ஆதரவுப் புன்னகையுடன் அரவணைக்கும் முருகன்



கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தொடரின் முன்னுரையே மிகச் சிறப்பாக இருந்தது. அடுத்தடுத்த இதழ்களை வெகு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த அற்புதத் தொடரை, எத்தனைதரம் படித்தாலும் அலுக்காத ஆன்மிகத் தொடரை, மீண்டும் ஒரு முறை படிக்க வாய்ப்பளித்திருக்கும் தங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
- கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

மழை பெய்யாமலும் கெடுக்கும், பெய்தும் கெடுக்கும். அளவுக்கு மீறி பெய்து நாட்டில் ஏகப்பட்ட நாசம் விளைவிக்கிற பெருமழையைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்த நாட்களிலேயே ஆன்றோர்கள் இறைவனிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள் என்ற உண்மையை, பாடல்களை ஆதாரமாக வைத்து, ‘இறைவா மழையைத் தடு’ என்ற மிகச் சிறந்த கட்டுரையாக்கித் தந்திருந்தீர்கள். இதன்மூலம் இயற்கை எப்போதும் தன் சுயரூபத்தைக் காட்டக்கூடியதுதான், அதற்கு கால நேரமெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதைப் புரிந்துகொண்டோம்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

வீட்டில் மாட்டக்கூடிய சரியான காலண்டர் கிடைக்க வில்லையே என ஏங்கிக் கொண்டிருந்தேன். ஆன்மிகம் இதழுடன் தாங்கள் அளித்த காலண்டர், என் ஏக்கத்திற்குச் சரியான வடிகாலாக அமைந்தது. அதுவும் அதே 20 ரூபாய் விலையில்! ‘யாமிருக்க பயமேன்’ என்று ஆறுதல், ஆதரவுப் புன்னகையுடன் நம்மைப் பார்த்துச் சிரிக்கும் அந்த முருகனை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
- மயிலை கே.பட்டாபி, சென்னை.

பொங்கல் ஸ்பெஷல், எங்களையே தேனபிஷேகம் செய்தது போலிருந்தது! படங்களும், கட்டுரைகளும் அருமை, அருமை. தெளிவு பெறுஓம் பகுதியை படிக்க படிக்க மனதில் குவிந்திருந்த எத்தனையோ சந்தேகங்கள் விடுதலை பெற்றுச் சென்றுவிட்டதில் ஏகப்பட்ட நிம்மதி! ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ இதழின் பெருமைக்கும், அடுத்தடுத்த அதன் சாதனைகளுக்கும் மேலும்மெருகூட்டும் இன்னொரு அம்சம்! அட்டைப்படம் உண்மையிலேயே அட்(டை)டகாசம்தான்!
- இரா.வைரமுத்து, சென்னை.

கவியரசரின் அர்த்தமுள்ள இந்து மதத்தை ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் மீண்டும் இப்பொழுது தங்கள் பத்திரிகையின் வாயிலாக படிக்கப்போகிறோம் என்பது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

நம்மாழ்வார், பெரியாழ்வார் ஆகியோரின் செந்தமிழ் பாடல்களை நயமாக விவரித்து அளித்த ‘பக்தி தமிழ்’ அமிர்தமாய் உடலிலும், உயிரிலும் இனித்தது! தானம் கொடுப்பவர், தானம் பெறுபவர் இருவருமே தர்ம சிந்தனையோடு இறை சிந்தனையும் கொண்டிருத்தல் வேண்டும் எனும் திருமூலரின் திருமந்திரக் கட்டுரை அறிவுக்கான திறவுகோல்.
- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

மிகப்பெரிய, அழகிய காலண்டர் மூலமாக மகான்களை தரிசிக்கவும், அவர்கள் எங்கள் இல்லத்தை அலங்கரிக்கவும் செய்த தங்கள் தொண்டுக்கு என் உளமார்ந்த நன்றி.
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி.

அச்சம் அகன்றது, குழப்பம் விலகியது. தடுமாற்றம் நீங்கியது. அனாவசிய பயம் போயிற்று. சந்தேகம் அறவே ஒழிந்தது - பொறுப்பாசிரியர் உரைத்த ‘சந்திராஷ்டமம்’ குறித்த விளக்கத்தால்! நன்றி வணங்குகிறேன்.
- ராதா, வேலூர்.

கவலைகளைக் களையும், கரூர் மாரியம்மனின் அருள் வடிவும், பெருமையும் கண்டு சிலிர்த்தேன். சிரம் தாழ்த்தி மானசீகமாக வணங்கினேன்.
- குமரன், நாகை.

ஆழமான தத்துவங்களைக் கொண்டு, உயிர் துடிப்புடன் விளங்கிவரும் இந்து மதத்தின் உயர் நோக்கங்களை கண்ணதாசனின் கை
வண்ணத்தில் மீண்டும் கண்டதும் மேனி சிலிர்த்தது, கண்கள் ஈரமாயின. உள்ளம் உவகையுடன் மாதம் இருமுறை அந்த அற்புத அனுபவத்துக்காகக் காத்திருக்கத் தயாராகிவிட்டது.
- பரமேஸ்வர பட்டர், திருவிலங்காடு.

பஞ்ச ஆரண்யத் தலங்களான முல்லை வனம், பாதரி வனம், வன்னி வனம், பூளை வனம், வில்வ வனம் ஆகியவற்றின் சிறப்புகளையும் அவற்றை ஒரே நாளில் எந்தெந்த வேளைகளில் வழிபட வேண்டும் என்ற நியதிகளையும், நெறிமுறைகளையும் விவரித்து தந்தது அருமை. மேலும் அரித்துவார மங்கலம் திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்களையும் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.
- இரா.கண்ணன், திருநெல்வேலி.

மங்கலம் கிராமத்து போத்து ராஜா,கீழையூர் கண்ணந்தங்குடி அக்கினி வீணாகி,மதுரை வில்லாயுதனார், அய்யம் பாளையம் அய்யன்...தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார்
பொன்னமராவதி பட்டமரத்தாள் சுவாமி...
- மரத்துறை காத்யாயினி.

வித்தியாசமான ‘ஏழு’ காவல் தெய்வங்
களைப் பற்றிய தகவல்கள் படிக்கும்போதே மெய் சிலிர்த்தது.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பதுபோல் கவியரசு கண்ணதாசனின் எப்போதும் அழிவில்லாத, என்றென்றும் நிரந்தரமான ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ அட்டகாசமாக ஆரம்பித்திருக்கிறது. படிக்க மட்டுமல்லாமல், பொக்கிஷமாகப் பாதுகாக்கவும் நான் தீர்மானித்துவிட்டேன்.
- விஜயபாரதி கோவிந், செகந்திராபாத்.