சாதிக்க வைக்கும் ஆண்டாக அமையும்!



என்ன சொல்லுது எதிர்காலம்?

? நான் கல்லூரியில் படித்து வருகிறேன். என் பெற்றோருடன் அடிக்கடி மனஸ்தாபம் ஏற்படுகிறது. அவர்கள் மீது, அறிந்தும் அறியாமலும் வெறுப்பு ஏற்படுகிறது. கூடவே விரக்தியும், சோம்பலும், சபலமும் ஏற்படுகிறது. எந்த விஷயத்திலும் நான் நினைப்பதை சாதிக்க தடை வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை மாற எனக்கொரு நல்ல வழி காட்ட வேண்டும். - சி.ஜெயராம், சிங்கப்பூர்.

உங்களுடைய ஜாதகத்தை கேரள மணிகண்ட நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். தனுசு லக்னம், ரிஷப ராசியில் பிறந்திருக்கிறீர்கள். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஜாதகத்தில் வலுத்து அமர்ந்திருக்கிறார். பூர்வபுண்ணியாதிபதி வலுத்திருந்தால் நீங்கள் நல்ல நிலைமைக்கு வர முடியும் என்று அர்த்தமாகும். ஆயுள் ஸ்தானாதிபதியாகிய எட்டாம் வீட்டிற்குரிய சந்திரன் ஆறாம் வீட்டில் மறைந்து, ஆனால், உச்சம் பெற்றிருப்பதும் விபரீத ராஜயோகத்தைத் தரும் அமைப்பாகும்.

ஜாதகத்தில் லக்னத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதும், எட்டுக்குரிய கிரகம் அதாவது, ஆயுள்ஸ்தானாதிபதியான சந்திரன் ஆறாம் இடத்தில் அமர்ந்திருப்பதும் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமைப்பாகும். தசாபுக்திகளின்படி தற்சமயம் குருமகாதசை நடைபெறுகிறது. சிறுவயது முதல் பதினெட்டு வருடம் உங்களுக்கு ராகுதசை நடைபெற்றதால்தான் அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றி, குடும்பத்தாருடன் அனுசரித்துப்போக முடியாத நிலை இருந்திருக்கிறது.

ஏனென்றால், இரண்டாம் இடத்தில் ராகு இருந்து, ராகு தசை நடைபெற்றால், தான் சொல்லும் கருத்தைதான் மற்றவர்கள் ஏற்கவேண்டும் என்ற மனோபாவம் உங்கள் ஆழ்மனதில் பதிந்திருந்தது. தற்சமயம் குருமகாதசை உங்களுக்கு தொடங்கியிருக்கிறது. குருமகாதசையில் குருபுக்தி 6.2.2016 வரை நடைபெறும். பின்னர் தொடங்கும் சனிபுக்தி ஓரளவு நிம்மதியைத் தரும். 7.2.2016 முதல் 18.8.2018 வரை குருமகாதசையில் சனிபுக்தி நடைபெறும். சனிபுக்தி ஓரளவு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும்.

ஆனால், தற்சமயம் கண்டகச்சனி நடைபெறுகிறது. இதனால் அடிக்கடி முன்கோபம், நெருங்கிய உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், குடும்பத்தினருடன் ஒத்துப்போக முடியாத நிலை என ஏற்படும். எனவே, பொறுமையாக இருப்பது நல்லது. அதோடு சட்டத்திற்கு புறம்பானவர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்லாதீர்கள். மனநிம்மதிக்காக போதைப் பொருட்கள் பயன்படுத்துவது போன்ற தீய வழியில் செல்ல வேண்டாம். ஏனென்றால் அதுபோன்ற விஷயங்களுக்கு வாய்ப்பிருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள்.

குரு லக்னாதிபதியாக இருக்கிறார். ஆனால், ஆறாம் வீட்டு கிரகமான சுக்கிரனுடன் குரு சேர்ந்திருப்பதால்தான் அடிக்கடி எதிர்மறை எண்ணங்கள் வருகின்றன. ஆனால், வருங்காலத்தில்உங்களால் நல்ல நிலைமைக்கு வர முடியும். 7.2.2016 முதல் தொடங்கும் சனிபுக்தி உங்களுக்கு நிம்மதி தரும். 2.8.2016 முதல் குரு பகவான் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் நுழைவதால் அப்போது முதல் நிம்மதி கிட்டும். சோம்பல், விரக்தி எல்லாம் நீங்கும், சபல புத்தியும் குறையும்.

பெற்றோருடன் ஒற்றுமை ஏற்படவும், படிப்பில் வெற்றி பெறவும், கட்டாயமாக பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பிரதோஷ நாளில் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6.30 மணி  வரை சிவனை விரதமிருந்து வழி
படுங்கள். எல்லா விதத்திலும் மகிழ்ச்சி தங்கும். அதோடு தந்தையை இழந்தவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். நீங்கள் நினைத்தது எல்லம் இனிதே நிறைவேறும்.

?.நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண். வயது 41. எனக்கு தகப்பனார் இல்லை. என் தாயார் தான் என்னை வளர்த்து திருமணம் செய்து வைத்தார். எனது கணவர் மாரடைப்பில் இறந்து விட்டார். நான் டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன் இன்ஜினியரிங் படித்துள்ளேன். எனக்கு ஒரு ஆண்மகன் உள்ளான். அவன் தற்போது ஏழாம் வகுப்பு படித்து வருகிறான்.

எங்களுக்கு என்று சொந்த வீடு இல்லை. கணவர் இறந்த பிறகு நான் படாதகஷ்டமெல்லாம் பட்டு வருகிறேன். குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து அதில் வரும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறேன். வசதியான உறவினர்கள் யாரும் உதவுவதில்லை. சில சமயம் மனம் வெறுத்து, மகனோடு தற்கொலை செய்து கொள்ளலாமா என்றும் தோன்றுகிறது. எங்களுக்கு விடியல் வருமா? எனக்கு நேர்ந்த கஷ்டங்கள் என் பிள்ளைக்கும் நேருமா? சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா?
 - ஒரு வாசகி

உங்கள், உங்கள் மகனின் ஜாதகங்களை பிருஹத் ஜாதகம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். நீங்கள் தனுசு லக்னம், மீன ராசியிலே பிறந்திருக்கிறீர்கள். உங்களுடைய லக்னத்தை சனிபகவான் பார்ப்பதால் ஆயுள் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. லக்னாதிபதியும், ராசிநாதனுமாகிய குருபகவான் லக்னத்திற்கு மூன்றாம் இடத்தில் மறைந்திருப்பதுடன் சந்திரனுக்கும் பன்னிரண்டாம் இடத்தில் மறைந்து சகடையாக காணப்படுகிறார். லக்னாதிபதி லக்னத்திற்கும், சந்திரனுக்கும் மறைந்தாலே கொஞ்சம் போராட்டம் இருக்கத்தான் செய்யும். அதேபோல பூர்வ புண்ணியாதிபதியும் பலவீனமாக இருக்கிறார்.

பூர்வ புண்ணியாதிபதி பாதகாதிபதியுடன் சேர்ந்து காணப்படுகிறார். பிரபல யோகாதிபதியாகிய சூரியன் ஆறாமாதிபதி சுக்கிரனுடனும், ராகுவுடனும் சேர்ந்து பன்னிரண்டாம் இடத்தில் மறைந்திருக்கிறார். ஒரு ஜாதகர் எல்லா வகையிலும் சிறந்து விளங்க லக்னாதிபதியோ, பூர்வபுண்ணியாதிபதியோ அல்லது பாக்யாதிபதியோ யாரேனும் ஒருவராவது வலுத்திருக்க வேண்டும். ஆனால், உங்கள் ஜாதகத்திலே இந்த மூன்றுமே பலவீனமாக உள்ளன. அதேநேரத்தில் சனிபகவான் திக் பலம் பெற்றிருக்கிறார்.

இதனால் கடுமையான முயற்சியாலும், கடின உழைப்பாலும், தளராத மனதாலும் சமுதாயத்தில் உங்களால் சாதித்துக் காட்ட முடியும்; ஓர் உயர்ந்த நிலைக்கு வர முடியும். சனிமகாதசையில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள். தற்சமயம் சுக்கிர மகாதசையில் சனிபுக்தி 26.2.2018வரை நடைபெறும். சுக்கிரன் சரியில்லாத இடத்தில் இருப்பதாலும், மறைந்திருப்பதாலும், ராகுவுடன் சேர்ந்திருப்பதாலும், நவாம்சத்தில் லக்னத்திற்கு ஆறாவது வீட்டில் சென்று மறைந்திருப்பதால்தான் இந்த மகாதசையில் அடுக்கடுக்கான பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

 இப்போது சனிபுக்தி உங்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிறந்தபோது நல்ல இடத்தில் சனி இருப்பதாலும், கோச்சார கிரகங்கள் வலுவடைந்து காணப்படுவதனாலும் இனிமேல் உங்களுக்கு யோக பலன்கள் உண்டு. குறிப்பாக 3.3.2016 முதல் கஷ்டநஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். 3.8.2016 முதல் யோக  பலன்கள் அதிகரிக்கும்.

உங்கள் மகன் கும்ப லக்னம், உத்திரட்டாதி நட்சத்திரம், மீனராசியில் பிறந்திருக்கிறார். அவர் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமான தகப்பனார் ஸ்தானத்தில் கேது அமர்ந்திருக்கிறார். தகப்பனார் ஸ்தானத்திற்குரிய அதாவது, பாக்யாதிபதியாகிய சுக்கிரனும் சனியுடன் சேர்ந்திருக்கிறார். பிதுர்காரகன் சூரியனோ ஆனிமாதப் பிறப்பானதனால் கடகத்திலே ஆறாவது வீட்டிலே மறைந்திருக்கிறார். அதனால்தான் தந்தை சுகம் இந்த ஜாதகருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தனிப்பட்ட வகையில் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சனி மகாதசையில் பிறந்திருக்கிறார்.

சனிதசை பதிமூன்று வயதுவரை  நடைபெறும். பின்னர் வரும் புதன் மகாதசையில் யோக பலன் உண்டாகும். எனவே, பதிமூன்று வயதுவரை சனிமகாதசையிருப்பதனால் கீழே விழுந்து அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிலநேரம் மறதி இருக்கும். மற்றபடி பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. தற்சமயம் சனிமகாதசையில் குருபுக்தி 26.9.2017 வரை நடைபெறும். இதனால் உங்களுக்கு ஓரளவு வருமானம் உயரக்கூடும். ஒரே நட்சத்திரம், ஒரே ராசியினரான நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கலாமா, அல்லது பிரிந்து வாழ வேண்டுமா என்று கேட்டிருக்கிறீர்கள்.

ஒரு குடும்பத்தில் தந்தையும், மகனும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசியிலே இருத்தல் கூடாது; தாயும், மகளும் ஒரே நட்சத்திரம், ராசியில் இருத்தல் கூடாது. ஆனால், இங்கே தாயும், மகனுமாக ஒரே நட்சத்திரத்தில் இருப்பதில் தவறு கிடையாது. பொதுவாக அதற்குப் பரிகாரமாக திருச்செந்தூர் முருகப் பெருமானை வியாழக்கிழமை அல்லது சஷ்டி திதியில் தரிசனம் செய்தால் ஏகநட்சத்திரம், ஏகராசி தோஷம் நீங்கி விடும். ஆனால் அம்மா - மகன் என்று மாறியிருப்பதால் ஏகநட்சத்திர தோஷம் இல்லை. அதனால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்.

உங்களுடைய ஜாதகத்தில் சூரியன் பன்னிரண்டாவது வீட்டில் மறைந்திருக்கிறார். இருந்தாலும் பத்தாம் இடத்தை அதாவது உத்யோக ஸ்தானத்தை சந்திரன் பார்க்கிறார். இதன்படி அரசு வேலை கிடைக்க தாமதமாகும். ஆனால், தனியார் வேலை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். தனியார் நிறுவனத்தில்தான் உங்களுக்கு வேலை தொடரும். 2017ல் சில தசாபுக்திகளும், கோச்சார கிரகங்களும் மாறுவதனால் 2017ல் அரசு வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய மகன் நன்றாகப் படிப்பார்.

அவர் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானத்தில் சந்திரன் நின்றிருப்பதால் அவருடைய கல்வி சிறப்பாக இருக்கும். உயர் கல்வி, உயர் உத்யோக ஸ்தானத்தின்படி மகனுக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வாய்ப்புகள் இருக்கிறது. எலக்ட்ரிக்கல் துறையில் அதாவது மின்சாரத் துறையில் பெரிய அளவில் அவர் சிறந்து விளங்கக்கூடும்.

அவருக்கு ஆயுள் கெட்டி. லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் குருவும், செவ்வாயும் இணைந்து குருமங்களயோகம் காணப்படுவதால் அவர் திருமணம் சிறப்பாக அமையும். கண்டம் என்று எதுவும் இல்லை. பதிமூன்று வயதுக்குப் பிறகு புதன்மகாதசை தொடங்குகிறது. புதன் பூர்வபுண்ணியாதிபதியாக இருப்பதால் கண்டம் எதுவும் வர வாய்ப்பில்லை. இருந்தாலும் புதன் தசையில் புதன்புக்தி, கேதுபுக்தி காலகட்டங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

அதாவது, பதினான்கு முதல் பதினேழு வயதுவரை சிறுசிறு உடல்நலக் கோளாறு, சளித் தொந்தரவு என்று வரக்கூடும். கொஞ்சம் கவனமாக இருத்தல் நலம். மற்றபடி பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. நாற்பத்தி எட்டாவது வயதில் உங்களுக்குத் தொடங்கும் சூரியதசை ஐம்பத்து நான்கு வயதுவரை இருக்கும். சூரியன் உங்கள் ஜாதகத்தில் வலுத்துக் காணப்படுவதால் இந்த சூரிய தசை காலத்தில் உங்களுக்கு சொந்த வீடு அமையும். 

உங்களுடைய மற்றும் உங்கள் மகனின் லக்ன அடிப்படையில் கிழக்கு அல்லது வடக்கு வாசல் பார்த்த வீட்டில் நீங்கள் குடியிருப்பது நல்லது. எத்தனை அடியில் மனை இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். சதுரமனையா, செவ்வக மனையா, அல்லது கருடன் மனையா எதில் வீடு கட்டபோகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் எத்தனை அடியில் மனை அமைக்க வேண்டும் என்று சொல்ல முடியும். எனவே, வீட்டு மனை வாங்கிய பிறகு தொடர்பு கொண்டால் எத்தனை அடியில் மனை இருக்க வேண்டும் என்று கூற முடியும். குலதெய்வக் கோயிலுக்கு தொலைதூரம் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

குலதெய்வத்தை நினைத்து மனதாற வழிபட்டாலே போதும். ஏனென்றால் பலருக்குத் தம் குலதெய்வத்திற்குப் பெரிதாக கோயில் என்று இருக்காது; இயற்கை சார்ந்த வழிபாடாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் குலதெய்வம் இருக்கும் திசை நோக்கி கைகளைகூப்பி மனதாற நினைத்து வணங்கினாலே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குலதெய்வம் மாரியம்மன் என்று கூறியிருக்கிறீர்கள். எனவே நீங்கள் குலதெய்வத்தை நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் மாரியம்மனை வணங்கலாம் அதன் மூலமாகவும் நல்லது நடக்கும்.

ராசிக்கல் மோதிரம் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள். ஆனால், ராசிக்கல் மோதிரத்திற்கு  ஒட்டுமொத்தமாக ஒருவருடைய ஜாதகப்பலனையோ அல்லது தலையெழுத்தையோ மாற்றக்கூடிய சக்தி கிடையாது. ஒரிஜினலாக, நல்ல கல்லாக இருந்து அதில் வேதியல் கூறுகள் சரியாக இருந்து, அந்தக் கல் உயிர்ப்பு சக்தியுடன் இருந்தால் ஓரளவு நன்மை உண்டாகும். உங்களை பொறுத்தவரை நீங்கள் ஒரு கேரட்டு எடைக்குள் மாணிக்கக் கல் அணிவது நல்லது. ஓபன் செட்டிங்காக அணியுங்கள்.

உங்களுடைய  வேதனைகள் இனிமேல் கொஞ்சம் கொஞ்சமாக குறையும், கவலை வேண்டாம். எல்லாவகையிலும் வெற்றி உண்டாகும்.  மகன் உங்களுடைய கனவுகளை நினைவாக்குவார். நம்பிக்கையுடன் இருங்கள். நல்ல எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது. 2016ம் ஆண்டு உங்களை சாதிக்க வைக்கும் ஆண்டாக மாற்றும்.

?என் மகனின் வருங்காலம் எப்படியிருக்கும்?
திருமணம் எப்பொழுது நடக்கும்? அவனுக்கு அமையும் பெண் நல்ல குணத்துடன் இருப்பாளா?  வெளிநாடு செல்லும் அவனுடைய முயற்சி பலிக்குமா? எங்கள் இருவரையும் கடைசிவரை கூடவேயிருந்து பார்த்துக்கொள்வானா?
- ஒரு வாசகர்.

உங்கள் மகன் ஜாதகத்தை யவன காவியம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். நீங்கள் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், எல்லா மதத்தாருக்கும் பொதுவானதுதான் ஜோதிடம். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் என்ற அனைத்துக் கிரகங்களும் உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகள் மீதும் தங்களுடைய கதிரை வீசுகின்றன.

சூரியனும், சந்திரனும் அனைவருக்கும் சொந்தம். எனவே, நீங்கள் தைரியமாக சந்தேகங்களைக் கேட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் மகன் மீன லக்னம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கிறார். அவர் ஜாதகத்தில் லக்னத்திலேயே குருபகவான் அமர்ந்திருக்கிறார். அதோடு லக்னத்திற்கு இரண்டாவது வீட்டில் செவ்வாய் ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால், இவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. லக்னத்தில் குரு இருப்பதாலும், ஆயுள்காரகன் சனி வலுவடைந்திருப்பதாலும் தீர்காயுசு யோகம் மகனுக்கு உண்டு.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார். தற்சமயம் புதன் மகாதசை நடைபெறுகிறது. புதன் மகாதசையில் குருபுக்தி 10.1.2016 முதல்  15.4.2018  வரை குரு புக்தி நடைபெறும். தசாநாதனாகிய புதனுக்கு இரண்டாவது வீட்டிலே குரு அமர்ந்திருப்பதாலும், குரு லக்னாதிபதியாக அமைந்திருப்பதாலும், குருபுக்தி அவருக்கு அருமையாக இருக்கும். இந்த குருபுக்தியில் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று திருமணம் சிறப்பாக முடிவடையும். தற்சமயம்
ஏழரைச்சனி அதிலும் ஜென்மச்சனி நடைபெறுவதால் கொஞ்சம் காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது.

கோச்சார கிரகங்களின்படி 19.8.2016 முதல் 10.4.2017க்குள் மகனுக்கு திருமணம் முடிந்து விடும், கவலை வேண்டாம். ஏழரைச் சனியிருப்பதாலும், புதன்மகாதசை நடைபெறுவதாலும், லக்னத்திற்கு பன்னிரண்டாவது வீட்டில் புதன் அமர்ந்திருப்பதாலும் அயல்நாடு செல்லும் யோகம் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்தே கிட்டும்.

அவர் ஜாதகத்தில் தாயாருக்குரிய அதாவது, சுகாதிபதியாகிய சுகஸ்தானத்திற்குரிய புதனும், பாக்யாதிபதியாகிய அதாவது ஒன்பதாவது வீட்டிற்குரிய செவ்வாயும் வலுவடைந்து காணப்படுவதாலும், லக்னாதிபதி லக்னத்திலேயே அமர்ந்திருப்பதாலும் தாய், தந்தையை கடைசிவரை மனம் நோகாதபடி, அன்பாக அரவணைத்துச் செல்லும் பெருந்தன்மையும், நல்ல குணமும் கொண்டவராக உங்கள் மகன் விளங்குவார். மனைவி வந்தாலும் பெற்றோர் மீது மாறாத பாசம் கொண்டவராக இருப்பார்.

மகன் ஜாதகத்தில் ஏழாமதிபதியாக வரக்கூடிய புதன் நான்காவது வீட்டிற்கும் உரியவராக இருப்பதால் நல்ல பெண் அவருக்கு மனைவியாக அமைவார். திருமணம் நல்ல விதத்திலே முடிவடையும். கவலை வேண்டாம். உங்களுடைய மகனுக்கு மேலும் நல்லது நடக்க நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள புனித அந்தோணியார் சர்ச்சுக்கு சென்று வருவது நல்லது. அதேபோல புனித மார்க் எழுதிய சுவிசேஷத்திலே வரக்கூடிய வசனங்களையும் தினசரி படிப்பது நல்லது. மகனது உத்யோகத்தில் பதவி உயர்வு வாய்ப்புகளும் நன்கு கிட்டும். நடைமுறை பரிகாரமாக விபத்தில் சிக்கியவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். மேலும் நல்லது நடக்கும்.

?என் மகன் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் அமெரிக்காவில் தனித்தனியாக வெவ்வேறு மாகாணங்களில் வேலை பார்க்கிறார்கள். இதுவரை திருமணம் பதிவு செய்யப்படவில்லை. அவளுடன் சேர்ந்திருந்த நாளில் என் மகன் நிம்மதியாக இல்லை. அவள் தன் பெற்றோருடனும், எங்களுடனும் அனுசரித்துப் போகவில்லை.

அவள் ஒரு சைக்கோ போல் நடந்து கொள்வதாகவும், எப்பொழுதும் அவளை புகழ்ந்து கொண்டே இருக்க விரும்புவதாகவும் என் மகன் சொல்கிறான். என் மகனின் வாழ்க்கை அவளுடன் நீடிக்குமா? பிரிந்து விடுவார்களா? என் மகன் இந்தியா வந்து விடுவானா? இல்லை அமெரிக்காவிலே வேலை பார்ப்பானா? இந்தியா வந்தால் வேலை கிடைக்குமா? அவனுக்கு வேறு திருமணம் நடக்குமா? அவன் மிகவும் பொறுத்துப் போகிறான்; ஆனால், மனதால் அழுது கொண்டேயிருக்கிறான். இதற்கு பரிகாரம் என்ன?
- லட்சுமி, நியூபாம்பே.

உங்களுடைய மகன் ஜாதகத்தை ஜாதக அலங்காரம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். கடக லக்னம், மகர ராசியில் பிறந்திருக்கிறார். லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதுடன், லக்னாதிபதி சந்திரன் கேதுவுடன் சேர்ந்திருக்கிறார். லக்னத்தில் பாம்பு அமர்ந்து, லக்னாதிபதியும் பாம்புடன் சேர்ந்தால் தீவிரமான மனஉளைச்சலுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்று பழைய நூல்கள் சொல்கின்றன. லக்னாதிபதி, கேதுவுடன் சேர்ந்து காணப்படுவதனாலும் அதுவும் லக்னாதிபதியாகிய சந்திரன் கேதுவுடன் ஏழாவது வீட்டிலே அமர்ந்திருப்பதனாலும்தான் இவருக்கு திருமண வாழ்க்கை கேள்வி குறியாக இருக்கிறது.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்திருக்கிறார். சூரிய தசை, சந்திர தசை, செவ்வாய்தசையெல்லாம் முடிவடைந்து தற்சமயம் ராகு மகாதசை நடைபெறுகிறது. ராகு மகாதசையில், சுக்கிரபுக்தி 15.11.2016 வரை நடைபெறும். அந்த சுக்கிரன் இவருக்கு பாதகாதிபதியாக வருகிறார்.

‘பன்னலக்னம் சரமானால் பதினோராம் அதிபதி பலனே தாரான்’ என்ற பாடலின்படி கடக லக்னத்திற்கு பதினோராம் அதிபதி சுக்கிரன் பாதகத்திலே அமர்ந்து பாதகாதிபதியாக இருக்கிறார். நவாம்சத்திலும் சுக்கிரனுடைய நிலை நன்றாக இல்லை. ராகு மகாதசையில் சுக்கிரபுக்தி முடியும்வரை அவருக்கு சிக்கல்கள் இருந்து கொண்டேயிருக்கும். 15.11.2013 முதல் 15.11.2016 வரை ராகு மகாதசையிலே உங்களுடைய மகனுக்கு சுக்கிரபுக்தி நடைபெறும்.

இந்த சுக்கிரபுக்தியில்தான் திருமணமும் நடைபெற்றது. 16.11.2016 முதல் 9.10.2017 வரையிலான சூரிய புக்தி உங்கள் மகனுக்கு நல்ல வழியை காட்டக் கூடியதாகவும், குழப்பங்கள், சிக்கல்கள், பிரச்னைகள் எல்லாம் தீரக் கூடியதாகவும் திருமண வாழ்க்கையில் சில மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரக் கூடியதாகவும் இருக்கும். உங்கள் மகன் திருமணம் செய்து கொண்ட பெண் ஜாதகத்திலே தற்சமயம் ஏழரைச்சனி நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் அந்தப் பெண்ணிற்கு கேது மகாதசையில் புதன்புக்தி 16.8.2016 வரை நடைபெறும்.

16.8.2016 வரை கேது தசையும், ஏழரைச் சனியும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் உங்கள் மருமகளுக்கு தற்சமயம் முன்கோபம் இருக்கத்தான் செய்யும். ஆனால், 17.8.2016 முதல் மருமகளுக்கு சுக்கிர மகாதசை தொடங்குகிறது.

 சுக்கிரன் புதனுடன் சேர்ந்து காணப்படுவதனாலும், நவாம்சத்திலும் நன்றாக இருப்பதனாலும் சுக்கிர மகாதசை உங்களுடைய மருகளுக்கு நன்றாக இருக்கும். எனவே, உங்கள் மகனுடைய திருமண வாழ்க்கை குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய மகனுக்கு ராகு மகாதசை நடைபெறுவதால் அவர் தொடர்ந்து அமெரிக்காவிலேயே வேலை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவில் இருப்பதற்கான வாய்ப்புகள் கிடையாது.

அதனால் உங்கள் மகன் நன்றாக இருப்பார். நல்ல நிலைமைக்கு வருவார். அவருடைய திருமண வாழ்க்கைக் குறித்து வீண் கவலை அடைய வேண்டாம். உங்கள் மருமகளின் மனசும் மாறும். கிரகங்களும், தசாபுக்திகளும் மாறும்போது மனித மனங்களும் மாறும். உங்கள் மகனுக்கு நல்ல வாழ்க்கை இருக்கிறது.

 பயப்பட வேண்டாம். உங்கள் மகனுக்கு ஏற்பட்டுள்ள மணவாழ்க்கை குழப்பங்களிலிருந்து நீங்கள் விடுபடுவதற்கு தஞ்சாவூர் அருகிலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மனை சென்று தரிசனம் செய்யுங்கள். விபத்தில் கணவரை இழந்த பெண்மணியின் குடும்பத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள்.