தைப்பூசம் - 24.1.2016 ஆய்க்குடி



முருகன் விரும்பி ஏற்கும் படிப்பாயசம்!

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்.முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை தூர்வாரியபோது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமியின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே வைக்கப்பட்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப்பட்டது என்கிறார்கள்.

சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, விநாயகர் ஆகிய ஐந்து இறைசக்தியும் இக்கோயிலில் உள்ள அரசு, வேம்பு, மாவிலிங்கம், மாதுளை, கறிவேப்பிலை ஆகிய ஐந்து மரங்களில் எழுந்தருளியிருக்கிறது என்கிறார்கள். அந்த மரங்களின் கீழ் மூலவரான பாலசுப்ரமணியசுவாமி மயில் வாகனத்தின் மீது குழந்தை வடிவில் வீற்றிருக்கிறார். மயில் இடப்புறமாக தலையை திருப்பியபடி காட்சி தருகிறது.

வஜ்ராயுதத்தையும், சக்திவேலையும் தன் இரு கைகளில் ஏந்தி, கால்களில் தண்டையும், சலங்கையும் அணிந்து,  நின்ற திருக்கோலத்தில் ஒன்றரை அடி உயர மூர்த்தியாக பச்சிளம்பாலகன் உருவில் உற்சவ முருகன் இங்கு அருள்பாலிக்கிறார்.

குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களது வீட்டில் விரைவில் மழலைக் குரல் ஒலிக்கும் என்பது பக்தர்களின் அனுபவம். பாலசுப்ரமணிய சுவாமியை வணங்கி, வேண்டிக்கொண்ட செயல்கள் நிறைவேறப் பெற்றவர்கள், பாயசத்தை நிவேதனமாகப் படைத்து அதனை கோயிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையில் உள்ள படியில் ஊற்றி, சிறுவர்களை அருந்தச் சொல்கிறார்கள். இதனை படிப்பாயச நிவேதனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருகனே வந்து பாயச நிவேதனத்தை ஏற்பதாக ஐதீகம்.

பாலசுப்ரமணியர் விரும்பி ஏற்கும் நைவேத்தியம் இந்தப் படிப்பாயசம் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் அதை துலாபாயசம் என்றும் அழைக்கின்றனர். ‘துலா’ என்பது நெல்லை மாவட்ட வழக்கிலிருந்த ஒரு நிறுத்தல் அளவை. 11 படி பச்சரிசி, ஒரு படி பயத்தம்பருப்பு, 108 தேங்காய்கள் (பாலுக்காக) அல்லது 60 லிட்டர் பசும்பால், 35 கிலோசர்க்கரை, நெய், ஏலக்காய், கிராம்பு ஆகியன சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது இந்த நிவேதனப் பாயசம். நெல்லை, தென்காசியிலிருந்து ஆய்க்குடிக்கு பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.