ரோகங்களைப் போக்கும் ராக்காயி அம்மன்!



மதுரை அருகே உள்ள அழகர்மலைமீது நூபுரகங்கை உற்பத்தியாகும் இடத்திற்குப் பக்கத்தில் கோயில்கொண்டு அருள்பாலித்து வருகிறாள் ராக்காயி அம்மன்.நூபுர கங்கை ஊற்றாக உற்பவித்து ஆறாக ஓடுகிறது! இது பிற எல்லா தீர்த்தங்களுக்கும் தாயாக விளங்குகிறது,

கொடிய பாவங்களைப் போக்கவல்லது, திருமாலின் திருவடிக்குப் பணி செய்யும் திருமகளைப் போன்று சிறப்புமிக்கது என்றெல்லாம் போற்றப்படுகிறது.பிரம்ம தேவன், திரிவிக்ரமாவதார மூர்த்தியின் சிலம்பணிந்த கமலப் பாதங்களை தன் இரு கரங்களாலும்  அபிஷேகிக்க, அந்தத் திருவடித் தாமரையில் பட்ட புனித நீர் இந்த மலையில் வீழ்ந்து நூபுர கங்கை என்னும் பெயர் பெற்றது என்றும், இந்த தீர்த்தத்தில் நீராடுவது, கங்கையில் நீராடுவதைக் காட்டிலும் உயர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.

இறைவன் பொற்பாதச் சிலம்பிலிருந்து தெறித்துப் பெருகியதால் இந்த ஆறு சிலம்பாறு என்றும் கூறப்படுகிறது. இந்த நதியைக் கண்ணால் பார்த்தாலேயே பாவங்கள் போகும் என்று நம்பப்படுகிறது. அப்படி இருக்க இந்தத் தீர்த்தத்தைத் தொடுவதாலும், நீரைப் பருகுவதாலும், அதில் நீராடுவதாலும்,  தோஷங்கள் நீங்கி, நோய்கள் மறைந்து, செல்வ வளம் மிக்கவர்களாக விளங்குவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

இந்த தெய்வீக நதிக் கரையில் செய்யப்படும் தானங்கள், வேள்விகள், ஜெபங்கள் எல்லாம் மானிடர்களுக்கு ஆயிரம் மடங்கு புண்ணியமாகப் பெருகி விடுகிறது என்றும் இந்த நூபுர கங்கா நதியின் அலைகளிலிருந்து வீசும் காற்று,  எங்கெல்லாம் பரவுகிறதோ, அங்கே வசிப்பவர்களுக்கெல்லாம் முக்தி கிடைக்கிறது என்பது ஐதீகம்.

நூபுர கங்கை மாதவி மண்டபம் என்னும் இடத்தில் இருந்து உற்பத்தியாவதாகக் கூறப்படுகிறது. இந்த நூபுர கங்கை பாயும் இடத்தில்தான் ராக்காயி அம்மன் கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலுக்கு சற்றுத் தொலைவில் உள்ளது. சுற்றிலும் அடர்ந்த காடுகள் கொண்ட மலைப் பிரதேசம். இந்தக் காடுகளில் ஏராளமான மூலிகைச் செடிகள், கொடிகள், மரங்கள் இருக்கின்றன.

இந்த மூலிகைக் காடுகளின் வழியாக சிலம்பாறு பாய்ந்து வருவதால் அந்த நீருக்கு இயற்கையாகவே ஏராளமான மருத்துவ சக்தி இருக்கிறது. அதோடு புனிதத் தன்மையும் சேரும்போது அந்த ஆற்றில் ஒரு முறை நீராடி எழுந்தாலே, அந்த நீரைப் பருகினாலே வயிறு சம்பந்தப்பட்ட மற்றும் பிற நோய்களும் மறைந்து போகின்றன, பல நாட்கள் தொடர்ந்து நீராடினால் மனநோய்களும் மறைகின்றன என்கிறார்கள்.

பழமுதிர்ச்சோலையில் இருந்து சற்று மேடாகப் போகும் வழியில் சிறிது தூரம் நடந்து, ஏராளமான படிகளைக் கடந்து ராக்காயி அம்மன் கோயிலை அடையலாம்.வழியில் ஏராளமான குரங்குகள். படிகள் ஏறிச் செல்பவர்கள் பொரிகடலை விற்பவர்களிடமிருந்து பொரி வாங்கி குரங்குகளுக்குப் போட்டு விட்டு ஆஞ்சநேயா என்று சொல்லி பக்தி சிரத்தையுடன் கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள். படிகளுக்கு மேலே, உச்சியில் பெரிய மண்டபம் காணப்படுகிறது. இங்கே தங்களுடைய உடைமைகளை வைத்து விட்டு உடன் வந்த யாராவது ஒருவரை அவற்றைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு, குளிப்பதற்கு என்று தனியாக உள்ள பகுதியில் கிணறு போன்ற அமைப்பிலிருந்து பக்கெட்டில் நீர் முகந்து தலையில் ஊற்றிக் குளிக்கிறார்கள்.
காடு வழியாக வரும் நீர் பக்தர்களின் சௌகரியத்திற்காக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள். ஆடி அமாவாசை, தை அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.

கோயிலுக்கு வருபவர்கள் எல்லாரும் நீராடி விட்டு ஈர உடையுடன் ராக்காயி அம்மனை தரிசிக்க மிகவும் குறுகிய பாதையில் வரிசையில் வருகிறார்கள். நின்ற கோலத்தில் வெள்ளித் திருமுகம் அணிந்து ராக்காயி அம்மன் அருள்புரிகிறார். ரோஜாப்பூ மாலைகள் மற்றும் மதுரையின் சிறப்பு அம்சமான குண்டு மல்லிகைப் பூச்சரங்களை அணிந்து வீற்றிருக்கிறாள்.

சிறிய கோயில் சந்நதிக்கு விமானம் இல்லை. அம்மனிடம் தம் குறைகளைச் சொல்லி பக்தர்கள் வேண்டிக் கொண்டு, நம்பிக்கையுடன் சந்நதியை விட்டு
நகருகின்றனர்.வீட்டிற்குச் செல்லும்போது மறக்காமல் நூபுர கங்கையின் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு போய், வீட்டில் தெளிப்பதாகவும், வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்குப் பிரசாதமாகத் தருவதாகவும் சொல்கிறார்கள். நூபுர கங்கையில் நீராடி ராக்காயி அம்மனைத் தொழுதுச் சென்றால் மருத்துவர்களுக்கும் என்னவென்றே புரியாத பல உடல் கோளாறுகள் தீர்கின்றன என்பது பலரது அனுபவ நம்பிக்கையாக இருக்கிறது!

- இளங்கோவன்


தடைகள் தவிடுபொடியாகும்(கொம்பநாயக்கன் பாளையம்)

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு குப்பண்ணன் என்ற பிரம்மச்சாரி, கொம்பநாயக்கன்பாளையம் பகுதியில் வாழ்ந்து வந்தார். ஒருநாள் முருகன் அவரது கனவில் தோன்றி, ‘இந்த ஊரின் வடபகுதியில் உள்ள கானகத்தில் என் கால்பட்ட இடம் ஒன்று உள்ளது. அங்கே எனக்கொரு ஆலயம் எழுப்பி வழிபடு!’ என்று கூறினார். அடுத்த நாளே ஆலயம் கட்டும் பணியில் இறங்கினார் குப்பண்ணன்.அப்போதைய ஆங்கிலேயர் கெடுபிடி இருந்தது. குப்பண்ணனின் முயற்சிக்கு இடையூறாக இருந்த ஆங்கிலேய அதிகாரிக்கு திடீரென பார்வை முற்றிலும் போய், உடல் அரிப்பும் ஏற்பட்டது.

தன் தவறை உணர்ந்த அவர் குப்பண்ணனிடம் மன்னிப்பு கேட்க, அவரும் முருகனை மனமுருகி வேண்டிக் கொள்ள, அதிகாரியின் குறைகள் நீங்கின. அவரே கோயிலுக்கு வரவேண்டிய மரச்சட்டங்களைப் பாதுகாப்பாகப் போய்ச் சேர உதவினார்.அந்த பாலதண்டாயுதபாணி, இன்றும் பக்தர்களுக்கு நேரும் தடைகளை எல்லாம் விலக்கி அவர்கள் வாழ்வில் இனிமை சேர்க்கிறார் - குறிப்பாக திருமணத் தடைகள். தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெற வேண்டி ஒவ்வொரு ஆண்டும் இங்கே ‘சுயம்வரா பார்வதி யாகம்’ நடத்தப்படுகிறது.

இதில் கலந்துகொள்பவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. யாக பூஜையில் கலந்துகொண்டால், பாலதண்டாயுதபாணி திருவருளால் திருமணம் 48 நாட்களில் நிச்சயமாகிறது என்கிறார்கள். ஒவ்வொரு வைகாசி 26ம் தேதியன்று கோயில் ஆண்டு விழாவை ஒட்டி சுயம்வரா பார்வதி யாகமும் அன்னதானமும் நடத்தப்படுகின்றன.

இங்கே தரப்படும் பிரசாதம் பல நோய்களையும் குணப்படுத்தும் வல்லமை பெற்றது. மனநோயாளிகளும் நலம் பெறுகிறார்கள். வேலை மாறுதல் விரும்புகிறவர்களும் இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள். யாக பூஜையில் கலந்துகொள்ள வருபவர்கள் கால் கிலோ உதிரிப்பூவும், இரண்டு முழம் பூச்சரமும், ஓர் எலுமிச்சம் கனியும் கொண்டு வருகிறார்கள். ஜாதகத்தை இறைவனின் காலடியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள்.
ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அருகே டி.ஜி. புதூர் சாலையில் இக்கோயில் அமைந்திருக்கிறது.

முருகன் பாதம்(கிணத்துக்கடவு) கோவை மாநகரின் தென்திசையில் உள்ள கிணத்துக்கடவு எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று, ‘பொன்மலை’. இம்மலையில் முருகனின் திருப்பாதங்கள் பதிந்துள்ளன. பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது.

கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார். அவர் கனவில் பழநி ஆண்டவர் தோன்றி, ‘வடக்கே செல்லும் பாதையில் ஒரு குன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அருகே என் திருப்பாதங்கள் பதிந்துள்ளன.

அங்கே வந்து என்னைத் தரிசிக்கவும்,’ எனக் கூறினார். அதன்படி கோப்பண மன்றாடியார் அத்திருப்பாதங்களுக்கு பூஜையும் உற்சவமும் நடத்தி வந்தார். இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் கோயில் திருப்
பணிகளைச் செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்.  பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத வள்ளி சுனை (தீர்த்தம்) உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோயிலின் உள்ளே, வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டுகிறார்.

ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிரதான சந்நதியின் தென்பகுதியில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி சந்நதிகள் அமைந்துள்ளன. கோயிலின் பின்புறம் முருகன் பாதம் பதிந்த பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர். கோவை-பொள்ளாச்சி பாதையில் கோவையிலிருந்து 13வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது, கிணத்துக்கடவு.சுகமான வாழ்வருளும் சுவாமிநாதன்(குமரன் குன்றம்)

சென்னை குரோம்பேட்டை அருகிலுள்ள குமரன் குன்றம் முருகன் கோயிலின் ராஜகோபுரத்திற்கும் விநாயகர் சந்நதிக்கும் இடையில் கம்பீரமாக மண்டபம் ஒன்று உள்ளது. இப்புதிய மண்டபம் வழியாக சென்று மலையடிவாரத்தின் தென் புறத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் தனிக் கோயிலாக அமைந்துள்ள  சித்தி விநாயகர் சந்நதியையும், வடபுறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட  வள்ளி தேவசேனா சமேதராக ஷண்முகர் சந்நதியையும் தரிசிக்கலாம்.

ஷண்முகர், தன் மாமனைப் போன்று சங்கு, சக்ரதாரியாக காட்சியளிப்பது மற்றொரு சிறப்பாகும். மலை ஏற முடியாதவர்கள் முருகப் பெருமானை அடிவாரத்திலிருந்தபடியே வழிபடலாம். மலையடிவாரத்தின் தெற்கில் நவகிரகங்களுக்கு தனிக்கோயில் உள்ளது. சற்று மேலே சென்றால் புதிதாக இடம் மாற்றம் செய்யப்பட்ட தனிச்சந்நதியில் இடும்பனை வணங்கலாம்.

மகா மண்டபத்தில் நின்ற கோலத்தில் ஒரு கையில் தண்டம் ஏந்தி, மற்றொரு கரத்தை தொடையில் வைத்தவாறு இரு திருக்கரங்களுடன் சுவாமிநாத ஸ்வாமி உற்சவரையும் அவருக்கு எதிரில் அமர்ந்த நிலையில் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட  அருணகிரிநாதரையும் தரிசித்து உள்ளே சென்றால் கருவறையை அடையலாம்.கருவறையினுள்ளே முருகப்பெருமான்  சுவாமிநாத ஸ்வாமி என்ற திருப்பெயருடன் வடக்கு நோக்கிய வண்ணம் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார்.

வலது திருக்கரத்தில் தண்டம் தாங்கியும் இடது திருக்கரத்தை இடது தொடையைத் தொட்ட வண்ணமும் (ஊருஹஸ்தம்) ஊர்த்துவ சிகை மேல் நோக்கியும் பூணூல் கௌபீனம் தரித்தும் கம்பீரமாக புன்முறுவலுடன் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அழகன் முருகனின் அற்புத தரிசனம் கண்டு மன நிறைவு கொள்ளலாம்.

- ந.பரணிகுமார்

தஞ்சாவூர்

சிறை காத்த ஐயனார்

அது எட்டாம் நூற்றாண்டு. பல்லவர்கள் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பிரதேசங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒவ்வொரு பிரதேசத்திற்கும் மன்னர்களை அமர்த்தி ஆண்டுவந்த காலம். அந்தவகையில் தஞ்சை முத்தரையர் ஆட்சிக்குட்பட்டது. இங்கு என்ன விளைந்தாலும் அதில் தங்களுக்கொரு பாகம் என ஓலை நறுக்குகளில் எழுதி வாங்கி உறுதி செய்து கொண்டனர், பல்லவர்கள். சங்ககாலத்துக்கு சமீபமான காலம். மதங்கள் மக்களின் வாழ்வடிப்படையில் மலர்ந்த பொன்னான தருணம். நகரம் காக்க ஐயனார், கிராமம் வளர வேப்ப மரத்தின் கீழ் புற்று. பெரும் பிரதேசத்தையே ஆள மாகாளி என்று ஆங்காங்கு எல்லைக் கடவுளை மக்கள் பிரதிஷ்டை செய்தனர்.

அத்தகைய பல பிரதிஷ்டைகள் மக்கள் கனவில் சக்திகள் தோன்றி, தாம் அமரும் இடம் சுட்டிக்காட்டியபடி நிகழ்ந்தவை. அருவமாக விளங்கினாலும் அருகே வருவோரின் அகத்தையும், புறத்தையும் ஒருசேரப் பார்க்கும் தீர்க்கம் மிக்கவை. அப்பேற்பட்ட அளப்பரிய ஆற்றலை, சிற்பி செதுக்கிய கற்களில் மந்திர உச்சரிப்பால் உயிரோடு செலுத்தும் வல்லமையை மக்கள் பெற்றிருந்தார்கள்.

அப்படிப்பட்ட   ஒரு சக்தியானது தஞ்சை எல்லையான பள்ளி அக்ரஹாரம் என்ற தலத்தில் நிலை கொண்டிருந்தது, பூமியில் புதைந்திருந்தபடி. ஆனால், தனக்கருகே வருவோரை சிலிர்க்கச் செய்தது. ஆம், சுயம்புவாகப் பூத்த ஐயனார் எனும் சாஸ்தா, தம்மை மண்ணுக்குள் மறைத்து சரியான தருணத்திற்காக காத்திருந்தார். அவரருகே குளிர் தென்றல் வீசும் வேம்பும் தழைத்திருந்தது.

யாத்ரீகராக தஞ்சை வந்த ஒரு பெரியவர், நெடுமரமாக இருந்த வேம்பின் கீழ் அமர்ந்தார். நடந்து வந்த களைப்பு குளிர்த் தென்றலால் மெல்ல மறைய, கண்ணயர்ந்தார். பூமிக்குள் இருந்த சாஸ்தா பெரியவரின் கனவில் தோன்றிச் சிரித்தார். ஐயனின் அழகில் மயங்கியவர் சட்டென்று விழிப்புற்றார். பெருவட்டப் பேரொளியொன்று சுழன்று தானே சுருங்கி பூமியில் மறைந்தது. பெரியவர் விதிர்த்துப் போனார். ஊருக்குள் விரைந்தார். தம் கனவு பற்றியும், ஒளி ஒடுங்கி பூமிக்குள் மறைந்தது பற்றியும் கூற, ஊரார் அதிசயித்தனர். அவர் சுட்டிய இடத்தருகே சென்று பார்த்தார்கள்.

பிறகு அகழ்ந்து பார்த்தார்கள்.  ஏழாவது அடியில் நங்கென்று சத்தம் கேட்க நிறுத்தினார்கள். கைகளால் ஓசை வந்த இடத்தை நீவி எடுக்க அழகாய், வழவழப்பாய் பூவாய் மலர்ந்த முகத்தோடு சாஸ்தா சிலை கிடைத்தது. வெளியே எடுத்து வைக்க வானம் மழையாகப் பொழிந்து திருமஞ்சனம் செய்தது.
ஊர் மக்கள் தனிச் சந்நதியில் அமர்த்தி, அவரின் வலப்புறத்தே கருப்பசாமியையும் நிறுவினர். இருவரும் பொலிந்து விளங்க, தஞ்சையின் வளம் பெருகியது. சாஸ்தா ஊரைக் காத்தார். ஊர் உண்டு, உறங்கி, உழைத்து, நிம்மதியாக வாழ்ந்தது. ஐயன் அன்பை அள்ளித் தெளிப்பார். கூடவே, அடாது செய்வோரை விடாது விரட்டுவார். அப்படியொரு சந்தர்ப்பமும் வந்தது. அதுவே அவர் பெயராகவும் மாறியது.

அந்தி நெருங்கி இருள் கருக்க கூடு நோக்கித் திரும்பும் பறவைகளாக மக்கள் தங்கள் குடில்களுக்குள் சென்றனர். அவர்களில் ஒரு பெண், விரைவாகத் தன் வீடு நோக்கி நடந்தாள். ஐயனாரின் கோயிலுக்கு ஒரு கல் தொலைவில் அவளைக் கண்ட கொள்ளைக் கூட்டம் பின் தொடர்ந்தது. குதிகால் தெறிக்க ஓட்டம் பிடித்தவளை வேகமாக துரத்தியது நரிக்கூட்டம்.

ஐயனார் கோயில் என்று தெரியாமலே கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக கோயிலை நெருங்கினாள். ‘இங்கே வந்து விடு நான் பார்த்துக் கொள்கிறேன்’ என வாஞ்சையாக ஒரு முகம் தெரிய அதை நோக்கி நகர்ந்தாள். தொடர்ந்தவர்கள் மேலும் நகராது நின்றுவிட்ட அவளை நோக்கிப் பாய்ந்தார்கள். ஐயனார் கோயில் அமானுஷ்யமாய் திறந்து அவளை அப்படியே உள் வாங்கி சட்டென்று கதவடைத்துக் கொண்டது. திருடர் கூட்டம் மிரண்டது. ஏதோ ஒரு சக்தி, கன்னத்தில் ஓங்கி அறைய கைகால் இழுத்துக்கொண்டு, முகம் கோணி தரையில் விழுந்தனர். உள்ளே ஈர்க்கப்பட்டவள், மூர்ச்சையாகி ஐயனாரின் பாதத்தில் படர்ந்தாள்.

ஊரிலுள்ளோருக்கு இந்தச் செய்தி பரவியது. விடியற்காலையில் வந்து பார்த்து அதிர்ச்சியுற்றார்கள். வீழ்ந்து கிடந்த கொள்ளையருக்கு  விலங்கிட்டனர். பூட்டி யிருந்த  மூலவர் கருவறைக்குள் இந்தப் பெண் எப்படிச் சென்றாள் என்று அனைவருக்கும் வியப்பு. ஐயனின் கருணையை எண்ணி கண்ணீர் சொரிந்தனர். ‘சிறை காத்த ஐயனார்’ என திருப்பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

இன்றும் அதே பொலிவோடு ஐயனார் வீற்றிருக்கிறார்.சிறியதானாலும் கீர்த்திமிக்க கோயில். தொன்மையின் இனிமையாக கோயில் ஒருபக்கம் விளங்க, ஆலமரமும், பனையும் ஒன்றோடொன்று பிணைந்து வானுயர வளர்ந்து நிற்கும் அழகு பிரமிப்பூட்டுகிறது. கருவறையின் அருகே இருக்கும் நாக்கொட்டை மரம் மிகச் சிறந்த மூலிகை மரமாகக் கருதப்படுகிறது.

மழலைச் செல்வம் பெறவேண்டி, இம்மரத்தில் தொட்டில் கட்டி, இதன் இலைகளை உண்டு, மருத்துவமும், ஐயனாரின் மகத்துவமும் இணைய, குழந்தைச் செல்வம் பெறுகிறார்கள். அதன் நன்றியாக ஐயனாருக்கு அபிஷேகம் புரிபவர்களை அனுதினமும் இங்கு காணலாம். அதுமட்டுமில்லாது அன்பாற் சிறை காத்த ஐயனாரை வழக்குகள், கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில் சிக்கிய நாணயமானவர், சூழ்நிலையால் சிறை செல்ல நேர்ந்த நேர்மை யுள்ளோர் ஆகியோர் வணங்கி மிக எளிதாக சிறை, வழக்குகளிலிருந்து மீண்டு, நல்வாழ்வு பெறுகிறார்கள்.

இக்கோயிலின் இன்னொரு பிரதானச் சிறப்பு, கருப்பசாமி. தங்கள் குறைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி இவர் பாதத்தில் சமர்ப்பித்துவிட, அக்குறைகளை எளிதாகத் தீர்த்து அருள்வாழ்வு கூட்டுகிறார். கருப்பசாமி சந்நதிக்கருகேயே லாடசந்நியாசி, பேச்சாயி, முத்தால் ராவத்தன், பிடாரி போன்ற பரிவார தெய்வங்கள் வீற்றிருந்து கோயிலை இன்னும் பேரதிர்வுள்ளதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சந்தன அலங்காரத்தில் குளிர்ந்திருக்கும் ஐயனாரை தரிசிக்க இனிய வாழ்வு அமையும் என்பதில் ஐயமில்லை.இக்கோயில் தஞ்சாவூரிலுள்ளபள்ளிஅக்ரஹாரத்திலிருந்து, கும்பகோணம் பைபாஸ் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

- கிருஷ்ணா