தோஷங்களெல்லாம் போக்கியருளும் தெரிசனங்கோப்பு ஈசன்



கன்னியாகுமரி

உமாகல்யாணி

அரியும் சிவனும் ஒருவரே என்பதை, சங்கரன் கோயிலில் உள்ள சங்கர நாராயணர் திருக்கோயில் உலகிற்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.  ராமபிரான் திருமாலின் மறுவடிவம்தானே! அவரே அரனுக்கு இரண்டு சிவாலயங்களை நிறுவி, அரியும் அரனும் ஒருவரே என்பதை மெய்ப்பித்துள்ளார். ஒன்று உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம்; மற்றது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தெரிசனங்கோப்பு ராகவேஸ்வரம்!

தசகண்ட ராவணனை வதம் செய்த பாவம் தீர, ராமபிரான் நிறுவியது ராமேஸ்வரம்; அவனது தங்கை தாடகையை வதம் செய்த பாவம் தீர நிறுவியது ராகவேஸ்வரம். இரண்டு ஆலயங்களுமே ராமபிரானது பெயராலேயே விளங்குகின்றன.செய்த பாவங்கள் விலக, அலைகடலில் நீராடி ராமநாதரை வழிபடும் தலம் ராமேஸ்வரம்! செய்த தீவினைகள் விலக ஆற்றிலே நீராடி ராகவேஸ்வரரை வழிபடும் தலம், திருசரம் கோர்ப்பு எனும் தலம். தற்போது இவ்வூர் தெரிசனங்கோப்பு என்று அழைக்கப்பெறுகிறது.

ராமபிரான் நிறுவிய இரு சிவாலயங்களும் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்திருப்பது, நமக்குச் சிறப்பு! விசுவாமித்திர மகரிஷியும், பல முனிபுங்கவர்களும் நடத்திக் கொண்டிருந்த யாகங்களை, தாடகையும் ஏனைய அரக்கர்களும் சேர்ந்து சிதைத்து விட்டனர். அதனால் அவர்களை அடக்குவதற்காக விசுவாமித்திரர், ராமரையும் இலக்குமணனையும் தென்னகத்திற்கு அழைத்து வந்தார் என்று ராமாயணம் கூறும்.

அப்படி வந்தபோது தவத்திற்கு இடையூறு செய்த தாடகையை ராமபிரான் வதம் புரிய நேரிட்டது. அந்த இடம்தான் திரு சரம் கோப்பு எனப் பெயர் பெற்றது. பின்னர் அது மருவி தெரிசனங்கோப்பு என்று ஆகி விட்டது. சரம் என்றால் அம்பு. திருசரம் என்றால் ராமபிரான் கோத்த அம்பு என்று பொருள்.

அரக்கியே ஆனாலும் தாடகை ஒரு பெண் அல்லவா! எனவே, பெண்ணைக் கொன்ற பாவம் நீங்க ராமபிரான் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். இந்தச் சிவனாரை ராகவேஸ்வரர் என்று அழைக்கலாயினர்.பாலகாண்ட காலத்தில் எழுப்பப் பெற்ற ராகவேஸ்வரர் ஆலயம், யுத்த காண்ட காலத்தில் எழுப்பப்பட்ட ராமேஸ்வரர் ஆலயத்திற்குக் காலத்தால் முந்தியது ஆகும்.

தெரிசனங்கோப்பை அடுத்துள்ள மலையிலேயே தாடகை வாழ்ந்தாள் என்கிறார்கள். இப்போதும் அந்த மலை, தாடகை மலை என்றே அழைக்கப்பெறுகிறது.ராகவேஸ்வரர் ஆலயம் பழையாற்றின் மேற்கே உள்ளது. தாடகை மலை ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. தாடகை மலையின் தோற்றம் வித்தியாசமாகவும், வியப்பானதாகவும் காணப்படுகிறது.

குருதி தோய்ந்தவாறு, தலைவிரி கோலத்தில் ஒரு பெண் படுத்துக் கிடப்பது போன்று மலை காட்சியளிக்கிறது. இப்போதும் இந்த அரிய காட்சியினை தெரிசனங்கோப்பு ஊரின் கீழ்ப்பகுதியில் நின்று வெகு தெளிவாகக் காண முடியும்.

சொல்லொக்கும் கடிய வேகச்
சுடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தினாள் மேல்
விடுத்தலும் வயிரக் குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தங்காது
அப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன
பொருளெ னப்போயிற் றன்றே!

- கம்பர் காட்டும் தாடகை வதைப் படலக் காட்சி இது!தாடகையே அவ்வாறு மலைவடிவாய்ச் சமைந்து காட்சி தருகிறாள் என்பது, பாமர மக்களின் கருத்து. தெரிசனங்கோப்புக்கு ராகவேஸ்வரரைத் தரிசிக்க வருவோர், தவறாது தாடகை மலைக் காட்சியையும் கண்டு வியந்து செல்கின்றார்கள்.ஆலயம் கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் ராகவேஸ்வரர், உலகநாயகி அம்மன் சமேதராக தரிசனம் அருள்கிறார். ஆலயம், சோழர்காலக் கட்டிட அமைப்பில் உள்ளது. இருபுறமும் படிகளைக் கொண்ட கோயில் முகப்பும், விமான அமைப்பும் சோழர் கட்டிடக் கலையமைப்பிற்குச் சான்றுகளாகும்.

மண்டபங்களில் நிறைய மீன் சின்னங்கள் காணப்படுகின்றன. இச்சின்னங்களோடு பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம் ஆகிய அருகாமையிலுள்ள ஊர்களின் பெயர்களும் பாண்டிய மன்னர்களை நினைவூட்டுகின்றன. எனவே பாண்டிய மன்னர்களோடும் இவ்வாலயம் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது. சோழர்காலக் கல்வெட்டுகளும், சேரர் வழி வந்த வேணாட்டு மன்னர் கல்வெட்டுகளும் இங்கு இருக்கின்றன. ஆக, மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் இங்கு வழிபட்டதோடு, ஆலய நிர்மாணப் பணிகளிலும் பங்கேற்றிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.

ராகவேஸ்வரருக்கும், உலகநாயகி அம்மனுக்கும் தனித்தனியே சந்நதிகளும், பிராகாரங்களும் உள்ளன. கன்னி மூலையில் விநாயகரும், தென்மேற்கு மூலையில் சுப்பிரமணியரும் காட்சி அருளுகின்றார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். இவர் கிரீடம் அணிந்து வித்தியாசமாகக்  காட்சி தருகிறார்.  ஆதிசங்கரரின் திரு உருவம், இங்குள்ள தூண் ஒன்றில் காணப்படுகின்றது. கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய ஆலயங்களுக்கு வருகைதந்த ஆதிசங்கரர், ராகவேஸ்வரர் ஆலயத்திற்கும் வந்திருக்க வேண்டும் என்பது இதனால் புலனாகிறது.

சோழர்கள் வரலாற்றிலே புகழ் பெற்று விளங்கும் ராஜராஜ சோழன், கன்னியாகுமரிக்கு விஜயம் செய்தபோது முதன் முதலில் இவ்வாலயத்திற்கே வருகை தந்ததை இக்கோயிலிலுள்ள அவனது கல்வெட்டுத் தெரிவிக்கிறது. ராஜராஜ சோழனின்எட்டாவது மற்றும் பத்தாவது ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் கிடைத்துள்ளன. இவை ராகவேஸ்வரர் ஆலயத்தின் தெற்குப்பக்க வெளிச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளன. இவை வட்டெழுத்து வகையின.

இவற்றில் காந்தளூர்ச்சாலை மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவன் வெற்றி கொண்ட ஏனைய இடங்களும், பன்னீராயிரம் தீவுகளும் இரண்டு கல்வெட்டிலும் காணப்படவில்லை.இந்த கல்வெட்டுகள் இத்தலத்தை, ‘திருவரன் கோர்ப்பு’ என்று குறிப்பிடுகின்றன. முதல் கல்வெட்டு மூலவரை மூலஸ்தானத்து ஆழ்வார் என்றும், இவ்வாலயத்தினை பெரியகோயில் (பெரிய தளி) என்றும் குறிப்பிடுகிறது. (ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர்  கோயிலையும், ‘பெரிய கோயில்’ என்றுதானே அழைக்கிறார்கள்.)

இக்கோயிலை நிர்வாகம் செய்ய ஒரு கணக்கரையும் ராஜராஜ சோழன் நியமித்ததை  முதல் கல்வெட்டும், புல்லநாராயணன் பெயரில் இக்கோயிலுக்கு ஒரு நந்தாவிளக்கு வழங்கியது, இரண்டாம் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளன. இக்கல்வெட்டுகளை முன்னாள் திருவிதாங்கூர் அரசு தொல்பொருள் ஆய்வுத் துறையினர் புதுப்பித்துள்ளனர்.

ராமபிரான் போர்க்களப் பாவங்களை நீக்கிக் கொள்ள ராமேஸ்வரம், ராகவேஸ்வரம் ஆகிய தலங்களை நிறுவினார். இதை முன் உதாரணமாகக் கொண்டே மன்னர் பெருமக்களும் போர்ப் பாவங்களை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, ராமபிரானின் வழியில் இவ்வாலயங்களை தரிசித்தும், திருப்பணிகள் செய்தும் வந்துள்ளனரோ! மக்களும் இங்குள்ள பழையாற்றில் புனித நீராடி, ராகவேஸ்வரரை தரிசனம் செய்து பாபவிமோசனம் பெறுகிறார்கள் என்பதே உண்மை.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திங்களில் முத்திரை பதிக்கும் வண்ணம், பத்து நாட்கள் வெகுசிறப்புடன் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கல்யாண மகோற்சவட்; மார்கழி மாதத்தில் திருவாதிரை உற்சவம் போன்ற விழாக்கள் நடக்கின்றன.நாகர்கோவிலுக்கு வடக்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது. தெரிசனங்கோப்பு. இது கன்னியாகுமரியில் அமைந்த ராகவேஸ்வரம்! நாகர்கோவிலிலிருந்து நகரப் பேருந்துகள் உங்களை இங்கே அழைத்து வரக் காத்திருக்கின்றன.