மழை என்ற மாஅமிழ்தம்



குறளின் குரல் 10

அமுதம் என்பதென்ன? மழையே அமுதம். மழைநீர் அமுதத் துளி. அமிர்தம் உயிரை வளர்க்கக் கூடியது. இந்த பூமியிலுள்ள தாவரங்களுக்கும் விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் மழைநீர் இன்றியமையாதது.

அதனால் மழைநீரையே அமிழ்தம் எனக் கொண்டாடுகிறார் வள்ளுவர். ‘வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று!’கடவுளுக்கு அடுத்தபடியாக வள்ளுவர் போற்றுவது மழையைத்தான். அதனால்தான் ‘கடவுள் வாழ்த்து’ என்ற முதல் அதிகாரத்திற்கு அடுத்ததாகவே இரண்டாம் அதிகாரமாக ‘வான்சிறப்பு’ என மழையைப் போற்றும் அதிகாரத்தை வைத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, மழை பெய்யாவிட்டால் மண்வறண்டுவிடும். மண் வறண்டால், கடவுளுக்குப் பூஜை கூட நடக்காது என்கிறார்.‘சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.’மழை பெய்யாவிட்டால் கடவுளைக் குறித்த தவம் நிகழாது. தானதர்மங்கள் நடைபெறாது.

 ‘தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காதெனின்.’தண்ணீர் இல்லாவிட்டால் யாரும் வாழமுடியாது. தண்ணீரோ மழை இல்லாவிட்டால் கிட்டாது. எனவே, உயிர்வாழ மழை மிகவும் முக்கியம்.

‘நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்றி அமையாது ஒழுக்கு.’வள்ளுவரின் வான்சிறப்பு அதிகாரத்தைக் கருத்தூன்றிப் பயின்றால் இன்றைய உலகிற்கு மிகத் தேவையான நீர்ச்சிக்கனம் என்பது இயல்பாகவே நம்மிடம் தோன்றிவிடும்.மழை தரும் நீர் மனிதர்களுக்கு உணவாக ஆகிறது.

மனிதர் உண்ணும் உணவுப் பொருட்களை விளைவிக்கவும் அந்த நீர் தேவைப்படுகிறது. உண்ணும் விளைபொருட்களை உண்டாக்குவது மட்டுமல்லாமல், அருந்தும் நீராகி உணவாகவும் ஆகிறதே? மழையை  எப்படிப் புகழ்வது?‘துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை!’   

ஒரே ஒரு சிறு புல்தான். ஆனால், அது பசுமையாக மண்ணில் தலைகாட்ட வேண்டுமானால் வானத்திலிருந்து மழைத்துளி விழுந்தாக வேண்டும். மழையின் சிறப்பு அப்படிப்பட்டது.
‘விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது!’  பருவ மழை பொய்த்தால் துன்பம். பெய்தால் பேரின்பம். அது அளவு கடந்து பெய்தாலோ அதுவும் பெருந்துன்பம். உழவர்களின் இன்ப துன்பங்கள் மழையைப் பொறுத்தவை. ‘கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.’

திருக்குறள் கருத்துகள் பல, திருக்குறளை அடுத்துப் பிற்காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்திலும் உள்ளன. தொடக்கத்தில் தாம் எழுதிய மங்கல வாழ்த்துப் பாடலில் திங்கள், ஞாயிறு இவற்றைப் போற்றிய இளங்கோ அடிகள், அடுத்து மழையையும் போற்றிப் பரவுகிறார். ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்   நாமநீர் வேலி உலகிற் கவனளிபோல்   மேல்நின்று தான் சுரத்தலான்!’  இறைவனின் அளப்பரிய கருணைபோல் மழைநீர் வானிலிருந்து சுரக்கிறது என மழையில் இறைக் கருணையைக் காண்கிறது அடிகளின் ஆன்மிக உள்ளம்.

 புறநானூற்றில் 107ம் பாடல் கபிலர் எழுதியது. அந்தப் பாடல், மழையை முன்னிறுத்தி வஞ்சப் புகழ்ச்சி அணியாய் வள்ளல் பாரியை வானளாவப் புகழ்கிறது. ‘பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர்பாரி ஒருவனும் அல்லன்மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே!’உலகைக் காப்பது பாரி வள்ளல் மட்டும்தானா என்ன? மழையும் தான் உலகைக் காக்கிறது. அதை ஏன் யாரும் புகழ்வதில்லை எனக் கேட்கிறார் கபிலர்.

‘நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
 புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்  தொல்லுலகில்
 நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டிங்
 கெல்லார்க்கும் பெய்யும் மழை.’

- என்கிறது அவ்வையாரின் மூதுரைப் பாடல். உலகில் நல்லவர் ஒருவர் இருந்தால் போதும். அவர் பொருட்டாக மழை எல்லோருக்கும் பெய்யும் என்பது அவ்வையின் தீர்மானம்.
பெய்ததே! ராமாயணத்தில் அப்படிப் பெய்தது மழை. தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நிகழ்த்த விரும்பியபோது, கள்ளங் கபடமற்றவரும் வளர்ந்த குழந்தை போன்றவருமான ரிஷ்யசிருங்க முனிவரை அழைத்து வருகிறார்கள். அவர் எங்கு வந்தாலும் மழை கொட்டோ கொட்டெனக் கொட்டும் என்கிறது ராமாயணம். நெல்லுக்காகப் பெய்த மழை புல்லுக்கெல்லாம் பாய்கிற மாதிரி, ஒரு நல்லவருக்காகப் பெய்யும் மழை எல்லோருக்கும் பயன்தருகிறது.

நல்லவர் எங்கிருக்கிறாரோ அங்கு நல்ல மழைபெய்யும் என்ற விதியை வைத்து அஞ்ஞாத வாசத்தின்போது பஞ்ச பாண்டவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கிறான் துரியோதனன். விராட தேசம் பெருமழை பெய்து எப்போதும் இல்லாத அளவு செழிப்பாய் இருப்பதை ஒற்றர்களைக் கொண்டு அறிகிறான். தர்மபுத்திரரான யுதிஷ்டிரர் அங்கே இருப்பதுதான் அத்தகைய மழைவளத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் எனச் சரியாகவே ஊகிக்கிறான். பின்னர் அவன் படையெடுத்துச் சென்றதும் பிருஹன்னளையாக இருந்த அர்ச்சுனனால் அவன் தோல்வி கண்டதும் மகாபாரதத்தில் பின்தொடரும் கதைகள்.

கண்ணக் கடவுள் பிறந்ததே நல்ல மழைகாலத்தில்தான்.பக்தர்களின் மனச்சிறையில் தானே விரும்பி அடைபடும் அந்தப் பொல்லாத குறும்புக்காரன், கைதிகள் அடைபட்டிருக்கும் சிறையில் அவதரித்தபோது வெளியே கன மழை பெய்கிறது. தன் மனைவி தேவகியிடம் சொல்லிவிட்டு, வசுதேவர் அந்த தெய்வீகக் குழந்தையைக் கூடையில் வைத்து ரகசியமாக நந்தகோபர் இல்லத்திற்கு எடுத்துச் செல்ல முற்படுகிறார். பக்தர்கள் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் கண்ணனை உண்மையிலேயே தலைமேல் கூடையில் வைத்துத் தூக்கிக் கொண்டு நடக்கிறார்.

 சிறைக் கைதிகள் உறக்கத்தில் ஆழ்கிறார்கள். சிறைக் கதவுகள் தாமே திறந்து வழிவிடுகின்றன. பிறவித் தளையிலிருந்து ஆன்மாக்களை விடுபடச் செய்பவன் வருகிறான் என்றறிந்ததும், பூட்டியிருந்த அந்த சாதாரணச் சிறைத் தளைகள் தாமே திறந்து கொண்டதில் ஆச்சரியமென்ன?

  கண்ணக் குழந்தை படுத்திருக்கும் கூடையைப் பூப்போல் தலைமேல் தாங்கியவராய் வசுதேவர் மெல்ல மெல்ல அடிவைத்து நடக்கிறபோது யமுனையில் பெருக்கெடுக்கிறது மாபெரும் வெள்ளம்.

இப்போது என்ன செய்வது?ஆனால், கூடையில் கலகலவென நகைத்தவாறு படுத்திருக்கும் கண்ணனின் கருணை வெள்ளமும் அல்லவா நந்தகோபர் மேல் மழையாய்ப் பொழிகிறது?நம்பிக்கையோடு யமுனையில் கால்வைக்கிறார் நந்தகோபர். என்ன விந்தை! பெருகிய வெள்ளம் திடீரென நந்தகோபரின் கணுக்கால் அளவு மட்டுமே உள்ளதாகத் தானே வடிந்து தாழ்கிறது.

கண்ணன் திருவடியைப் பிடித்தால் பிறவிப் பெருங்கடலையே கடக்க முடியும் என்கிறபோது, கண்ணனையே தூக்கிச் செல்பவர் யமுனை நதியைக் கடக்க இயலாதா என்ன?
தான் எப்போதும் படுக்கையாகத் தாங்கும் திருமால், குழந்தையாக நந்தகோபரால் கூடையில் வைத்துத் தாங்கப் படுவதைப் பார்த்துப் பொறாமை கொள்கிறான் ஆயிரம் தலைகொண்ட ஆதிசேஷன். தன் படத்தைக் குடையாய்ப் பிடித்து கண்ணக் குழந்தையின் மேல் மழையின் ஒரு சொட்டு நீர்த்திவலையும் படாமல் காக்கிறான்.

நாட்கள் நகர்கின்றன. கோகுலத்தில் கண்ணன் கோலாகலமாக வளர்கிறான். பிரமனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்ச வைக்கிறாள் கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதை. கோகுலத்தில் கோபாலன் மேல் பொறாமை கொண்ட இந்திரன் வருணனை மழை பெய்யுமாறு ஏவுகிறான்.

கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது மழை. தனக்குரிய பூஜையைக் கண்ணன் தடுத்து, அதற்கு பதிலாக கோவர்த்தன கிரிக்குப் பூஜை செய்யச் சொல்லிவிட்டான் என்ற இந்திரனின் ஆத்திரம், நீராக கோகுலமெங்கும் பெருகி நிறைகிறது.

ஆனால், மழையால் கண்ணனை என்ன செய்ய முடியும்? பிரளய கால மழையில் கூட ஆலிலையில் ஆனந்தமாய் கட்டை விரலைச் சுவைத்தவாறு படுத்திருக்கும் குழந்தையல்லவா அவன்?

ஒற்றை விரலால் கோவர்த்தன கிரியை உயர்த்திப் பிடித்து, பெருமழையிலிருந்து கோபர்களையும் கோபிகைகளையும் ஆனிரைகளையும் காக்கிறான் கண்ணபிரான். அப்படி ஏழுநாட்கள் கடந்தபின் வழிக்கு வருகிறான் இந்திரன். கண்ணக் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான்.

கொட்டும் பெருமழையில் தன்னை ஏழுநாள் தாங்கிப் பிடித்த கண்ணனுக்கு நாம் எப்படி நன்றிக்கடன் செலுத்துவது என்று ஓயாமல் சிந்தித்தது கோவர்த்தனகிரி. துவாபர யுகத்தின் பின் கலியுகம் தொடங்கிய போது, ஏழுநாள் தன்னைத் தாங்கிய கண்ணனை ஏழுமலையாக மாறித்தான் தாங்கத் தொடங்கியது கோவர்த்தனம்!  இன்று வெங்கடாஜலபதி உறையும் வேங்கட மலை என்னும் ஏழுமலை, அன்றைய கோவர்த்தனகிரியின் இன்னொரு வடிவம்தான். அன்று மட்டும் அந்த மழை பெய்யாதிருந்தால் இன்று நமக்கு இந்த மலை கிடைத்திராது.

மழையைப் பற்றி வான்சிறப்பு என்ற இரண்டாம் அதிகாரத்தில் மட்டுமல்லாமல் ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்ற ஆறாம் அதிகாரத்திலும் ஒரு குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருந்தகை.

‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை!’- என்பது அந்தக் குறள். மற்ற தெய்வத்தைத் தொழாது கணவனை மட்டுமே தொழுது நாள்தோறும் எழுபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பது இந்தக் குறளுக்கு மரபு வழிப்பட்டுப் பல உரையாசிரியர்கள் கண்ட பொருள்.

பத்தினிப் பெண்டிருக்குப் பஞ்ச பூதங்களும் கட்டுப்பட்டவை என்பது நம் ஆன்மிக மரபுச் சிந்தனை. கண்ணகிக்கு அக்கினி கட்டுப்பட்டு ஏவல் செய்தது. சீதையை அக்கினி சுடாமல் காத்தது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரும் கற்புடைப் பெண்களுக்கு ஏவல் செய்யக் காத்திருக்கும் என வள்ளுவர் சொல்வதில் கற்புடைப் பெண்களின் பெருமை துலங்குகிறது.

திருக்குறளின் மேல் அளவற்ற மரியாதை கொண்டவரும் மாபெரும் பெண்ணியப் படைப்பாளியுமான அமரர் ராஜம் கிருஷ்ணன், இதே குறளைத் தம் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்.

கணவனைத் தொழுது எழ வேண்டுமானால் இரவுப் பணிக்குப் போகும் மனைவியால் அது எப்படிச் சாத்தியம்? கணவனைத் தெய்வமாகக் காண்பது வள்ளுவம். இன்றைய பெண்கள் கணவனைத் தோழனாகத்தான் காண்கிறார்கள். அதுதான் இன்றைய காலகட்டத்தில் ஏற்புடையது என்கிறார் அவர்.

மழையை ரசித்துக் கவிதை புனைந்த வள்ளுவர் மரபில் வந்த மகாகவி பாரதி மழையைப் பற்றிப் பாடாமல் இருப்பாரா? ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!’ என்றும் ‘கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை!’ என்றும் வள்ளுவர் பெருமையைச் சொல்லித் தமிழன் என்ற வகையில் மார்தட்டியவர் அல்லவா அவர்? மழையைப் பற்றிப் பல கவிதைகளை அவர் எழுதியுள்ளார். அவற்றில் வசன கவிதையில் மழைகுறித்து அவர் எழுதும் சில வரிகள் கவித்துவத்தின் உச்சம் என்று கொள்ளத் தக்கவை.

‘மழை பாடுகின்றது. அது பலகோடித் தந்திகள் உடையதோர் இசைக்கருவி!’ என மழையின் ஓசையை, கருவியிசையாய் கண்டு அனுபவிக்கிறார் பாரதி. இத்தகைய  கவிமனம் வேறு யாருக்கு வாய்க்கும்? பூமிக்கும் வானத்திற்கும் இடையே மழைச் சாரல் என்ற பலகோடித் தந்திகளை இழுத்துக் கட்டி அதையே யாழாக்கி, மழையின் ஒலியையே இசையாய் காணும் அற்புதக் கவித்துவ ஆற்றல் அல்லவா அவரை நாம் மகாகவி எனக் கொண்டாட வைக்கிறது?

 வான் சிறப்பு என மழையைக் கொண்டாடிய வள்ளுவர் மரபில் இன்றும் நம் தமிழ் எழுத்தாளர்கள் மழை குறித்து ஏராளமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நவீன இலக்கியத்தில் தடம் பதித்த இந்திரா பார்த்தசாரதியின் மழை என்ற நாடகம் மழை காலத்தில் ஓர் இரவில் ஒரு தந்தைக்கும் மகளுக்கும் ஒரு மருத்துவருக்கும் ஏற்படும் மன உளைச்சல்களை விவரித்து, தமிழை நவீனப் பாதையில் நடைபோட வைக்கிறது.

(குறள் மேலும் ஒலிக்கும்)

திருப்பூர்
கிருஷ்ணன்