அக்ஷய த்ருதியை அருளை அனைவரும் பெறுவோம்



அக்ஷயம் எனும் பதத்திற்கு வளர்தல் என்று பொருள். அக்ஷய த்ருதியை அன்று மேற்கொள்ளும் எந்த நற்செயலுக்கும் பலமடங்கு நன்மைகள் விளையும் என்பதுதான் உட்பொருள்.

அன்றைய தினம் சிறிதளவு தங்கம் வாங்கினால் செல்வம் மென்மேலும் பெருகும் என்ற குறுகிய, சுயநல மனப்பாங்கையும் மீறி பிறருக்கு உதவும் நற்பண்பே நம்மை மட்டுமின்றி, நம்மைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வளர வைக்கும், வாழவைக்கும் என்ற பரந்த மனப்பான்மையை மேற்கொள்வதுதான் சரியானது.

ஒருபிடி அவலை தன் கந்தல் துணியில் முடிந்து கொண்டு துவாரகைக்கு கண்ணபிரானை தரிசிக்க சென்றான் ஏழை குசேலன். இவனுடைய நோக்கம் கிருஷ்ணனிடமிருந்து ஐஸ்வர்யங்களை வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதல்ல; தன் அந்நாளைய நண்பனுக்கு பிடித்த அவலை அவனுக்கு அளிக்க வேண்டும் என்ற தோழமைப் பண்புதான். அன்றைய தினம் அக்ஷய த்ருதியை நந்நாள்.

இத்தகைய நட்பின் வெளிப்பாட்டால்தான் குசேலனுக்குப் பல செல்வங்களை கண்ணன் அருளினான். அதாவது, அவ்வாறு அவன் பெறும் செல்வங்களை, வறுமையால் வாடும் பலருக்கும் குசேலன் வழங்கவேண்டும் என்ற பெருந்தன்மைதான். 

பட்டத்திரி இயற்றிய நாராயணீயம் கூறும் இந்த குசேல சரித்திர ஸ்லோகத்தை அக்ஷய த்ரிதியை அன்று (21.4.2015) பாராயணம் செய்தால் அதன் பலனாக வறுமை நீங்கி, அனைத்து செல்வங்களையும் பெறலாம். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று இத்துதி அருளக்கூடியது. மிக முக்கியமாக எல்லோருக்கும் நம்மால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்ற பொதுநல நோக்கு நம்மில் வளரும், இதனால் நம் சுற்றுப்புறமும், நம் சமுதாயமும் நலம் பெறும்.

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹே
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

பொதுப் பொருள்: குருவாயூரப்பா! ஸாந்தீபனி என்ற குருவிடம் தங்களுடன் இணைந்து குசேலன் ஒன்றாய் குருகுல பாடம் பயின்றான். அப்போது உங்களுடன் அவனுக்கு ஏற்பட்ட தோழமை பக்தியாக மாற, அந்த பூரண பக்தியின் விளைவாக எந்தப் பொருளின் மீது பற்றின்றி, கிரஹஸ்தாஸ்ரம தர்மத்தை உளமாற கடைபிடித்து வந்தான்.

ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

அவனுடைய பத்தினியும், கணவனைப் போல எந்தப் பொருள் மீதும் ஆசை கொண்டவள் இல்லை என்றாலும், குடும்பத்தை நிர்வகிக்க, பிள்ளைகள் பசியாற குறைந்தபட்ச தேவையாவது பூர்த்தியாக வேண்டியது அவசியம் என்று கருதினாள். அதனாலேயே ‘மஹாலக்ஷ்மிக்கு கணவரான கிருஷ்ணன் தங்களது பால்ய சிநேகிதராயிற்றே, அவரைப் பார்க்க இத்தனை நாளாக நீங்கள் ஏன் போகவில்லை?’ என்று கேட்டாள்.

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்

வறுமை, பசியைக் கிளறிவிட, தாங்களும் தாம் பெற்றப் பிள்ளைகளும் பசியினால் பீடிக்கப்பட்ட வேதனையை மனைவி எடுத்துச் சொல்ல, அப்போதும் குசேலனுக்கு உங்களிடம் யாசித்துப் பொருள் பெற முற்றிலும் விருப்பம் இல்லாவிடினும், அந்த நாளைய நண்பன் என்ற தகுதியில் உங்களை தரிசிப்பதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது. அதனாலேயே மனைவி தந்த அவலை ஒரு துணியில் முடிந்துகொண்டு உன்னைப் பார்க்கப் புறப்பட்டான்.

கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனா து கிம் புன:

தங்களது பட்டினத்தை அடைந்து, ருக்மிணி தேவியுடன்
தாங்கள் வசிக்கும் அரண்மனைக்குள் வந்து தங்களை தரிசித்தான் குசேலன்.
அப்போது வைகுண்டத்தையே அடைந்துவிட்டவன்போல
எல்லையில்லாத ஆனந்தம் அடைந்தான்.

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச ஜீவிதம்
கரே க்ருஹீத்வாகதய: ப்ராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்து வர்ஷந்தமமர்ஷி கானனே

இந்த சந்திப்பில் தங்கள் மனைவி ருக்மிணி குசேலனுக்கு, தங்கள் மனம் பூரிக்கும்படி விருந்துபசாரம் அளித்தார். உங்களுடைய குருகுலவாச சம்பவங்களை நினைவுறுத்தி குசேலனைத் தாங்கள்  மகிழ்வித்தீர்கள். குருபத்தினிக்காக காட்டிற்குச் சென்று விறகு கொண்டு வந்தபோது உண்டான மிகப் பெரிய மழையையும், குசேலனின் கரம்பற்றியபடி பொறுத்துக்கொண்டீர்கள்.

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே

நீங்கள் காட்டிய பரிவால், உபசாரங்களால் திகைத்துப் போன குசேலன் தான் மிக அற்பமாகக் கொண்டுவந்திருக்கும் அவலை நினைத்து வெட்கமுற்றான். ஆனாலும் அவனிடமிருந்த அந்த அவலைப் பிடுங்கி அதிலிருந்து ஒரு பிடி எடுத்து உங்கள் வாயில் போட்டுக்கொண்டீர்கள். அப்போது ருக்மிணி பரபரப்புடன் ஓடி வந்து உங்கள் கரம் பற்றி, ‘போதும், போதும்,’ என்று தடுத்தாள்.

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினாயயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ:

 ஒரு நண்பனாக வந்த தான் ஒரு பக்தனாக மாறி தங்களை பூஜிக்க முற்பட்டவனை, தாங்கள் பலவாறாக உபசரித்து, தங்களது அரண்மனை
யிலேயே அந்த இரவில் தங்க வைத்து, சீராட்டினீர்கள். மறுநாள் மனதில் மட்டும் நிறைவோடு, வெறுங்கையுடன் அவனை வழியனுப்பிவைத்தீர்கள்.
தங்களிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக்கத் தயங்கிய குசேலனை அவனது விருப்பம்போலவே அனுப்பி வைத்தீர்கள். 
யதி ஹ்யயா சிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வரஜன்னஸௌ
த்வதுக்திலீலஸ்மிதமக்னதீ: புன:

க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்
வீடு திரும்பும்போதுதான் குசேலனுக்குத் தன் மனைவியின் நினைவு வந்தது. தன் குடும்ப வறுமையை விளக்கி கிருஷ்ணனிடம் உதவி கோரியிருந்தால் உடனே அவன் உதவியிருப்பானே, இப்போது மனைவிக்கு என்ன பதில் சொல்வேன் என்று அவன் விசனப்பட்டாலும், உங்களது பேச்சு, அழகிய சிரிப்பு இவற்றால் அந்த விசனத்தையும் மறந்தான். ஆனால், சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது தன் வீடு செல்வத்தால் பிரகாசிப்பதைப் பார்த்து அதிசயித்தான்.

நிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்

 தான் குடியிருந்த வீடு இப்போது அடையாளம் தெரியாமல் செல்வம் பொங்க மாறியிருப்பதைக் கண்ட குசேலன் தான் வழி தவறி வந்துவிட்டோமோ என்று பிரமித்தான். வீட்டிற்குள் நுழைந்தால், பணிப்பெண்கள் சூழ, ரத்தினங்களாலும் தங்கத்தாலும் ஆன நகைகளை அணிந்து பேரழகுடன் திகழ்ந்த தன் மனைவியைப் பார்த்துத் திகைத்தான். குருவாயூரப்பா உங்களுடைய பெருங்கருணையை அவன் அப்போது எண்ணி நெஞ்சம் விம்மினான்.

ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.

ஐயனே, குருவாயூரப்பா! தன்னுடைய பரிபூரணமான பக்தியின் காரணமாக செல்வ விருத்தி அடைந்தாலும், இறுதிவரை உங்கள் அருட்கருணையை எண்ணியே மோட்சமும் ஏகினான் குசேலன். அவனைப்போல உண்மையாக, ஆத்மார்த்தமாக பக்தி செலுத்தும் அனைத்து பக்தர்களையும் நீங்கள் ஆட்கொண்டு, அவர்களது நோய்களை விலக்கி, எல்லா நலன்களையும் அருள வேண்டும்.