மகர சங்கராந்தியன்று மாபெரும் தேரோட்டம்!



உடுப்பி

மகர சங்கராந்தி என்றழைக்கப்படும் பொங்கல் திருவிழா சமயத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் மிக பிரமாண்டமாக தேர்த்திருவிழா நடைபெறுகிறது. உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் மகர சங்கராந்தி நன்நாளில்தான் கிருஷ்ணன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதால் அந்நாளும், அதைத் தொடர்ந்தும் விமரிசையாக விழா நடைபெறுகிறது. அந்தத் தேரோட்டம் பற்றிய தகவல்தான் இந்தக் கட்டுரை:

கிருஷ்ண பரமாத்மா பாலகனாக இருந்த போது கோகுலத்தில் அற்புதமாக பல லீலைகளை செய்து காட்டினார். இவற்றை உடன் இருந்து பார்த்து, அனுபவித்துப் பெருமைப்படும் வாய்ப்பு யசோதைக்கே கிடைத்தது. சிறையில் இருந்த தேவகி, கண்ணனைப் பெற்ற தாயே ஆனாலும் இந்த லீலைகளைப் பார்க்க அவளுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

ஒருசமயம் கிருஷ்ண பகவான் தேவகியைத் தரிசிக்க வந்தபோது, ‘‘கிருஷ்ணா, நீ என் பிள்ளையாகப் பிறந்தாலும், உன் பால பருவத்தை, விளையாட்டுகளை எல்லாம் நான் காண இயலாதவளாகிவிட்டேனே.

ஆயர்பாடியில் நீ செய்த அற்புத லீலைகளையெல்லாம், பிறர் சொல்லக் கேட்கையில் உன்னை அந்தக்கோலத்தில் பார்க்க மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கிறது. யசோதைக்குக் கிடைத்த பாக்கியம் எனக்குக் கிடைக்கக் கூடாதா? பாலகிருஷ்ணனாக என்முன்வந்து அதே லீலைகளைச் செய்து காட்ட மாட்டாயா? என்று கண்ணீர் மல்கியபடி கேட்டாள்.‘‘அவ்வளவுதானே அம்மா? அவற்றை நீ காணச் செய்கிறேன், வருந்தாதே!’’ என்றார் கிருஷ்ணர்.

அன்று தேவகி தயிர் கடைந்துகொண்டிருந்தபோது பாலகனாக வந்து லீலையைத் தொடங்கினான். அம்மாவின் கையிலிருந்த தயிர் கடையும் கயிற்றைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டான். அறை முழுவதும் சுற்றிச்சுற்றி வந்து ஓடி போக்குக் காட்டிவிட்டு, கிருஷ்ணர் மத்தால் தயிர்ப்பானையை அடித்து உடைத்துவிட்டு தூர ஓடிப்போய் நின்று ஒரு கையால் தயிர் கடையும் கயிறும் இன்னொரு கையில் மத்துமாக நின்று வாய்விட்டுச் சிரித்தான்.

குறுகுறுவென நடந்த சிறுகை நீட்டி ஆடியும் ஓடியும் ‘குறும்புக்காரக் கண்ணனாகக் காட்சி தந்த அந்த பாலகிருஷ்ண வடிவத்தைக்கண்டு மகிழ்ச்சியால் பொங்கிப் பூரித்துப் போனாள். பாலகிருஷ்ணனின் அதி அற்புதக் கோலத்தைக்கண்டு மெய் மறந்து நின்றாள்.

அப்போது பாலகிருஷ்ணனின் இந்த லீலா வினோதக் காட்சியை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த ருக்மிணி பெரிதும் மகிழ்ச்சிக்குள்ளானாள். பேரின்பத்தால் திக்குமுக்காடினாள். ஓடோடி வந்து அவனை அள்ளி எடுத்து தனது மார்போடு அணைத்துக்கொள்ளும்போது, அடுத்த கணம் அவ்வடிவம் நீங்கி அப்போதைய சுய உருவம் கொண்டார் கிருஷ்ணர்.

உடனே ருக்மிணி மிகுந்த ஏமாற்றத்ேதாடு, ‘‘சுவாமி, அதற்குள் அந்த அற்புதமான, எத்தனை பிறவியெடுத்தாலும் காண முடியாத உங்கள் பால பருவக் கோலத்தைக் காட்டி மறைத்துவிட்டீர்களே? உள்ளத்தைக்கொள்ளை கொண்ட அந்தக் குழந்தை வடிவிலேயே தினமும் உங்களைப் பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதை நாளும் நான் ஆராதிக்க வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது சுவாமி, என் பூஜைக்கு இப்படியொரு சிலை இப்போதே வேண்டும்!’’ என்று கண்களில் கண்ணீர் பெருக வேண்டினாள்.

உடனே பகவான் கிருஷ்ண பரமாத்மா தேவதச்சனை வரவழைத்து பாலகிருஷ்ண திவ்ய சொரூபத்தில் ஒரு சிற்பம் செய்துதரச் சொன்னார். அவரும் அப்படியே சிலையை உருவாக்கி ருக்மிணியிடம் கொடுத்தார். துவாரகை அரண்மனையின் அந்தப்புரத்தில் அதை வைத்து அன்றாடம் ஆராதித்து வந்தாள் ருக்மிணி. கிருஷ்ண அவதாரம் நிறைவுற்ற பிறகு, துவாரகையும் அழிந்தது. அப்போது அர்ஜுனன் அந்த பாலகிருஷ்ண விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போய் சந்தனக்காட்டில் மறைவான இடத்தில் வைத்துவிட்டான்.

அதுவே ‘ருக்மிணி’ வனம் என்று அழைக்கப்பட்டது.காலப்போக்கில் சந்தன மண்ணின் சேற்றில் பாலகிருஷ்ணனின் விக்கிரகம் புதைந்து
போயிற்று. சந்தனக்கட்டைகளைக் கப்பலில் ஏற்றிச்சென்ற வணிகர்கள், இந்த விக்கிரகத்தைச் சந்தனம் மூடி இருந்ததால், அதையும் கட்டைகளுடன் ஏற்றிக்கொண்டு போய்விட்டார்கள். உடுப்பிக்கு அருகே கப்பல் வந்தபோது கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது. கப்பலைக் காப்பாற்ற அதிலிருந்த அதிகப்படியான பாரத்தை மாலுமிகள் கடலில் இறக்கி விட்டார்கள். மண் உருண்டையாய் இருந்த கிருஷ்ண விக்கிரகமும் அப்படியே இறக்கி விடப்பட்டது.

கனவில் இதைக்கண்டு உணர்ந்த மத்வர் அந்த விக்கிரகத்தைத் தேடி எடுத்துவரத் தன் சீடர்களை அனுப்பினார். ஆனால், அவர்கள் யாராலும் அதைத் தூக்கவோ எடுக்கவோ முடியவில்லை. கடைசியில் மத்வரே போய் அதைத் தூக்கிக்கொண்டு வந்தார்.இந்த அற்புதச்சிலையை மத்வர், உடுப்பியில் உள்ள அனந்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் உள்ள மானஸரோவர் என்ற மத்வ தீர்த்தத்தில் நீராட்டிச் சந்தனம் விலகச் செய்தார். பின்னர் சகல மரியாதைகளுடன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார். அந்த உடுப்பி பாலகிருஷ்ணர் வெண்ணை உண்பவராக, கையில் மத்து ஏந்தியவராக, எழிற் கோலத்துடன் சாளக்கிராம சிலையாக சுதர்சன சக்கரத்துடன் இன்றளவும் திவ்ய தரிசனம் தருகிறார்.

சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுவாமியைப் பிரதிஷ்டை செய்த இந்தப் புண்ணிய தினத்தைப் பொங்கல் திருநாளை ஒட்டி உடுப்பியில் கொண்டாடுகிறார்கள். சங்கராந்தி என்றும், ‘மகர சங்க்ராமண தினம்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். அன்று மாபெரும் தேர்த்திருவிழாவாக, ஒளிவிளக்கு வரிசைகளுடன் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி திங்களில், தைப்பொங்கலன்று உடுப்பி பாலகிருஷ்ணன் கோயிலில் ‘ஸப்தோற்சவம்’ எனப்படும் ‘ஏழு நாட்கள்’ உற்சவம் நடைபெறும். விழா, மகர சங்க்ராமண தினத்துக்கு (நாம் போகி என்று கொண்டாடும் பண்டிகை நாள்) ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கி விடுகிறது. முதல்நாள் நவகிரக சாந்தி பூஜையுடன் விழா களை கட்டத் தொடங்குகிறது.

இங்கு பிரம்ம ரதம், பீமரதம், கருட ரதம் என்று மூன்று பெரிய தேர்கள் இருக்கின்றன. மூன்றிலும் பிரம்ம ரதம் மிகப்பெரியது. வெண்ணிறத்தில் உருண்டையான முடியுடன், அடுக்கடுக்கான வரிசைகளுடன் அது மிக அழகாக விளங்குகிறது. தேரின் கீழ்ப்புறம் திருமாலின் தசாவதாரச் சித்திரங்கள் வரைந்த அலங்காரக் கூரையின் நடுவில் கருட பகவான் சிறகுகளை விரித்தபடி காட்சி தருகிறார்.

அலங்கரிக்கப்பட்ட திரைச்சீலைகளின் நடுவே அலங்கார வாயில் விளங்குகிறது. வண்ண வண்ண மணிமாலைகளும் மலர் மாலைகளும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. தேருக்கு பிரமாண்டமான முடியும், அளவில் சிறிய அடிப்பகுதியுமாக இருப்பதால் தேர் அசைந்து வரும்போது அழகாக ஆடுவது போன்றே இருக்கிறது.

முதல் நாளன்று கிருஷ்ண, ஆஞ்சநேய உற்சவ மூர்த்திகளைத் தங்கப் பல்லக்கில் வைத்து திருக்குளத்திற்கு எடுத்துச்செல்கிறார்கள். அங்கு இரண்டு படகுகளின் மீது கட்டப்பட்டிருக்கும் தெப்பத்தில் அவை வைக்கப்பட்டு தெப்போற்சவம் நடத்தப்படுகிறது. அங்கிருந்து மூர்த்திகளை வெளியிலிருக்கும் பெரிய தேருக்குக் கொண்டு வருகிறார்கள். கிருஷ்ண விக்கிரகத்தைப் பரியாய சுவாமிகளும், முக்கிய பிராண மூர்த்தியாகிய ஆஞ்சநேயரை ஆலய அர்ச்சகரும் எடுத்துத் தேரில் வைக்கிறார்கள். அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு மங்கள ஆரத்தி காட்டப்படுகிறது.

முதல் தேரைப் போன்றே ஆடை அணிமணி அலங்காரங்களுடன் திகழும் இரண்டாவது சிறிய தேரில் முக்கிய பிராண மூர்த்தி என்றழைக்கப்
படும் ஆஞ்சநேய சுவாமிகளை அமர்த்துகிறார்கள். அதற்கு அடுத்து, அதேபோன்று அணிமணி வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்றாவது சிறிய தேரில் அனந்தீஸ்வரர் மற்றும் சந்திரமௌளீஸ்வரரின் உற்சவ மூர்த்திகள் அமர்த்தப்படுகிறார்கள்.

கண்ணைப் பறிக்கும் வண்ண அலங்காரச் சிவப்புநிறக் கொற்றக்குடைகளை எடுத்துக்கொண்டு தேர்களுக்கு முன்னால் தொண்டர்கள் வருகிறார்கள். தொடர்ந்து அஷ்ட மடத்தின் பல்வேறு மடாதிபதிகளும் பின்தொடர்கிறார்கள். நாதஸ்வர மேளதாளம் ஒலிக்க மங்கள ஆரத்தியுடன் மறுபடியும் தேரோட்டம் துவங்குகிறது. மடாதிபதிகள் மக்களுடன் கலந்து நின்று தேர் வடத்தைப் பற்றி இழுக்கிறார்கள். வழியெங்கும் மக்கள் மலர் தூவி பூமாரி பொழிந்து, இறைவன் புகழ் பாடி வழிபடுகிறார்கள்.

மூன்று தேர்களும் சிறிது தூரம் சென்றதும் நிறுத்தப்படுகின்றன. அங்கு கீழே விரிக்கப்பட்ட புதிய வஸ்திரங்களின் மீதமர்ந்த பரியாய சுவாமிகள் உபன்நியாசம் செய்வார்கள். அப்போது வாண ேவடிக்கைகள் நடைபெறும். பஜனைப் பாடல்களின் ஒலி விண்ணை முட்டும். அப்போது வரிசை வரிசையாய் கற்பூரம் ஏற்றி வைக்கப்படும். எண்ணெய் தோய்த்த துணிப்பந்துகள் கொழுந்துவிட்டு எரியும். இதை ‘அக்னி தோரணம்’ என்பார்கள். இதன்மூலம் இறைவனுக்கு இருக்கும் திருஷ்டி தோஷத்தைக் கழிக்கிறார்கள்.

இதையடுத்து அதிர்வேட்டுகள் முழங்கி ஓய்ந்ததும் மூன்று தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக மெல்ல ஆடி அசைந்து புறப்படுகின்றன.
உடுப்பியில் மிகப்பெரிய அகலமான  நான்கு ரத வீதிகள் இருக்கின்றன. மிகப்பழமையான அனந்தீஸ்வரர், சந்திரமௌளீஸ்வரர் கோயில்களும் இங்கே இருக்கின்றன. உடுப்பியின் பிரசித்தி பெற்ற ‘அஷ்ட மடங்கள்’ எனப்படும், கிருஷ்ணர் கோயிலை நிர்வகிக்கும் எட்டு மடங்களும் அந்த நான்கு ரத வீதிகளிலும் ஒரே மாதிரி அமைப்புடன் கூடிய எட்டு பெரிய மாடிக்கட்டிடங்களாக அமைந்துள்ளன. இவற்றின் வழியே மூன்று தேர்களும் நான்கு முக்கிய வீதிகளிலும் வலம் வருகின்றன. இந்நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒருமுறைதான் மகர சங்க்ராமண நாளன்று நடைபெறுகிறது.

தேரோடும் வீதியெல்லாம் அழகிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மங்கள வாத்திய ஒலியும் வெடிச்சத்தமும், வண்ண வண்ண மத்தாப்பும் வாண வேடிக்கைகளும் காண்போர் உள்ளத்தைக் கவர்ந்திழுக்கின்றன. வரிசையாய் தெருவின் குறுக்கே தோரணமாகக் கட்டப்பட்டு வெடிக்கும் வெடிகளும் இந்த ரத ஊர்வலத்தில் மிகவும் விசேஷமானவை.

பலவிதமான ஆகாச வாணங்கள் வண்ண வண்ணப் பூக்களாக மாறி வானின் உச்சிவரை சென்று உதிர்கின்ற காட்சி மிக அற்புதமானது. இந்த ஒளி மழைக்கு நடுவே நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஊர்வலமாக முன்னே வருகின்றன. பல வண்ணப் பதாகைகள், கொடிகள் தாங்கிய தொண்டர்கள் உடன் வருகிறார்கள். வீதியெங்கும் நாதசுர மேளங்கள், நகரி, பறை போன்ற இசைக்கருவிகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன. வீதிகளின் இருபுறமும் கடைகளிலும் மாடிகளிலும் ஏராளமான மக்கள் கூடி நின்று இந்த அதிஅற்புத அலங்காரத்தேர் பவனியைக் கண்டு களிக்கிறார்கள். பெரும் ஆரவாரம் செய்கிறார்கள். நகரமே குதூகலத்தோடு விழாக்கோலம் கண்டு பூரிக்கிறது.

மூன்று தேர்களும் மெல்ல அசைந்தாடி வந்து நிலைக்குத் திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆகிவிடுகிறது. அதுவரை தெருவின் நான்கு மூலைகளிலும் நாதஸ்வர இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன. உற்சவத்தின் ஏழாம் நாளான கடைசி நாளன்று மகர பூஜைக்குப் பின்னர், எட்டு மடங்களையும் சேர்ந்த சுவாமிகள் ஒவ்வொருவராகத் தேரில் ஏறி மங்கள ஆரத்தி காட்டுகிறார்கள். அங்கிருந்து கனி வகைகளையும், மலர்களையும் சில்லறைக் காசுகளையும் அள்ளி அள்ளி மக்கள் கூட்டத்தை நோக்கி வீசுகிறார்கள்.

பக்தர்கள் ஆவலுடன் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு அவற்றை எடுக்கிறார்கள். பின்னர் உற்சவ மூர்த்திகளை எடுத்துக்கொண்டு மத்வசரோவர் என்ற திருக்குளத்துக்கு வருகிறார்கள். அதைத்தொடர்ந்து மற்ற மடாதிபதிகளும் வருகிறார்கள். சுவாமிகள் அனைவரும் மூர்த்திகளுடன் குளத்தில் மூழ்கி ஸ்நானம் செய்யும்போது பக்தர்களும் கூடவே நீராடுகிறார்கள்.

பிறகு தங்கக் கலவை தடவிய மலர்களால் கண்ணனை அர்ச்சிக்கிறார்கள். இந்த உற்சவத்திற்கு ‘ஸ்வர்ணோற்சவம்’ என்று பெயர். பின்பு மூர்த்திகளை ‘ஒலக’ மண்டபத்திற்குள் கொண்டுவந்து தொட்டில் பூஜை செய்கிறார்கள். அப்போது இனிய புல்லாங்குழல் கீதம் இசைக்கப்படுகிறது. சுவாமிகள் மந்திர அட்சதை வழங்கிய பிறகு விக்கிரகங்களை மீண்டும் கிருஷ்ண மடத்திற்கு எடுத்துச்செல்கிறார்கள்.

சுவாமிக்கு ஏகாந்த சேவை நடைபெறுகிறது. அதன் பின்னர் பரியாய சுவாமிகள் திரும்பிச் செல்ல மற்ற மடாதிபதிகளும் பின்தொடர்ந்து செல்கிறார்கள். பூஜை முடிந்தபின் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றாக அமர்ந்து விருந்து உட்கொள்கிறார்கள். இறைவனின் பிரசாதமாக அளிக்கப்படும் இந்த விருந்தில் மடாதிபதிகள் அனைவரும் எல்லா பக்தர்களுடன் சேர்ந்து அமர்ந்து ஒரே சமயத்தில் சாப்பிடுகிறார்கள்.

உடுப்பி திருத்தலத்தில் மந் நாராயணன், ‘அன்ன பிரம்மா’வாக விளங்குகிறார் என்பதை இதன்மூலம் நாம் உணரலாம்.பிரசித்தி பெற்ற இத்தேர்த் திருவிழாவில் இறைவன் திருவீதியுலா வரும்போது வாகனமாகத் திகழும் தேர் ஒரு சிற்பக்கலைக்கூடமாகத் திகழ்கிறது. கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் எழுந்தருளி, அவர்களின் இல்லந்தோறும் சென்று அருள் வழங்கும் முகமாக, தேர்த்திருவிழாக்களை சான்றோர்கள் ஏற்படுத்தினர்.

தேரோட்டம் என்பது மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஓர் அற்புதத் திருவிழா. தங்கள் வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் மறந்து இதில் அனைத்து மக்களும் கலந்துகொண்டு தேர் வடம் பிடிக்கிறார்கள். இதனால் இறைவனின் சந்நதியில் அனைவரும் சமம் என்ற உணர்வும்
ஏற்படுகிறது. தேரை அமைக்கவும், அலங்கரிக்கவும், பாதையைச் செப்பனிடவும், திருவிழா கொண்டாட செய்யப்படும் அனைத்துவகை ஏற்பாடுகளிலும் எல்லோரும் பங்கு பெற்று செயலாற்றுவது என்பது கிடைத்தற்கரிய பெரும்பேறாகும்.

இப்படியாக, உடுப்பி கிருஷ்ண மடம் ஒவ்வொரு ஆண்டும் தேர்த்திருவிழாவை மிகவும் விமரிசையாகவும் சிறப்பாகவும் உலகம் போற்றும் வண்ணம் கொண்டாடுகிறது.உடுப்பி ஆலயத்தில் பிரசித்தி பெற்ற இந்த மூன்று விசித்திரத் தேர்களின் மாதிரி வடிவங்களைக் கண்ணாடி அலமாரியில் காட்சிப்
பொருளாக வைத்து,  நாள்தோறும் வருகை தரும் பக்தர்களின் தரிசனத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

- டி.எம்.இரத்தினவேல்