சுகப் பிரசவத்துக்கு அருளும் நந்தி



மனைவி கதறினாள். பிரசவ வலியால் துடித்தாள். அவளைப் பரிதவிப்புடன் பார்த்தான் கணவன். அந்த குக்கிராமத்தில், அந்த அர்த்த ராத்திரியில் என்ன செய்வது, யார் உதவியைக் கோருவது என்று தெரியாமல் விழித்தான். ‘மருத்துவச்சியை அழைத்து வரவேண்டுமே, எங்கிருப்பாள் அவள்?’ என்று தெரியாமல் தவித்தான். ஒன்றும் தோன்றாத நிலையில், எதிர்வீட்டுக்கு போய், அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெரியவரை எழுப்பி தனது மனைவியின் வேதனையை தெரிவித்தான். அவர் அவனைப் பார்த்து சிரித்தார். ‘‘ஏன்டா விவரமில்லாதவனாக இருக்கே? நம்மைப் போன்றவர்களை காப்பாற்றத்தானடா திருக்காமீஸ்வரர் கோயில் நந்தி இருக்கு!’’ என்று கூறி, நந்தியின் மகிமையை விளக்கிச் சொல்லி, அவன் அடுத்துச் செய்ய வேண்டியவற்றையும் சொன்னார். உடனடியாய் திருக்காமீஸ்வரர் ஆலயத்திற்கு ஓடினான் கணவன். அவர் சொன்னபடியே அங்கே சிறு அளவில் இருந்த ஒரு நந்தியை அப்படியே கைகளால் தூக்கினான். அது இருந்த திசையிலிருந்து திருப்பி, எதிர்ப் பக்கமாக வைத்துவிட்டு, அதனை மனமுருக வணங்கினான். பிறகு கவலையுடன் வீட்டிற்குச் சென்றான். அங்கே, அவனுடைய மனைவி, அழகிய குழந்தையை பெற்றெடுத்து, கையில் வைத்தபடி அவனுக்காகக் காத்திருந்தாள்.

அவனுக்கோ ஆனந்தம் தாங்க முடியவில்லை. பெரியவர் தன்னிடம் சொல்லியிருந்தபடி, மீண்டும் கோயிலுக்கு ஓடிப்போய் நந்தியை பழையபடியே திருப்பி வைத்துவிட்டு வணங்கி, தன் நன்றியைத் தெரிவித்தான். இது, சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த கதைதான். ஆனால், இன்றும் பிரசவ வலி வந்தவுடனேயே, சம்பந்தப்பட்ட மக்கள் இந்தக் கோயிலுக்கு ஓடி நந்தியை திருப்பி வைத்து வணங்குவதும், பிரசவம் நல்ல முறையில் நடந்து முடிந்ததும் சிலையை பழையபடி திருப்பி வைத்து நன்றி செலுத்துவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.
புதுச்சேரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர் வில்லியனூர். இங்குள்ள புகழ் பெற்ற திருக்காமீஸ்வரர் கோயிலில்தான் இந்த வேண்டுதல் நடக்கிறது. இங்குள்ள திருக்காமீஸ்வரரை, இந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள பகுதிகளில் தேவர்களே நின்று வழிபட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், தேவர்களுக்கெல்லாம் அரசனான தேவேந்திரன்
தங்கியிருந்து வழிபட்ட ஊர் அரசூர் என்றும், மன்மதன் வழிபட்ட ஊர் தென்றல் (தற்போது தென்னல்) என்றும், நரசிங்க மூர்த்தி தங்கியிருந்த ஊர் சிங்கிரி கோயில் என்றும், பிரம்மா வழிபட்ட ஊர் பிரம்பை என்றும், சந்திரன் தங்கியிருந்த ஊர் பிறையூர் என்றும், சூரியன் தங்கி வழிபட்ட ஊர் உதியம்பட்டு (தற்போது ஓதியம்பட்டு) என்றும் சொல்கிறார்கள். பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்கள் காலை நேரத்தில் சிவலிங்கம் மீது விழுகிறது. சூரியன் சுயம்பு வடிவ சிவனை வணங்கி வழிபட்ட நிகழ்வு இதன் மூலம் தெளிவாகிறது.
இக்கோயிலின் காண்டாமணி, 1812ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது.

தீயவற்றை அழிக்கும் வல்லமை கொண்ட நாதம் எழுப்பும் இந்த ஆலய மணி முழங்கும்போது மனதிற்குள் அமைதி பரவுகிறது. நவகிரக சந்நதிக்கு எதிரே இந்த மணி உள்ளது. இன்றும் ஆறு கால பூஜைகளின் போது இம்மணி நாதம் எழுப்பி ஊரையே சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. புதுச்சேரி மாநிலத்தின் புகழ் பெற்ற திருவிழா இக்கோயிலின் தேர்த் திருவிழாவாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியாவிலேயே மிக உயர்ந்த தேராக இது இருந்தது. 900 வருடங்களுக்கு முன்பு இது உருவாக்கப்பட்டது. இந்த திருக்கோயிலில் உள்ள கோகிலாம்பிகை அம்மன், குயிலம்மை என்றும், முத்தம்மை என்றும் அழைக்கப்படுகிறார். அம்மன் முன் நிற்கும் துவார பாலகையின் வலது கரத்தில் சங்கு இருப்பது சிறப்பான அம்சமாகும். ஆயிரத்தெட்டு லிங்கங்கள் கொண்ட சகஸ்ரலிங்கமும் இத்திருக்கோயிலில் உள்ளது. இவ்வாலயத்தின் இன்னொரு சிறப்பு, வருண லிங்கம். மிகப்பெரிய தொட்டி போன்ற அமைப்பில் இந்த வருண லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஊரே கடும் வறட்சியில் சிக்கும் சூழ்நிலை வருமானால், இந்த தொட்டியை முழுவதும் தண்ணீரால் நிரப்பி லிங்கத்திற்கு பூஜை செய்தால் அன்றே மழை பொழியும்; ஊரே குளிர்ந்துவிடும் என்ற நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை.

காசியில் இருப்பது போன்றே பைரவர் இங்கே தனது வாகனமான நாயில்லாமல் காட்சி தருகிறார். ஒவ்வொரு கோளுக்கும் தனியாக சிறு சிறு ஆலயங்கள் கொண்ட தொகுப்பாக நவகிரக சந்நதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மிகவும் விசேஷமாக, ஆதிசங்கரர் பூஜித்த சக்கரம், அம்மன் சந்நதியில் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்வதால் ஒரு யாகம் செய்ததன் பலனை பக்தர்கள் பெறுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

- இளங்கோவன்