என்ன சொல்லுது எதிர்காலம்?
உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்! ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
? என் மகளுக்கு ஒன்பது வயது ஆகின்றது. அவளுக்கு காது தெளிவாக கேட்பதில்லை. பேச்சும் தெளிவாக இருப்பதில்லை. சில வார்த்தைகளை தெளிவாகப் பேசுவாள். மருத்துவரிடத்தில் காட்டினோம். செவியுணர்வுக்கான நரம்பு வளர்ச்சி குறைபாடு உள்ளதாக கூறுகிறார்கள். அதனால் காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் குறைபாட்டை நிரந்தரமாக தீர்க்க ஆலோசனை மற்றும் பரிகாரம் கூறவும். எங்கள் குடும்ப எதிர்காலம் பற்றியும் கூறவும்? - தேவி, சேலம்.
உங்கள் மகளின் ஜாதகத்தை சர்வார்த்த சிந்தாமணி எனும் நூல் அடிப்படையிலும், அஷ்டவர்க்க பரல்களை கணக்கிட்டும் ஆராய்ந்தோம். துலா லக்னம், கடக ராசியில் மகள் பிறந்திருக்கிறார். லக்னாதிபதி சுக்கிரன், புதனுடன் சேர்ந்து நல்ல நிலையில் இருப்பதால் வருங்காலம் அருமையாக இருக்கும். எல்லாவகையிலும் முன்னேற்றங்களும் உண்டாகும். வசதி வாய்ப்புகளுக்கும் குறையிருக்காது. ஆனால், லக்னத்தில், ஆறாம் வீட்டுக்குரிய குரு அமர்ந்திருக்கிறார். குரு ராகுவின் சாரத்தில் அமர்ந்திருப்பதாலும் நவாம்சத்தில் சனியின் பார்வை பெற்று கேதுவுடன் சேர்ந்திருப்பதாலும்தான் உங்கள் மகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லக்னத்திற்கு மூன்றாம் இடம் பொதுவாக செவி மண்டலத்தை குறிக்கும். தன்னுடைய எண்ணங்களை வார்த்தைகளாக வெளிப்படுத்தவும், மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி தெளிவாகப் பேசவும், மற்றவர்களை கவரும்படி பேசவும் வைக்கக்கூடியது இந்த மூன்றாம் இடம். இந்த இடத்திற்கு ஆறாம் வீட்டிற்குரிய கிரகமான குரு லக்னத்திலேயே மாந்தியுடன் சேர்ந்து அமர்ந்திருப்பதாலும் நவாம்சத்தில் பலவீனமாக இருப்பதாலும் தான் இந்த பிரச்னைகள் உங்கள் மகளுக்கு இருக்கிறது. மேலும், மற்றொரு செவி மண்டல கிரகமான சனி, சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக இருப்பதும் இன்னொரு காரணம். உங்கள் மகளுக்கு 20.12.2016 வரை புதன் மகாதசை நடைபெறும். புதன் ஆட்சி பெற்று வலுவாக அமர்ந்திருந்தாலும், நவாம்சத்தில் புதன் பலவீனமாக இருப்பதாலும், அதன் எதிர்கிரகமான செவ்வாயுடன் சேர்ந்து நிற்பதாலும் டிகிரிபடி பார்க்கும்போது புதன் ராசி சந்தி பெற்று காணப்படுவதாலும்தான் இந்த பிரச்னைகள் தற்சமயம் அதிகமாக உள்ளது.
20.12.2016 வரை புதன் தசை நடைபெறும். பலவீனமான புதனின் தசை நடைபெற்று கொண்டிருப்பதால்தான் உங்கள் மகளுக்கு செவியுணர்வும், பேசும் திறனும் குறைவாக இருக்கின்றன. ஆனால், அடுத்து, கேது மகாதசை தொடங்குகிறது. தசாபுக்திகள் மற்றும் கோச்சார கிரகங்கள் அடிப்படையில் 6.6.2017 முதல் எல்லா வகையிலும் உங்கள் மகளின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். செவியுணர்வுத்திறனும் அதிகரிக்கும். சரளமாகப் பேசும் தன்மையும் வரும். நல்ல மருத்துவரும் கிடைப்பார்; அவர் மூலமாக மகளின் ஆரோக்யத்தில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். லக்னத்திலேயே ஆறாம் வீட்டிற்குரிய கிரகம் அமர்ந்திருப்பதனாலும் செவி மண்டலங்களுக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும் உரிய கிரகங்களான புதனும், சனியும் பலவீனமாக இருப்பதாலும் பரிகாரமாக மதுரை மீனாட்சி அம்மனை பஞ்சமி திதி நாளில் சென்று வணங்குவது நல்லது. குங்குமார்ச்சனையையும் ஒருமுறை செய்யுங்கள். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய ஜாதகத்தில் தற்சமயம் தசாபுக்திகளும், கோச்சார கிரகங்களும் சரியில்லாமல் இருப்பதாலும், ஏழரைச்சனியின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், குருவும் பலவீனமாக இருப்பதாலும் 2016 இறுதி பகுதி அல்லது 2017 துவக்கத்தில் உங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் கணவரின் ஜாதகம் நன்றாக இருக்கிறது. அவருக்கு எல்லா வகையிலும் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்கள் மகனின் ஜாதகமும் சிறப்பாக இருக்கிறது. படிப்பிலும் முன்னேறுவார். உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் ஈடேறும். ? எனது ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி 4ம் பாதம். என் ஜென்ம ராசி, லக்னம் என்ன? எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? 108 துளசி மணியுடன் ஒரு ஐந்து முக ருத்திராட்சத்தை இடையில் கோர்த்து நான் அணியலாமா? 24மணி நேரமும் கழுத்தில் அணிந்திருக்கலாமா? அல்லது எந்தந்த நேரங்களில் அதை கழற்றி வைக்க வேண்டும்? என்பதை விவரமாக கூறுங்கள்? - எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி. ஜாதக அலங்காரம் எனும் நூலின் அடிப்படையில் உங்கள் ஜாதகம் மிக நன்றாக இருக்கிறது. கன்னியா லக்னம், மீன ராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியாகிய சனி பகவான் உங்களுடைய லக்னத்தை பார்த்துக் கொண்டேயிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் லக்னாதிபதி புதனும் வலுவடைந்துள்ளார். சூரியன், கேது, செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மூன்றாம் இடத்திலே அமர்ந்திருப்பது உங்களுக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொடுக்கும். நீங்கள் கேட்டபடி ருத்ராட்ச மாலையை தாராளமாக அணியலாம். உங்களுடைய ஜென்ம நட்சத்திரப்படி, மகம் நட்சத்திர நாளில் ருத்திராட்ச துளசி மாலையை அணியத் தொடங்கலாம். உங்களுடைய வயது அடிப்படையில் 24மணி நேரமும் கழுத்தில் அணிந்திருக்கலாம்; எந்த பாதிப்பும் வராது. உங்களுக்கு கன்னி லக்னம். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டு. 3.3.2015 முதல் சூரிய மகாதசை தொடங்கியுள்ளது; தற்சமயம் நடைபெறும் சந்திரபுக்தி 20.12.2015 வரை நீடிக்கும். சூரியன் ஆன்மிக கிரகமான கேதுவுடன் சேர்ந்திருப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்; தெய்வ பலமும் கூடி வரும். கடந்த காலம் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மையாகவே அமைந்திருக்கிறது. எதிர்காலமும் சிறப்பாகவே இருக்கும். தேகபலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வீர்கள். மேலும் நன்மைகள் பெற, கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பனை தரிசியுங்கள். உப்பிலியப்ப பெருமாளை புதன், சனிக்கிழமைகளில் உளமாற வணங்குங்கள். எல்லா வகையிலும் நன்மைகள் உண்டாகும்.
? நான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் எதையும் சாதிக்கவில்லை. தொடர்ந்து மனக் குழப்பம், வீண் சச்சரவு, நிறைவில்லாத மணவாழ்வு, உண்மையாக உழைத்தும் பல ஊர்களுக்கும் அடிக்கடி இடம் பெயர்ந்து மனஉளைச்சல், பணநஷ்டம் என மனம் புழுங்கி இருக்கின்றேன். நிரந்தர வருமானம் இனியேனும் அமைய வாய்ப்புள்ளதா? சொந்த ஊருக்கே சென்று நிம்மதியாக பிழைக்கும் வழி உள்ளதா? பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீருமா? பூஜை, விரதம், பரிகாரம் ஏதேனும் உள்ளதா? - ஆர். நடராஜன், ஈரோடு.
உங்கள் ஜாதகத்தை பிருகத் ஜாதகம் என்ற நூல் மற்றும் தசாம்சம், சோடசாம்ச அடிப்படையில் ஆராய்ந்தோம். நீங்கள் மிதுன லக்னம், சிம்ம ராசியில் பிறந்திருக்கிறீர்கள். ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், பூர்வபுண்ணியாதிபதி சுக்கிரன், தைரிய ஸ்தானாதிபதி சூரியன் ஆகியோர் லக்னத்திற்கு எட்டிலும், ராசிக்கு ஆறிலும் மறைந்துள்ளனர். பிரபல யோகாதிபதியான சனி, செவ்வாயுடன் சேர்ந்து பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். புத்தி ஸ்தானத்தில் எதிர்மறை கிரகங்கள் அமர்ந்திருப்பதால்தான் இதுவரை உருப்படியாக எதையும் செய்து முடிக்கவில்லையே என்று ஆதங்கப்படுகிறீர்கள். அதேசமயம், மனோகாரகனான சந்திரன் பலமாக இருப்பதால்தான் எல்லா பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தியை பெற்றிருக்கிறீர்கள். புத்தி ஸ்தானத்தில் பாவகிரகங்கள் அமர்ந்திருப்பதுடன் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியும் மறைந்து காணப்படுவதால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. ஐந்தாம் வீடு வலுவிழந்திருப்பதால் சொந்த ஊரில் வாழும் யோகம் உங்களுக்கு இல்லை. சொந்த ஊருக்கு அருகில், குறிப்பாக தெற்கு, தென்கிழக்கு திக்கில் உள்ள ஊரில் வருங்காலத்தில் நீங்கள் நிரந்தரமாக தங்கும் யோகம் உண்டு. தற்சமயம் உங்களுக்கு குருமகாதசை நடைபெற்று வருகிறது; கேது புக்தி 30.1.2016 வரை நடைபெறும். அதன் பின்னர் தொடங்கும் சுக்கிரபுக்தி உங்களுக்கு எல்லா வகையிலும் நிம்மதியையும் யோகத்தையும் தரும். நிரந்தர வருமானத்தையும் அதுமுதல் நீங்கள் எதிர்ப்பார்க்கலாம். பூர்வீகச் சொத்துப் பிரச்னை உங்கள் ஜாதகத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், பிப்ரவரி 2016 முதல் விட்டுக் கொடுப்பதன் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும். கர்மவினைகள் நீங்கவும், பூர்வபுண்ணிய பலம் அதிகரிக்கவும் திருவாரூரில் அருள்பாலிக்கும் அல்லியங்கோதையம்மை உடனுறை வன்மீகி நாதரை திங்கட் கிழமை அல்லது பிரதோஷ நாளில் வணங்குவது நல்லது. முடிந்தால் பிரதோஷ விரதம் அனுசரியுங்கள். நல்லது நடக்கும்.
? நான் எம்.ஏ, எம்.பில். படித்துள்ளேன். எனக்கு எந்த வேலையும் இதுவரை அமையவில்லை. நான் எதைச் செய்தாலும் கடவுளின் துணை இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே செய்கிறேன். ஆனால், அதில் அனைத்திலும் நான் தோல்வியையே சந்தித்துள்ளேன். மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கடவுள் மீது கொண்ட நம்பிக்கையே குறைந்து விடும்போல் இருக்கிறது. மேலும், நான் ஒருவரை நான்கு வருடங்களாக காதலித்து வருகிறேன். எனது வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை. அதேபோல் அவரது வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்காமல் அவர்களது மருமகளாக என்னை ஏற்றுக்கொள்ள வழி கூறுங்கள். நான் அரசு வேலைக்கான தேர்வுகளையும் எழுதி வருகிறேன். மிக சிறு மதிப்பெண் வித்தியாசத்திலே நான் தோல்வியடைந்தேன். தற்போது படிப்பிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. நான் நன்கு படித்து நல்ல வேலையைப் பெறவும், காதலனே கணவனாக அமையவும் மனநிம்மதியுடன் நான் வாழவும் வழி கூறுங்கள். - எம்.மணிமேகலை, காஞ்சிபுரம்.
உங்கள் ஜாதகத்தை யவன காவியம் என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். நீங்கள் மகர லக்னம், தனுசு ராசியிலே பிறந்திருக்கிறீர்கள். லக்னத்திலிருந்து நான்கு வீடுகளில் தொடர்ந்து கிரகங்கள் அமர்ந்திருக்கின்றன. பாக்யாதிபதியாகிய புதன் லக்னத்திலே அமர்ந்திருப்பது நல்ல யோக அமைப்பாகும். சூரியனுக்கு முன்னும், பின்னும் கிரகங்கள் அமர்ந்திருப்பதும் வருங்காலத்தில் நல்ல வசதிகளுடன், நிம்மதியாக வாழக்கூடிய அமைப்பை ஏற்படுத்தும். சப்தமாதிபதியான சந்திரன், சனியுடன் சேர்ந்து பன்னிரண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் கொஞ்சம் போராடித்தான் நீங்கள் நினைத்தவரை கைப்பிடிக்க முடியும். களத்திரகாரகனான சுக்கிரன், ராகுவுடன் சேர்ந்திருப்பதால் காதல் திருமணத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நீங்கள் சுக்கிரதசையிலே பிறந்திருக்கிறீர்கள். தற்சமயம் ராகுமகாதசை நடைபெற்று வருகிறது. ராகுமகாதசையில் ராகுபுக்தி 27.8.2015 உடன் முடிவடைகிறது. 28.8.2015 முதல் தொடங்கவுள்ள குருபுக்தி உங்களுக்கு அனைத்து சௌபாக்கியங்களையும் தரும். கோச்சார கிரகங்கள் அடிப்படையில் தற்சமயம் குருபகவான் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருப்பதாலும் ராகுமகாதசையில் குருபுக்தி 28.8.2015 முதல் தொடங்கயிருப்பதாலும் உங்களுக்கு அரசு உத்யோகம் உண்டு. ஏழரைச்சனியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். அப்படிப் பிறந்தவர்க்கெல்லாம் மீண்டும் ஏழரைச்சனி வரும்போது யோகத்தைக் கொடுக்கும்.
அந்தவகையில் உங்களுக்கு இரண்டாவது முறையாக ஏழரைச்சனி தொடங்கியுள்ளது. ஆகவே நீங்கள் நினைத்த காரியங்கள் யாவுமே நல்ல விதத்தில் நிறைவேறும். பிரபல யோகாதிபதியாகிய சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து கிரகணதோஷத்துடன் காணப்படுவதால்தான் எல்லாவற்றிலும் நீங்கள் போராடிப் போராடித்தான் வெற்றி பெற வேண்டியிருக்கிறது. ஆனாலும், கிரகஅமைப்புகள் அடுத்தடுத்து நல்ல விதத்தில் மாறியிருப்பதால் தொடர்ந்து நற்பலன்கள் அதிகரிக்கும். கோச்சார கிரகங்கள், தசாபுத்திகள், அஷ்டவர்க்க பரல்கள், மற்றும் சோடசாம்சம் அமைப்பையெல்லாம் வைத்து பார்க்கும்போது அக்டோபர் 2015 முதல் உங்களுக்கு யோக பலன்கள் அதிகரிக்கும். காதல் திருமணம் நல்ல விதத்தில் முடிந்து சுபிட்சமாக வாழவும் அரசுப் பணியிலே அமரவும் நீங்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமையில் ரங்கம் சென்று ரங்கநாதரையும், ராமனுஜரையும் தரிசனம் செய்யுங்கள். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். ஆதரவற்ற ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள். நினைத்தது நிறைவேறும்.
? எனக்கு ஐந்து வருடங்களாக வரன் பார்க்கிறார்கள். ஆனால், எதுவும் அமையவில்லை. எனக்கு ராகு,கேது தோஷம் என்று சொன்னார்கள். அதற்கும் பரிகாரங்கள் செய்தோம். மே 1, 2013 அன்று ஒரு வரன் வந்தது எனக்கு பிடித்திருந்தது; அவர்களுக்கும் பிடித்தது. ஆனால், அமையவில்லை. ஜாதகம் சரியில்லை என்றார்கள். மீண்டும் அந்த வரன் எனக்கு அமையுமா? அவர் ராசி விருச்சிகம், அனுஷ நட்சத்திரம் அவர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். என் எதிர்காலம் எப்படி இருக்கும்? - வாசுகி, கிடாராங்கொண்டான்.
உங்களுடைய ஜாதகத்தை ஹோரா ரத்தினம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். மேஷ லக்னம், ரிஷப ராசியில், அதிக வலிமை படைத்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறீர்கள். ராசிக்கட்டம், நவாம்சக் கட்டம் மற்றும் சுக்கிரநாடி என்ற நூல் அடிப்படையில் உங்கள் திருமண ஸ்தானத்தை ஆராய்ந்து பார்த்தோம். அதன்படி தாமதத் திருமணம் உண்டாகும் என்று தெரிகிறது. கோச்சார கிரகங்களின்படி தற்சமயம் கண்டகச்சனி நடைபெறுகிறது. தசாபுத்தி அடிப்படையில் தற்சமயம் ராகுமகாதசையில் சுக்கிரபுக்தி நடைபெறுகிறது. இது 18.5.2017 வரை இருக்கும். இது உங்கள் திருமணத்திற்கான காலகட்டம் - குறிப்பாக 19.8.2016 முதல் 19.5.2017 வரை. நல்ல வரனும் அமைவார். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். இதற்கு முன்பு பார்த்துச் சென்ற வரனே அமைய வாய்ப்பில்லை. அவருடைய எண்ணஓட்டங்களும், உங்களுடைய எண்ணஓட்டங்களும் வேறு வேறு மாதிரியாக உள்ளன. கல்வித்தகுதியில் வேண்டுமானால் இருவரும் ஒரேமாதிரியாக இருக்கலாம். ஆனால், இருவர் ஜாதக அமைப்பு ஒன்றாக இல்லை. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த அவருக்கு ஏழரைச்சனியிலே ஜென்மச்சனி இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு கண்டகச்சனி நடைபெற்று கொண்டிருக்கின்றது. இருவருக்கும் சனியின் தாக்கம் அதிகமாகயிருப்பதால் திருமணம் முடிந்தாலும் அடிக்கடி சண்டைசச்சரவாலும், ஈகோ பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். ஆனால், உங்களுக்கு இதைவிட மிக நல்ல வரன் வந்தமையும். திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். வேலையும் உங்களுக்கு கிடைக்கும். விரைந்து திருமணம் முடியவும், மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகவும் நீங்கள் தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் தஞ்சை பிரகதீஸ்வரரையும்,அங்கு எழுந்தருளியிருக்கும் வாராகி அம்மனையும் ஏதேனும் ஒரு பிரதோஷ நாளில் சென்று தரிசித்து வாருங்கள். அங்கையே ஜீவ சமாதியடைந்துள்ள கரூரார் சந்நதியில் நெய் தீபம் ஏற்றுங்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
|