குளிர் தரும் ஆன்மிகச் சாரல்



தலையங்கத்தின் உணர்வுபூர்வமான வரிகள் மனித எதிர்பார்ப்பை வெளிச்சம் போட்டுக் காட்டின. இல்லாத பட்சத்தில் வருந்தி வேண்டுகின்ற ஒரு கோரிக்கை நிறைவேறிய பின்பு உதவியவரை உதாசீனப்படுத்துவது மனித இயல்பாகிறது. ‘நம் நெஞ்சத்தில் ஈரம் உலர உலர பூமியும் உலர்ந்து வறண்டு வருகிறது. இதுதான் உண்மை’ எனும் வரிகள் நன்றி தெரிவிக்கும் நாகரிகத்தை அனைவருக்கும் உணர்த்தின.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

மன்றோவிற்கு அருளிய மகான் தொடங்கி, வெள்ளையரைக் காத்த வேதநாயகி வரை அதிசயிக்க வைக்கும் இறை அற்புதங்களைத் தொகுத்து வழங்கிய பாங்கு சிலிர்க்க வைத்துவிட்டது. ஒவ்வொரு இறை அற்புதமும் தெய்வம் அவ்வப்போது மண்ணில் வந்து மகத்துவங்களை விதைத்திருக்கிற இறைலீலைகளை உணர்த்தின.
- அயன்புரம் த.சத்திய நாராயணன்.

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு மிகச்சரியான உதாரணமாக இருப்பவர் கிருஷ்ண பகவான். அவரது செயல்பாடுகளில் கள்ளத்தனம் கொடுமைகள் முதலில் இருந்தாலும் முடிவில் நன்மையாகவே இருந்திடும். எனவே கிருஷ்ணர் நல்லவனில் கெட்டவன் கெட்டவனில் நல்லவன். மொத்தத்தில் உலக நன்மைக்காக மிக மிக நல்லவர். ஓஷோவின் விளக்கம் அருமை.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

‘தான் மொட்டை அடித்துக்கொள்வது அல்ல துறவு. அடுத்தவர்களை மொட்டை அடிக்காமல் இருப்பதே துறவு’; ‘வைரக் கல்லுக்கும், மண்ணாங்கட்டிக்கும் வித்தியாசம் அறியாததுதான் துறவு’ என்ற திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சீரிய சிந்தனைகள் சிந்திக்க வைத்தன.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.

கடந்த இதழ் முருகன் அருள் வரவோடு அற்புதமாக இருந்தது. ராசிபலன் உள்ளதை உள்ளபடி சொல்லியது. தெளிவு பெறு ஓம்  வழங்கும் விளக்கங்கள் அருமை. தங்கள் இதழ் கடுங்கோடையில் குளிர் தரும் ஆன்மிகச் சாரலாய் அமைந்துள்ளது.
- இரா.வைரமுத்து, ராயபுரம்.

தெரிந்த ஊர்களே ஆனாலும் மந்த்ராலயம், முஷ்ணம், நயினார்கோயில், மதுரை மீனாட்சி, திருச்செந்தூர் என வித விதமாக இறை அற்புதங்கள் நிறைந்த தெய்வீக இடங்களை நல்ல தகவல்களுடன் அளித்து வியப்பூட்டியிருந்தீர்கள். ஆடிக் கிருத்திகை சமயத்தில் திருத்தணி முருகனின் கந்தசஷ்டி கவசத்தை வெளிட்டது பஞ்சாமிர்தம் சுவைத்தது போல் இருந்தது. தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த ஒவ்வொருவருக்கும் கருணை பொழியும் கருவறைத் தெய்வங்களை ஆடி மாதத்தில் வலம் வரச் செய்தது பெரும் தெய்வீகத் தொண்டு.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

மயில்மேல் அமர்ந்துள்ள முருகனின் அட்டைப்படமே ஆன்மிகத்தை மேம்படுத்தியது. உள்ளே தலையங்கம் முதல் பக்கத்துக்குப் பக்கம் அற்புத படங்கள் கட்டுரைகள், தொடர்கள்... தங்கள் இதழ் அட்சயபாத்திரம் போல் நல்ல விஷயங்களை அள்ளி அள்ளித் தருகிறது. நன்றியும் பாராட்டுகளும்.
- மீனவாசன், வந்தவாசி.

‘கனவில் வந்து காத்த வராகர்’ நிகழ்ச்சி என் மனதை நெகிழ வைத்தது. மதம் எது எனப் பாராமல் திருவருட்பாலித்த இறைவனின் கருணையை வியக்க வைத்தது.
- இல.வள்ளிமயில், மதுரை.

ஆகஸ்ட் 1-15, 2015 இறை அற்புத பக்தி ஸ்பெஷல் அருமை. சென்னைக்கு அருகில் இப்படியொரு சிவாலயம் (மனவலிமை பெருக்கும் சந்திரன்) சோமங்கலம் என்ற இடத்தில் உள்ளது என்ற தகவலை ஆன்மிகம் பலன் வாயிலாக அறிந்து கொண்டதில் அளவற்ற ஆனந்தம் அடைந்தேன்.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி.