சரும நோய் தீர்க்கும் சதாசிவன்
அஜமகாராஜன், அயோத்தி நகரப் பேரரசர். ஒரு நடுநிசியில் அவர் ‘ஓ...’ என ஓலமிட்டு விதிர்த்தெழுந்தார். அருகில் உறங்கியிருந்த ராணியார் திடுக்கிட்டு எழுந்து, தீப்பந்த வெளிச்சத்தில் மன்னரின் முகம் பார்த்து அதிர்ந்தார். கைகால்கள் முறுக்கியது போலாகி, உடல் கறுத்துக் கிடந்தார், அஜமகாராஜர். அயோத்தி முழுதும் வாயுவை விட வேகமாக இந்த விஷயம் பரவியது. ராஜவைத்தியர்கள் அணிவகுத்து நின்றார்கள். உடல் முழுதும் அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சோதித்தார்கள். மூலிகைகளையும், மருந்துகளையும் மாறி மாறி கொடுத்தார்கள். நாழிகைகளும், நாட்களுமாக கடந்ததே தவிர நோய் அகல மறுத்தது. மகாராணியார் சந்திரமுகி, சிவபக்தியில் சிவந்தவள். கணவனுக்கருகே கண் மூடி ஈசனின் நாமத்தை ஓயாது ஜபித்துக் கொண்டிருந்தாள். ராஜவைத்தியம் தோற்றுப் போனது. தேவனின் வைத்தியம்தான் சிறந்தது என்று முடிவு கொண்டார்கள். குல குருவான வசிஷ்டரை தம் உள்ளத்தில் வைத்து நமஸ்கரித்தார் அஜமகாராஜா.
மறுநாள் காலை வசிஷ்டர் அரண்மனைக்கு வந்தார். தட்டுத் தடுமாறி எழுந்த அஜமகாராஜன் கூனிக் குறுகி வசிஷ்டரை வரவேற்க ஓடினார். குருவருள் எனும் தெய்வத் திருவருள் அஜமகா ராஜனை அரவணைக்க, அவர் வசிஷ்டரின் பாதம் தொட்டார். நடுங்கிய கைகளைக் கண்ட குரு வசிஷ்டர் பஞ்சினும் மெல்லிய தம் கரத்தால் கைகால்களை நீவினார். திருவாய் மலர்ந்து பேச ஆரம்பித்தார்: ‘‘பழவினைகளை உதிர்ந்து போகத்தானே இவை முளைத்திருக்கின்றன’’ என்றார். ‘‘முற்றிய வினைகள் தாமாக உதிரும். கவலை வேண்டாம். சங்கர பார்வதி சமேத கைலாசநாத ஸ்வாமி உறையும் காங்கேயபுர க்ஷேத்திரம் செல்’’ என்றார். கூடவே அந்த தல மகாத்மியத்தையும் விவரித்தார். சட்டென்று அரசரின் முதுகுக் கூன் நிமிர்ந்தது. அவர் மனதில் கயிலாயக் காட்சியை வசிஷ்டர் நிறுத்தினார். ஈசனின் திருவாயினின்று பிரவாகமாக வந்த பிரம்ம ஞான விஷயங்களை பார்வதி தேவியார் உள்வாங்கிக் கொண்டிருந்தார். சிறு சலங்கைச் சத்தம் போன்றதொரு ஓசை அம்மையின் கவனத்தை கலைத்தது. ஆனாலும், ஈசனிடமிருந்து பிரம்ம ஞான அருவி அடங்காது பொழிந்து கொண்டிருந்தது, மாபெரும் வேத வாக்கியங்களையும், உபநிஷதங்களையும் ஊன்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ஷண்முகனான அழகுக் குமரன் தாய், தந்தையரை கண்டதும் குதூகலித்தான். பார்வதி தேவி தாவிச் சென்று உச்சி முகர்ந்தாள். ஞான விஷயங்கள் காற்றோடு போயின. பார்வதியின் கவனத்தை கலைத்த குமரக் கடவுளை கோபமாகப் பார்த்தார் ஈசன். ‘‘பிரம்ம ஞானத்தை சாதாரணமாக கருதிய நீ பூவுலகுக்கு சென்று தவமியற்று. இது எத்தனை முக்கியம் என்று அறிந்து கொண்டு வா’’ என்றார். குமரன் முகம் வாடிப்போனது. தாயும் குமுறினாள். மகன் சோர்ந்து செல்வதைப் பார்த்து அழுதாள்.
ஈசன் கருணையோடு ஞானச்செல்வன் செல்லும் வழியையே பார்த்தார். ‘‘தேவியே... பூவுலகில் சூரன் எனும் அசுரனை அழிக்க கந்தனைத் தவிர வேறு யாருமில்லை. அது தவிர தட்சனின் யாகத்தில் நடந்தது உனக்குத் தெரியுமல்லவா? கலந்து கொண்டோர்கள் யாவருக்கும் சூலை நோயும், அங்கங்களைக் குறுக்கும் ரோகமும் ஆட்கொண்டது தெரியுமல்லவா? அவர்களுக்கு விமோசனம் தர ஷண்முகன் ஒரு தீர்த்தத்தை உருவாக்குவான். காவிரி பாய்ந்தோடும் நதிக்கு அருகே வில்வ வனங்களுக்கு மத்தியில் அமர்ந்து முருகன் தவம் செய்வான்’’ என்றார். அம்மை தெளிந்தாள். தீர்த்தம் உருவாவது கண்டு மகிழ்ந்தாள். குமரன் எளிமையானான். இடுப்பில் மட்டும் ஆடை தரித்து தவக்கோலம் பூண்டான். இன்றைய கும்பகோணமான அன்றைய கும்பபுரிக்கு அருகேயுள்ள குமாரவனத்திற்குள் நுழைந்தான். மாபெரும் வில்வ விருட்சத்திற்கருகே அமர்ந்தான். உள்ளுக்குள், ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சரம் உருள ஆரம்பித்தது. நந்தி பகவானும் குமரனை அனுதினமும் தரிசித்துச் சென்றார். குமரன் தவத்தில் மாபெரும் குன்றுபோல் பெருத்தான். கந்தனின் தீந்தவம் கயிலைநாதனை அசைத்தது. அசரீரியொன்று, அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்குமாறு சொன்னது. கந்தப்பெருமான் தன் சக்தி வேலால் பூமியை கீற, பாதாளத்திலிருந்து கங்கை பொங்கியது. பொங்கிய ஊற்றில் ஸ்நானம் செய்தார். பறவைகள் பல பறந்து வந்தன. சிறகடித்து நீரை தெளித்தபோது தேவர்களாக உருமாறின. சகல தேவர்களும் பிரசன்னமாயினர். தட்சனின் யாகத்தால் நோயுற்றோர் அப்பொய்கையில் மூழ்கி எழுந்து தம் இயற்தோற்றம் பெற்றனர். மிகப்பிரகாசமாக ஈசனும், அம்மையும் தோன்றினார்கள். ‘‘உன்னால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்திற்கு இணை உலகில் வேறெங்கும் இல்லை. இந்த தீர்த்தம் ஷீரபுஷ்கரணி, அதாவது, பாற்குளம் என பிற்காலத்தில் வழங்கப்படும்’’ என்றார்.
‘‘இன்றிலிருந்து காங்கேயபுரம், பஞ்சாட்சரவனம், பூகைலாசம் என்றும் இத்தலம் வழங்கப்படும். கைலாசநாதர் என்று நான் என்னை நிலை நிறுத்திக் கொள்வேன். சங்கரபார்வதி எனும் திருப்பெயரில் உன் தாய் இங்கு திகழ்வாள்’’ என்று நெகிழ்ந்து கூறினார். ‘‘இத்தலமிருக்கும் திக்கு நோக்கி வணங்குவோர் ஜன்மம் கடைத்தேறும்’’ என்றார். வசிஷ்டர் முழுப் புராணத்தையும் சொல்லி முடித்து கண்கள் திறந்தபோது, அஜமகாராஜனின் கண்களில் நீர் கட்டியிருந்தன. நமக்கான தலம் இதுவல்லவோ எனும் உறுதி நெஞ்சில் ஆழப் பதிந்திருந்தது. வசிஷ்டர் ஆசிகள் கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். அஜமகாராஜனும், சந்திரமுகியும் எளியவர்களாக அயோத்தியை விட்டுக் கிளம்பினார்கள். காவிரிச் சாரலை நெருங்கினார்கள். இன்றைய உடையாளூர் என அழைக்கப்படும் அன்றைய காங்கேயபுரத்திலுள்ள சங்கரபார்வதி சமேத கைலாசநாதர் கோயிலை அடைந்தார்கள். ரிஷியும், ரிஷிபத்தினி போல அந்த தம்பதியர் நீண்டகாலம் வாழ்ந்தனர். கயிலைப்பிரானை அர்ச்சித்தும், சங்கரபார்வதி தேவி திருவடியை பூசித்தும், பாற்குளத்தின் தீர்த்தத்தில் நீராடியும் முற்றிலும் தம் குஷ்டநோய் நீங்கப் பெற்றார் அஜமகாராஜன். அகமும், புறமும் புடமிட்ட தங்கம் போல் மாறினார்கள் ராஜ தம்பதியர். கந்தனின் கம்பீரமும், குமரனின் அழகுக் குழைவும் அவ்விருவருக்குள்ளும் ஒன்றாகக் கலந்தன. பயணப்பட மனமில்லாது அயோத்திக்கு புறப்பட்டனர்.
அவர்களுக்கு தசரதன் எனும் அருமைப் புதல்வன் பிறந்தான். இந்த தசரதனை ‘அப்பா...’ என்று அழைத்தபடி மஹாவிஷ்ணுக்குள்ளிருந்து ஒரு சக்தி புறப்பட்டது. குமரன் தொலைவினின்று பார்த்துச் சிரித்தான். வால்மீகிகூட தமது ராமாயணத்தில் ராமனின் அழகைப் பாடும்போது ‘குமரனைப்போல பேரழகோடு இருந்தான்’ என்கிறார். உடையாளூரைப்பற்றி பிரமாண்ட புராணம் பல நூறு பக்கங்கள் பேசுகின்றன. அதற்கு சரித்திரப் பெருமையும் விஞ்சிக் கிடக்கின்றது. ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் என்று மாபெரும் மன்னர்கள் கோலோச்சிய அற்புத பூமி இது. ராஜராஜ சோழனின் நினைவாக இவ்வூருக்கு ‘சிவபாதசேகரமங்கலம்’ என்று பெயர் வந்தது. முதற் குலோத்துங்கன் காலத்தில் உலகுடையாள் எனும் பட்டமகிஷியின் நினைவாக உலகுடையாள் என்று அழைக்கப்பட்டது. பிறகு அதுவும் திரிந்து உடையாளூர் என்றாகியது என்று சான்றோர்கள் கருதுகிறார்கள். அதுபோல பாகவத சம்பிரதாயப்படி பஜனை செய்வது இத்தலத்தின் இணையிலா விஷயம். இன்றும் பல பாகவதர்கள் இங்கிருந்து உலகெங்கும் பாகவத தர்மத்தை பரப்பி வருகின்றனர். ஊரின் எல்லையிலேயே செல்வமாகாளி பேரருளோடு விளங்குகிறாள். அன்னையை தரிசித்துவிட்டு கோயில் வாயிலருகே நின்று பார்க்க பாற்குளம் தெப்பம் விடுமளவுக்கு பெரிதாக இருக்கிறது. அருகேயே கைலாசநாதர் ஆலய வாயில் வரவேற்கிறது. கோயிலுக்குள் நுழையும்போதே நமது மூதாதையர்கள் செதுக்கி வைத்திருக்கும் முதிர்ந்த தமிழ்க் கல்வெட்டுகள், நட்சத்திரங்களாய் மின்னுகின்றன. அவை கோயிலின் எல்லா புறமும் விரவிக் கிடக்கின்றன. அவை விளக்கெரிக்க கொடுத்த நிவந்தங்கள் பற்றியும், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்குமான நித்திய பூசைக்குண்டான செலவுக்காக அளிக்கப்பட்ட நிலதானத்தைப் பற்றியும் மிக விரிவாகப் பேசுகின்றன. கல்வெட்டு விஷயங்களைத் தொகுத்தாலே அது ஒரு பெரிய, தனி புத்தகமாக்கப்படும் அளவுக்கு உள்ளது.
மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்று சம்பிரதாயப்படி அடுத்தடுத்து அமைந்திருக்கின்றன. கோயிலின் உற்சவ விக்ரகங்கள் அனைத்தும் அர்த்தமண்டபத்தில் பொலிவுடன் வீற்றிருக்கின்றன. அவற்றில் காளி உற்சவ மூர்த்தி நின்று பேசுகிறாள். நடராஜப் பெருமானுக்கு கற்சிலைகள் சில இடங்களில்தான் காணப்படுகின்றன. சுமார் ஒன்றரை மீட்டர் உயரத்திலுள்ள நுண்ணிய வேலைப்பாடுகளோடு, பார்க்கப் பார்க்கப் பேரானந்தம் தருகிறது அச்சிலை. சிவகாமியம்மையின் சிலையும் நேர்த்தியாக உள்ளது. கருவறைமுன் துவார பாலகர்களின் சிற்ப அமைதி பிரமிக்க வைக்கிறது. கருவறைக்கு முன்பேயே ராஜராஜன் மற்றும் லோகமாதேவி சிலைகள் அழகுற அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை, இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் அவனுடைய அரசியார் சிலைகள் என்ற கருத்தும் நிலவுகிறது. கைலாசநாதரின் சந்நதியில் வலிமையான அதிர்வுகள் வலையாகப் பின்னிக் கிடக்கின்றன. குமரனின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கைலாசநாதர் ஆதலால், அழகுக்கு பஞ்சமில்லாது பொலிகிறார். தேவர்களின் நோய் தீர்த்தவனும், சூரிய குலத்தோன்றலை தழைக்கச் செய்தவனுமான இந்த ஈசன், நம் வாழ்விலும் வளமூட்டுகிறான். ராஜாதிராஜர்களுக்கெல்லாம் பேரரசனாக விளங்குபவனுடைய சந்நதியில் நிற்கிறோம் எனும் பிரமிப்பால் உயர்கிறோம். இன்றும் குஷ்டநோய், தொழுநோய் கண்டவர்கள் பலர் இத்தலத்தில் வந்து பாற்குளத்தில் நீராடிச் சென்று நலம் பெறுவது சர்வ சகஜமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் நன்றியால் நெகிழ்ந்து ஈசனுக்கு அபிஷேக ஆராதனைகள் புரிந்து சந்தோஷமடைகிறார்கள். கருவறையிலிருந்து நகர, தனிச் சந்நதியில் சிறிய ஆலயம் போன்று சங்கரபார்வதி அம்பாள் சந்நதி அமைந்துள்ளது. மேல் விதானத்தில் புராண நிகழ்ச்சிகளை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். அம்பாள் இனிமை, அழகு, எழிலுடன் எளிமையாகவும் விளங்குகிறாள். மின்னற் கீற்று புன்னகையும், பரிவும் ஒரு சேரக் கலந்து அருள்கிறாள். தாயின் அரவணைப்பும், தந்தையின் வழிகாட்டலும் ஒன்றிணைந்த அம்சமாக சங்கர பார்வதி அமைந்திருப்பது நம்மை ஆனந்தப்பட வைக்கிறது.
கோஷ்டங்களில் அகத்தியரும், குரு பகவானும், கருவறை கோஷ்டத்தில் லிங்கோத்பவரும் அருள்பாலிக்கிறார்கள். கருவறைக்கு நேர் பின்புறம் க்ஷேத்ரத்தை நிர்மாணித்த சுப்ரமணிய சுவாமி பேரருளோடு வீற்றிருக்கிறார். அருகே சப்த மாதாக்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்திலேயே அக்னி பகவானின் அரிதான சிலையொன்று தீச்சுடர் போல் நிமிர்ந்து நிற்கிறது. கோயிலைச் சுற்றிலும் முன்பொரு காலத்தில் பல கோயில்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் அழிந்து போயின என்றும் கூறுகிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட அந்த சிவலிங்கங்களை இங்கு கொணர்ந்து வைத்துள்ளனர். கோயிலை வலம் வரும் போது வழக்கமான விஷ்ணு துர்க்கைக்கு பதில் சூலினி துர்க்கை நிற்பதைக் காணலாம். இவள் சரபேஸ்வரரின் ஒரு சிறகாவாள். மற்றொருவளே பிரத்யங்கரா. ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரரும்கூட கோஷ்டத்தில் கொலுவிருக்கிறார்கள். கோயிலுக்கு சற்று முன்னே ராஜராஜ சோழன் ஈசனை வணங்குவது போன்ற புடைப்புச் சிற்பத்தை கல்லில் தனியாக செதுக்கியிருக்கிறார்கள். கோயிலை முழுதும் வலம் வந்து வணங்கி நிமிரும் போது கயிலையின் வாசல் நமக்குள்ளும் பளீரென்று திறந்து கொள்கிறது. கும்பகோணத்திலிருந்து உடையாளூர் 10 கி.மீ. தொலைவிலுள்ளது.
- கிருஷ்ணா
|