ஆன்மிக ஊட்டம் மிகுந்த ஆனந்த நிவேதனம்!



குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்துத் தயாரித்து, அளித்து, அந்தக் குழந்தை அதை ருசித்து சாப்பிடுவதைப் பார்க்கும் ஒரு தாயின் கண்களில் பொங்கும் கருணை ஆர்வத்தில், ஒரு கவனிப்பும் இருக்கும். அந்த கவனிப்பு - தான் தயாரித்து அளிக்கும் உணவு வகைகள் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமே என்ற அக்கறைதான். நல்ல நல்ல பொருட்களாகத் தேர்ந்தெடுத்து, அதைப் பக்குவமாகச் சமைத்து, பரிவோடு
பரிமாறும்போது இந்தத் தாய்மைப் பொறுப்பின் ‘கைமணம்’, அந்தக் குழந்தையின் உடல்நலத்தை நிச்சயமாக மேம்படவைக்கும்.

ஒரு குழந்தைக்கு மட்டும் என்றில்லாமல், குடும்பத்தார் அனைவருக்கும் இதே அக்கறையுடன் செயல்படும் பெண்மணியின் வீட்டில் பெரும்பாலும் மருந்து வாடையே அடிக்காது. தான் தயாரிப்பதை இறைவனுக்கு முதலில் நிவேதனமாக சமர்ப்பித்துவிட்டு அவன் அருளுடன் தன் குடும்பத்தாருக்கு அவள் அளிக்கும்போது அங்கே தெய்வீகமும் துலங்குகிறது.

இதனால் குடும்பத்தார் மீதான அக்கறை, புதுப் பொலிவு பெறுகிறது. இந்த ஆன்மிக பலத்தில் அந்தத் தாய்க்கு, வெவ்வேறு விதமான, பலவகையான உணவுப் பொருட்களைத் தன் குடும்பத்தாருக்குத் தயாரித்துத் தரும் கைவண்ணமும் மேலோங்கும். இந்த ரீதியில் அவர்போன்ற, அதாவது, உங்களைப்போன்ற தாய்மார்களுக்கு உதவுவதற்காக இதோ சில புதுமை பிரசாதங்கள்.

சந்திரலேகா ராமமூர்த்தி

உண்டி ஸ்டஃப்டு

என்னென்ன தேவை?

ரவையாக உடைத்த பச்சரிசி - 1 கப்,
(கடலைப்பருப்பு, சிறுபருப்பு ஊறவைத்து உடைத்தது) - தலா ½ கப், தேங்காய்த் துருவல் - ½ மூடி, காய்ந்த மிளகாய் - 6-8, சீரகம் - 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிது, உப்பு - தேவைக்கு.
தாளிக்க: எண்ெணய், கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, நெய் - 1-2 டீஸ்பூன், காய்ந்த திராட்சை - 20.

எப்படிச் செய்வது?

அரிசி ரவையை ஊற வைக்கவும். இத்துடன் கடலைப் பருப்பு, சிறு பருப்பு எடுத்து தனித்தனியாக ஊற வைத்து சிறிது உலர்த்தி உடைத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, தாளிக்க எடுத்துவைத்த பொருட்களைத் தாளித்து இத்துடன் சீரகம், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி தேவையான தண்ணீர் சேர்த்து உடைத்த அரிசி ரவை, பருப்புகள், உப்பு சேர்த்து உப்புமா மாதிரி வேக விட்டு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாகச் செய்து அதன் உள்ளே பொடித்த திராட்சையை வைத்து மூடி உருட்டி இட்லி பாத்திரத்தில் வேக விட்டு ஆவியில் எடுத்து சூடாக படைத்து பரிமாறவும். பெருங்
காயத்தூள் விருப்பப்பட்டால் சேர்க்கவும்.

சேப்பங்கிழங்கு பால்ஸ்

என்னென்ன தேவை?

சேப்பங்கிழங்கு - 250-300 கிராம், பச்சை மிளகாய், இஞ்சி,
மல்லித்தழை (அனைத்தும் பொடித்தது) - தலா 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் (பெரியது) - 1, வெந்த பச்சைப் பட்டாணி - ½ கப், உப்பு, கரம் மசாலாத்தூள் - தேவைக்கு, காய்ந்த மாங்காய்த்தூள் - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 1½ டீஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப, வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1 டீஸ்பூன், பச்சரிசி மாவு நைஸாக அரைத்து சலித்தது - 1 கப், பொரிக்க எண்ணெய் - தேவைக்கு, கரகரப்பாக வறுத்து உடைத்த வேர்க்கடலை - ¼ கப்.

எப்படிச் செய்வது?

சேப்பங்கிழங்கை முக்கால் பதம் வேக வைத்து உரித்து பொடிமாஸுக்கு செய்வதுபோல் பொடித்துக் கொள்ளவும். இதில் தேவையான உப்பு, கடலை, வதக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், தூள்கள் யாவற்றையும் சேர்த்து இறக்கி சேப்பங்கிழங்கில் சேர்க்கவும். மல்லித்தழையும் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பாதி அரிசி மாவை கரைத்து சேப்பங்கிழங்கு உருண்டையை தோய்த்து மீதி உள்ள அரிசிமாவில் புரட்டி சிறிது நேரம் வைத்து மீண்டும் ஒரு முறை புரட்டி, மிதமான சூடான எண்ெணயில் பொரித்து எடுத்து பல் குச்சியில் குத்தி அலங்கரித்து பரிமாறவும்.

கருப்பு உளுந்து வெந்தயக்கீரை வடை

என்னென்ன தேவை?

முழு தோலுள்ள கருப்பு உளுந்து - 2 கப், மிளகு - 1-1½ டீஸ்பூன், ஃபிரெஷ் வெந்தயக்கீரை - ½ கப், உப்பு, பெருங்காயம் - தேவைக்கு ஏற்ப, சர்க்கரை - ஒரு சிட்டிகை, இஞ்சி பொடித்தது - தேவைக்கு ஏற்ப, மஞ்சள்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

உளுந்தை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் வடித்து இத்துடன் சர்க்கரை, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து பொடித்த வெந்தயக்கீரை, மஞ்சள் சேர்த்து கலந்து வடையாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து படைத்து பரிமாறவும். இது குளிர்கால ஸ்பெஷல் வடை.
குறிப்பு: மேல் சாட் மசாலா தூவியும், சாஸுடனும் பரிமாறலாம். மிளகு வாசம் உடம்புக்கு நல்லது.

கோதுமை மாவு பிஸ்கட்

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப் + ரவை - 1/4 கப் (இரண்டையும் கலக்கவும்), சர்க்கரை - 1¾ கப், நெய் - ¾ கப், உப்பு - ஒரு சிட்டிகை, சுக்குத்தூள் - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

வாயகன்ற கடாயில் முதலில் மாவை வாசனை வரும்வரை வறுக்கவும். பின் இறக்கி வைக்கவும். வேறு ஒரு கடாயில் ¼ கப் தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். இதில் உப்பு, சுக்குத்தூள் சேர்த்து சர்க்கரை பொங்கி வரும்போது நெய் சேர்த்து இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக மாவை தூவி கைவிடாமல் கலக்கவும். நெய் பிரிந்து வரும்வரை கிளறவும். பின் இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறியபின் ½ இன்ஞ் கனத்திற்கு மெல்லிய வில்லைகளாக வெட்டவும்.

குறிப்பு: இந்த கலவையை ஒரு பேக்கிங் டிரேயில் ஊற்றி சிறிது நேரம் சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும். அல்லது இந்த கலவையை ஒரு பெரிய தவாவில் கொட்டி மூடி போட்டு மிதமான தீயில் வைத்து மீண்டும் திருப்பி போட்டு எடுத்து துண்டுகள் போடவும். கரகரப்பாக இருக்கும் இந்த பிஸ்கட்.

தொகுப்பு: ஆர்.வைதேகி