காவல் தெய்வம் காளியை பணிவோம்!



காலத்தால் அழியாத காளிதேவி
கருணைத்தாய் வாய்மொழி கேட்பாயடா
என்றென்றும் நிலைப்பாயடா!
சுழல்கின்ற காலத்தில்
கீழவர் மேலவர் ஆவர்
மேலவர் கீழவர் ஆவர்!
இயற்கையின் விதி மகனே
இன்னும் சில நாள் பொறு மகனே!
ஒளியினை இருள் விழுங்கும்
ஒளிவந்தால் இருள் விலகும்
எல்லாம் என் செயலடா- மகனே
என் பக்கத்தில் இருப்பாயடா!

உனக்கொரு வாழ்வுண்டு
உன்னிடத்தில் நான் உண்டு
உறுதியுடன் இருப்பாயடா
என்மேல் நம்பிக்கை வைப்பாயடா!
கனவில் நான் வருவேன்
கற்பனையை அள்ளித் தருவேன்
கவிதைகள் புனைவாயடா
உலகுக்கு சொல்வாயடா!
நானுண்டு, நீயுண்டு, நமக்கிடையில் உறவுண்டு
நல்லதே நினைப்பாயடா -மகனே
நல்லதே நடக்குமடா!

வானகத்து தேவரெல்லாம் வணங்கவே வந்திடுவார்
மண்ணகத்து பூக்களெல்லாம் உனக்கென
பூத்திருக்கும்
புத்துணர்ச்சி கொள்வாயடா- புதுவாழ்வு
பெறுவாயடா!
அழியாத தமிழ் உண்டு
அறிந்து சொல்லும் திறன் உண்டு
என்றும் என் அருள் உண்டு
ஏட்டினை எடுப்பாயடா!
காவியம் படைப்பாயடா!
மனதில் என்னை தியானிக்கும் பக்தனே
கவலைகள் உனக்கேனடா!

நான் உன் நிழலென வருவேனடா- மகனே
இந்த தாய் உன்னை காப்பேனடா!
காட்டு மூங்கிலில் கலை தரும்
குழல் செய்து எரியும் அடுப்பில்
விறகென வைப்பதுண்டோ!
சொல்லடி மாகாளி!

மனம் நிறைந்து சிந்தை ஆள்பவளே
மானிட மகத்துவம் உணர்த்திடுவாய்!
சக்தி! சக்தி! சக்தி அவள் மேல்
பக்தி! பக்தி! பக்தி வைத்தால் வளராதோ
புத்தி! புத்தி! புத்தி வந்தால் கிடைக்காதோ
முக்தி! முக்தி! முக்தி!
சக்தி! சக்தி சக்தியென்றால்
வெற்றி! வெற்றி! வெற்றி!

- விஷ்ணுதாசன்