தாழ்குல மக்களுக்குத் தொண்டு செய்தவர்



*பாமரன் ஒருவர் ராமானுஜருக்கு எண்ணெய் தேய்த்து விட வந்தார். அவரைப் பார்த்தால் பசியோடு இருப்பவர் போல் தெரிந்தது அவருக்கு. உடனே அவர் தன் மனைவி தஞ்சம்மாளிடம் அவருக்கு பழைய சோற்றை பரிமாறும்படி கூறினார்.

அந்தணர் அல்லாதாருக்கு அன்னமிட ஆசார நியதிப்படி வழக்கமில்லாததால் மனைவி, ‘‘வீட்டில் பழைய சோறு இல்லை” என்று பதிலளித்தார். ராமானுஜர் சமையலறைக்குள் சென்று பார்த்தார். அங்கே போதுமான சாதம் நிறைய இருந்தது. ‘‘உனக்கு ஏழையின் பசிக்கு உணவிடும் கருணை இல்லை; என் வார்த்தைக்கு மதிப்பில்லை. மேலும் மதத்தை நினைத்து பழகும் உன்னை வெறுக்கிறேன்” என்று வேதனையுடன் சொன்னார் ராமானுஜர்.

* திருமங்கையாழ்வார் பிறந்த இடமான திருநகரிக்கு சீடர்களுடன் வந்தார் ராமானுஜர். அப்போது எதிரே தாழ்குலப் பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். சீடர்கள் ‘‘அம்மா! சற்று ஒதுங்கிக் கொள். நாங்கள் போகிறோம்” என்றனர். அதற்கு அப்பெண்மணி, ‘‘எங்கே ஒதுங்கச் சொல்கிறீர்கள்? இந்த ஊர் திருவாலி. இங்கே பகவான் வலது பக்கம் இருக்கிறார். அவரது அருள்பெற்ற திருமங்கையாழ்வார் இடது பக்கம் இருக்கிறார். ஆண்டவன் பக்கம் ஒதுங்குவதா? அல்லது அடியார் பக்கம் ஒதுங்குவதா?” என்று கேட்டாள். இக்கேள்வி ராமானுஜர் நெஞ்சை நெகிழ வைத்தது. அந்தப் பெண்மணியின் ஞான நிலையை உணர்ந்து அவளையும் தன் சீடர் குழுவில் இணைத்து வைணவ மரபில் சேர்த்துக் கொண்டார்.

* முகமதியர்கள் திருநாராயணப் பெருமாள் விக்ரகத்தைக் கொள்ளையடித்துச் சென்றார்கள். திருநாராயணபுரத்தில் கோயில் எழுப்ப அந்த விக்ரகம் தேவைப்பட்டதால் ராமானுஜர் டெல்லி சென்று ‘‘எங்கள் குல தெய்வம் நாராயணர் விக்ரகம் தங்களிடம் உள்ளது. அவரைத் திருப்பித் தர வேண்டும்,” என்று வேண்டினார்.விவரம் அறிந்த டெல்லி பாதுஷா பெருந்தன்மையுடன் அந்த விக்ரகத்தைக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். ராமானுஜர் அந்த விக்ரகத்தைக் கொண்டு செல்வதை அரசரின் கைத்தடிகள் விரும்பவில்லை. எனவே செல்லும் வழியில் ஆட்களை வைத்துப் பறித்துவிடத் திட்டமிட்டனர்.

அதன்படி ஆட்கள் ராமானுஜரிடம் சிலையைப் பிடுங்க முயற்சித்தனர். அப்போது அவ்வழியாக வந்த தாழ்குல மக்கள் அந்த ஆட்களை அடித்து விரட்டி ராமானுஜரையும் விக்ரகத்தையும் காப்பாற்றி அனுப்பினார்கள். தாழ்குல மக்கள் மீது இயல்பாகவே பற்றும் பாசமும் கொண்டவர் ராமானுஜர். எனவே, திருநாராயணபுரத்தில் ஆலயம் எழுப்பியவுடன் அவர்கள் செய்த மாபெரும் உதவிக்கு கைம்மாறாக, அவர்கள் திருநாராயணபுரம் கோயிலுக்குள் வரலாம், வழிபடலாம், இறைவனைத் தொட்டும் வணங்கலாம் என்று பிரகடனம் செய்தார். முதன் முதலாக தாழ்குல மக்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தவர் ராமானுஜர். திருநாராயணபுரம் கோயிலுக்கே அப்பெருமை உடையது. இக்கோயில் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ளது.

- அயன்புரம் சத்யநாராயணன்