மங்களம் தரும் மங்கள வார விரதம்



செவ்வாய்க்கிழமை அன்று மேற்கொள்ளும் விரதம், மங்களவார விரதம். செவ்வாய்க்கிழமையை மங்கள வாரம் என்றும் அழைப்பார்கள். செவ்வாய்க்கிழமை, மங்களகரமான நாள். அந்த நாளில் இறைவனை வழிபட்டால் சர்வ மங்களமும் கிடைக்கும். ஆமாம், எந்தவிதமான வேண்டுகோளும் நிறைவேற செவ்வாய்க்கிழமையன்று சிலர் சக்தி வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கலாம். குறிப்பாக அவ்வாறு செவ்வாய்க் கிழமை ராகுகாலத்தில் துர்க்கையை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

கயிலாய மலையில் கல்யாண விசேஷம். பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் கல்யாணம். ஈரேழு உலகங்களிலிருந்தும் தேவர்கள், கின்னரர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று எல்லோரும் வந்து குவிந்துவிட்டார்கள். இதனால் கயிலாயத்தில் பாரம் அதிகமாகியது; உலகின் வடக்குப் பக்கம் தணிந்து, தெற்குப் பக்கம் உயர்ந்தது. உடனே பரமேஸ்வரன் அகஸ்திய முனிவரை அழைத்தார். அவருடைய உருவம்தான் சிறியது; ஆனால், அவருடைய தவவலிமை அபார பலம் கொண்டது.

காவிரி நதியையே தன் கமண்டலத்தில் அடக்கிவைத்தவராயிற்றே! அவரிடம், ‘நீங்கள் தென்பகுதிக்குப் போய் பூமியை சமன் செய்யுங்கள்,’ என்று ஈசன் அவரைப் பணித்தார். உடனேயே அகஸ்தியர் தென்திசை நோக்கிப் புறப்பட்டார். அவர் போன வழியில் ஒரு பெரிய மலை அவரை வழிமறித்தது. அந்த மலைக்கு விந்தியன் என்று பெயர். ஒரு சாபம் காரணமாக, மலையாக உருமாறியிருந்த ஓர் அரக்கனுடைய தோற்றம்தான் அது.

பெருமான் தனக்கு இட்டப் பணியைச் செய்யப் போகும்போது குறுக்கிட்ட இந்த இடையூறைத் தகர்க்க நினைத்தார் அகஸ்தியர். அந்த மலையைத் தன் தவவலிமையால் பொடிப் பொடியாக்கிட முடியும்தான். ஆனாலும், தெய்வ அனுக்ரகத்தோடுதான் அந்த வேலையைச் செய்யத் தீர்மானித்தார். உடனே அங்கேயே அம்பிகையை துர்க்கை வடிவாக மனதில் இருத்தி பிரார்த்தனை செய்தார். அவர் அவ்வாறு அம்பிகையைத் துதிக்கத் துதிக்க, அவர்கிடுகிடு வென்று வளர்ந்து தன்னைத் தடுத்த விந்திய மலையையும் விட உயரமானார்.

பிறகு மலையின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தார். அவ்வளவுதான், அந்த மலை அப்படியே பொடிப்பொடியாக உதிர்ந்துபோயிற்று. சுயவுரு கொண்ட அரக்கன் அகஸ்தியர் காலில் விழுந்தான். தன்னை முற்றிலுமாக அழித்துவிடாதபடி வேண்டிக்கொண்டான். அகஸ்தியரும் அவன்மேல் பரிதாபப்பட்டு அவன் குணத்தை மாற்றி அருள் புரிந்தார். பிறகு, அகஸ்தியர் தென்திசை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். இப்படி அகஸ்தியர் விந்தியனுக்கு சாபவிமோசனம் அருள்வதற்காக துர்க்கையை வேண்டிக்கொண்டாரே, அது ஒரு ராகுகாலம்!

அதாவது, ராகுகாலத்தில் துர்க்கையை பூஜித்தால் நம் பகையெல்லாம் போய்விடும் என்று அர்த்தம். ஆனால், நம் பகை என்பது யார் அல்லது எது? நம் மனம் எப்படியெல்லாம் நினைத்து அதன்படி நடக்கிறதோ அதேபோலதான் நமக்கு வெளியிலிருந்தும் வரவேற்போ எதிர்ப்போ உண்டாகும். அதனால் இந்த ராகுகால பூஜையில் நாம் பகையை வெல்லவேண்டும் என்று வேண்டிக்கொள்வது, நம் மனதில் இருக்கக்கூடிய தீய எண்ணங்கள் அழியவேண்டும் என்று வேண்டிக்கொள்வதும்தான்.
   
அவ்வாறு அகஸ்தியர் வழிபட்ட துர்க்கையை ‘வனதுர்க்கை’ என்பார்கள். காட்டில் வழிபடப்பட்டவள் அல்லவா? துர்க்கை என்றாலேயே துன்பத்தைப் போக்குபவள் என்று அர்த்தம். அதாவது, மங்களங்களைத் தருபவள். இப்படி மங்களம் தரும் துர்க்கைக்கு மங்கள சண்டிகை என்றும் பெயர் உண்டு. அதாவது, மங்கள வாரத்தில் - செவ்வாய்க்கிழமையில் - வழிபட்டால், அதுவும் ராகு காலத்தில் வழிபட்டால் மங்களங்கள் எல்லாம் தருவாள் இந்த துர்க்கை.
   
நவகிரகங்களில் அங்காரகன் என்றழைக்கப்படுபவர்தான் செவ்வாய். இந்த கிரகத்துக்கு மங்களன் என்றும் ஒரு பெயர் உண்டு. இந்த அங்காரகனும் துர்க்கையை வழிபட்டு பலனடைந்திருக்கிறான். இவனுக்கு உகந்த கிழமை அவனுடைய பெயரிலேயே இருக்கும் செவ்வாய்தான். இந்த செவ்வாய்க்கிழமையில், ராகுகாலத்தில் தேவியை வழிபடும் எல்லோருக்கும், எல்லா நன்மைகளும் கிடைக்கவேண்டும் என்று அவன் துர்க்கையை வேண்டிக்கொண்டிருந்திருக்கிறான்.

இந்த துர்க்கை வழிபாட்டால், திருமணத் தடையுள்ள பெண்களுக்கு விரைவில் கல்யாணம் ஆகும்; திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது? செவ்வாய்க்கிழமையன்று காலையிலேயே எழுந்து நீராடிவிட்டு வீட்டில் இருக்கும் அம்மன் படம் அல்லது சிலைக்கு முன்னால் விளக்கேற்றி வையுங்கள். அந்த விளக்கின் திரி கிழக்கு பார்த்தபடி இருக்கட்டும்.

அர்ச்சனைக்கு சிவப்பு வண்ணம் கொண்ட செம்பருத்தி, அரளி, தாமரை, பிச்சிப்பூ அல்லது செண்பகப்பூ என்று வாங்கி வைத்துக்கொள்ளலாம். துர்க்கை ஸ்லோகம் அல்லது அஷ்டோத்திரம் படித்துக்கொண்டே பூக்களால் அர்ச்சனை பண்ணலாம். துர்க்கை கவசம், துர்க்கை சந்த்ரகலா ஸ்துதி, துர்க்கா சப்த ஸ்லோகி என்று எந்த ஸ்லோகத்தை வேண்டுமானாலும் சொல்லலாம். மனப்பாடமாகத் தெரிந்தால் உள்ளம் உருகிச் சொல்லலாம்; அல்லது, புத்தகத்தை வைத்தும் படிக்கலாம். அதற்குப் பிறகு வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம்.

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மாலை மூன்று முதல் நாலரை மணிவரை. இந்த பூஜைக்காக முன்கூட்டியே சில எலுமிச்சம்பழங்களை வாங்கிவைத்துக்கொள்ளலாம். பழங்களை இரண்டு பாதியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இரண்டு பாதியையும் பிழிந்து, இந்த மூடிகளை அதன் வெளிப்பக்கம் உள்ளே வருவதுபோல குழியாக்கிக்கொள்ளுங்கள். இதை அகல் விளக்கு மாதிரி பயன்படுத்தலாம். அவரவர் சக்திக்கேற்ப 3, 5, 7 என்ற எண்ணிக்கையில் மூடிகளை விளக்குகளாகத் தயார் செய்துகொள்ளலாம்.

இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் இந்த மூன்றில் எது முடியுமோ அதை இந்த மூடியில் விட்டு, பஞ்சுத் திரியைப் போட்டு விளக்கேற்றி துர்க்கை படம் அல்லது சிலைக்கு முன்னால் வைத்துக்கொள்ளலாம். பூஜையின் நிறைவாக அவல், தேன், பசும்பால் அல்லது சர்க்கரைப் பொங்கல் என்று நைவேத்யம் செய்யலாம். காலையில் குளித்துவிட்டு உபவாசம் இருப்பவர்கள் இந்த ராகுகால பூஜை முடியும்வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பது வழக்கம்.

இப்படி முழுநாள் உபவாசம் இருக்க முடியாதவர்கள் நடுநடுவே கொஞ்சமாக பால் அல்லது கஞ்சி என்று சாப்பிட்டுக்கொள்ளலாம். பொதுவாக தொடர்ந்து பதினோரு வாரம் இப்படி விரதமிருந்து துர்க்கை வழிபாடு செய்வது சம்பிரதாயம். நடுவில் ஏதேனும் சந்தர்ப்பத்தால் ஒரு வாரம் முடியவில்லை என்றால், இதைக் கூடுதலாக ஒரு வாரத்துக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.

இப்படி பதினோரு வாரம் பூரணமான நம்பிக்கையோடு செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் விரதம் இருந்து துர்க்கையை வழிபட்டால், எல்லா கஷ்டங்களும் போகும். கன்னியருக்கு கல்யாண யோகம் வரும். கல்யாணமான பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் நீடிக்கும். கீழ்க்காணும் துதியை மங்களவார விரதம் மேற்கொள்பவர்கள் தொடர்ந்து சொல்லி வரலாம். இதனால் செவ்வாய் தோஷமும் அதன் கெடு விளைவுகளும் மட்டுப்படும்; கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தே போகும்.

ஓம் அங்காரகாய வித்மஹே ரக்தவர்ணாயதீமஹி தந்நோ பௌம: ப்ரசோதயாத்
ப்ருத்வீ அதிதேவதா, ஸ்கந்த ப்ரத்யதிதே
வதா ஸஹித அங்காரக க்ரஹாயநமஹ.

பொதுப்பொருள்: அங்காரகன் எனும் செவ்வாய் பகவானே, நமஸ்காரம். ரத்தச் சிவப்பு வர்ணம் கொண்டவரே, பௌமன் என்றழைக்கப்படுபவரே, நமஸ்காரம். ப்ருத்வீயை அதிதேவதையாகவும், ஸ்கந்தனை ப்ரத்ய அதிதேவதையாகவும் கொண்ட அங்காரகப் பெருமானே, நமஸ்காரம். விரதம் முடிந்த பிறகு சிதம்பரத்துக்கு அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்று ஈஸ்வரனையும், அங்கே தனிச் சந்நதி கொண்டிருக்கும் செவ்வாய் பகவானையும் தரிசித்து வாருங்கள். இயலாதவர்கள் பக்கத்து சிவன் கோயிலில் சிவபெருமானையும், அங்குள்ள நவகிரக சந்நதியில் செவ்வாயையும் வணங்குங்கள்.