எல்லாப் புகழும் துரோணருக்கே!



மகாபாரதம் 13

ஒரு பரீட்சைக்கு முன்பு அந்த பரீட்சைக்கு தயார் செய்ய இன்னொரு பரீட்சை வைப்பதில்லையா, அதுபோல அரச குமாரர்களை ஊருக்கு அறிமுகம் செய்து வைப்பதற்கு முன்பு தானே பரிட்சித்துப் பார்க்க துரோணர் விரும்பினார். ஒரு பறவையின் உருவத்தை செய்யச் சொல்லி அதை முதல் நாளே ரகசியமாக மரத்தில் மாட்டினார். உண்மை பறவை போலவே இருந்தது.‘‘இன்றைக்கு தனுர் வித்தையில் பரீட்சை” என்று அறிவித்தார். வில்லும் அம்பும் எடுக்கச் சொன்னார்.

அரசகுமாரர்கள் வரிசையானார்கள். துரியோதனனை மண்டியிட்டு வில் வளைத்து அம்பு தொடுத்து பறவையை குறி பார்க்கச் சொன்னார். ‘குறி பார்த்து விட்டேன் என்பதை ஒரு சிறிய ஹுங்காரத்தால் வெளிப்படுத்து. நான் சொல்லும்வரை சரத்தை விடக்கூடாது,’ என்று கட்டளையிட்டார். அவன் மண்டியிட்டு தன்னை தயார் செய்து கொண்டு பறவையை குறி பார்த்தான்.‘‘இப்பொழுது என்ன தெரிகிறது. பறவை தெரிகிறதா?”

‘‘ஆமாம் குருவே, பறவை தெரிகிறது.”
‘‘மரம் தெரிகிறதா?”
‘‘ஆம், மரம் தெரிகிறது.”
‘‘இலைகள், கிளைகள்?”
‘‘தெரிகின்றன.”
‘‘நீல வானம்?”

‘‘தெரிகிறது.”
‘‘நீல வானத்தில் அடர்ந்து போகும் மேகங்கள்?”‘‘தெரிகின்றன.”‘‘நல்லது. வில்லையும், அம்பையும் கீழே வைத்து விட்டு நீ தலைகுனிந்து உட்கார்ந்து கொள்.” அவன் திகைத்துப்போய் அவரைப் பார்த்தான்.‘‘நீ தனுர் வித்தைக்கு லாயக்கில்லாதவன். அலங்காரத்திற்காக நீ வில் வைத்துக் கொள்ளலாம். அதனால் அந்தப் பக்கம் போ” என்று சொன்னார். அரசகுமாரர்கள் சிரித்தார்கள். துரியோதனன் வெட்கமடைந்தான். துரோணர் பற்றி அவனுக்குள் இடையறாது ஒரு கவலையும், கோபமும் இருந்தன.

தருமர் மண்டியிட்டு சரம் தொடுத்தார். காதுவரை நாண் இழுத்தார்.‘‘என்ன தெரிகிறது தருமா?”‘‘எல்லாம் தெரிகிறது.”‘‘வில்லை மடித்து வை. எழுந்து நின்று சபையை வலமாகச் சுற்றி மரத்துக்கு அருகே மரமாக நில்.” இந்த முறையும் அரசகுமாரர்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.துரோணர் ஒரு கடுமையான ஆசிரியர். சுருக்கென்று குத்துவதில் மிகவும் வல்லவர்.

நோகப் பண்ணுவதில், அவமானப்படுத்துவதில் மிகுந்த ருசி உள்ளவர். சிலருக்கு அவரின் சொற்கள் புரிவதுகூட தாமதமாகும். அவர் கேலிக்கு, அவர் சொன்னதை பாராட்டாக நினைத்துக் கொண்டு ‘நன்றி குருவே’ என்று உளறிய அரசகுமாரர்களும் உண்டு.பீமன் நிதானமாக மண்டியிட்டான். வில் வளைத்தான். குறி பார்த்தான். ‘எழுந்திரு’ என்றார். வில் ஊன்றி எழுந்தான். ‘உட்கார்’ என்றார். மறுபடி உட்கார்ந்தான். வில் வளைத்தான். நாண் இழுத்தான். மூச்சு வாங்கினான்.

‘‘பீமா, வில் என்கிற ஆயுதம் லேசானது. அதனால்தான் உன்னால் தூக்க முடியவில்லை. கனமான கதையைத்தான் உன்னால் தூக்க முடியும். யானை திறமையான மிருகம்தான். அதனை புற்கள் பறித்துப் போடவா உபயோகப்படுத்துவது? மரம் முறிக்க அல்லவா உபயோகப்படுத்த வேண்டும். போ, போய் மரம் முறி.”

அரசகுமாரர்கள் விழுந்து, எழுந்து, புரண்டு சிரித்தார்கள். தருமரிடம் வந்து எதற்கு சிரிக்கிறார்கள் என்று பீமன் கேட்டான். தருமர் தலையில் அடித்துக் கொண்டார்.துச்சாதனன் வந்தான். வில்லை எடுக்கும் முன்பு வேட்டியை இழுத்து இறுக்கக் கட்டி தொடை தட்டினான். பிறகு, வில் வளைத்து சரம் தொடுத்து நாண் இழுத்தான்.‘‘வில் வளைக்கும் முன்பு ஏதோ செய்தாயே. அது என்ன? துரோணர் கேட்டார். அரசகுமாரர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
‘‘நான் தொடை தட்டிக் கொண்டேன்.”

‘‘எதற்கு?”‘‘நான் செய்து முடிப்பேன் என்பதை சொல்வதற்கு.”‘‘எதை செய்து முடிப்பாய்?”‘‘நீங்கள் என்ன சொன்னீர்களோ அதை செய்து முடிப்பேன்.”‘‘அப்படியா?”‘‘ஆமாம், அப்படித்தான்.”‘‘அப்படியானால் வில்லை வைத்து விட்டு எழுந்து நின்று தொடையை தட்டி, வேட்டி அவிழ்த்து விட்டு ஓரமாகப் போய் நில்.”அரசகுமாரர்களின் சிரிப்பில் வனம் அதிர்ந்தது. வேலையாட்களும் வாய் பொத்திக்கொண்டு சிரித்தார்கள்.

துரியோதனனும் சிரித்தான். துச்சாதனனும், துரோணரும் மட்டும் சிரிக்காமல் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் வில்லை கீழே வைத்தான். தொடை தட்டினான். வேட்டியை தளர விட்டுக் கொண்டான். பிறகு வில்லை எடுத்துக் கொண்டு ஓரமாகப் போய் நின்றான். பீமன் அவனை எட்டிப் பார்த்துவிட்டு, ‘‘அற்புதமாகச் செய்தாய்” என்று பாராட்டினான். மீண்டும் பேய் சிரிப்பு. இந்தமுறை துச்சாதனனுக்கும் சிரிப்பு வந்தது.

அர்ஜுனனுக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருந்தார்கள். அர்ஜுனனை கூப்பிடவில்லையே என்று எல்லோரும் ஏங்கட்டும் என்று துரோணர் தாமதித்தார். சகலரும் முடிந்த பிறகு சற்று இடைவெளி விட்டு அர்ஜுனனை அழைத்தார். அர்ஜுனன் அசையாது நின்றான். கால்கள் சேர்த்து, வில்லை ஒடுக்கி, கைகளை சேர்த்து, தலையை நிமிர்த்தி குருவின் கட்டளைக்கு
காத்திருப்பது போல விரைப்பாக நின்றான்.

‘‘அர்ஜுனா, அந்த பாசப் பட்சியை பார்த்தாயா?”‘‘ஆமாம்.”‘‘மண்டியிட்டு அந்தப் பாசப் பட்சியை நோக்கி உன்னுடைய சரத்தை தயார் நிலையில் வை. நான் சொல்லும் வரை சரம் விடுபடக் கூடாது. குறி வை” உறக்கக் கத்தினார். சட்டென்று மண்டியிட்டு நாண் இழுத்த நேரமும், வில் வளைத்த நேரமும் ஒன்றாக்கி அவன் தயார் நிலைக்கு வந்தான். ஒரு சொடக்கு நேரம்தான் அவன் குறி வைக்க எடுத்துக் கொண்டான்.

அவனுடைய துடிப்பு ஆச்சரியமாக இருந்தது. கடும் பயிற்சி இல்லாமல் இப்படி உட்கார முடியாது என்று தோன்றியது. மூச்சு நகரவில்லை. இமைகள் துடிக்கவில்லை. அடிவயிறு எம்பி தாழவில்லை. இறுக்கமாக கற்சிலையில் செய்யப்பட்ட பொம்மைபோல குறி பார்த்து இழுத்தான்.‘‘அர்ஜுனா என்ன தெரிகிறது?”‘‘பாசப் பட்சி”‘‘அர்ஜுனா, வேறு என்ன தெரிகிறது?”‘‘பாசப் பட்சியின் கழுத்து.”‘‘அர்ஜுனா, வேறு எதையாவது காண்கிறாயா?”‘‘எதுவும் இல்லை. பாசப் பட்சியின் கழுத்து தவிர வேறு எதுவும் தெரியவில்லை.”

‘‘சரம் விடு” உரக்க கத்தினார்.பாசப்பட்சியின் தலை சிதைந்தது. சகலரும் உரத்த குரலில் ஆரவாரம் செய்து பாராட்டினார்கள். அர்ஜுனன் அசையாது அப்படியே நின்றான்.‘‘எழுந்து நில்.”எழுந்து மர பொம்மையாய் நின்றான்.

‘‘உன் இடத்திற்கு போ குழந்தாய்.”அர்ஜுனன் அவரை வலமாக சுற்றி கால் தொட்டு வணங்கி தன் இருப்பிடத்திற்கு வந்தான்.‘‘குழந்தாய்”- என்ன விளிப்பு இது! எவ்வளவு அன்பு அதில்! துரியோதனன் பொசுங்கினான். அவன் கவலை அதிகரித்தது. ஒருவேளை நான் அரசன் இல்லையோ, இவர்கள்தானோ? பயம் பிடுங்கித் தின்றது.

பயம்தான் எதிரியை உருவாக்குகிறது. பயம்தான் சண்டையை தீர்மானிக்கிறது. பயம்தான் வாழ்வை கேள்விக் குறியாக்குகிறது. பயம்தான் எல்லா கெடுதல்களுக்கும் காரணமாக இருக்கிறது. பயம்தான் உலகத்தில் மனித வாழ்வின் அடிநாதமாக இருக்கிறது. பயமில்லாதவர் எவரும் இல்லை. அர்ஜுனனுக்கு என்ன பயம் இருக்கும்? துரியோதனன் சிந்தித்தான். அவர்களை உணவு உண்ணச் சொல்லி குருநாதர் கட்டளையிட்டார். களத்தில் உணவு வைத்து அதையே துரியோதனன் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜுனனுக்கு என்ன பயம் இருக்கும்?

அர்ஜுனனுக்கு பயம் இருந்தது. தொடர்ந்து எல்லா பயிற்சிகளிலும் முதன்மையாக இருக்க வேண்டுமே; இந்த பயிற்சிகளுக்கு அப்பால் என்ன நடக்கும்? எதிர்காலம் எப்படி இருக்கும்? அஸ்தினாபுரம் இரண்டாக பிரித்து தரப்படுமா? அல்லது வேறு ஏதேனும் நகரத்திற்கு போக வேண்டுமா? துரியோதனனுக்கு பாசம் மிகுந்த தகப்பன் உண்டு. எனக்கு இல்லை. தந்தை இல்லாது வாழ்வது எவ்வளவு கடினம்.

வழிகாட்ட ஆள் இல்லாது இருப்பது எத்தனை வேதனை! என்ன உறவுகள் இருப்பினும் நாங்கள் ஐவரும் அனாதைகள்தானே. அப்பன் இல்லாதவர்கள்தானே. யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஏய்க்கலாமே. அவனும் தன் கலத்தில் உள்ள உணவை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். உலகத்தில் கவலை இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை.

இந்த ருசி, இந்த சாப்பாடு இதற்கு இணையாக உலகத்தில் எதுவும் இல்லை. பீமன் நினைத்தான். இன்னும் கொஞ்சம் போடு என்றான். உலகத்தில் மனிதர்கள் இப்படியும் உண்டு. உணவின் மீது பெரும் காதல் உள்ளவர்களுக்கு கவலைகள் அதிகம் இருக்காது. அவர்கள் கவலைகள் அடிநாக்கில் தொண்டைக்குழியில் நின்று விடுகின்றன.அந்தணர்களுடன் கலந்து பேசி துரோணர் நாளும், நாழிகையும் குறித்துக் கொண்டார்.

வித்தைகளை வெளிக்காட்ட பிற்பகல் நேரமே சிறந்தது. பிற்பகல் நேரம் அணிவகுப்பில் துவங்கி விட்டு, ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திவிட்டு சிறுசிறு வித்தைகளை ஆரம்பித்து விட்டு இரவு நெருங்கும்போது பெரும் வித்தைகளை வைத்துக் கொள்ளலாம். அவர் திட்டமிட்டார்.

சேனாதிபதிகளுடன் குதிரை ஏறி பெரிய புல்வெளியை தேடினார். வடக்கு பக்கம் தாழ்ந்து தெற்கு பக்கம் உயர்ந்த பூமியை தேர்ந்தெடுத்தார். மரங்கள் இல்லாத புல்வெளி சீர் செய்யப்பட்டது. மேடைகள் அமைக்கப்பட்டன. பெண்கள் அமர அடுக்கடுக்காய் பலகைகள் போடப்பட்டன. ஜனங்கள் தரையில் அமர்ந்து கொள்ள மணல் பரப்பப்பட்டது.

முரசு அறிவித்து, எக்காளம் ஊதி, அரசகுமாரர்கள் தங்களுடைய வித்தைகளை ஜனங்களுக்கு காட்டி ஆசைகளை கூறுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது.ஜனங்கள் ஆரவாரம் செய்தார்கள். அட, இன்னும் ஐந்து நாட்கள்தானா என்றார்கள்.

அதற்குள் முடிக்க வேண்டிய வேலைகள் என்ன? என்று பரபரத்தார்கள். அத்தனை பேருக்கும் குடிக்க நீரும், பானகமும், உண்ண உணவும் வேண்டுமே. குழந்தைகளுக்கு பால், தாகத்திற்கு மோர் என்றெல்லாம் பரபரத்தார்கள். ‘ஆயிரம் லட்டூகம், இலவசமாக வினியோகிக்கப் போகிறேன்’ - யாரோ நெஞ்சு தட்டினான். ஜனங்களுக்கு வெறி பிடித்தது, கொண்டாட்டம் ஆரம்பமாகியது.அரசகுமாரர்கள் தயாரானார்கள். மந்திரிகள், சேனாதிபதிகள், நிர்வாகிகள், அரசகுலத்து பெண்டிர்கள் அத்தனைபேரும் அந்த நாளுக்காக காத்திருந்தார்கள்.

காலையிலேயே கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, வாழைமரங்கள் நடப்பட்டு அந்த இடம் மிகுந்த அலங்காரத்தோடு விளங்கியது. வழிநெடுக எண்ணெய் ஊற்றிய தீப்பந்தங்கள் எரிவதற்கு
தயாராக இருந்தன. வண்டியில் வருபவர்க்கு தனித்த இடம் ஒதுக்கப்பட்டது. காவலர்கள் சுழன்று சுழன்று வேலை செய்தார்கள். அவ்வப்போது மோர் குடித்தும், பசியாற்றியும் வந்தார்கள். பெரும் திருவிழா போன்று அஸ்தினாபுரம் வர்ண உடைகளுடனும், வாசனை பொருட்களுடனும், பூக்களுடனும் மகிழ்ந்து ஆடியது.புறப்பட்டு விட்டார்கள். பேரிகை முழங்கியது. சங்கம் அதிர்ந்தது. எக்காளங்கள் ஊதப்பட்டன. குதிரை வீரர்கள் வழி விலக்கியபடியே வந்தார்கள். நீர் தெளிக்கப்பட்டது; புழுதி பறக்கக் கூடாதல்லவா? வாசனை சந்தனம் தெளிக்கப்பட்டது; வீச்சம்
வரக்கூடாதல்லவா?

இது துரியோதனன். அது துச்சாதனன். இது யார், அது யார் எல்லோரும் ஒருவரை ஒருவர் விசாரித்து பெயர் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்குத் தெரியவில்லை எனில் முன்னேறி, ‘அய்யா உங்கள் பெயர் என்ன?’ என்று அரச குமாரர்களை கேட்டார்கள். அரச குமாரர்கள் கைகூப்பி பவ்யமாய் பதில் சொன்னார்கள். பளபளக்கின்ற உடைகளும், கம்பீரமான ஆயுதங்களும், முகத்தில் வீரமும் பொங்க இருக்கின்ற அரசகுமாரர்கள் அமைதியாய் பதில் சொல்வது ஜனங்களுக்கு பிடித்திருந்தது. அந்த பவ்யத்தை மறுபடி அனுபவிக்கவே அவர்கள் மறுபடி மறுபடி கேட்டார்கள். அரசகுமாரர்களும் சளைக்காமல் பதில் சொன்னார்கள். ஊர்வலம் மேடையை அடைந்தது.

துரோணர் கடவுள் வாழ்த்து படித்து, அரசருக்கு முகமன் சொல்லி, அரச மகா பெண்டிரை கைகூப்பி வணங்கி, குருமார்களின் ஆசிகளை கேட்டு, சேனாதிபதிகளின் அனுமதிகளை பெற்று, மந்திரிகளின் முன் விண்ணப்பம் வைத்து, அரசகுமாரர்கள் தங்களுடைய வித்தைகளை காட்ட வந்திருக்கிறார்கள் என்று முழக்கம் செய்தார். ஜனங்கள் மேல் துணியை விசிறிப் போட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். வரிசையாய் கைகூப்பி அரசகுமாரர்களை இங்குள்ள மகாஜனங்கள் கைதூக்கி ஆசீர்வதிக்க வேண்டும். உங்கள் ஆசிதான் அவர்களை பலப்படுத்தும் என்று சொல்ல, ஜனங்கள் எழுந்து நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி அரசகுமாரர்களை ஆசீர்வதித்தார்கள்.

அரசகுமாரர்கள் குனிந்து வணங்கி ஜனங்களுக்கு நன்றி சொன்னார்கள். ஜனங்களின் தயவை பெறுவதைவிட ஒரு அரசனுக்கு முக்கியமான வேலை எதுவும் இல்லை. கௌரவர்களில் இளையவர்கள் தங்கள் வித்தையை ஆரம்பித்தார்கள். சிறு கத்திகள் உயரே பறந்தன.
‘‘அடேய், குழந்தாய் மேலே பட்டுவிடப் போகிறது,” ஜனங்கள் பயந்து கத்தினார்கள்.

வெகு உயரம் கிளம்பி விண்ணை தொட்டு வேகமாக கீழே இறங்கியது. சட்டென்று அதை அந்த சிறுவன் பிடித்து நிறுத்தினான். ஜனங்கள் ஓவென்று கத்தினார்கள். ஒருமுறை ஒரு கத்தியை எறிந்து பிடித்தவன் இப்பொழுது ஆறு கத்திகளை வானத்தில் எறிந்தான். ‘‘மகனே நீ நரபலி,” கூட்டத்தில் ஒருவன் பயந்து கத்தினான். ஆனால் ஆறு கத்திகளும்
பிடிக்கப்பட்டு தரையில் வைக்கப்பட்டன. அவன் கைகூப்பினான். ஜனங்கள் ஆரவாரம் செய்தார்கள்.‘‘கீரைத்தண்டு போல் இருக்கிறான். என்ன வித்தை? என்ன வித்தை?”
‘‘எல்லா மகிமையும் துரோணருக்குத்தான்.” இன்னொருவன் பதில் சொன்னான்.

‘‘அப்பொழுது இந்தப் பிள்ளையை கூமுட்டை என்கிறாயா.”‘‘இல்லை இல்லை. உன்னை கூமுட்டை என்கிறேன்.”‘‘ஏய் ஏய்” அவர்களுக்குள் சண்டையிட ஆரம்பித்தார்கள். ஜனங்கள் சமாதானப்படுத்தினார்கள்.கத்தியை பார்க்கும்பொழுது கத்திப் பேசுவது ஜனங்களுக்கு இயல்பு. சண்டை பார்க்கிறபொழுது ஆக்ரோஷப்படுவது ஜனங்களுக்குப் பிடிக்கும். கோபம் கோபத்தை தூண்டும். ஆயுதம் கோபத்தை அதிகரிக்கச் செய்யும்.

வேடிக்கை பார்க்கின்றவர்களைக் கூட ஆயுதப் பிரயோகங்கள் ஆட வைக்கும். புல் நறுக்குவதற்கு மட்டுமே கத்தியை பயன்படுத்தியவன் கூட அப்பொழுது போர் வீரனாக கால் அகட்டி நிற்பான். பார்க்கின்ற விஷயத்திலிருந்து, பார்க்கின்ற கண்களையும், மனதையும் அப்புறப்படுத்துவது எல்லோருக்கும் எளிதல்ல. அஸ்தினாபுரத்து ஜனங்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவே இருந்தார்கள்.

சிலம்புச் சண்டை துவங்கியது. நகுல சகாதேவர்கள் தங்கள் சிலம்பால் வேகமாக தாக்கிக் கொண்டார்கள். அளவு எடுத்ததுபோல் நகர்ந்தார்கள். நடனம் போலவும் அது இருந்தது. மூங்கிலி லிருந்து நெருப்பு வருமா, புகை வருமா? வந்ததே. புகை வந்தது. பொறி பறந்தது. மற்ற அரசகுமாரர்களை கூழாங்கல்லை எறியச் சொல்லி இவர்கள் கொம்பு சுற்றினார்கள். கூழாங்கல் அடிபட்டு சபையில் வந்து விழுந்தது.

 முன்வரிசையில் இருந்தவர்கள் அடிவாங்கிக் கொண்டு பின் வரிசைக்கு வந்தார்கள். முன்வரிசைக்கு போனவர்கள் முண்டாசுகளால் முகத்தை மறைத்துக் கொண்டார்கள். ஜனங்களுக்கு நடுவே பானை தொங்க விடப்பட்டிருந்தது. ஒரு கூழாங்கல் நகுலனை நோக்கி வீச, அவன் அந்த கூழாங்கல்லை பானை நோக்கி திருப்பினான். சிலம்பில் பட்டு கூழாங்கல் பானையை நொறுக்கிற்று. உள்ளிருந்து அரிசிப் பொரி கொட்டிற்று.ஒரு நுனியை தரையில் ஊன்றி ஒரு நுனியில் கால் வைத்து அவன் ஒரு கொம்பு உயரம் நின்றான்.

சுற்று முற்றும் பார்த்தான். மறுபடியும் கீழே இறங்கி கம்பு வீசினான். பிறகு மறுபடியும் ஊன்றி உயரே நின்று பார்த்தான். நின்ற கம்பை அடித்து தட்டச் சொன்னான். நாலைந்து பேர் வேகமாக வந்து கம்பால் மோதினார்கள். அவன் சிலம்பு அசையவே இல்லை. அவனை கீழே இறக்க முடியவில்லை. அவன் கைகளுக்கும் எட்டவில்லை. பறை ஒலிக்க அவன் கொம்பு நுனியில் நடனமாடினான். ஜனங்கள் எகிறி குதித்தார்கள். வாய்விட்டு சிரித்தார்கள்.‘‘இது கழை கூத்தாடி வித்தை” ஒரு அந்தணர் வாய் விட்டுச் சொன்னார்.

 நகுலன் காதில் அது விழுந்து விட்டது. திரும்பி அவரைப் பார்த்தான். அவர் பயந்தார். அவர் அங்கவஸ்திரத்தை தூக்கி பிடிக்கச் சொன்னான். அவர் பயந்தவாறே அங்கவஸ்திரத்தை தூக்கிப் பிடித்தார். ‘‘இறுக்க பிடியும்” என்று கட்டளையிட்டான். அவர் அங்கவஸ்திரத்தை இறுக்க பிடித்தார். இவன் வேகமாக சிலம்பு சுழற்றினான். சிலம்பு பெரிய விசிறிபோல வேகமாக சுழன்றது. காற்று பிய்த்து அடித்தது. கையில் உள்ள அங்கவஸ்திரத்தை பிடுங்கிக் கொண்டு போயிற்று.

‘‘இதை எந்த கழை கூத்தாடியாவது செய்வானா?” நகுலன் கேட்க, அவர் கன்னத்தில் போட்டுக் கொண்டார். அவன் குனிந்து அவர் பாதங்களை நோக்கி வணங்கி விட்டு நகர்ந்தான்.
சகாதேவனுக்கு இடது கையில் ஒரு கொம்பும், வலது கையில் ஒரு கொம்பும் சுழல, தலைக்கு மேல் இன்னொரு கொம்பு சுழன்று கொண்டிருந்தது.

அந்தக் கொம்பு கீழே இறங்கும்போது இடம், வலம் கொம்புகள் கை மாறின. வலக்கை கொம்பு மேலே போயிற்று. மேலே பார்த்தால் கீழே அடி விழும். கீழே தடுத்தால் மேலே கொம்பு விழும். சகாதேவன் பயமுறுத்தினான். குதிரையில் ஏறி இலக்கு அடித்தான். கண் கட்டிக்கொண்டு இலக்கை தாக்கினான். ‘‘எப்படி அய்யா முடிகிறது?”

‘‘வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’’ என்று இன்னொருவர் பதில் சொன்னான்.‘‘எத்தனை நாள் பழகி இருப்பார்கள்?’’‘‘என்ன பேசுகிறார்கள்?’’ சகாதேவன் காவலாளியை கேட்டான்.‘‘எத்தனை நாள் பழகியிருப்பீர்கள் என்று கேட்கிறார்கள்?’’‘‘அப்படியா, ஒரே ஒருநாள்தான் பழகியிருப்பேன். வித்தை வந்து விட்டது.’’‘‘அது எங்ஙனம்?’’ வினவியவன் கேட்டான்.‘‘ஆசிரியர் மகிமை. எல்லா மகிமையும் துரோணருக்கே. இதைவிட ஒரு அழகிய வேலை உண்டு.’’

‘‘என்ன அது?’’‘‘உம்முடைய மீசையில் ஒரு ஊசியை சொருகி விடுவேன். மீசைக்கு அடிபடாது ஊசி மட்டும் வெளியே விழும். பார்க்கலாமா.’’‘‘அய்யா, ஏற்கனவே பற்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன. தவறாகி விட்டால் என் கதி அதோகதி ஆகிவிடும்.’’‘‘நான் இரண்டு நாள் பழகியிருக்கிறேன்.’’ ‘‘எடுத்தால் ஊசி. விழுந்தால் பற்கள். என்ன இப்பொழுது.’’ அவன் ஊசியை மீசையில் சொருகி வைத்து விட்டு விலகி வந்தான்.

தொலைதூரத்திலிருந்து கம்பை சுழட்டிக் கொண்டு வந்து கையை நீட்டி சிலம்பை மூக்குக்கு அருகே வீசினான். காற்றுதான் பட்டது. ஊசி காணோம். மீசை இருந்தது. அவன் சிரித்தான்.‘‘பல் விழுந்து விட்டதய்யா கீழே.’’ சகாதேவன் சொல்ல, அவன் குனிந்து பல் தேடினான். எல்லோரும் சிரித்தார்கள்.‘‘இல்லை. பற்கள் விழவில்லை.’’ அவனுடைய அசட்டு சிரிப்பு, ஜனங்களை குதூகலப்படுத்தியது.

‘‘எல்லா மகிமையும் துரோணருக்கே.” மறுபடியும் சகாதேவன் சொன்னான். அவர்கள் துரோணரை நோக்கி கைகூப்பினார்கள். துரோணர் மிகுந்த கம்பீரத்தோடு உட்கார்ந்திருந்தார்.
துரியோதனனும், பீமனும் களம் இறங்கினார்கள். பெரும் கதையை எடுத்து சுழற்றினார்கள். கம்பு சுற்றல், கத்தி சுழற்றல், வில் அடித்தல் இதெல்லாம் சரி. இந்த கதையை இப்படியெல்லாம் சுழற்ற முடியுமா! உள்ளங்கையில் பம்பரம் போல ஒரு கதை சுற்றிக் கொண்டிருக்கிறதே. என்ன இது. ஆறு கதைகள் ஒன்றின் மீது ஒன்று எறிய இடது, வலது, இடது, வலது என்று மாறிக்கொண்டு ஆறு கதைகள் போய்க் கொண்டிருக்கின்றன. ஆறு கதைகளும் தரையில் இறங்கின.

பத்து பேர் கொண்டு வந்து கற்பாறையை நடுவில் வைத்தார்கள். பீமன் ஓடிவந்து கற்பாறையை முட்டினான். பிறகு விலகினான். இரண்டு கதைகள் சுழற்றி எடுத்துக் கொண்டு வந்தான். சுற்றி மடமடவென்று கற்பாறையை அடித்தான்.

ஆள் உயர கற்பாறை இடுப்பு உயரத்திற்கு நொறுங்கி விழுந்தது. மணலாக பறந்தது. அந்தப் பாறை உடைய வேண்டுமென்றால் என்ன அடி! கற்பாறையே இப்படி உடையும் என்றால் மனிதருக்கு என்ன கதி.‘‘இடுப்பு வரை உடைத்து விட்டார். மீதியை என்ன செய்வார்?”

பீமன் அந்த கற்பாறையை கட்டிப் பிடித்து தூக்கினான். தலைக்கு மேலே தூக்கினான். காலின் கீழே கதை இருந்தது. கற்பாறையை தூக்கி மேலே போட்டான். ஜனங்கள் தலையில் கை வைத்துக் கொண்டு ‘‘அய்யோ” என்று கத்தினார்கள். குனிந்து கதையை எடுத்து கற்பாறை கீழே வரும் முன்பு ஓங்கி அடித்தான். கற்பாறை கை அகல துண்டு கூட இல்லாமல் உடைந்து நொறுங்கியது.‘‘போதும் வா,” துரோணர் அவனை அழைத்தார்.

துரியோதனன் வித்தைகள் இதை விடவும் வேகமாக இருந்தன. இரண்டு கதைகளை ஒன்றாக அடித்து உரசி சபைக்கு நடுவே இருந்த தீப்பந்தத்தில் அவன் கொளுத்தி காட்டினான். ஒரு கதையை வீசி போட்டு விட்டு ஒரு கதையால் பூமியை ஓங்கி அடித்தான். பூமி பிளந்தது. மேலே போன கதை கீழே வந்து பூமியை இன்னும் இடித்தது. இன்னும் ஆழமாக்கியது. கீழிறங்கி கதையை பிடுங்கி எடுத்து வந்தான்.

‘‘சர்வ நாஸ்தி. சர்வ நாஸ்தி. இந்த அடியானையின் மீதுபட்டால் யானை பூமியில் புதைந்துதான் போகும்” என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள். பயமும், திகைப்புமாய் அவர்கள் துரியோதனனை பார்த்தார்கள். என்ன உடம்பு. வஜ்ஜிரம் போல என்று. வியந்தார்கள். என்ன அழகன்! கொண்டாடினார்கள்.

மேற்கு பக்கம் கதிரவன் மறையும்போது அர்ஜுனன் சபை ஏறி கைகூப்பினான். ஜனங்கள் வெறியேறி போனார்கள். ஆனந்த கூச்சலிட்டார்கள். நிறை கொண்ட அழகு, மன்மதன், என்ன உயரம், என்ன அளவான உடம்பு, எவ்வளவு கூறிய மூக்கு, எத்தனை அழகான இதழ்கள், எவ்வளவு பெரிய கண்கள், எவ்வளவு விசாலமான நெற்றி, எவ்வளவு சுருள் கூந்தல், அம்பு வைத்திருந்த அம்பறாத் துணியும், வில் பிடித்த விதமும், கால் அகட்டி நின்றதும், குனிந்து சபைக்கு வணக்கம் சொன்னதும், நடுவே ஓடிவந்ததும், சுற்றி ஜனங்களிடம் சகலரையும் தொட்டுக் கொண்டு வலம் வந்து கண்ணில் ஒற்றிக் கொண்டு மறுபடியும் விழுந்து வணங்கியதும் ஜனங்களை பரவசப்படுத்தின.

‘‘இதுவரை எந்த அரசகுமாரனும் ஜனங்களை தொடவில்லை. அர்ஜுனன் மட்டும் ஜனங்களை தொட்டு ஆசி கோருகிறான். இதுவல்லவா அடக்கம். இதுவல்லவா அன்பு. இதுவல்லவா சினேகம். இதுவல்லவா ராஜகுணம்” எல்லோரும் கொண்டாடினார்கள். ஒரு சரம் மேலே பறந்தது. எல்லோரும் வானத்தை பார்த்தபடியே இருந்தார்கள் சரம் வரவில்லை.

‘‘எங்கே?” வினவினார்கள்.‘‘இந்த விழா முடியும்போது அந்த சரம் கீழே விழும்” என்று சொன்னான்.‘‘அப்படியானால் அது எங்கே போயிருக்கிறது.”‘‘வெகுதூரம், வெகுதூரம்”ஜனங்கள் பாராட்டுவதா அல்லது திகைப்பதா என்று பரிதவித்தார்கள். வில் வளைத்து ஒரு அஸ்திரத்தை ஏவினான். புகையோடு அஸ்திரம் மேலே போயிற்று. படீர் என்று வெடித்தது. அக்னி பெரும் மேகம் போல தரையில் மெல்ல இறங்கிற்று.

ஜனங்கள் விலகி ஓடினார்கள். இன்னொரு அம்பு சீறி எழுந்தது. அக்னியை தாண்டியது. படீர் என்று அடித்தது. மழை பெய்யத் துவங்கியது. பாதியில் வந்து அக்னியை அணைத்தது. லேசான சூட்டுடன் ஜனங்கள் மீது படர்ந்தது. கிட்டத்தட்ட பாதி ஜனங்கள் புல்வெளியில் மல்லாந்து கிடந்தார்கள். பெண்மணிகள் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்கள். அம்பு மேலே போகும். கீழே விழும். சுழன்று சுழன்று வருமா? ஒரு அம்பு சுழன்று வந்தது. காற்று அடித்தது. எல்லோர் உடைகளையும் கலைத்தது. காற்றில் புற்கள் பறிக்கப்பட்டு நாலாபக்கமும் எறியப்பட்டன.

‘‘இது வாயுவாஸ்திரம்” என்று துரோணர் உரக்கச் சொன்னார். ஜனங்கள் ஹாவென்று கேட்டுக் கொண்டு வாய் பிளந்தார்கள்.‘‘நீர் என்பது வானத்திலும் இருக்கிறது. பூமியிலும் இருக்கிறது. வானத்தில் உள்ள நீரை கண்டீர்கள். இப்போது பூமியில் உள்ள நீர்.” அர்ஜுனன் வில் வளைத்து சரத்தை செலுத்தினான். பூமியில் சரம் மறைந்தது. எதுவும் நடக்கவில்லை. ஜனங்கள் எட்டிப் பார்த்தார்கள். அர்ஜுனனை பார்த்தார்கள். தாங்கள் இடதும் வலதும் உள்ளவர்களைப் பார்த்தார்கள்.

திடீர் என்று பத்து ஆள் உயரத்திற்கு நீர் பீய்ச்சி அடித்தது. பெரும் ஊற்றுபோல கிளம்பியது. புல் தரையை நனைத்தது. ஜனங்கள் ஓடிப்போய் நீர் பருகினார்கள். கங்கை கங்கை என்று தலையில் தெளித்துக் கொண்டார்கள். ‘‘இவன் வீரன் அல்ல. சூரன்” என்று அர்ஜுனன் காதுபட புகழ்ந்தார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் இருள் கவிழ்ந்து விடும். அர்ஜுனன் இன்னொரு சரம் தொடுத்தான். மேலே அனுப்பினான். பத்து கூடை பூக்கள் கீழே விழுந்தன. எங்கு வைத்திருந்த பூக்கள். எங்கிருந்து வந்த பூக்கள். எதுவும் தெரியவில்லை. ஜனங்கள் மீதெல்லாம் பூக்கள் சொறிந்தன. அர்ஜுனன் தலைகுனிந்து வணங்கினான்.

 பெரிய ஆரவாரமும், கோஷமும் ஜனங்களிடமிருந்து வந்தது. முதலில் விட்ட அம்பு தரை தொட்டது.‘‘அர்ஜுன மகாராஜா” என்று ஒருவன் கத்தினான். அர்ஜுனனுக்கு சிரிப்பாக இருந்தது. ஆரம்பத்திற்கே இப்படி அலறுகிறார்களே. மற்றதை காட்டினால் என்ன செய்வார்கள் என்ற கர்வம் இருந்தது. அவன் முகம் முழுவதும் பொலிவோடும், சிரிப்போடும் இருந்தான்.

(தொடரும்)