பேச்சுக் குறை போக்கும் பெருமாள்
சுற்றிலும் மலைக் குன்றுகள், பசுமை மிகு சோலைகள், சுனைகள் நிரம்பிய அந்தப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான் பேச இயலாச் சிறுவன் ஒருவன். நெற்றியில் திருமண் அணிந்திருந்த முதியவர் ஒருவர் அவனை நெருங்கி, ‘‘தம்பி நான் இங்கிருக்கிறேன்னு ஊர்ல போய் சொல்லு’’ என்று கூறினார். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்ற சந்தேகமும் எழாமல், தன்னால் எப்படி பேசித் தெரிவிக்க முடியும் என்றும் கவலையும் கொள்ளாமல், என்னவோ மந்திரத்துக்குக் கட்டுப்பட்டாற்போல, சிறுவன் ஊருக்குள் ஓடிச் சென்று அதைச் சொன்னான். அவன் சொன்ன தகவலை விட, அவன் பேசியது ஊர் மக்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அவனை இப்படிப் பேச வைத்த பெரியவர் யார் என்று அறிந்து கொள்ள, மலை மீது ஏறி பார்த்தபோது, அவர்கள் ஆச்சர்யத்தால் பேச்சிழந்தார்கள். ஆமாம், அங்கே சுயம்புவாக சங்கு சக்கரங்களை தாங்கியபடி திருமால் நின்றிருந்தார். சிறுவனுக்கு பேச்சுக் கொடுத்த பேரருளாளனாகக் காட்சியளித்தார்.
- இது அய்யம்பாளையத்தில் உத்தமராய பெருமாள் கோயில் உருவான தல புராணம். மேலே குறிப்பிட்ட அதிசயம் இக்கோயிலில் இன்றும் தொடர்வதாக அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த சக்தியை புதிதாகப் பெறவும் அருள்கிறது இக்கோயில். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் பெரிய அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரம். தென்னகத்தில் அந்நிய கலாசார தாக்குதல்கள் மேலும் விரிவடையாமல் விஜயநகர நாயக்க மன்னர்கள் தடுத்ததோடு, அந்தத் தாக்குதல்களால் சிதறடிக்கப்பட்ட கோயில்களை புதுப்பிக்கவும் செய்தார்கள். கூடவே, புதிய கலையம்சம் கொண்ட கோயில்களையும் நிர்மாணித்தார்கள். அந்த வரிசையில் பெரிய அய்யம்பாளையத்தில் மலை மீது உருவான இந்தக் கோயில் ஒரு கற்றளி கோயிலாகும்.
சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள் பாலிக்கிறார்.
கருவறையை சுற்றியுள்ள புறச்சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமில்லை. அறைத் தூண்களும், மேல் கோஷ்டங்களும் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் விஜயநகர கலைப்பாணியில் புடைப்புச் சிற்பங்களாக வீரன் அஞ்சலி செலுத்தும் நிலையிலும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் நிலையிலும் காணப்படுகிறார்கள். அதிஷ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்ற ஆறு பெரும் பகுதிகளாக கோயில் விமானம் அமைந்துள்ளது. சுவரின் மேலுள்ள பிரஸ்தரம் என்று அழைக்கப்படும் கூரைப் பகுதி, கருவறையை மூடும் அமைப்பாக உள்ளது. இவற்றின் நான்கு மூலைகளிலும் கருட பகவான் காட்சியளிக்கிறார். கிரீவப் பகுதியின் முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ண கூடங்கள் அமைந்துள்ளன. இரண்டாவது தளத்தை தெய்வ, மானிட உருவங்கள் தாங்கி நிற்கின்றன. குழல் ஊதும் அனுமன், நரசிம்மர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஆகிய தெய்வ உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. இங்குள்ள அர்த்த மண்டபம் சதுர வடிவிலும், தூண்கள் சதுரப் பட்டையாகவும் உள்ளன. தூண்களில் விஜயநகர காலத்திய பெண், திருமால், அனுமன், சங்கு, சக்கரம், அன்னப் பறவை, பெரியாழ்வார், ராமானுஜர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.
கருவறைக்கு எதிரில் கருட பகவான் மூலவரை நோக்கி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார். கருவறை வாயில் காவலர்களாக துவார பாலகர்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளனர். கோயில் அமைந்துள்ள குன்றின் ஒரு பக்கத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய குகையும், அனுமன் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தின பூஜைகளும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, கார்த்திகையில் விஷ்ணு கார்த்திகை, தை மாதத்தில் காணும் பொங்கலுக்கு மறுநாள் மகரத் திருவிழா என்று விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதுதவிர ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நடைபெறும் விசேஷ பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்பது திடமான நம்பிக்கை. திக்கிப் பேசும் குழந்தைகள், பேச்சிழந்த குழந்தைகள், ஞாபக சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஏழு வாரங்கள் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பிரசாத தேனை அருந்தி வந்தால் குறைகள் படிப்படியாக குணமாகிறது என்கிறார்கள். கோயிலைச் சூழ்ந்துள்ள இயற்கை எழில், அதற்குக் கட்டியம் கூறுகிறது.
- சுந்தர ராமன்
|