இறைவனை உள்ளுக்குள் ஒளித்து வைப்போம்!



திருமூலர் மந்திர ரகசியம்
 - பி.என்.பரசுராமன்


ஆண்டாண்டு காலங்களாக நமது முன்னோர்கள், நமக்காகக் கொடுத்து விட்டுப் போன பழமொழிகள் பல. பழங்களை அப்படியே உண்ணுகிறோமல்லவா? அதுபோல, பழமொழிகளை அப்படியே உணரலாம். அவற்றிற்குப் பொழிப்புரை, விளக்க உரைகள் எல்லாம் தேவையில்லை. அவை பழமொழிகளே தவிர, பழைய மொழிகளல்ல. அப்படி சில பழமொழிகள் மிகவும் எளிமையாக, ஒரு சில வார்த்தைகள் நம் உள்ளத்தில் இடம் பிடித்து விடும். அவற்றில் ஒரு சில -

‘சேரிடம் அறிந்து சேர்’
‘இணக்கம் அறிந்து இணங்கு’
‘பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்’

இப்பழமொழிகளுக்கெல்லாம் விளக்கவுரை தேவையில்லை. வாழ்வியலைச் சொல்லும் பழமொழிகள் இவை. இவற்றை அனுசரித்து திருமூலர் சொல்லும் பாடலைப் பார்க்கலாம்!

மண்ணிற் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணிற் கலங்கி இறைவன் இவனென்னார்
உண்ணிற் குளத்தின் முகந்தொருபால்
                 வைத்துத்
தெண்ணிற் படுத்த சிவனவன் ஆமே
                (திருமந்திரம்-2991)

கருத்து: மண்ணில்(சேற்றில்) கலங்கி இருக்கும் நீரின் தன்மை தெரியாததைப் போல, மக்கள் உலக மயமான எண்ணத்தால் கலக்கமடைந்து, இறைவன் இன்ன தன்மையன் என்று உணரமாட்டார்கள். உண்பதற்கு உரிய குளத்தில் இருந்து நீரை முகந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துத் தெளிவாக்குகிறோமல்லவா? அதுபோல, சிந்தையைச் சிவத்தில் வைத்துத் தெளிவுபடுத்த, சீவன் சிவமாவான். மழைநீர் மிகவும் தூய்மையானது. அது உப்பு மண் தரையில் விழுந்தால், உப்புக் கரிக்கும். செம்மண் தரையில் விழுந்தால் நீரும் சிவப்பாகும். களிமண் தரையில் விழுந்தால், கறுத்துக் கலங்கி இருக்கும். அதுபோல, தூய்மையான நம்முடைய எண்ணங்கள், ஒவ்வொரு பக்கமாக விழுந்து, ஒவ்வொன்றின் மீதும் விழுந்து, தம்முடைய தன்மையையே இழந்து இருக்கின்றன. அதாவது,  தூய்மையான மழைநீர் எப்படி அந்தந்த நிலத்தில் சேர்ந்ததும், தன் தூய்மையை இழந்து அந்தந்த நிலத்திற்கேற்றவாறு மாறுகின்றதோ அது போல, நம்முடைய எண்ணங்கள் கண்களின் வழியாக, கண்டதில் விழுந்து தூய்மையை இழந்துவிட்டன; காதுகள் வழியாகக் கண்டதில் விழுந்து கீழான நிலையை அடைந்து விட்டன. வாய்...கேட்கவே வேண்டாம். கண்டதைத் தின்று, கண்டதைப் பேசி... சொல்லவே வேண்டாம். இத்தகைய புலன்களுக்கு கைகளும் கால்களும் துணை செய்கின்றன.

மொத்தத்தில், இவை இடம்பெற்ற உடம்பு, சுகம் சுகம் என்று அலைந்து தானும் கலங்கி நம் மனதையும் கலக்குகிறது. இதனால் நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவர்க்கும் பலனளிக்காமல் போகிறது. சரி! கலக்கம் போக வழி? கலங்கிய நீரை, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்தால், சற்று நேரத்தில் அது தெளிந்து விடுகின்றது அல்லவா? அது போல, கலங்கிய சித்தத்தைக் கடவுளிடம் வைத்தால், கலக்கம் போய்விடும். சீவன், சிவனாக ஆகும். இது நமக்குப் புரியுமோ, புரியாதோ என்றுதான் நம் திருக்கோயில்களில் தெய்வத்திற்கு அலங்காரம் செய்து கண்களை தரிசிக்கச் செய்தார்கள். காதுகளால் இறைவன் புகழைக் கேட்கச் செய்தார்கள். வாய் கொண்டு இறைவனைத் துதிக்கச் செய்தார்கள். அதன் மூலம் மனம் இறைவனுடன் ஒன்றி விடுகிறது. பிறகு கலக்கம் ஏது? இந்த மனக்கலக்கம் என்பது தேவர்களுக்கும் உண்டு. அவர்கள், அவ்வப்போது அசுரர்களால் துயரப்படும்போது சிவபெருமானை நாடி தேடிச் சென்று வழிபட்டு தங்கள் துயரங்களைத் தீர்த்துக் கொண்டதை இதிகாச புராணங்கள் விரிவாகவே பேசுகின்றன. அடுத்த பாடலில் இதைச் சொல்கிறார் திருமூலர்.

அன்று நின்றான் கிடந்தான்             
அவன் என்று
சென்று நின்று எண்திசை              
ஏத்துவர் தேவர்கள்
என்று நின்று ஏத்துவன் எம்பெருமான் தனை
ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே
    (திருமந்திரம்-1762)

கருத்து: சிவபெருமான் அங்கு நின்றான், இங்கு கிடந்தான் என்று தேவர்கள் எட்டுத் திசைகளிலும் போய் நின்று வழிபடுவார்கள். என் உயிருக்கு உயிராய் என் உள்ளத்தில் பொருந்தி நிற்கும் அந்தச் சிவபெருமானை நான் என்றைக்கும் வணங்கிக் கொண்டே இருப்பேன். இந்தப்பாடலில், தேவர்கள் சிவபெருமானை வழிபட்டது, அதை அறிந்து தான் வழிபட்டது என இரு தகவல்களைத் திருமூலர் கூறுகிறார். வாயு பகவான் சிவனைப் பூசித்த தலம்; யம தர்மன் சிவனைப் பூசித்த தலம்; சூரிய பகவான் வழிபட்ட தலம் என்றெல்லாம் தல புராணங்கள் கூறுகின்றன அல்லவா, அவையெல்லாம் எதற்காக? செல்வந்தர்களே சேமிக்கிறார்கள் என்றால் சாதாரண மனிதர்களான நாமும் கொஞ்சமாவது சேமிக்க வேண்டாமா என்பதைப் போல, தேவர்கள் வந்து வணங்கி வழிபட்ட தலங்கள் என்பது மட்டுமல்ல. அந்தந்த தேவர்கள் என்னென்ன தவறுகள் செய்தார்கள், அதன் மூலம் அவர்கள் அனுபவித்த துயரங்கள் என்னென்ன, அத்துயரங்களை இத்தலத்தில் எவ்வாறு வழிபட்டு நீக்கிக் கொண்டார்கள் என்பதையெல்லாம் அங்கே, நாம் பாடமாகக் கொள்ள வேண்டும்.

அதற்காகத்தான் தலபுராணங்களே தவிர, நாமும் அந்தக் கோயிலுக்குப் போனோம்; வந்தோம் என்பதற்காக அல்ல. எல்லா இடங்களிலும் எப்போதும் பரவி நிறைந்து இருக்கும் அந்த இறைவனை, என் உயிருக்குள் உயிராகப் பொருந்தி இருக்கும் அந்த இறைவனை, என் உள்ளத்தில் நிலையாகப் பொருந்தி இருக்கும் அந்த இறைவனை எப்போதும் நான் வணங்கிக் கொண்டிருக்கிறேன்-எனப் பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர். கோயில் கோயிலாகப் போய் வழிபடுவது மட்டுமல்ல. அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அருளோடு ஆனந்த பூர்த்தியாகி இருக்கும் இறைவனை உணர்ந்து, அந்த இறைவனை என் (நம்) உள்ளத்திலும் உணர்ந்து எப்போதும் வழிபாடு செய்கிறேன்; நாமும் செய்ய வேண்டும் என்பது கருத்து.
திருமூலர், இப்படிப் பலவாறாகச் சொல்வதோடு மற்றொரு தகவலையும் சொல்கிறார். அது நம் அனைவருக்கும் மிக முக்கியமானது. குறிப்பாக, ஆன்மிகவாதிகள் அனைவருக்குமே மிக முக்கியமானது. எந்தத் தெய்வத்தைக் கும்பிடுபவராக இருந்தாலும் சரி, மிகவும் முக்கியமானது.

ஒளித்து வைத்தேன் உள்ளூர உணர்ந்து
 ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள் செய்திரும்
 ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சின் நும் வேட்சியும்
 ஆமே.
        (திருமந்திரம்-437)

கருத்து: இறைவன் என்னோடு உடனாய் இருக்கின்ற அருள் தொடர்பை உணர்ந்தேன். அதை பிறர் அறியாதபடி என் உள்ளத்திலே ஒளித்து வைத்தேன். அதனால், இனி அந்த இறைவன் எனக்கு வெளிப்படையாகத் தோன்றி அருள் புரிவது நிச்சயம். நீங்களும் அந்த அருட்தொடர்பை உணர்ந்து அன்போடும் ஆர்வத்தோடும் வழிபட்டால், அவன் அருளுக்கு ஏங்கும் உங்கள் விருப்பமும் நிறைவேறும். நமக்குள்ள ஒரு மிகப் பெரும் பிரச்னை இப்பாட்டில் அலசப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பிரச்னையைப் பிரச்னை என்று நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான்! அது என்னவென்று பார்க்கலாம். இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு அருள்மயமானது. அழகழகான இயற்கைக் காட்சிகளைப் படைத்த இறைவன்,
அவற்றைக் காணக் கண்கள் தந்து, அவற்றில் பார்வையும் தந்தது - அருட்தொடர்பு. பார்வையற்றவர்கள் படும் பாட்டை நினைத்துப் பாருங்கள் புரியும். பழங்கள் முதலான எத்தனையோ
உணவுப்பொருட்களைப் படைத்த இறைவன், அவற்றை ருசித்து உண்ண நாவும் ஜீரணிக்க வயிறும் தந்தது-அருட்தொடர்பு. உணவு கிடைக்காதவர்களையும், கிடைத்தும் உண்ண முடியாத நோயாளிகளான செல்வந்தர்களையும் நினைத்துப் பார்த்தால் இந்த உண்மை புரியும்.

இதேபோலத்தான் காதுகளும். இனிய இசை பாடும் குயிலோசை, நம் குழந்தைகளின் மழலை ஓசை, பெற்றோரின் குரல்-இவற்றையெல்லாம் வெளியில் வைத்த இறைவன், அவற்றை அனுபவித்து இன்பமுற, நமக்குக் காதுகள் தந்து அவற்றில் கேட்கும் திறனையும் தந்தது-அருட்தொடர்பு. செவித்திறன் அற்றவர்களைப் பார்த்தால் நமக்குக் கிடைத்திருக்கும் பெரும் பேறு புரியும். இதேபோல, ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்தால், இறைவனுக்கு நம்மிடம் உள்ள அருட்தொடர்பு புரியும். அருள்மழை பொழியும் அந்த இறைவனை உள்ளத்தில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உயர்ந்தது. அதாவது, புற வழிபாட்டுடன் அகவழிபாடும் தேவை. அதே சமயம், நாம் எந்த தெய்வத்தை வழிபட்டு வருகிறோம் என்பதை உள்ளத்திலேயே, மறைத்து வைக்க வேண்டுமே தவிர, ‘நான் இந்த சாமியைக் கும்பிட்டு வருகிறேன். அது எனக்குச் செய்த அருளாடல்கள், என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று தண்டோரா போட்டு, ஒலிபரப்பு செய்யக் கூடாது. முறைப்படி பார்த்தால் வழிபாடு தெய்வம், குருவின் மந்திர உபதேசம், பிறந்த நட்சத்திரம் ஆகியவற்றை மறந்து போய்க்கூட வெளிப்படுத்தக் கூடாது.
இது மட்டுமல்ல, கனவில், தெய்வத்தையோ, தெய்வ நிகழ்வுகளையோ தரிசித்தால், அதை யாரிடமும் வெளியிடக்கூடாது. அப்போது தான் அக்கனவு பலிக்கும். கெட்ட கனவு கண்டால், அதை நான்கு பேர்களிடமாவது சொல்லிவிட வேண்டும். அப்போதுதான், கெட்ட கனவு பலிக்காது. ஆகையால் நாம் எந்தத் தெய்வத்தை வழிபடுகிறோம் என்பதை ஏன் வெளிப்
படுத்த வேண்டும்?

அதனால்தான் அனுபவசாலியான திருமூலர் இறைவனை உணர்ந்து அனுபவித்து, அந்த இறைவனை என் உள்ளத்தில் ஒளித்து வைத்தேன் என்கிறார். அதை அப்படியே நமக்கும் சொல்கிறார். இறைவனை உணருங்கள். அனுபவபூர்வமாக உள்ளத்தில் வைத்து வழிபடுங்கள். தெய்வீக அனுபவம் தானே வெளிப்படும். அதை விளம்பரப்படுத்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் எந்த விருப்பத்துடன் வழிபடுகிறீர்களோ, அது நிச்சயமாய் நிறைவேறும்’என்கிறார். ‘இறைவனை உணர்வது முதல் அவன் நமக்கு அருள் புரிவது முடிய, திருமூலர் சொன்னது சரி. ஆனால் அ-ஆ தெரியாதவன் ஏ-பி-சி-டி தெரியாதவன், ஐ.ஏ.எஸ் பதவிக்கு ஆசைப்பட்டதைப் போல, இறைவனை உணர்வதாகிய அந்த முதல் படியே தெரியாத நிலையில், அவனருளைப் பெறுவது எனும் முடிவான நிலையை எப்படி அடைய முடியும்?’ என்ற எண்ணம் எழும். அதற்கு அடுத்த பாடலில் விளக்கம் சொல்கிறார் திருமூலர்.

தாம் அறிவார் அண்ணல்தாள் பணிவார்
  அவர்
தாம் அறிவார் அறம் தாங்கிநின்றார் அவர்
தாம் அறிவார் சிவதத்துவர் ஆவர்கள்
தாம் அறிவார்க்கும் தம் பரனாகுமே.
        (திருமந்திரம்-251)

கருத்து: சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குதல், பிறருக்கும் பிற உயிர்களுக்கும் உதவுவதை தொடர்ந்து செய்வது, தத்துவ உணர்வு பெறுவது-எனும் இம்மூன்றையுமோ அல்லது இவற்றுள் ஒன்றையோ செய்பவர்தான் அறிவுடையோர் ஆவார். அவர்கட்கே சிவபெருமான் உற்ற துணையாவார். இறைவனுடைய திருவடிகளை வணங்குவது என்றால், ஏதோ இரண்டு திருவடிகளை வணங்குகிறோம் என்று பொருளல்ல. இறைவனைப் பற்றிய ஞான நூல்களைப் படிப்பது ஒரு திருவடி, அவற்றை அனுபவத்தில் கொண்டு வருவது இரண்டாம் திருவடி.

‘யே! யப்...பா! ஞான நூல்களைப் பட்டியல் எடுக்கணும். அப்புறமா படிக்கணும். அதுக்கப்புறமா அனுபவத்தில கொண்டு வரணும். இப்பவே மூச்சு முட்டுதே என்றால், கவலை வேண்டாம். பிற உயிரினங்களுக்கும் உதவி செய்தால் போதும், இயன்றவரை அவர்க்கு அறம் செய்தால் போதும். மூன்றாவதான தத்துவ உணர்வு பெறுவது என்பது இறைவனை வேதாந்த பரமாக உணர்வது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றைச் செய்தாலே போதும். அறிவுடைய அவர்களுக்குத் தெய்வமே உறுதுணையாக வந்து அருள்புரியும். அறிவுக்கு இலக்கணம் சொல்ல வந்த திருவள்ளுவர், அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன்னோய் போல் போற்றாக் கடை’ என்கிறார். இக்குறளில், ‘பிறரின்’என்று சொல்லாமல் ‘பிறிதின்’ எனச் சொல்லியிருப்பதை, ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். பிறரின் என்றால் அது மனிதர்களை மட்டுமே குறிக்கும். பிறிதின் என்பது மனிதர்களை மட்டுமல்லாமல் மற்ற எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும். எல்லா ஜீவராசிகளுக்கும் உதவி செய்து வாழ்வதே அறிவுடையவனுக்கு அடையாளம் என்கிறார் வள்ளுவர். திருமூலர் சொற்படி மட்டுமல்லாமல், திருவள்ளுவரின் சொற்படியும், இயன்றவரை அடுத்தவர்க்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் அறம் செய்து உதவினாலே போதும். ஆண்டவன் நம்மைத் தேடி வரமாட்டாரா?

(மந்திரம் ஒலிக்கும்)