நம் தேவைகள் என்னவென்று பகவானுக்குத் தெரியாதா?



பகவத் கீதை 13

சமமனப் பக்குவம் என்பது சாமான்யத்தில் அமைந்துவிடாதுதான். ஆனால், அதற்கான முயற்சிகளைக் கட்டாயம் மேற்கொள்ளத்தான் வேண்டும். ஞானத்தை அடைய இதுதான் பாதை. அப்படி முயற்சிக்கவில்லையென்றால், வருத்தங்களில் வேதனைப்பட்டும், மகிழ்ச்சிகளில் சந்தோஷப்பட்டும் மனம் அலைக்கழியும்.

பொதுவாகவே மகிழ்ச்சியைத் துய்க்க விரும்புபவர்கள் வருத்தத்தை மேற்கொள்ள விரும்புவதில்லை. ஆனால், வருத்தம் என்பதும் மகிழ்ச்சி என்பதும் இருவகை உணர்வுகள்தான். ஒன்றை அனுபவிக்கத் தயாராக இருக்கும்போது, இன்னொன்றைத் தான் பெறவேகூடாது என்று பிடிவாதம் பிடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

உருளைக்கிழங்கு பொரியல் வெகு ஜோர்; ஆனால், பாகற்காய்ப் பொரியல் ஒரே கசப்பு, வேண்டவே வேண்டாம் என்ற, நாக்கோடு நின்றுவிடக்கூடிய உணர்வுகளுக்குள் ஏன் இந்த முக்கியத்துவப் பாகுபாடு? இரண்டையும் ஒன்றேபோல ருசிக்க வேண்டும், சுவைக்க வேண்டும். அதற்கு நாக்கைப் பழக்கப்படுத்த வேண்டும், பக்குவப்படுத்தவேண்டும்!

த்ரைகுண்யவிஷயா வேதா நிஸ்த்ரைகுண்யோ
 பவார்ஜுனநிர்த்வந்த்வோ நித்யஸத்வஸ்தோ
நிர்யோகக்ஷேம ஆத்மவான்

‘‘அர்ஜுனா, வேதங்கள் எல்லாம் (ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய) முக்குணமயமான சம்சாரத்தைப் பற்றித்தான் சொல்கின்றன. ஆகவே வேதச் சொற்களை (அவை எவ்வளவுதான் அலங்காரமாக இருந்தாலும்) அவற்றில் நாட்டம் கொள்ளாதே. (சுகம்-துக்கம், நல்லது-கெட்டது, வளமை-வறுமை என்பன போன்ற) இருமைகளிலிருந்தும் விடுபட்டவனாக இரு. எப்போதும் நடுநிலையாளனாக விளங்கு. ஆத்ம சொரூபத்தில் நிலைத்திரு. அப்படி நிலைத்தால், யோக விஷயங்களிலிருந்து உன்னால் விலகியிருக்க முடியும்.’’

இந்த பிரபஞ்சத்தில் சாத்விகம், ராட்சதம், தாமசம் ஆகிய மூன்று குணங்களும் வியாபித்திருக்கின்றன. அனைத்துவகையான சுவர்க்கங்களும் இதே பிரபஞ்சத்தில் அடங்கியிருக்கின்றன. இவற்றிலிருந்து எப்படி மகிழ்ச்சி, தனம், கீர்த்தி முதலான இன்பங்களை அடைய முடியும் என்று சொல்லும் வழிகாட்டிகளாகவே வேதங்கள் அமைந்திருக்கின்றன. அதாவது, பிரபஞ்சத்தைப் பற்றியதாகவே இருக்கின்றன.
 
அதாவது, இந்த முக்குணங்களுக்கும் மேலான ஒரு விஷயம் இருப்பதை அவை சொல்வதில்லை. வீணான பாழ்களாகக் கருதப்படும் அந்த முக்குணங்களிலிருந்து விடுதலை பெற வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேம்பட்ட பரம்பொருளை உணர, அடைய  முயற்சிக்கவேண்டும். இது எப்படி இயலும்? யோக சாதனத்தைக் கைக்கொண்டால் இயலும். அதாவது, விருப்பு-வெறுப்பு, நன்மை-தீமை, நல்லது-கெட்டது, இன்பம்-துன்பம், சந்தோஷம்-சோகம் போன்ற இரட்டை உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும். அதற்கும், இதற்குமாக ஊசலாடாதபடி மனசைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இப்படிப் பயில்வதே யோகசாதனமாகும். யோகம் என்றால் என்ன? லௌகீக வாழ்க்கையில் இச்சைப்பட்டுப் பொருட்களை சேகரிப்பது. ‘இன்று உங்களுக்கு யோக காலம்’ என்று ஆரூடம் சொல்லப்பட்டால், குறிப்பிட்ட நபருக்கு அவர் விரும்பத்தக்க ஒரு பொருள் அல்லது தனம் கிடைக்கும் என்று அர்த்தமாகும். ‘அவன் யோககாரன்’ என்றால், ‘அவன் சுகிக்கும் அளவுக்கு லோகாயதப் பொருட்களைச் சேகரித்து வைத்திருக்கிறான்,’ என்று பொருள்.

இப்படி சேகரித்து வைத்திருக்கும் பொருட்களால் தனக்குக் கிடைக்கும் சுகம் நீடித்திருக்கவேண்டும், நிலைத்திருக்க வேண்டும் என்று வேட்கை கொண்டு அந்தப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குணம், க்ஷேமம் எனப்படுகிறது. இந்தப் பற்றிலிருந்து விடுபடவேண்டும். அதாவது, பொருள் சேகரிப்பதிலும், அதனைப் பாதுகாப்பதிலும் எந்த அக்கறையையும் காட்டக்கூடாது. ‘லோக க்ஷேமம் (உலக நலன்) எப்படி இருக்கிறது?’ என்றப் பொதுவுடைமைக் கேள்வியை, ‘யோக க்ஷேமம் (சொத்து, சம்பத்து) எப்படி இருக்கிறது?’ என்ற சுயநலக் கேள்வியாக மாற்றிவிடக்கூடாது!

உயிர் தரிப்பதற்காக காற்றைத் தேடி நாமா போகிறோம்? அது தானாக வந்து நம்மைத் தழுவி, நாசிக்குள் சென்று, நுரையீரலை நிரப்பி, இதயத்தைத் துடிக்கச் செய்யவில்லையா? இந்த உடம்பு இந்த உலகத்தில் இத்தனை நாள் உயிர் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆயுள் கணக்குப்படி, அந்தக் காற்றை நமக்காக பகவான்தானே அனுப்பி வைக்கிறார்!

நாம் உயிர்வாழ அக்கறை எடுத்துக்கொண்டிருக்கும் ஈஸ்வரனால் நமக்கான பிற தேவைகள் என்ன என்பதும், அவற்றை நமக்கு எப்போது, எப்படி அனுப்பிவைக்க வேண்டும் என்பதும் தெரியாதா என்ன? இப்படி அவன் நம்மைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கும்போது வீணாக நாம் எதற்காக அவற்றை நாடித் தேடி ஓடவேண்டும்?

தனக்கு மறுநாள் இளவரசு பட்டாபிஷேகம் (பாரத ராஜாங்க சம்பிரதாயப்படி அரசன் உயிரோடு இருக்கும்போது அவனுடைய மகனுக்கு இளவரசுப் பட்டம்தான் சூட்டுவார்கள். தந்தையார் காலம் முடியும்வரை இளவரசன் அரச நடவடிக்கைகளை கவனித்தும், அமைச்சர் பெருமக்கள் முதலான முத்தோர் அறிவுரைகளைக் கேட்டும் போர்க்கலைகளைப் பயின்றும் தன்னைத் தகுதியாக்கிக்கொள்ள வேண்டும்) என்று தன்னிடம் சொல்லப்பட்டபோது ராமன்  தன் முகத்தில் பிரகாசம் காட்டினான்.

ஆனால், மறுநாளே ‘பட்டம் உனக்கில்லை, உன் தம்பிக்கு’ என்று அவனிடம் நேரெதிரான நிலைப்பாட்டைச் சொன்னபோதும் அதே மலர்ந்த முகத்துடன்தான் அவன் முறுவலித்தான். ‘சித்திரத்துத் தாமரைபோல்’ என்று கம்பன் ராமனின் இந்த மனோநிலையை வர்ணிக்கிறார். அதாவது, தினகரனைப் பார்த்து இயற்கையாகப் பூக்கும் தாமரை மலர், அது மறையும்போது தானாகக் கூம்பிவிடும்.

ஆனால், ஓர் ஓவியமாக வரையப்பட்ட மலர்ந்த தாமரை நிரந்தரமானது. அதற்கு பகல் தெரியாது, இரவு தெரியாது. அந்த மலர்ச்சி நிலைத்திருக்கும். அதுபோன்றவன் ராமன். அவனைப் பொறுத்தவரை இந்த இரு நிலைகளும் அவனுக்குள் திணிக்கப்பட்டவை. அவனாக விரும்பிக் கோரியவை அல்ல. அதனால்தான் பட்டாபிஷேகம் என்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமலும், இல்லை என்றபோது துன்பத்தால் துவளாமலும் அவனால் இருக்க முடிந்தது!

அவரவர் தேவைக்கேற்ப, அவரவர் தகுதிக்கேற்பப் படியளக்க ஈசன் காத்திருக்கும்போது நாம் ஏன் அதற்காக ஆலாய்ப் பறக்கவேண்டும், அல்லது அது எதிர்பார்த்துக் கிடைக்காமல் போனால் அது குறித்து விசனப்பட வேண்டும்?யாவானர்த்த உதபானே ஸர்வத ஸம்ப்லுதோதகேதாவான்ஸர்வேஷு வேதேஷு ப்ராஹ்மணஸ்ய விஜானத ‘‘எங்கும் நீர் பரந்திருக்கிறது. ஆனால், ஒரு கிணற்றில் இருக்கும் நீரே பயன்பாட்டுக்குப் போதுமானதாக இருக்கிறது. இதே அளவில்தான் ஞானம் பெற்ற ஒருவன் வேதங்களிலிருந்து தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்திக்கொள்கிறான்.’’
வேதங்கள் கூறும் மூன்று குணங்களையும் வென்றவனாக அர்ஜுனன் திகழ வேண்டும் என்று கிருஷ்ணன் எதிர்பார்க்கிறான்.

ஒருவனுக்கு தாகம் எடுக்கிறது. அவன் சுற்றுமுற்றும் பார்க்கிறான். சற்றுத் தொலைவில் ஆறு ஓடுகிறது. இந்தப் பக்கம் அருவி விழுகிறது. இன்னும் சற்றுத் தொலைவில் ஏரி அல்லது குளம் அவன் கண்களுக்குத் தென்படுகிறது. ஏதேனும் ஒரு நீர்நிலையை அவன் தேர்ந்தெடுத்து அவன் அதிலிருந்து நீரெடுத்துத் தன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். மாறாக அவன் எல்லா நீர்நிலைத் தண்ணீரையும் அருந்த முயற்சிக்கலாமா? அவனால் அதுதான் முடியுமா? தேவையான அளவை மட்டும்தானே அவன் உடல் ஏற்கும்?

அதுபோல வேதத்திலிருந்தும் தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளச் சொல்லி கிருஷ்ணன் அறிவுறுத்துகிறான். அதாவது, வேதம் கர்மாவைச் செய்யச் சொல்கிறது. அதேசமயம், சொந்தபந்தங்களைப் பற்றியும் அது விளக்குகிறது. இவற்றில் செயலாற்றத்தக்க அறிவுரை அல்லது வழிமுறையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு முழு மனதோடு அதில் ஈடுபடவேண்டும். இந்தச் செயலுக்குச் சற்றும் தொடர்பில்லாத, பிற உணர்வுகளுக்கு, (சொந்த பந்தம் சார்ந்த) முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசனமா கர்மபலஹேதுர்பூர்மா தே சங்கோஸ்த்வகர்மணி‘‘அர்ஜுனா நீ வினையாற்றக் கடமைப்பட்டவன். அதேசமயம் அந்த வினையின் பயன்கள் என்ன என்று ஆராய்ந்து கொண்டிருக்காதே. பின்விளைவுகள் என்னவாக இருக்குமோ, ஏதாக இருக்குமோ என்ற கற்பனையிலும், சிந்தனையிலும் ஈடுபடாதே. அந்தப் பின்விளைவுகளை உத்தேசித்து வினையாற்றாமல் சோம்பி அமர்ந்திருக்காதே. உன் கடமையை நிறைவேற்று. அதன் பலாபலன்கள் எப்படியிருந்தாலும், பின்னால் நிகழப்போகும் அவற்றுக்காக ஆதங்கப்பட்டு உன் கடமையிலிருந்து வழுவாதே.’’

இங்கே கிருஷ்ணன் பின்விளைவுகள் எப்படியிருக்குமோ என்று இப்போதே அதில் புத்தியைச் செலுத்தாதே என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறான். அப்படி செலுத்துவதால் இப்போது முழு முனைப்புடன் செயலில் இறங்க முடியாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கிறான்.

இன்னது நிகழும் என்று எதிர்பார்த்துதான் பொதுவாக எல்லோருமே ஒரு செயலில் இறங்குவார்கள். அப்படியிருக்க எந்த எதிர்பார்த்தலுமின்றி செயல் புரிவது சாத்தியமா என்ன? பொதுவாக இன்ன வினையாற்றினால் இன்ன நடக்கும் என்ற எதிர்பார்த்தல் மனித மனதைப் பொறுத்தவரை பெரும்பாலும் நல்விளைவுகளாகவே இருக்கும். தான் மிகச் சரியாக சிந்தித்து, மிகச் சரியாக செயலில் ஈடுபட்டும், பின்விளைவுகள் தான் எதிர்பார்த்ததுபோல நன்மையாக இல்லாமல், தீமையாக அமையுமானால், உடனே மனம் குமைந்துபோகிறது.

அல்லது எதிர்பார்த்ததுபோலவே நன்மையாகவே நடந்தால், உடனே தலைகால் புரியாமல் துள்ள ஆரம்பித்துவிடுகிறது. அதனால் இந்த இரு உணர்வுகளுக்கும் ஆளாகி உள்ளம் உடைவதோ அல்லது கர்வம் கொள்வதோ இல்லாமல் நன்மையையும், தீமையையும் ஒன்றேபோல பாவிக்கும் மனப்பக்குவம் பெறும் பயிற்சியைத்தான் கிருஷ்ணன் அளிக்கிறான். அதனாலேயே ‘கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’ என்று திரும்பத் திரும்ப
வலியுறுத்துகிறான்.

அர்ஜுனனைப் பொறுத்தவரை இந்தப் போர்ச் செயலில் நன்மை என்பது ராஜ்ஜியத்தை அடைவது; தீமை என்பது சகோதரர்களும், ஆசார்யர்களும் மாண்டு போவது!  புத்தியுடன் செய்யப்படும் எந்தச் செயலும் சிறப்பானதுதான்.

சிந்திக்காமல், உணர்வுகளால் மட்டுமே ஆட்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்படும் செயல்களால் துன்பம்தான் மிஞ்சும். அந்த உணர்வுகள் பலன்களை எதிர்பார்க்கச் சொல்லும். குறிப்பிட்ட ஒரு செயலின் பின்விளைவுகள் என்னென்ன நற்பலன்களை அல்லது தீயபலன்களைத் தரும் என்று எதிர்பார்ப்பதால் அந்தச் செயலுக்கே, அந்தச் செயலை ஊக்குவித்த சிந்தனைக்கே மதிப்பில்லாமல் போய்விடுகிறது.

புத்திமான் என்று சொல்லப்படுபவன் எதையுமே சிந்தித்துச் செயலாற்றக்கூடியவனாகத்தான் இருப்பான். அவ்வாறு சிந்திக்கும்போது, செயலாற்றுவதா, வேண்டாமா என்று தீர்மானிப்பான். செயலாற்றுவது என்று முடிவு செய்துவிட்டால், தன் முயற்சிகள் அனைத்தையும் திரட்டி செயலை முடிப்பான்.

எடுத்துக்கொண்ட அந்தப் பணியை நிறைவேற்றும்போது இடையூறு செய்யக்கூடிய எந்தக் குறுக்கீட்டையும் அவன் அனுமதிப்பதில்லை, பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால், இந்தக் குறுக்கீடுகள் அவனை திசை திருப்பலாம், அவனை உணர்வுபூர்வமாக மிரட்டலாம், அல்லது கவர்ந்து இழுக்கலாம்.

ஆனால், புத்திமான் இதற்கெல்லாம் அஞ்சுபவனே அல்ல. ஏனென்றால் அவன்தான் தன் புத்தியை வைத்து எந்தச் செயலை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறானே! அந்தச் செயலின் பலாபலன்களைப் பற்றி அவன் கவலைப்படுவதேயில்லையே! அந்தப் பணி முடிந்ததும், அது முடிந்ததாகிய பற்றில்லாத நிறைவில் அடுத்தப் பணிக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுவிடுகிறானே!ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஓர் உதாரணத்தின் மூலம் இந்தத் தத்துவத்தை விளக்குகிறார்.

அதாவது, படகு நதியில் செல்லலாம். அது அதன் செயல். நதியின் ஓட்டத்துக்கேற்ப செல்லவேண்டும். சிலசமயம் அந்த ஓட்டத்தை எதிர்த்தும் செல்லவேண்டியிருக்கும். எப்படியானாலும், நதியில் பயணிப்பதாகிய செயலை அந்தப் படகு உறுதியாகச் செய்ய வேண்டும். அத்தகைய படகுக்குள் நீர் நுழையுமானால் என்ன ஆகும்?

 எந்த நீர் உள்ளே நுழைந்ததோ அந்த நீர் படகுக்குள் மேன்மேலும் பெருகி, அந்தப் படகையே மூழ்கடித்துவிடுமல்லவா? அதற்கு அந்தப் படகு இடம் கொடுக்கலாமா? இந்தப் படகைப்போல இருக்கவேண்டியவன்தான் மனிதனும். அவன் இந்த உலகில் வாழலாம்; ஆனால், உலகியல் ஆசைகளை உள்ளிழுத்துக்கொண்டு வேதனைப்படக்கூடாது;

மூழ்கிவிடக்கூடாது. அர்ஜுனன் மேற்கொண்டிருப்பது ஒரு தர்மப் போர். அவன் இந்தப் போரில் வென்றானானால் தர்மமே வென்றதாகத்தான் அர்த்தம். அதாவது, அநீதிகள் வீழ்வதாக அர்த்தம். இப்படி அநீதிகளையும், அதர்மங்களையும் அழிக்கும் இந்தப் போரில் அவன் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு செயலாற்ற வேண்டும். சொந்த பலாபலன்களைப் பற்றி யோசிக்காமல், சொந்த உணர்வு பேதலிப்புகளுக்கு இடம் கொடுக்காமல்,
தர்மம் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில் அவன் கணைகள் தொடுக்க வேண்டும்.

ஸ்வாமி தேஜானந்த மகராஜ்

(தொடரும்)