

அதையும்கூட பயன்படுத்திக்கொள்ளலாம். இதன் மூன்று கால்களிலும் மலர்ச்சரத்தைச் சுற்றி மேலே தட்டில் கோலம் போட்டு அலங்கரித்துக் கொள்ளலாம். இந்த ஸ்டூலில் கோலத்தின் மேல் அல்லது மண்டபத்தின் முன்னால் ஒரு நுனி இலையைப் போட்டு அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக்கொள்ளுங்கள். சிலர் நெல்லையும் பரப்பி வைப்பார்கள்.

இப்போது வரவேற்பறையில் முந்தைய நாளே தயார் செய்திருந்த அம்மன் முகம் பதித்த கலசத்தை இரண்டு சுமங்கலிப் பெண்கள் மெல்ல தூக்கிக்கொண்டுவந்து அரிசி பரப்பப்பட்ட இலையின்மேல், நடுவாக வையுங்கள். வீட்டிலேயே இப்படி இரு பெண்மணிகள் இருந்தால் சரி; அல்லது உறவினராகவோ, அக்கம்பக்கத்து வீட்டிலிருந்தோ இந்த விரதத்தில் நம்பிக்கையும் ஆர்வமும் உள்ள பெண்மணியை அழைத்துக்கொள்ளலாம்.

இரண்டு சுமங்கலிப் பெண்கள் தூக்கி வருவது என்பது சம்பிரதாயம். அப்படித் தூக்கிவரும்போது, ‘லட்சுமி, ராவே மா இன்ட்டிக்கி...’ என்று பாடிக்கொண்டே தூக்கி வருவதும் ஒரு வழக்கம்தான். இது தெலுங்கு பாட்டு. அதன் பொருள், ‘லட்சுமித் தாயே என் வீட்டுக்கு எழுந்தருள்வாயே’ என்பதாகும். இப்படித் தூக்கிவரும் அம்மனின் முகம் கிழக்கு அல்லது மேற்கு பார்த்தாற்போல இருப்பது நல்லது.

இப்போது கலசத்துக்குப் புதிதாக பூமாலை சாத்துங்கள். கலசத்துக்கு முன்னால் விளக்கேற்றி வையுங்கள். அடுத்ததாக நோன்புச் சரடைத் தயார் செய்துகொள்ளுங்கள். மெலிதான நூலில் மஞ்சள் தடவிக்கொள்ளுங்கள். இதுதான் நோன்பு சரடு. சுமார் ஒரு அடி நீளம்வரை இருக்கலாம். இந்த சரட்டிலே ஒன்பது முடிச்சுகள் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இந்த சரடை ‘பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் கட்டிக்கொள்வது வழக்கம்’.

இப்படி ஆண், பெண் இருவருமே இந்த சரடைக் கட்டிக்கொள்ளலாம் என்பதால், வீட்டில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறீர்களோ, அத்தனை சரடுகளைத் தயார் செய்துகொள்ளலாம். அன்றைக்கு வீட்டுக்கு யாராவது சுமங்கலிங்களை அழைத்திருந்தீர்களென்றால் அல்லது யாராவது வரக்கூடும் என்றால், அவர்களுக்கும் சேர்த்து சரடு எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

இந்த நோன்பு சரடுகளையும் கலசத்தோடு வைத்து, ‘என் வீட்டிற்கு வந்திருக்கும் வரலட்சுமி தாயே, என்றைக்கும் எங்கள் வீட்டைவிட்டு நீங்காதிருந்து எங்களுக்குத் தேவையான வரமெல்லாம் தந்து காத்தருள் தாயே’ என்று உளமாற வேண்டிக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த லட்சுமி ஸ்லோகங்களையெல்லாம் சொல்லி, தூபம், தீபம், கற்பூரம் காட்டி வழிபடுங்கள்.

சர்க்கரைப் பொங்கல், தேங்காய் கொழுக்கட்டை அல்லது வேறு ஏதாவது இனிப்பு தயார் செய்து, அதை நிவேதனமாக அம்மனுக்குப் படைக்கலாம். பிறகு அம்மனை மனதாற வேண்டிக்கொண்டு நோன்பு சரடை எடுத்து பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் கட்டிக்கொள்ளலாம். தங்கள் கணவர் கையால தங்கள் கழுத்தில் பெண்கள் கட்டிக்கொள்வது மேலும் சிறப்பானது.

இப்படி சரடு கட்டிக்கொள்வதோடு அன்றைய விரதம் முடிந்தது. விரதம் இருப்பவர்கள் அந்த பூஜை முடியும்வரை எதுவும் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது. வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் அவரவர் ஆரோக்கியத்தைப் பொறுத்து கொஞ்சமாகக் கஞ்சியோ பாலோ எடுத்துக்கொள்ளலாம்.

சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து மஞ்சள், குங்குமம் போன்ற மங்கலப் பொருட்களையும் நிவேதன பிரசாதத்தையும் தரலாம். விரதம் மேற்கொண்டிருக்கும் அன்று மாலையோ அல்லது மறுநாள் அதிகாலையிலோ லட்சுமி அம்மனுக்கு எளிமையாக இன்னொரு பூஜை செய்துவிட்டு, அம்மன் அலங்காரங்களைப் பிரித்துவிடலாம். இதனை ‘விசர்ஜனம்’ என்று சொல்வார்கள். அதாவது, விரதத்தின் நிறைவான பகுதி என்று சொல்லலாம்.

கலசத்துக்குக் கீழே பரப்பியிருக்கும் அரிசி அல்லது நெல்லை ஒரு துணியிலே முடிந்சு அந்த மூட்டையை சமையலுக்கு எடுத்துக்கொள்ளும் அரிசி பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொள்ளலாம். அப்படிச் செய்தால் என்றைக்கும் சாப்பாட்டுக்குப் பஞ்சமே வராது என்பார்கள். அதாவது, அன்னபூரணியோட கடாட்சம் என்றென்றும் அந்த வீட்டில் நிலவும்.

கலசத்தில் வைத்திருந்த தேங்காயை அடுத்த வெள்ளிக்கிழமையன்று உடைத்து, அதைவைத்து பாயசம் தயாரித்து பொதுவாக இறைவனுக்கு நைவேத்யம் செய்யலாம். இந்தப் பாயசத்தில், முடிந்து வைத்திருக்கும் அரிசியையும் கலந்துகொள்ளலாம். வரலட்சுமி விரதத்தை கடைபிடிப்பதால் முற்பிறவி பாவமெல்லாம் நீங்கும்.

திருமண பாக்கியம், மாங்கல்ய பலம், குழந்தை செல்வம் மற்றும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும். வரலக்ஷ்மி விரத நாளன்று கீழ்காணும் ஸ்லோகத்தையும் சொல்வதால் நியாயமான அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்; அவற்றை அடைவதற்கான தகுதியும் வளரும்.

‘பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
கல்ய விவர்த்தினி
பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
மாம்ச்ச தேஹிமே
வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு வக்ஷஸ்த
லஸ்த்திதே’.

பொதுப் பொருள்: அனைத்து பாக்கியங்களையும் அருளும் பாக்யலக்ஷ்மியே நமஸ்காரம். மாங்கல்ய பலனை உறுதிப்படுத்துபவளே, நமஸ்காரம். எங்களுக்கு எல்லா நலன்களையும் தந்தருளி, எங்களது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றித் தரும் வரலக்ஷ்மித் தாயே, நமஸ்காரம். திருமாலின் திருமார்பில் எழுந்தருளியுள்ள தேவியே, எங்களுக்கு அனைத்து சகல வரங்களையும் தந்தருள்வாய் அம்மா.

விரதம் மேற்கொண்டவர்கள் முடிந்தால் செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில் உள்ள அரசர்கோயில் தலத்திற்குச் சென்று அங்குள்ள சுந்தர மஹாலக்ஷ்மி கோயிலில் மஹாலக்ஷ்மியை தரிசிக்கலாம். (இந்த மஹாலக்ஷ்மிக்கு இடது பாதத்தில் ஆறு விரல்கள் இருப்பதும், அதை தரிசிப்பதும் விசேஷம்). இயலாதவர்கள் பக்கத்துப் பெருமாள் கோயிலில் மஹாலக்ஷ்மியை தரிசனம் செய்யலாம்.