' பிரமாதம், எங்கே வாங்கின?'
அந்த காலத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால், முகமலர்ந்து அவர்களை உபசரிப்பது வழக்கம். முன்கூட்டியே அவர்கள் தகவல் தெரிவித்திருந்தார்களானால், அவர்களுக்கு வாயாற, வயிறாறப் பரிமாற சில உணவுப் பொருட்களைத் தயார் செய்து வைத்திருப்போம். அல்லது, அப்படி முன்னறிவிப்பில்லாமல் வரவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அந்த விருந்தினர்கள் உள்ளானார்களென்றால், அப்போதும் நாம் முகம் கோணாமல் அப்போதைக்கு நம்மால் இயன்ற சிலவகை பண்டங்களைத் தயாரித்து அவர்களுக்கு அளித்து, அவர்கள் முகம் மலர ருசித்து உண்பதைக் கண்டு மகிழ்வோம். சில வித்தியாசமான உணவுப் பொருளை நாம் தயாரித்து அவர்களுக்குக் கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது அவர்கள், ‘அட, இந்த ஐட்டம் பிரமாதமா இருக்கே, இதை எப்படி செய்யறது?
நீ யார்கிட்ட கத்துண்டே?’ என்றெல்லாம் கேட்டு, அந்தப் பண்டத்தின் செய்முறையைத் தெரிந்துகொண்டு, தாமும் தம் வீடுகளில் தயாரித்துப் பரிமாறி, பிறரை மகிழ்விப்பார்கள். ஆனால், இப்போதைய அவசர காலத்தில் அப்படி விருந்தாளிகள் வருவது என்பதே அபூர்வமாகி விட்டது! அப்படியே வந்தாலும் அவர்கள் முன்னறிவிப்பு செய்யாமல் வந்துவிட்டார்களென்றால் நமக்கு தர்மசங்கடமாகத்தான் இருக்கிறது. அட, அப்படியும் அவர்களை வரவேற்று ஏதேனும் பண்டம் தயாரித்து உண்ணக் கொடுத்தால், அவர்களோ, ‘‘அட, இந்த ஐட்டம் பிரமாதமாயிருக்கே, எந்த ஓட்டல்ல வாங்கினே?’’ என்று கேட்டு நம்மை மேலும் தர்மசங்கடப்படுத்துகிறார்கள். சரி, போகட்டும் விடுங்கள், எந்த உணவுப் பொருளையும் நம் குடும்பத்தாருக்கு, நாம் வணங்கும் தெய்வத்துக்கு என்று மனமுவந்து தயாரிப்போம்; இறைவனுக்கு அர்ப்பணிப்போம், ருசித்து உண்போம்; உள்ளம் மகிழ்வோம். என்ன, சரியா?
கலந்த கட்டு சாதங்கள்
(தேங்காய் சாதம், பீட்ரூட் சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதம்)
என்னென்ன தேவை?
நல்ல அரிசி அல்லது பொன்னி அரிசி - தேவைக்கு (உதிரி உதிரியாக வடித்து கொள்ளவும்), எண்ணெய் - பல வகை, கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் - 8, உடைத்த பருப்புகள், வேர்க்கடலை அல்லது முந்திரிப் பருப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல், உப்பு, மாங்காய் புளிப்பு அதிகம் இல்லாதது - 1.
தேங்காய் சாதம்
எப்படிச் செய்வது?
கடாயில் தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி அல்லது வேர்க்கடலை சேர்த்து வதக்கி காய்ந்த மிளகாய் கிளறிப் போட்டு கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் 1/2 கப் சேர்த்து வதக்கி, உப்பு, வடித்த சாதம் சேர்த்து கிளறி வைத்து பரிமாறவும்.
பீட்ரூட் சாதம்
உதிரி உதிரியாக வேக வைத்த சாதம் - 1 கப், துருவிய பீட்ரூட் - 1/2 கப், பச்சைப்பட்டாணி - 1/4 கப், பொடித்த பச்சை மிளகாய். தேங்காய் சாதம் போல் கடாயில் விருப்பமான எண்ணெய் 2 டீஸ்பூன் சேர்த்து தாளித்து இத்துடன் கடுகு, கடலைப் பருப்பு, உளுந்து, முந்திரி, பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி கறிவேப்பிலை சேர்த்து, துருவிய பீட்ரூட்டை, உப்பு சேர்த்து வதக்கி வெந்ததும் சாதத்தை சேர்த்து கலந்து 1 டீஸ்பூன் நெய் விட்டு பரிமாறவும்.
இனிப்பு-புளிப்பு
மாங்காய் சாதம்
பீட்ரூட் சாதத்திற்கு கூறியது போல், பீட்ரூட்டுக்கு பதில் துருவிய மாங்காய், உப்பு சேர்த்து மாங்காய் சாதம் செய்யவும்.
எலுமிச்சை சாதம்
இதே போல் தாளித்து இத்துடன் வேர்க்கடலை சேர்த்து வதக்கி மஞ்சள் தூள் சேர்த்து சாதத்தையும் சேர்த்து இறக்கி எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து கிளறி கட்டு சாதம் செய்யவும்.
ப்ளம்ஸ் பச்சடி
என்னென்ன தேவை?
ப்ளம்ஸ் பெரியது - 1/2 கிலோ, சர்க்கரை - 1/4 கிலோ, உப்பு - தேவைக்கு, வினிகர் (காடி) - 1/2 கப், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் வறுத்து பொடித்தது - 1/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு கொதித்ததும் உப்பு போடவும். ப்ளம்ஸ் பழங்களை சுத்தப்படுத்தி முள் கரண்டியால் 4 முறை குத்தி கொதிக்கும் தண்ணீரில் போடவும். அவை வெந்து தண்ணீர் பாதியாக வரும்போது மிளகாய்த்தூள், சீரகத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை பழத்துடன் சேர்த்து தேன் போல் வரும்போது வினிகரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆற விட்டு சுத்தமான ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும். இது பார்ப்பதற்கு நல்ல சிவப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
பனீர், மாம்பழ ஸ்வீட்
என்னென்ன தேவை?
ஃப்ரெஷ் பனீர் - 1 கப், மாம்பழ விழுது - 1 கப், பொடித்த சர்க்கரை - 1/2 கப் அல்லது தேவைக்கு, பால் மற்றும் கோவா இனிப்பு இல்லாதது - 1/2 கப், நெய் - 1/4 கப்.
எப்படிச் செய்வது?
மாம்பழத்தைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பின் விழுதாக மிக்ஸியில் அரைக்கவும். பனீரை துருவிக் கொள்ளவும். கோவாவை மசித்துக் கொள்ளவும். இப்போது எல்லாவற்றையும் கலந்து ஒரு கடாயில் போட்டு அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறவும். இத்துடன் சர்க்கரை சேர்க்கவும். பின் கொஞ்ச கொஞ்சமாக நெய் விடவும். இப்படி கிளறிக் கொண்டிருக்கும் போது கையில் ஒட்டாத பதமாக, சிறிது கெட்டியாக வரும்போது அதை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.
குறிப்பு: விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி அலங்கரிக்கவும். ஜரிகை பேப்பர், நட்ஸ், பொடித்த மாம்பழமென்று இந்த ஸ்வீட் சாஃப்டாக இருக்கும். மேலும் கிவி பழம், பைனாப்பிள், ஆப்பிளிலும் செய்யலாம்.
தொகுப்பு: ஆர்.வைதேகி படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்
|